அடித்து முன்னேறும் கவர்னர்! அடங்கி பின்வாங்கும் அரசு!

-சாவித்திரி கண்ணன்

சர்ச்சைக்குரிய வகையில் பேசி சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் செய்யும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்கொள்வதில் ஏகத்துக்கும் தடுமாறுகிறது திமுக அரசு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை அதன் சொந்த மண்ணிலேயே அதிகாரமற்றதாக்கி, தனி ராஜ்ஜியத்தை நடத்துகிறார் ஆளுநர்!

ஒன்றா, இரண்டா? நாளும்,பொழுதும் கலந்து  கொள்ளும் நிகழ்வுகளில் எல்லாம் கிட்டதட்ட கலவரத்தை தூண்டும் வகையில் பேசிக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி!

ஒரு கல்விச் சூழலில் அன்பை விதைக்கும் வார்த்தைகளை, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் செய்திகளை, கருத்துக்களை பேசி உற்சாகப்படுத்துவது தான் சிறப்பு விருந்தினரான அவர் செய்ய வேண்டியது. ஆனால், அவரோ, ஆர்.எஸ்.எஸ்சின் சித்தாந்தத்தை பரப்பி வருகிறார்.

சமீபத்திய மதுரை காமராஜர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவிலும், முன்பு அவர் பேசி சர்ச்சைக்காளான விஷயத்தையே பேசியுள்ளார்.

”இந்தியாவை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என ஆங்கிலேயர் பிரித்தனர். பின் வடக்கு ஆரியர்கள், தென்பகுதி திராவிடர்கள் எனக்கூறி அதையும் பஞ்ச ஆரியர்கள், திராவிடர்கள் என பிரித்து சுந்திரப் போராட்டத்தை நீர்த்து போக முயற்சி செய்தனர்.”என்கிறார்!

இது எவ்வளவு அபத்தம்! இந்தியா என்பது ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு ஒன்றுபட்ட தேசமாகவே இல்லை.பல நூற்றுக்கணக்கான சிற்றரசர்களால் ஆளப்பட்டு வந்தது. அவர்கள் தான் இந்தியப் பெரும் பரப்பை ஒரே ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். ஆரியர்கள், திராவிடர்கள் என்பது பல நூற்றாண்டுகளாக இங்கு வாழ்பவர்களே!

இதுமட்டுமின்றி வேறு ஒரு நிகழ்வில்,

”இந்தியாவில் உள்ள மாநிலங்களை தனித்தனியாக பிரித்துப் பார்க்காமல் ஒரே குடும்பமாக பார்த்தால்தான் இந்தியா ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்ட முடியும்.”என்கிறார்.

அதாவது மாநிலங்கள் அதனதன் தனித் தன்மையோடு இருப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒற்றைப் பரிணாம பார்வையில், தனித் தன்மைகளை அங்கீகரிக்க மறுக்கிறார்.

மற்றொரு விழாவில், ”தேசத்தை நாம் பன்முகத்தன்மை கொண்டதாக பார்க்கவில்லை. நாம் அதை ஒன்றாக தான் பார்க்கிறோம்.” என இந்தியாவின் பன்முகக் கலாச்சார பாரம்பரியத்தை மறுதலிக்கிறார்.

இன்னொரு நிகழ்வில், ‘’சோமநாதர் கோவில் சொத்துகளை அழித்து கந்தகார், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கியதாக குறிப்பிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, அந்த நகரங்கள் ( தற்போது ஆப்கானிஸ்தான்) அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டதில் இருந்து சனாதன தர்மத்தின் வலிமையை அறியலாம். ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியினாலும் இந்த நாடு உருவாக்கப்பட்டது ’’ என்கிறார்.

ஒரு இஸ்லாமிய நாட்டு மக்கள் மீது குண்டுமாறிப் பொழியப்பட்டு மக்கள் பேரழிவை சந்திக்க நேர்ந்ததும், அந்த நகரங்கள் தரைமட்டமானதும் எவ்வளவு துயரகரமானது. அதை ஒரு ஏகாதிபத்திய வல்லரசு செய்தது. அதற்கு ”இந்துத்துவ சனாதன தர்மத்தின் வலிமையே காரணம்” என சம்பந்தமில்லா விஷயத்தை சம்பந்தப்படுத்தி பேசுகிறார். இதன் மூலம் இந்தியாவின் அகிம்சை தர்மத்திற்கு மாற்றாக, வன்மத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

ஒரு கல்வி நிகழ்வில் கவர்னர் பேசியதற்கு அந்த மேடையிலேயே கண்ணியமாக, அழகாக மறுத்து, தெளிவான விளக்கம் தந்தார் கல்வி அமைச்சர் பொன்முடி! அவ்வளவு தான் கவர்னருக்கு பொத்துக் கொண்டு வந்துவிட்டது, கோபம். ஆகவே, மதுரை காமராஜர் பல்கலைக் கழக நிகழ்வின் நிகழ்ச்சி நிரலையே மாற்றி, தான் பேசிய பிறகு யாரும் பேசாதபடிக்கு – மரபுக்கு மாறாக – வலியுறுத்தி உள்ளார்.

அதாவது, அவர் எது வேண்டுமானாலும் பேசுவார். பொய்களை கட்டவிழ்த்துவிடுவார். அதற்கு மறுப்பு யாரும் சொல்லிவிடக் கூடாதாம்!

அவர் சொன்னால், அதை செய்து விடுவதா? ”நம்முடைய மரபில் இருந்து மீற முடியாது” என தமிழக உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பல்கலை கழகம் சொல்ல வேண்டியது தானே!

தமிழகத்தை ஆட்சி செய்வது மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம்.

அந்த பல்கலை கழகம் தமிழக மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படுவது.

அதை நிர்வகிப்பது தமிழக உயர்கல்வித் துறை.

அதில் கலந்து கொள்ளும் கவர்னர் ஒரு கவுரவ சிறப்பு விருந்தினர்.

பல்கலை கழக வேந்தர் என்ற பதவி ஒரு அலங்காரப் பதவி தான்!

அவர் தன் எல்லைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் அவருக்கு புரிய வைத்திருக்க வேண்டாமா?

அதை விடுத்து, ”அவர் கல்விச் சூழலில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசுகிறார். நிகழ்ச்சி நிரலை மாற்றிவிட்டனர். ஆகவே, நான் பங்கு பெற மாட்டேன்” என கல்வி அமைச்சர் பொன்முடி விலகி வந்தது கோழைத்தனமாகும். எங்கோ இருந்து வந்து, நம் மாநிலத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு தனி மனிதரான கவர்னருக்கு தமிழக அரசின் அதிகாரத்தை கையில் எடுக்க என்ன உரிமை இருக்கிறது? அதை மறுத்து, அவரை ”உங்கள் எல்லைக்குள் நின்று செயலாற்றுங்கள்” என அறிவுறுத்தும் ஆன்ம பலம் ஏன் இந்த ஆட்சியாளர்களுக்கு இல்லை.

மேற்குவங்கத்தில் இப்படித்தான் அந்த மாநில கவர்னர் அத்துமீறி பேசுகிறார் என பல்கலை கழக விழாக்களுக்கே அவரை அழைப்பதில்லை. மம்தா அரசு!

”அய்யோ என்னை அழைக்கமாட்டேன்” என்கிறார்களே என அவர் கதறியது தான் கண்ட பலன்!

இதோ பக்கத்து மாநிலமான தெலுங்கானாவில் தெனாவட்டாகப் பேசிய தமிழிசை சவுந்திர ராஜனை சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு, எவ்வளவுக்கு எவ்வளவு நிராகரிக்க வேண்டுமோ.. அவ்வளவையும் செய்கிறது. அதனால், அங்கே மானம் பறிபோகிறது என செல்வதற்கே பயந்து கொண்டு பாண்டிச்சேரியிலேயே பெருமளவில் இருந்து விடுகிறார் தமிழிசை. இது மட்டுமல்ல, சமீபத்தில் தெலுங்கானாவில் பாஜக மாநாட்டிற்கு மோடி வந்த போது அதற்காக அவர் பேசும் மைதானத்தை சுத்தப்படுத்தி தருமபடி கேட்டதற்கு, ”உங்க கட்சி நிகழ்ச்சிக்கு எங்க அரசு நிர்வாகம் வேலை செய்யாது” என கைவிரித்துவிட்டார் சந்திரசேகர ராவ்! நகரெங்கும் வைக்கப்பட்ட மோடியின் கடவுட்களுக்கு 23 லட்சம் அபராததையும் விதித்து வசூலித்துவிட்டது அந்த மாநில அரசு! ஆம், அது மானமுள்ள அரசு! தன்மானமுள்ள அரசு!

எதிர்கட்சியாக இருந்த போது அன்றைய கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை எந்த அளவுக்கு அடிக்கடி எதிர்த்துப் பேசி போராட்டங்களை செய்தது திமுக! ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன், தானும் அடங்கி போவதோடு, கூட்டணி கட்சிகளையும் கூட கவர்னருக்கு எதிராக போராட்டமோ, கறுப்பு கொடி ஆர்ப்பாட்டமோ செய்யக் கூடாது என நிர்பந்திக்கிறது.இப்படி எவ்வளவு நாள் மற்ற கூட்டணி கட்சிகளையும் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரியவில்லை.

சும்மா, ”திராவிட மாடல் ” என மேடையில் வீரதீரமாக பேசுவதில் என்ன பயன்? செயலில் வீரமின்றி, எல்லாவற்றுக்கும், பம்மி, பதுங்கி பின் வாங்கி, கோழைத்தனமாக இருந்து கொண்டு! உண்மையில் திமுக இவ்வளவு பலவீனமான கட்சியாக இருக்கும் என நாம் நினைத்து கூட  பார்த்ததில்லை.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time