ஒ.பி.எஸ்சுக்கு உதவ வேண்டிய கட்டாயம் என்ன?

சமீப காலமாக தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்கள் நம்பமுடியாத விசித்திரமாக உள்ளன! இன்றைய தினம் ஒ.பி.எஸ் எடுத்து வைத்த ஒவ்வொரு நகர்விலும் திமுக அரசின் ஒத்துழைப்பு கிடைத்ததை எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை!

அதிமுகவின் சென்ற பொதுக் குழுவின் போது இரவோடு இரவாக நீதிமன்றக் கதவுகளை திறக்க வைத்து விடிய,விடிய விசாரிக்கப்பட்டு, அதிகாலை நாலரை மணிக்கு ஒ.பி.எஸ்சுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததில் திமுக தலைமை காட்டிய அக்கறை உண்மையிலேயே பத்திரிகையாளர்களுக்கு பெரும் திகைப்பை ஏற்படுத்தியது.

ஒ.பி.எஸ்சுக்கு பின்னணியில் பாஜக இருப்பதை புரிந்து கொள்ள முடியும்! ஆனால், திமுக எப்படி? என்ற தேடலில் இறங்கிய போது ஆர்.எஸ்.எஸ் முக்கியஸ்தர்கள் சிலர் முதல்வர் மருமகன் சபரீசனுக்கு தந்த நெருக்கடி மற்றும்  வேண்டுகோள்படி இந்த ஒத்தாசையை திமுக, ஒ.பி.எஸ்சுக்கு செய்து தந்ததாக தகவல்கள் கசிந்தன!

தற்போது, நீதிமன்றம் ஒ.பி.எஸ்சை கைவிட்ட நிலையில், மீண்டும் திமுக அரசு ஒ.பி.எஸ்சுக்கு இன்று முழுமையாக ஒத்தாசை செய்துள்ளது. நேற்று இரவே ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் தென்மாவட்டங்களில் இருந்து வந்து கொண்டிருந்தது தமிழக காவல்துறை கவனத்திற்கு வராமல் இல்லை. மிருக பலத்துடன் பொதுக் குழு ஒரு மனதாக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுக்க உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்! அந்தப்படியே இன்று அதிமுக பொதுக் குழுவும் மிக கட்டுக்கோப்புடன் நடந்து வலுவான செய்தியையும் தந்துள்ளது. அது அதிமுகவிற்கு ஒ.பி.எஸ் வேண்டாம் என்ற செய்தி தான்!

ஒன்பது மணிவாக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஒ.பி.எஸ் தன் ஆதரவாளர்களுடன் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டார். அவர் வந்தாலும் வரலாம் என அதிமுகவினர் சிலர் அதை தடுக்கும் நோக்கத்தில் கட்சித் தலைமை அலுவலகத்தில் குவிந்து இருந்தனர். காவல்துறை பாதுகாப்பையும் கேட்டு இருந்தனர். ஆனால், தமிழக காவல்துறையோ ஒ.பி.எஸ் வரும் வழி நெடுகிலும் அவருக்கு பாதுகாப்பு தந்தது. ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் கட்சித் தலைமை அலுவலகத்தை நோக்கி வரும் போது, அதிமுக தொண்டர்கள் அதை தடுக்க கடுமையாகப் போராடினர். ஆனால், காவல்துறை அதிமுக தொண்டர்களை விலக்கி ஒ.பி.எஸ் கட்சி அலுவலகத்திற்குள் நுழைய வசதி ஏற்படுத்தி தந்தது.

அதன்பின் ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் அலுவலகக் கதவை உடைத்து திறந்ததையும், இ.பி.எஸ் படங்களை தீவைத்துக் கொழுத்தியதையும் வேடிக்கை பார்த்தது காவல்துறை. பின்னர், அதிமுக அலுவலுக முக்கிய பைல்களை களவாடி ரகசியமாக ஆம்புலன்ஸில் வைத்து எடுத்துச் செல்லவும் பாதுகாப்பு தந்தது. ஒ.பி.எஸ்  கட்சி அலுவலகத்திற்குள் இருக்கும் வரையிலும், அப் பகுதியில் யாரும் நுழைந்துவிடாதபடி படுபந்தோபஸ்த்து செய்தது. பின்னர் கட்சி அலுவலத்தில் இருந்து ஒ.பி.எஸ் ஆதரவளர்கள் வருவாய்த் துறையை அழைத்து, கட்சி அலுவலகத்தை சீல் வைக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

அதை ஏற்றுக் கொண்டு வருவாய்த்துறை சீல் வைக்க வந்த போது சும்மா எதிர்ப்பது போல பாவனை காட்டி ஒ.பி.எஸ் கட்சி வராந்தாவில் உட்கார்ந்தார். பிறகு தான் காவல்துறை சுதாரித்துக் கொண்டது. ‘உதவ வந்த நம்மையே குற்றவாளியாக்கிவிடுவார் போல ஒ.பி.எஸ்’ என சுதாரித்துக் கொண்டு, ”இந்த பாருங்க 144 தடை போட்டு இருக்கு. நாங்க கைது பண்ணினால் உடனே சாயங்காலம் விட முடியாது. இரண்டு வருஷம் சிறை தான்! ஒழுங்கா எழுந்து போய்விடுங்க” என்றது. அதன் பிறகு தான் ஒ.பி.எஸ் எழுந்து சென்றார்!

நீதிமன்றத் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அதிமுக பொதுக் குழு நடத்துவதற்கு தடையில்லை எனக் கூறி இருந்தது! ஆகவே, நம்பிக்கையுடன் இன்றைய தினம் காலை ஆறரை மணியில் இருந்தே தமிழகம் முழுமையிலுமிருந்த அதிமுக பொதுக் குழு உறுப்பினர்கள் ஸ்ரீவாரி திருமண மண்டபத்திற்கு சாரிசாரியாக வரத் தொடங்கினர். ஒட்டுமொத்த அதிமுகவும் ஓரிடத்தில் பொதுக் குழுவை மாநாடு போல பிரம்மாண்டமாக நடத்திக் கொண்டிருந்த போது, பின்வாசல் வழியாக நுழையும் திருடனைப் போல, திமுக அரசு தயவுடன் ஒ.பி.எஸ் நினைத்தை சாதித்துக் கொண்டார்! சொந்தக் கட்சி அலுவலகத்தையே சூறையாடிச் சென்றுவிட்டார்!

அவரால், ஆவணங்களை தான் திருட முடியும். ஆனால், அதிமுகவை என்ன செய்ய முடியும்? தன்னுடைய செய்கையால், மேலும் அம்பலப்பட்டு ஒ.பி.எஸ் தனிமைப்படவே வாய்ப்புகள் அதிகம்! திமுக அரசு, அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் இப்படி மறைமுகமாக உதவி இருக்கக் கூடாது. அதுவும் ஒ.பி.எஸ்சை தூக்கி சுமக்கும் பாஜகவோடு தானும் பங்களித்ததை என்னவென்று புரிந்து கொள்ளவே முடியவில்லை! திமுக அரசு நினைத்திருந்தால் இன்று அதிமுக அலுவலகத்தில் நடந்த விரும்பத் தகாத சம்பவங்களை தவிர்த்து இருக்கலாம்.

திமுகவின் இந்த அணுகுமுறை அதிமுகவை பலவீனப்படுத்துவதற்கு மாறாக, பலப்படுத்தவே உதவும். ஒ.பி.எஸ்சுக்கும், திமுகவுக்கும் உள்ள கள்ள உறவே அதிமுக தொண்டர்களை இ.பி.எஸ் பின்னால் அணிதிரள வைத்து விடும். உண்மையில் இ.பி.எஸ் ஒரு வலுவான பெரிய தலைவர் அல்ல. அவர் ஏதோ பணத்தை அள்ளி இறைத்து மட்டுமே இவ்வளவு பெரிய கூட்டத்தை திரட்டிவிடவில்லை. கடந்த சில வருடங்களாக ஒ.பி.எஸ் செய்த அழிச்சாட்டியங்களே கட்சியினரை இ.பி.எஸ் பின்னால் திரட்டிக் கொடுத்துவிட்டது. ஒ.பி.எஸ் அதிமுகவை அழித்து விடுவார் என்ற பயத்திலேயே அதிமுகவினர் இ.பி.எஸ்சை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்தச் சூழலில், இந்த பிரச்சினையை அதிமுகவை பலவீனப்படுத்த கிடைத்த வாய்ப்பாக திமுக கையில் எடுத்திருக்கக் கூடாது. அதிமுக பலவீனப்படுவது என்பது, பாஜகவை அந்த இடத்திற்கு கொண்டு வரும் முயற்சியாகத் தான் போய் முடியும்!

பாஜகவின் விருப்பம் என்பது திராவிடம் என்ற எதிரியை காட்டி, இந்துத்துவ தேசியத்தை கட்டி எழுப்புவதேயாகும்! ஆக, பாஜகவிற்கு தமிழகத்தில் வலுவான அரசியல் செய்ய திமுக என்ற எதிரி அவசியம் வேண்டும். இங்கே அதிமுகவின் இடத்தை அபகரிப்பது தான் பாஜகவின் தொலை நோக்கு திட்டம்! அந்த திட்டத்தின் அம்சமாகத் தான் ஒ.பி.எஸ்சுக்கு பின்புலமாக பாஜக இயங்குகிறது. அந்த வகையில் ஒ.பி.எஸ்சை ஆதரிப்பதில் திமுகவும், பாஜகவும் ஒரே நேர் கோட்டில் நிற்கின்ற விசித்திரத்தை புரிந்து கொள்ள முடிவில்லை.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time