விரக்தியின் உச்ச நிலையில் மக்கள் அதிபர் கோத்தபயவின் வீட்டை சூறையாடியுள்ளனர். நிலைமை கை மீறியதால், ராணுவமே செய்வதறியாது மக்கள் பக்கம் வந்து விட்டது! ரணில் விக்கிரமசிங்கே ராஜுனாமா தீர்வாகுமா? வீழ்ச்சிக்கான உண்மையான காரணங்கள் என்ன? இனி, இலங்கையின் எதிர்காலம் என்னாகும்?
கொந்தளிப்பின் உச்சத்திற்கு சென்ற மக்கள் அதிபர் வீட்டையே சூறையாடி உள்ளனர். ராஜபக்சே சகோதரர்கள் மக்கள் கையில் கிடைத்திருந்தால் கைமா ஆக்கி இருப்பார்கள்! இப்படி ஓடி ஒளிவதற்கு செத்து போயிருக்கலாம்! நிலைமையை சமாளிக்க சபாநாயகர் தற்காலிக அதிபராக பதவியேற்று உள்ளார். ஆனால், நாட்டில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலைக்கு என்ன தீர்வு என்பதற்கு யாரிடமும் விடை இல்லை. இதற்கான விடை வேண்டுமென்றால், இலங்கையின் கடந்த கால தவறுகளை கணக்கில் எடுத்து, திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே முதல் நிபந்தனையாக இருக்க முடியும்!
தற்போதைய நிலைக்கு இலங்கையின் அந்நியச் செலவாணி கையிருப்பு குறைந்தது முக்கிய காரணம்! கணக்கு வழக்கில்லாமல் கடன்களை வாங்கி குவித்தது பிரதான காரணம்! தற்போதைய நிலவரப்படி 51 பில்லியன் அமெரிக்க டாலரை கடனாகக் கொண்டுள்ளது இலங்கை! இதைவிடப் பெரிய சோகம், அதன் உணவுத் தேவை என்பதே இறக்குமதியைச் சார்ந்து உள்ளதாகும்! இத்துடன் எரிபொருள், மருந்து பற்றாக்குறையும் சேர்ந்து கொண்டது. இத்தகைய பற்றாக்குறையால் விலைவாசி விண்ணைத் தொட்டுவிட்டது. அங்கு ‘வாழவே முடியாது’ என இந்தியா வந்தால், தீவிரவாதி முத்திரை குத்தி சிறையில் அடைக்கிறார்கள். எனவே, ‘வாழ்வா? சாவா?’ நிலைமைக்கு இலங்கை தள்ளப்பட்டுவிட்டது.
இதற்கெல்லாம் மிக முக்கிய காரணம், ராஜபக்ஸே சகோதரர்கள் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லை. உள்நாட்டு யுத்தத்திற்கு மிகப் பெரும் நிதியை அழித்தார்கள். இன வெறுப்பை வளர்த்து அதில் குளிர் காய்ந்தார்கள்! சொந்த சுகபோகத்திற்காக ஊழலில் திளைத்து நாட்டைச் சுரண்டிக் கொழுத்தார்கள்! எல்லாம் தெரிந்தும் மக்கள் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியில் இவர்களை மீண்டும் அரியணை ஏற்றினார்கள்! ஆனால், மூன்றே வருடத்தில் நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. மக்களின் மிகப் பெரிய நம்பிக்கைக்கு துரோகம் செய்து, சுயநலத்தின் உச்சமாக சட்டங்களை இயற்றி, குடும்ப ஆதிக்கத்தை நிலை நிறுத்தப் பார்த்தார்களே அன்றி, நெருங்கி வந்து கொண்டிருந்த நெருக்கடியை ஆத்மார்த்தமாக அணுகி தீர்வுக்கு முயலவில்லை என்பது மட்டுமல்ல, நிலைமையை மேலும் மோசமாக்கினார்கள்!
இவ்வளவெல்லாம் சொல்லிய போதும் ஒன்றை உறுதிபடச் சொல்வேன். இன்றைய இலங்கையின் மிக மோசமான நிலைமைக்கு ராஜபக்சே சகோதரர்கள் மட்டுமே காரணமல்ல! கடந்த 45 ஆண்டுகளாக அது கடைபிடித்து வரும் பொருளாதாரக் கொள்கைகளே மிக முக்கிய காரணமாகும். இலங்கை என்பது இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசம். மண்வளம் நிறைந்த பூமி. அதன் தேயிலைக்கு உலக அளவில் மவுசு இருந்து கொண்டுள்ளது. 1970 கள் வரை அது தன் சுயசார்பு பொருளாதாரத்தில் தன்மானத்துடன் தான் திகழ்ந்தது. ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா காலம் வரை எல்லாம் சிறப்பாகத் தான் இருந்தது. அதன் பிறகு ஜெயவர்த்தனா காலத்தில் தான் திசை மாறியது.
அவர் தான் சுயசார்பு பொருளாதாரத்தை நிலை குலைக்கும் வண்ணம் நவீன தாராளவாத பொருளாதார பாதைக்கு இலங்கையை திருப்பினார். நல்லது தானே! இதை ஏன் குறை சொல்கிறீர்கள் எனத் தோன்றும்?
உள் நாட்டு சுய தொழில்களை பாதுகாக்க, அது வரை இலங்கை, சில கட்டுப்பாடுகளை இறக்குமதி விஷயத்தில் கொண்டிருந்தது! அதை தளர்த்தியதன் மூலம், உணவுப் பொருள்கள், துணிமணி தொடங்கி சாதாரண கைவினைப் பொருட்கள் வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியானது. இதனால் உள்நாட்டில் விவசாயிகள், நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள்..என அனைவரும் பாதிப்புக்கு உள்ளாயினர்.
இவர்களின் வாழ்வாதாரம் நெருக்கடிக்கு ஆளானதை பற்றி அரசும், சிவில் சொசைட்டியும் கவலைப்படவே இல்லை. அத்துடன் விவசாயத்தில் இயற்கை வழிமுறையிலான சாகுபடியைத் தவிர்த்து ரசாயன உரம் நிர்பந்திக்கப்பட்டது. இதற்காக அரசே வெளி நாடுகளில் இருந்து உரங்களை இறக்குமதி செய்து தருவித்தது. இதற்காக கடன் வாங்கியது! ஆண்டுக்காண்டு ரசாயன உரங்களின் இறக்குமதி அதிகரித்தது! காலப் போக்கில் ‘வெளிநாட்டு உரம் இல்லையேல் உணவு உற்பத்தியே இலங்கையில் சாத்தியமில்லை’ என்ற நிலைக்கு நாடு சென்றுவிட்டது. இது தான் இருப்பதிலே பெரிய சோகம். தற்போதோ, அரசால் கூட உரத்தை தருவிக்க முடியவில்லை. சர்வதேச சந்தையில் உரப் பற்றாக்குறையும், விலை உயர்வும், இலங்கையின் நிதி ஆதாரமும் இதை கேள்விக்குறி ஆக்கிவிட்டது. ஆக, ”உணவு உற்பத்தி வீழ்ந்தது. அனைவரும் இயற்கை உரத்திற்கு மாறுங்கள்” என்ற அரசின் அதிரடி உத்தரவை எப்படிப் பின்பற்றுவது என்பதே தெரியாத தலைமுறை இன்று உருவாகிவிட்டது!
அடுத்ததாக கடன் வாங்குவது எளிது. ஆனால், கடனுக்கான நிபந்தனைகள் எளிதானவையல்ல, அதை எந்த அரசுமே மக்களிடம் தெரிவிப்பதில்லை. கடன்களை வாங்குவது, அதை ஊதாரித்தனமாகவும், உழல் முறையிலும் கையாள்வது..என்பதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. கடனும், வட்டியும், நிபந்தனைகளும் கழுத்தை நெறிக்கும் காலத்தில் மட்டுமே அதை உணர்வார்கள்! இன்றைக்கு புஅம் பெயர்ந்துள்ள இலங்கை மக்கள் கூட தங்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தை அதிகாரபூர்வமாக அனுப்புவதில்லை. மறைமுகமாகவே அனுப்புகிறார்கள்! காரணம் அரசாங்கத்தின் வரிவிதிப்பு முறைகள்! வரிகளை உயர்த்திக் கொண்டே போனால், வரி ஏய்ப்புக்கான வழிகளை மக்கள் கண்டடைவார்கள்!
ரஷ்யாவிற்கும், உக்கிரைனுக்குமான போரும், கொரானா பயமுறுத்தல்களும் உலகக் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் கூட தற்போது பொருளாதாரச் சிக்கலில் உழன்று கொண்டுள்ளன!
இனி, எந்த வல்லரசாவது இலங்கையை மறைமுகமாக காலனி நாடாக்கலாம்! அதை தவிர்க்க வேண்டும் என்றால், சுய பரீசீலனையில் இறங்கி, தற்சார்பு பொருளாதாரத்திற்கு திரும்புவதே நிரந்தரத் தீர்வாகும்!
Also read
இலங்கையில் நடந்த கலவரங்கள், கொந்தளிப்புகள் இந்தியாவில் தோன்றுவதற்கான அறிகுறி வெகு தூரத்தில் இல்லை. இந்தியாவின் உணவு உற்பத்தியில் 80 சதவிகிதம் அன்னிய தேசத்தில் இருந்து இறக்குமதியாகும் ரசாயன உரங்களை நம்பியே உள்ளன! இதற்காக இந்திய அரசு இரண்டு லட்சம் கோடி மானியம் தந்து கொண்டுள்ளது! பல லட்சம் டன்கள் ரசாயன உர இறக்குமதியால் இந்தியாவின் மண் வளம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது குறித்த எந்த அக்கறையும் அரசுக்கு இல்லை. சமையல் எண்ணெய் பயன்பாட்டில் மூன்றில் இரண்டு பங்கு வெளி நாட்டு இறக்குமதியைத் தான் இந்தியா நம்பியுள்ளது. மருந்து, மாத்திரை தயாரிப்பில் 90 சதவிகிதம் சீனாவை நம்பியே இந்திய சுகாதாரத் துறை உள்ளது. இவை எல்லாமே ஆரோக்கியமான அறிகுறிகளல்ல. போதாக்குறைக்கு நாட்டின் பொருளாதாரத்தை தாங்கிப் பிடித்த பொதுத் துறை நிறுவனங்களை செயல் இழக்க வைத்து, தனியார் உற்பத்திக்கு தாராள சலுகைகளை வாரி வழங்கி வருகிறது பாஜக அரசு!
இன்றைக்கு தமிழக அரசால் கல்வித்துறையில் நல்ல சம்பளத்திற்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க முடியவில்லை. மருத்துவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு மேலாக சம்பள உயர்வு தடுக்கப்பட்டு உள்ளது. சுகாதாரத் துறையின் அடிநாதமான செவிலியர் நியமனங்களில் கூட தற்காலிகப் பணி தான் தரமுடிகிறது! இப்படியே போனால், மக்கள் வறுமையின் பிடியில் தான் தள்ளப்படுவார்கள்! இலங்கை பிரச்சினைகள் இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கும் முக்கியமான படிப்பினையாகும்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply