யோக்கியமான தலைவருக்கு இங்கு இடமிருக்கிறதா…?

-சாவித்திரி கண்ணன்

அரசியலில் எவ்வளவு அம்பலப்பட்டாலும், தலைமைகள் வீழ்வதில்லையே…? பொன்னையன் ஆடியோ விவகாரத்தில் எடப்பாடியின் யோக்கியதை கிழித்து தொங்க விடப்பட்டுள்ளது. எடப்பாடியின் தலைமை தொடர்வதை கேள்வியாக்கியுள்ளது. எனினும், அறவுணர்வு இல்லாத சமூகத்தில், இதெல்லாம் என்னவாகும்?

”யார் இவர்? இது வரை மக்களுக்கு பெரிய அளவில் அறிமுகமில்லையே!” என ஐந்தாண்டுகளுக்கு முன்பு எடப்பாடி முதல்வரான போது அதிசயப்பட்டனர் மக்கள்!

ஆனால், அந்த எடப்பாடி பழனிச்சாமி, யாருமே எதிர்பார்க்க முடியாதபடிக்கு தற்போது அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு வந்துள்ளார்! அவர் முதல்வரானது கூட ஆச்சரியமானதல்ல, ஏனென்றால், அது சசிகலா அவருக்கு ஏற்படுத்தி கொடுத்த வாய்ப்பு! ஆனால், இன்று அதிமுக தலைமை பொறுப்புக்கு அவர் வந்துள்ளதானது, அவரே உருவாக்கிக் கொண்ட வாய்ப்பு!

எடப்பாடி நல்ல படிப்பாளியல்ல, அவருக்கு தமிழகத்தின் அடிநாதமான பல பிரச்சினைகள் குறித்த அடிப்படை அறிவு கூட இருக்குமா? என்பது கேள்விக்குறியே! ஏனென்றால், இவர் ஆட்சி காலம் முழுக்க பணம் சம்பாதிப்பதிலும், பாஜகவை சமாளிப்பதிலுமே நேரம் செலவிட்டார்.

எம்.ஜி.ஆர் உருவாக்கி இருந்த வலுவான அடித்தளம்! 27 ஆண்டுகால ஆட்சியில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்டமைத்திருந்த மக்கள் செல்வாக்கு, ஆட்சி தொடர்வதற்கு தோதான எம்.எல்.ஏக்கள் ஆகியவை அவருக்கு அதிர்ஷ்டமாக கை கொடுத்தன! நான் விசாரித்து அறிந்த வரை அவருக்கு ஒரு பைலைக் கூட சரியாக படித்து விளங்கி கொள்ள முடியாது. ”அதோட சாரம்சம் என்னன்னு கொஞ்சம் சொல்லுங்க” எனக் கேட்டுத் தெரிந்து கொள்வதோடு, ”இந்த மாதிரி விஷயத்துல அம்மா என்ன முடிவெடுத்தாங்க..” எனக் கேட்டுக் கொண்டு, ”அந்தப்படியே செய்துடுவோம்” என்பாராம்! ஈவு இரக்கமற்ற ஊழல் மிகுந்த ஒரு ஆட்சியைத் தான் எடப்பாடி தந்தார். அறிவு சார்ந்த பத்திரிகையாளர்களோடோ, எழுத்தாளர்களோடோ அவருக்கு எப்போதுமே நட்பு இருந்தது இல்லை.

தானும் சம்பாதித்து, மற்றவர்களையும் சம்பாதிக்க வைத்து தன் மீது அதிருப்தி இல்லாமல் பார்த்துக் கொண்டார். ஜெயலலிதா ஆட்சியில் அனைத்து அமைச்சர்களும் சசிகலாவிற்கு கப்பம் கட்ட வேண்டி இருந்தது. எடப்பாடி ஆட்சியில் அந்த நிர்பந்தம் இல்லாமல் போனது. அதனால் தான் சசிகலாவை கட்சியில் இருந்து வெளியேற்றிய அவரது செயலுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு இல்லாமல் போனது. உண்மையிலேயே கட்சிக்காரர்களுக்கு தினகரன் மற்றும் சசிகலா குடும்ப டார்ச்சரில் இருந்து விடுபட்ட போது சொல்லமுடியாத ஒரு சுதந்திர உணர்வு ஏற்பட்டது. ஜெயலலிதாவிற்கு பிறகு சசிகலா குடும்பp பிடியில் இருந்து அதிமுக விடுபட முடியும் என்பது யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சாகசம் தான்! அதை சாதித்தது எம்டன் எடப்பாடி தான்!

இதற்கிடையில் பாஜகவின் கைப்புள்ளையான பன்னீர் செல்வத்தை பக்கத்தில் வைத்துக் கொண்டு, அதிகார பகிர்வையும் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம். கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் நடக்கும் எல்லா நகர்வையும் பாஜக தலைமைக்கு பாஸ் செய்பவராக பன்னீர் இருந்தது தான் எடப்பாடிக்கு இருந்த பெரிய சிக்கல். ஒரு கட்டத்தில் கட்சி நடவடிக்கைகளும், ஆட்சி அணுகுமுறைகளிலும் பாஜக தலையிட்டு பெரியண்ணன் தோரணையில் கட்டளையிடும் நிலைமைக்கு பன்னீர் கொண்டு போய் நிறுத்திவிட்டார். இந்த விரும்பத்தகாத விஷயத்தை வெளிப்படுத்தவும் முடியாத நிலை! ஆக, பன்னீருடனும், பாஜகவுடனும் நட்பு பாராட்டிக் கொண்டே படு எச்சரிக்கையாக – கம்பி மீது நடப்பது போல – பேலன்ஸ் செய்திருக்கிறார் எடப்பாடி! சட்டமன்ற தேர்தலின் போது, ”பாஜகவிற்கு 60 தொகுதிகள் தரலாம்” என்ற பன்னீர் பரிந்துரையை நிராகரித்து, 20 தொகுதிகள் மட்டுமே தந்தார்.

சசிகலாவைக் காட்டியும், பாஜக செல்வாக்கின் பின்புலத்திலும் தொடர்ந்து பன்னீர் செல்வம் தந்த நெருக்கடிகளும், சுயநல போக்குகளுமே எடப்பாடி பழனிச்சாமி பக்கம் கட்சியினரை நகர வைத்தது. ஒரு வகையில் எடப்பாடி தலைவராக எமர்ஜ் ஆனதற்கு முழுப் பொறுப்பு பன்னீர் செல்வத்தையே சாரும். ஆக, ஒ.பி.எஸ் செய்த உபத்திரவங்களே, எடப்பாடியை தலைவனாகச் செதுக்கியது.

தற்போது வைரலாக பேசப்படுகிற பொன்னையன் ஆடியோ விவகாரத்திற்கு வருவோம். பணத்தால் தான் எடப்பாடி வெற்றிகளை குவிக்கிறார். வேலுமணியிடம் தான் அதிக எம்.எல்.ஏகள் உள்ளனர். சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, தங்கமணி ஆகியோர் குறித்த அவரது மதிப்பீடுகள்.. இவற்றின் ஒட்டுமொத்த சாரம்சமாக கட்சித் தலைவர்கள் சிலர் திமுகவிடம் சமரச அரசியல் செய்வது, பணம், சொத்தை விருத்தி செய்வது, அத்துடன் எடப்பாடியின் வெற்றி என்பது ஸ்திரமற்றதாக மாற வாய்ப்புள்ளது என்பதே நமக்கு கிடைக்கும் புரிதல்.

பொன்னையன் யதார்த்தத்தைத் தான் பேசியுள்ளார்! எடப்பாடியின் வெற்றி என்பது இன்றைய நிலையில் கேள்விக்குறி தான்! அதிமுக கட்சி என்பது கொள்கை பிடிபுள்ளவர்களாலும், ஒரு பொது நோக்கத்திற்காக ஒன்றுபட்டவர்களாலும் சேர்ந்து நடத்தப்படவில்லை. இது அரசியலை வியாபாரமாக பார்க்கப்படுபவர்களால் தான் நடத்தப்படுகிறது.

இது எதுவுமே அதிர்ச்சிதரத்தக்க உண்மையல்ல. இதைவிட அதிர்ச்சியான உண்மை ஒன்று சொல்ல வேண்டும் என்றால், கொட நாடு விவகாரத்தில் நியாயமான விசாரணை நடந்தால் கொலைக் குற்றத்திற்காக கம்பி எண்ண வேண்டியவர் தான் எடப்பாடி! நெடுஞ்சாலைத் துறை ஊழல்களை தோண்டினால், நிச்சயமாக சிறை கொட்டடிக்கு அனுப்பப்பட வேண்டியவர் தான்! கூட இருப்பவன் குழி தோண்டினால், குப்புற விழ வேண்டியவர் தான்! ஆக, எப்போது வேண்டுமானாலும் அவர் கதை முடிவுக்கு வரலாம். ஆனால், இவை எதுவுமே நடக்காமலும் போகலாம்.

காரணம், இது இந்தியா! இங்கு அநீதியைக் கண்டு மக்களுக்கு அறச் சீற்றம் வெளிப்பட்டு அரசியல்வாதிகளுக்கு முடிவுரை எழுதப்படுவதில்லை. பணம் அல்லது இலவச அறிவிப்புகளால் ஓட்டு போடும் மக்கள் கணிசமாக உள்ள நாடு இது! அங்கே, இங்கிலாந்தில் சமீபத்தில் என்ன நடந்தது? தங்களால் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட போரீஸ் ஜான்சன், ‘ஒரு பொய்யர், ஊழல்வாதிகளுக்கு துணை போகிறவர், நிர்வாகத் திறமையற்றவர்..’எனத் தெரிய வந்ததும், சொந்தக் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு ஏற்பட்டது. அவரது ராஜீனாமாவை நிர்பந்தித்து அவரது சகாக்களே தங்கள் பதவியைத் துறந்தனர். இறுதியில் அவரது அரசியல் மூன்றே ஆண்டில் முடிவுக்கு வந்தது.

‘இங்கு ஒருவன் அறமற்றவன்’ என உணர நேரும் போது எத்தனை பேர் அவனிடம் இருந்து விலகுகின்றனர்.

அண்ணாவிற்கு பிறகு கருணாநிதி தலைவராவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அப்போது அவரிடம் தலைவனுக்கான பண்புகளும் இல்லை. ஆனால், சூழ்ச்சிகளும், தந்திரங்களும் தெரிந்து இருந்தது. கடுமையான, சோர்வில்லாத உழைப்பு இருந்தது. தனக்கு போட்டியாளராக இருப்பார் என்ற சந்தேகம் வந்தாலே ஒருவரை ஈவு இரக்கமின்றி கட்சியில் இருந்து காலி பண்ணிவிடுவார். கருணாநிதி செய்யாத ஊழல்களா? பித்தலாட்டங்களா? துரோகங்களா..? சந்திக்காத தோல்விகளா..? அவமானங்களா..? எல்லாம் வெளிப்பட்டும் அவர் தலைவராக தமிழ் சமூகத்தில் சுமார் 50 ஆண்டுகள் வளைய வந்தார்!

எம்.ஜி.ஆர் தலைவராவார், முதல்வராவார் என யாரேனும் எதிர்பார்த்தார்களா…?

”எம்.ஜி.ஆருக்கு அரசியல் தலைவராவதற்கான அருகதையே துளியும் இல்லை. கருணாநிதியிடம் உள்ள ஈகோவினால் அரசியலுக்கு வருகிறார்” என்றவர் சோ!

”ஒன்று மட்டும் நிச்சயமாகக் கூற முடியும். அதிமுகவின் பிறப்பை மக்கள் கண் மூடித்தனமாக வரவேற்று, மிதமிஞ்சி ஆதரித்து, அளவுக்கு மீறி சீராட்டினால் மக்களின் அடிப்படை அரசியல் ஞான சூனியம் மாறவில்லை என்று தான் பொருள்” (துக்ளக் 1.11.72) என எழுதிய சோ.ராமசாமி தான், பிற்காலத்தில் ஊழலில் புழுத்துப் போன ஜெயலலிதாவை தூக்கிச் சுமந்தார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

”அரசியல் கோமாளி, நிர்வாகமே தெரியாதவர், சட்டாம்பிள்ளைத்தனம், சர்வாதிகாரம் ஆகியவற்றின் கலவை. ஒன்மேன் ஷோவாக அரசியல் செய்பவர்…” என அரசியல் விமர்சகர்களால் மதிப்பிடப்பட்ட எம்.ஜி.ஆர் 11 வருடம் அசைக்க முடியாத முதல்வராக தொடர்ந்து வலம் வந்தார்.

கவர்ச்சி நடிகை, எம்.ஜி.ஆர் தயவில் முன்னிலைபடுத்தப்பட்டவர், சீனியர்களை மதிக்காதவர், நம்பகத்தன்மையற்றவர், எப்போது என்ன செய்வார் என்பதை யூகிக்க முடியாது, எவ்வளவோ உண்மைகள் வெளியாகியும் கூட, ஊரை அடித்து உலையில் போட்ட சசிகலா குடும்பத்தை கூடவே வைத்துக் கொண்டார். ஊழலில் உச்சகட்ட சாதனை படைத்தவர், அராஜகத்தில் தன்நிகரற்றவர், பெற்ற தோல்விகளும், அவமானங்களும் கொஞ்ச நஞ்சமல்ல…’ அப்படி இருந்தும் ஜெயலலிதா இங்கு தொடர்ந்து பெரும் தலைவியாக வலம் வரவில்லையா…?

பழனிச்சாமி தவழ்ந்து சென்று சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றவர் என்ற விஷுவல் வெளியானதே.. அதனால் என்ன பின்னடைவு அவருக்கு ஏற்பட்டது..? உண்மையில் அது எவ்வளவு அவமானகரமான செயல்? அதற்குப் பிறகும் நான்காண்டு முதல்வராக இருந்து இன்று எதிர்கட்சித் தலைவராகவும் ஆகியுள்ளாரே! அரசியல் என்பது கடப்பாரையைத் தின்று செரிப்பவர்களால் தான் தற்போது தலைமை தாங்கப்படுகிறது.

ஒரு இயக்கத்தின் நிகழ்கால நிர்பந்தங்களே அதன் தலைவரை தீர்மானிக்கின்றன! அதிமுகவிற்கு இன்றைக்கு எடப்பாடியை விட்டால் வேறொருவர் இல்லை என்ற சூழல் உள்ளது. அதனால், பொன்னையன் விவகாரம் இன்னும் இரண்டு நாள் விவாதிக்கப்படலாம். அவ்வளவு தான்! அடுத்து அதிமுக அலுவலகத்தை மீட்பதிலும், தேர்தல் கமிஷனில் சின்னம் பெறுவதிலும் எடப்பாடி சந்திக்க போகும் நெருக்கடிகள் தாம், ‘அவர் தலைவராக மேலும் ஏற்றம் பெறுவாரா?’ அல்லது ‘தன்நிலை குலைந்து போவாரா?’ என்பதைச் சொல்லும்!

இந்த நாட்டில் வ.உ.சியும், காந்தியும், காமராஜரும் வேண்டும் என்ற மனநிலை மக்களுக்கு இருக்கிறதா? அப்படி இருந்தால் நமக்கு ஏன் இப்படிப்பட்ட தலைவர்களே மீண்டும், மீண்டும் வருகிறார்கள்?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time