புரட்சியால் மக்கள் கைக்கு வருமா அதிகாரம்..?

-ச.அருணாசலம்

ராஜபக்சே குடும்ப ஆட்சியின் மோசமான விளைவுகளால் கொந்தளிப்பான மக்கள் அதை தூக்கியெறியும் போராடத்தில் இன்னும் முழுமையான வெற்றி பெறவில்லை. எனினும், இந்த திருப்பம்,  இலங்கை அதிகார அரசியலில் புதிய அத்தியாயத்தை  துவக்கியுள்ளது. இதன் விளைவு எப்படி இருக்கும்?

இலங்கையில் கடந்த சனிக் கிழமை (ஜூலை9)  அதிபர் மாளிகை, தலைமைச்செயலகம் மற்றும் அவரது அலுவலகம் ஆகியவை போராடும் பெருந்திரளான மக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட வேளை தப்பியோடிய கோத்தபயா ராஜபக்சே ராஜினாமா செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால். தன்னை தற்காத்துக் கொள்வள்ளும் முனைப்பிலேயே அவர் தவித்தார்! ஐக்கிய அரபுக் குடியரசு நாட்டிற்கு தப்பிச் செல்ல மூன்று முறை முயன்றும், குடியேற்ற அமைச்சக ஊழியர்களின் எதிர்ப்பால் அம்முயற்சி முறியடிக்கப்பட்டது. பிறகு ராணுவ உதவியுடன் அருகில் உள்ள மாலத்தீவிற்கு தப்பிச்சென்றுள்ளார், அங்கும் மக்கள் எதிர்ப்பு மேலோங்கிய நிலையில், சிங்கப்பூர் சென்றடைந்த கோத்தபயா ராஜபக்சே தனது பதவி விலகல் கடிதத்தை மின்னஞ்சல் மூலம் சபாநாயகருக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.  இச்செய்தி உறுதியானால்  கோத்தா வீட்டுக்குப் போ என்ற போராடிய இலங்கை மக்களுக்கு கிடைத்தமுக்கியமான வெற்றியாகும்.

போகிறபோக்கில் அவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பொறுப்பு ஜனாதிபதியாக நியமித்து உள்ளார் என்ற செய்தி வந்தது. போராடும் இலங்கை மக்களை மேலும் கோபப்படுத்தியது.அதனால், கோத்தபயாவின் கூட்டாளியாக செயல்படும் விக்கிரமசிங்கேவும் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

புயலுக்குப் பின் அமைதியா?

இந்த புதிய அத்தியாயத்தின் முக்கிய கூறாக, ஜனநாயகத்திற்கு திரும்புதல் – அதிகாரமிக்க அதிபர் முறையில் இருந்து விலகி புதிய அரசியல்  சாசனத்தின் மூலம் மக்கள் ஜனநாயகத்திற்கு திரும்புதல் – அமையும் என்று போராட்டகாரர்கள் அறிவித்துள்ளனர். பாரதூரமான அரசியல் சீர்திருத்தங்களை உள்ளடக்கிய புதிய அரசியல் சாசனம் -Constitution-  வடித்தெடுப்பது புதிய அரசின் தலையாய கடமை என்று  போராடும் மக்கள் இயக்கம் கருதுகிறது.

இது புயலுக்குப்பின் அமைதியை அல்ல, புயலை மேலும் தீவிரமடைய செய்துள்ளது. இந்தப் போராட்டம் இனி ரணில் விக்ரமசிங்கே பதவி விலகும் வரை ஓயாது! சொல்லி வைத்தாற்போல் விக்கிரமசிங்கே போராடுபவர்களை “பாசிச சக்திகள்” என்று சாடியுள்ளார் ,

அவர்கள் அதிபர் மாளிகை, பிரதமர் இல்லம், தலைமைச்செயலகம் ஆகியவற்றை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும் ராணுவத் தளபதிகள் சட்டத்தையும், அமைதியையும் நிலைநாட்ட ஆவன செய்வர் என்றும் தொலைகாட்சியில் அறிவித்தது!

போராடும் மக்கள் முற்றுகையை மேற்கூறிய மூன்று இடங்களில் இருந்தும் விலக்கிக் கொள்வதாகவும் ஆனால் குறிக்கோள்களை எட்டும்வரை போராட்டங்கள் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். அதிபர் மாளிகை மக்களிடம் இருந்து ராணுவத்தால் மீட்கப்பட்டு உள்ளது.

ஓராண்டுக்கும் மேலாக, ஆனால் தொடர்ந்து இடைவிடாமல் அமைதியாக போராடும் இலங்கை மக்கள் புதிய வரலாற்றை அங்கு படைத்துள்ளனர்.

அவர்கள், இன்றைய சீர்கேட்டை மட்டும் எதிர்க்கவில்லை, இலங்கையில் ஏற்பட்ட இன்றைய பொருளாதார சீரழிவோடு, ஏற்கனவே பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் ஜனநாயகச் சீரழிவையும் சேர்த்தே எதிர்க்கத் துணிந்துள்ளனர்.

விழிப்படைந்த மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டம் அங்குள்ள அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது அரசியல் கட்சிகள் ஆரம்பித்த போராட்டம் அல்ல. அவர்களது கோரிக்கைகளும் அரசியல் கட்சிகள் முன்னெடுத்தவை அல்ல.

பலதரப்பட்ட மக்கள் பிரிவினரை உள்ளடக்கிய இன்றைய இலங்கை எழுச்சி ஜாதி,மத மற்றும் இன வேறுபாடுகளைக் கடந்த நிலையில் உள்ள இந்த இயக்கம் சமகால இலங்கை வரலாற்றில் மாற்றத்தை கண்முன் கொண்டுவரும் ஒரு பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது எனலாம். பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டரை கோடி மக்கள் வாழும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்திவந்த ராஜபக்சே குடும்பத்தினரை (ஐந்து நபர்கள்) அப்புறப்படுத்திக்காட்டிய இந்த இயக்கம் வெறும் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. ஆளும் முறையையே மாற்ற வேண்டும் என துணிந்துள்ளனர். ராஜபக்சேவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மற்றொருவரை ஆட்சிக் கட்டிலில் ஏற்றுவதோடு இந்த இயக்கம் நின்றுவிடப்போவதில்லை.

ஆட்சி அமைப்பு முறைகளை சீரமைக்க வேண்டும் என்ற இயக்கத்தினரின் கோரிக்கை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டத்தில் பீதியை கிளப்பியுள்ளது. சட்டத்தில் மற்றும் அமைப்பு விதிகளில் உள்ள சந்துபொந்துகளை,ஒட்டைகளை பயன்படுத்திக் கொண்டு கொள்ளையடிப்பதும் அதிகார துஷ்பிரயோகம் செய்வதும் அடக்கி ஒடுக்குவதும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஆட்சியில் அமர்ந்தால் செய்யும் செயல்தான் என்பதும், இதை ராஜபக்சே கும்பல் அதீதமாக செய்து நாட்டை சூறையாடினர் என்பதும் இன்று வீதிகளில் இறங்கி போராடும் இளைஞர்கள் நன்கு அறிவர்.

எனவே, இன்று போராடும் இவ்வியக்கத்தின் நோக்கமெல்லாம் ஆட்சியாளர்களை மாற்றுவது மட்டுமல்ல, ஆளும் அரசியல்  முறையை-  அதிகாரம் குவிக்கப்பட்ட அதிபர் முறையை – மாற்றுவதே ஆகும் . அத்தோடு, நில்லாமல் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் நடைமுறையையும் மாற்றியமைக்க விழைகின்றனர் . அதிபர் முறை ஜனநாயகத்திலிருந்து பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு மாறுவது மட்டுமே அவர்கள் நோக்கமில்லை, அதற்கு மேலும் பிரதிநிதித்துவ ஜனநாயக முறையில் உள்ள குறைகளை களைவதன் மூலம் தகுந்த கட்டுப்பாடுகளும், பாதுகாப்புகளும் பொறுத்தி அதை செம்மை படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளனர். இதன்மூலம் ,  கிடைத்த வெற்றியை பயன்படுத்தி முறை தவறி ஆட்சி செய்வதையும் , கொள்ளயடிப்பதையும் தடுக்க எண்ணுகின்றனர். வாக்காளர்கள் தாங்கள் தேர்வு செய்த பிரதிநிதிகளை, திரும்பப் பெறும் உரிமை மூலம் பாராளுமன்றமும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களும் தமக்கு கிடைத்த வெற்றியை முறை தவறி பயன்படுத்துவதை முறியடிக்க முயல்கின்றனர்.

ஆங்காங்கே சிறு சிறு கிராமங்களில் உள்ள படித்த, துணிச்சலான இளைஞர்கள் தங்களது சாதாரண வாழ்வுரிமைகளுக்காக போராட்டத்தில் இறங்கி ஆட்சியாளர்களின் அட்டூழியத்தையும், அத்துமீறலையும், கையாலாகாத்தனத்தையும் எதிர்க்கத் துணிந்தனர் .

கொரொனா பெருந்தொற்றினாலும் ராஜபக்சேக்களின் சுயநலமான, மோசமான ஆளுமையால் பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ந்த நிலையில் சாதாரண மக்கள் அன்றாடம் தேவைப்படும் உப்பிற்கும் பருப்பிற்கும், அரிசிக்கும், மருந்து, மாத்திரைகளுக்கும், மின்சாரத்திற்கும், பெட்ரோலுக்கும்,  மண்ணெண்ணைக்கும் ரோடுகளில் நாயைவிடக் கேவலமாக அலையும் நிலைக்கு ஆளாக்கப்பட்டனர் ராஜபக்சா அரசால் அலைந்தும் விடிவு கிடைக்காதபோது வெகுண்டெழுந்தனர்

இவையெல்லாம் இணைந்து அரகாலயா – Uprising  எழுச்சி என்ற அறவியக்கம்  முளைத்தெழுந்தது. பாதிக்கப்பட்ட அனைவரும் – முதலில் விவசாயிகளும், பின் பள்ளி ஆசிரியர்களும், தோட்டத் தொழிலார்களும், அடுத்து சுகாதார ஊழியர்களும், நகர்ப்புற தொழிலாளர்களும், நகர்புற மத்திய தர வர்க்கத்தினரும், புளூ காலர் மற்றும் ஒயிட் காலர் பணியாளர்களும் தாங்களடைந்த பாதிப்பால் வேதனையால் இப்போராட்டத்தில் -ராஜ பக்சே குடும்பத்தை  ஆட்சியிலிருந்து விரட்டுவது – என்ற போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர் . கடந்த மார்ச் 31ந்தேதி இந்த போராட்டங்கள் கோத்தா வீட்டுக்குப்போ  Gota  Go Home  என்ற நாடு தழுவிய இயக்கமாக பரிணமித்தது.

இப்போராட்டத்தின் உறைவிடமாக காலி முனை கடற்கரை இன்றுவரை காட்சியளிக்கிறது.

கோத்தா போ( Gota Go village)  கிராமம் என பெயர் சூட்டப்பட்ட இந்த போராட்ட மையம் இன்னும் போராளிகளை வழி நடத்தும் மூளையாக செயல்படுகிறது.

இன்றைய பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வது இலகுவான காரியம் அல்ல, அது முட்கள் நிறைந்த கரடுமுரடான பாதை என்பதை இயக்கத்தினர் உணர்ந்தே உள்ளனர். இந்த நிலைமைக்கு காரணமான ஆட்சியாளர்களை அவர்கள் பதவிக்காலம் முடியும் வரை காத்திருக்காமல் உடனடியாக அகற்றுவதும், புதிய தீர்விற்கான புதிய ஆட்சியாளர்களைஅங்கு அமர்த்துவதும் அரகாலயா இயக்கத்தின் அடிப்படை கடமையாக எண்ணுகின்றனர்.

ஆனால், அதை நடைமுறை படுத்துவதில் பல சவால்கள் உள்ளன.

ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பு அதிபராக ( Acting President) நீடிப்பாரா என்ற கேள்வி எழுகிறது. அவ்வாறு அவர் நீடித்தால் , அவர் பிரதமர் பதவிக்கு ஒரு நபரை -இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மை பெற்ற ஒருவரை – தேர்வு செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடலாம் .அப்படியான நபர் ஆளும் தரப்பிற்கும் -ராஜ பக்சே கட்சியான சிறிலங்கா பொதுஜன கட்சிக்கும் வேண்டியவராகவே இருக்க முடியும். ஏனெனில், இன்றைய இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் எண்ணிக்கை மிக குறைவு.

அப்படி வலம் வரும் அரசு-ரணில் ஆக்டிங் ஜனாதிபதியாகவும் , ராஜபக்சே கட்சி ஆதரவுடன் ஒருவர் பிரதமராகவும் காட்சி தரும் அரசு- ராஜபக்சே கும்பலின் “மறைமுக” ஆட்சி என்பது விளங்காதா? போராடும் மக்கள் இந்த ஏற்பாட்டை ஏற்றுக்கொள்வரா என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இந்த இயக்கம் தோற்றுவித்துள்ள மாற்றங்களை எதிர்கொள்ள இன்றைய இலங்கை அரசியல் கட்சிகள் தயாரா என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஜனநாயகம் என்றால், எப்படியாவது வாக்குகளை பெருவாரியாக பெற்றுவிட வேண்டும் என்றும், அத்துடன் வாக்காளர் கடமையும் ,சம்பந்தமும் முடிந்தது என்றெண்ணும் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் உள்ள இந்த சூழலில் வாக்காளர்களின் உரிமையும்,  தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதிகளின் மேல் வாக்காளர்களின் கண்காணிப்பும் அவசியம் என்று எண்ணும் அரகாலயா இயக்கத்திற்கும் முரண்பாடுகள் உள்ளன.

இதனுடைய வெளிப்பாடு வரும் காலங்களில் என்ன வடிவம் பெறும் என்பதை இப்பொழுது கணிப்பது கடினம். இன்றிருக்கும் அரசியல் கட்சிகள் போராட்டகாரர்களின் அரசியல் சீர்திருத்தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்களா அல்லது எதிர்ப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

விழிப்புணர்வு அடைந்த மக்களும் புதுமை நிறைந்த போராட்டத்தின் பலனை கண்கூடாக பார்த்த இலங்கை மக்களும் பழைய அரசியல் பாணியை தொடர்ந்து ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறுவதற்கில்லை. அரசியல் கட்சிகளும் பழமை விரும்பிகள் , சீர்திருத்த ஆதரவாளர்கள் என பிரியக் கூடும் . அவ்வாறு நடைபெற்றால் ஜனதா விமுக்தி பெரமுன ஜே வி பி கட்சியும் தமிழர் நலன் பேணும் தமிழ் தேச கூட்டணியும் அரகாலயா இயக்கத்தினருடன் இணைந்து புதிய இலங்கையை படைக்க வழியுள்ளது. சம உரிமைகளுடனும், சுயாட்சியுடனும் ஒருங்கிணைந்த இலங்கையை உருவாக்குவதில் அரகாலயா இயக்கத்தினருக்கும் , தமிழ் தேசிய கூட்டணிக்கும் ஏன் ஜனதா விமுக்தி பெரமுன (JVP)  கட்சிக்கும் மாறுபாடுகள் அதிகமில்லை . பாதை கடினமாயினும் புதிய விடியல் இலங்கை வாழ் மக்களுக்கு தூரமில்லை என்றே தோன்றுகிறது.

“தேசத்திற்கு ஆபத்து, புத்த மதத்திற்கு ஆபத்து ” என்ற கோஷத்தை முன்னிறுத்தி சிங்கள இன மக்களை திசை திருப்பி 2019ல் மாபெரும் வெற்றியடைந்து ஆட்சியில் அமர்ந்த கோத்தபயாதன்னுடைய கையாலாகாத்தனத்தினாலும்,அகங்காரத்தாலும் நாட்டையே சீரழித்து படுகுழியில் தள்ளினார். அக்கொடிய கும்பலை ஆட்சியில் இருந்து விரட்டிய பெருமை போராடும் இலங்கை மக்களை சாரும். பாடம் கற்க, இன்றைய அரசியல்வாதிகள் முன்வருவார்களா?

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time