ஆபத்தில்லாத முதலீடுகள் என்னென்ன..?

செழியன் ஜானகிராமன்

சேமிப்பு இல்லாத வாழ்க்கை சேதாரமாகிவிடும். தவறான இடத்தில் சேமிக்க கொடுப்பது ஆதாரத்தையே அழித்துவிடும்! சேமிக்கும் பணத்தை என்னென்ன வழிமுறைகளில் முதலீடு செய்யலாம்..? ரிஸ்க் எடுக்க விருப்பமா? ரிலாக்ஸ் சேமிப்பு விருப்பமா?

கடந்த 5 கட்டுரைகளில் அரசாங்கம் மக்களுக்காக உருவாக்கிய சேமிப்பு – முதலீடு – பென்சன் திட்டங்களைப் பார்த்தோம். இவை எல்லாம் பாதுகாப்பானவை. குறிப்பிட்டுள்ள வட்டி கொடுத்து விடுவார்கள். ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும். என்றைக்கும் பாதுகாப்பான முதலீடுகளுக்கு வருமானம் அதிகமாக இருக்காது.

எந்த அளவு ஒரு முதலீட்டில் ரிஸ்க் அதிகம் உள்ளதோ, அந்த அளவு அதில் லாபமும்-நஷ்டமும் அதிகம் இருக்கும்.  இங்கு ரிஸ்க் என்பது அரசு வகுத்துள்ள விதிகள் படி இயங்கும் திட்டங்கள் ஆகும்.

அப்படிப் பல முதலீடு திட்டங்கள் சந்தையில் உண்டு.  பரஸ்பர நிதி(Mutual Fund), பங்குச்சந்தை (Share Market), மாற்று முதலீடு (Alternative Investment), பெறும் தனியார் நிறுவன கடன் பத்திரங்கள்(Private Sector Bonds), தனியார் நிரந்தர வைப்புத் தொகை (Private Fixed Deposit), சீட்டு(Chit Fund).

ஒரு லட்சம் கொடுத்தால் மாதம் பத்தாயிரம் என்ற திட்டத்திலும் ரிஸ்க் உண்டு. அதில், சேர்வது சிறந்ததா என்றால் அவை எந்த அரசு விதிப்படி இயங்காத திட்டம். அதனால், மிக ஆபத்தானவை! ஆனால் பெரும்பாலானோர்  இது போல் இருக்கும் திட்டங்களில்தான் பணத்தை முதலீடு செய்வார்கள்.

ரிஸ்க் எடுப்பதா? ரிலாக்ஸ் எடுப்பதா?

ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் ரிஸ்க் உள்ள திட்டங்களைத் தவறாகப்  புரிந்து கொள்கிறார்கள்!. ரிஸ்க் உள்ள திட்டங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, பிறகு முடிவெடுப்பதே சிறந்தது.

மற்றவர்கள் சொல்கிறார்களே என்பதற்காக ஒன்றை நிராகரித்தால் கடைசி வரை நமக்கு அதன் மீது தவறான புரிதல் மட்டுமே இருக்கும். அதற்குச் சரியான உதாரணம் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை குறித்துச் சரியாகத் தெரிந்து கொள்ளாமலே அதை சூதாட்டம் என்று நிராகரிப்பதைச் சொல்லலாம்.

அரசு சேமிப்பு திட்டங்களில் ஒருவர் தன்னுடைய சேமிப்பு பணத்தை 50 சதவிகிதம் கூட முதலீடு செய்து கொள்ளட்டும். ஆனால், அவை மட்டுமே நம் எதிர்கால வாழ்க்கைக்குக் கைகொடுக்காது. பணவீக்கம் என்ற ஒன்றை அறிந்து கொண்டால், பலரும் சேமிப்பு பணத்தை வீட்டுப் பீரோவில் மட்டும் வைக்க மாட்டோம்.

இன்று கல்லூரியில் சேர 5 லட்சம் ஆகிறது என்றால், அதே படிப்புக்கு 10 வருடங்கள் கழித்து 20 லட்சம் கூட ஆகலாம். அதே படிப்புதான் என்றாலும், பல வருடங்களுக்குப் பிறகு அதற்கு பணம் அதிகமாகி விடுகிறது. அதனால், அரசுத் திட்டங்களைத் தவிர்த்து, அதிக லாபம் வரும் மற்ற திட்டங்களில் குறிப்பாக மியூச்சுவல் ஃபண்ட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட்டில்  செலுத்தும் பணம்  பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. அதனால் லாபம் வராது நஷ்டம் தான் வரும் என்று பொதுக் கருத்து உண்டு.  இதில் பாதி உண்மை. அதாவது பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது  என்பது 50 சதவிகிதம் உண்மை மட்டுமே!  அதே போல் கடன் சந்தையிலும் முதலீடு செய்யப்படுகிறது என்பதுதான் முழு உண்மை.

கடன் சந்தை

கடன் சந்தை என்பது நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு வட்டி கிடைக்கும்.   வங்கி வைப்பு நிதி (Fixed Deposit) போன்றது. ஆனால் கடன் சந்தையில் அதை வைப்பு நிதி என்று சொல்ல மாட்டார்கள். கடன் என்று சொல்லுவார்கள். உதாரணத்திற்கு அரசுக்கு  வரி மூலம் வருவாய் கிடைக்கும். இருந்தாலும், அவசர தேவைக்கு அரசு கடன் வாங்கும்.

தேவையான  கடன் தொகையைப்  பல விதங்களில்  அரசாங்கம் வாங்குவார்கள். அதில், ஒரு வகை மக்களிடம் கடன் வாங்குவது. நாம் யாரிடமாவது கடன் கேட்டால் கடன் கொடுப்பவர் நம்மிடம் பத்திரத்தில் எழுதி கையெழுத்து வாங்குவர். அரசு இதே போல் நம்மிடம் வாங்கும் கடனுக்குப் பத்திரம் கொடுப்பார்கள். அதைக் கடன் பத்திரம்(Bond) என்று பெயர்.

அவ்வப்பொழுது அரசு இப்படி கடன் பத்திரத்தை வெளியிடுவார்கள். அரசுக்குக் கடன் கொடுத்து நாம் பத்திரத்தை வாங்கிக் கொள்ளலாம். நம்மிடம் வாங்கும் கடனுக்கு  இவ்வளவு வட்டி கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டு இருப்பார்கள்.  எந்த தேதியில் திருப்பி தருவதாகச் சொல்லி இருக்கிறார்களோ, அந்த நாளில் வட்டியுடன் கொடுத்துவிடுவார்கள்.

மத்திய அரசும் கடன் கேட்கும், தனியார் பெரும் நிறுவனங்களும் கடன் கேட்கும், மாநில அரசும் கடன் கேட்கும். இது போன்ற அரசுக் கடன்கள் பாதுகாப்பானவை! அரசு மக்களை ஏமாற்றாது!. ஆனால், தனியார் நிறுவனங்கள் கேட்கும் கடன்கள் சற்று ரிஸ்கானவை! நாம் அந்த நிறுவனத்தை  ஆராய்ந்து கடன் கொடுக்கலாம்.  அதற்குப் பல முறைகள் உண்டு. அவற்றை பிறகு விரிவாகப் பார்க்கலாம்.

இதைத் தான் கடன் சந்தை என்று குறிப்பிடுவார்கள். குறுகிய காலக் கடன் நடுத்தர காலக் கடன், நீண்ட காலக் கடன் என்று பல வித கடன்கள் உள்ளன!. நாம் நம் விருப்பத்திற்கு ஏற்ப திட்டத்தை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். ஒரு பரஸ்பர நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் பெரும் பணத்தைப் பங்குச்சந்தை , கடன் சந்தை இரண்டிலும் முதலீடு செய்யும். கடன் சந்தை குறித்து சுருக்கமாகப் பார்த்தோம்.

நாம் பரஸ்பர நிதி திட்டத்தில் சேர முடிவு செய்தால், நம் பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம். கடன் சந்தையில் மட்டும் முதலீடு செய்யுங்கள் என்று .சொல்லலாம். இன்னும் குறிப்பாகத் தனியார் கடன் பத்திரத்தில் இல்லாமல் அரசு கடன் பாத்திரத்தில் மட்டும் முதலீடு செய்யுங்கள் என்றும் சொல்ல முடியும். அதற்கு ஏற்ப பரஸ்பர நிதி நிறுவனங்கள் திட்டங்களை வைத்து உள்ளன.

பரஸ்பர நிதி என்பது பங்குச்சந்தை, கடன் சந்தை இரண்டும் இணைந்தது என்பதால் நாம் சேமிக்கும் பணத்தில் 20 சதவிகிதம் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யத் தொடங்கலாம்.

ஒருவர் பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய முடியும் என்பதால் ஏன்  பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய வேண்டும்?

உண்மைதான் ஒருவர் நேரடியாக பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் அடைய வழி உண்டு. ஆனால், பங்குச்சந்தை என்பது அதிக ஏற்ற இறக்கங்களைக் கொண்டவை. அவ்வப்பொழுது அதைக் கவனித்து வரவேண்டும்.

உலக செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை  படிக்க வேண்டும்.  தொடர்ந்து பங்குச்சந்தையை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வளவும் ஒருவர் தொடர்ந்து செய்ய முடியுமா ? என்றால், கடினமே. அனைவரும் அடிக்கடி பங்குச்சந்தையை கவனித்துக் கொண்டு இருக்க முடியாது. அந்த இடத்தைத் தான் மியூச்சுவல் ஃபண்ட்  நிவர்த்தி செய்கிறது.

மியூச்சுவல் ஃபண்ட்டில் பங்குச் சந்தையை நன்கு தெரிந்த நபர்கள் பணியில் இருப்பார்கள்.  Fund  Manager என்று அழைக்கப்படுவார்கள். Fund manager நம்மிடம் வாங்கும் பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்வார். அவர் ஒவ்வொரு நிறுவனத்தையும் அலசி ஆராய்ந்து முதலீடு செய்வார்.

பங்குச்சந்தையில் பெரிய இறக்கம் வரப்போவதாகத் தெரிந்தால், உடனடியாக நம் பணத்தை எடுத்து கடன் சந்தைக்கு மாற்றிவிடுவார். அவர் முழு வேலையே உலக-உள்ளூர் செய்திகளைக் கவனிப்பது. நிறுவனங்களை ஆராய்வது என்று எப்போதும் இருப்பவர். இவர்களிடம் நாம் பணத்தை கொடுத்தால் சரியாக பங்குச் சந்தையில் முதலீடு செய்வார்கள்.

காரை நாம் ஓட்டுவதற்கும், டிரைவர் வைத்து ஓட்டுவதற்கும் உள்ள வித்தியாசம் தான் பங்குச் சந்தையில் நேரடியாக நாம் முதலீடு செய்வதும், அவற்றை நன்கு தெரிந்த மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்களிடம் கொடுத்து முதலீடு செய்வதுமாகும்.

மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதலீடு செய்து கற்றுக் கொள்ளத் தொடங்குவோம். 500 ரூபாய் போதுமா என்றால் போதும். எப்படி என்று பார்ப்போம்

மியூச்சுவல் ஃபண்ட் கற்றுக் கொள்வோம் சேமித்த பணத்தை முதலீடு செய்வோம்.

அடுத்து ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைக் குறித்தும் பார்ப்போம்.

கட்டுரையாளர்; செழியன் ஜானகிராமன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time