மக்கள் போராளிகளாக  ராகுலும்,பிரியங்காவும்!

சாவித்திரி கண்ணன்

ராகுலும்,பிரியங்காவும் தற்போது மாபெரும் மக்கள்  தலைவர்களாக பரிணாமமடைந்து வருகிறார்கள்!

அப்படியான சந்தர்ப்பங்களை உ.பி.முதல்வர் யோகி ஆதித்தியநாத் உருவாக்கி வருகிறார்!

பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகள் ஒரு மகாத்மா காந்தியை உருவாக்கியது!

அமெரிக்காவில் நிலவிய வெள்ளையின ஆதிக்கம் ஒரு மார்டின் லூதர்கிங்கை பிரசவித்தது.

தென் ஆப்பிரிக்க அரசின் நிறவெறி போக்குகள் நெல்சன்  மண்டேலா உருவாகக்  காரணமாயிருந்தது.

அது  போல உத்திரபிரதேச அரசின் உச்சகட்ட மத,சாதி வெறித்தனங்கள்,குற்றவாளிகளின் பாதுகாவர்களாக அரசும்,அரசு நிறுவனங்களும் இயங்கும் அடாவடித்தனம் ஆகியவை. .ராகுலையும் ,பிரியங்காவையும் வேற ஒரு லெவலுக்கு கொண்டு சென்று கொண்டுள்ளன!

கொடூர மனம் படைத்தவர்களிடம் அதிகாரம் சென்றால் என்ன நடக்குமோ…அது தான் உ.பியில் அரங்கேறிக் கொண்டுள்ளது.

ஊரடங்கு நேரம் உ.பியில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஊருக்குள் வர முயற்சித்த போது இரக்கமின்றி யோகி அரசு அலைக்கழித்தது. மாநில எல்லையில் அவர்கள் இரக்கமின்றி தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பபட்டனர்.அதனால்,பிரியங்கா காங்கிரஸ் செலவில் அவர்களை அவரவர் ஊர்களுக்கு அனுப்ப ஏராளமான பேருந்துகளை ஏற்பாடு செய்தார்.ஆனால்,அதை அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்துவிட்டது யோகி அரசு!

ஆகத் தானும் உதவத் தயாராயில்லை, மற்றவர்கள் உதவுவதையும் அனுமதிப்பதில்லை என்பது எவ்வளவு வக்கிரமான போக்கு!

இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக நடக்கும் இடமாக உ.பி.உள்ளது! ஆண்டுக்கு 60,000 பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள்! பதிவு செய்யப்படுபவையே இவ்வளவு என்றால்,பதிவு செய்யாமல் விடுபட்டவை,பதிவு செய்ய மறுக்கப்பட்டவை இதை விடப் பன்மடங்கு இருக்கலாம்!

இந்த மாதிரி பாலியல் வழக்குகளை உ.பி.போலீஸ் எப்படிக் கையாள்கிறது என்பதற்கு  ஹாத்தரஸ் சம்பவமே சாட்சியாகிறது!

குற்றத்தை மறைக்க எத்தனையோ முயற்சிகள்! பிறந்த மேனியாக உடம்பில் துணியில்லாத,சீரழிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் கற்பழிக்கப்படவில்லை என்கிறார் உ.பி.யின் டி.ஐ.ஜி! தன்னை கற்பழித்ததாக ஒரு பெண் வாக்குமூலம் கொடுத்து செத்தபிறகும் அவள் கற்பழிக்கப்படவில்லை என்று காவல்துறை தலைவர் சொல்கிறார் என்றால்,அது யாருக்கான காவல்துறையாக இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சியாகும்!

குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்வதிலும்,அவர்களைக் கைது செய்வதிலும் அதீத தாமதம் காட்டியது காவல்துறை.முதல்வரின் தாக்கூர் சமூகத்தை சேர்ந்த அவர்களை தங்கள் கஸ்டடிக்குள் பாதுகாப்பாக வைத்து காப்பாற்றுவதில் உ.பி.அரசு காட்டி வரும் ஆர்வம் சாதரணமானதல்ல! இது மேன்மேலும் அந்த சமூக்தாரை குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடிய தைரியத்தை தருகிறது என்பதை ஏனோ அரசு உணரவில்லை.

பாதிக்கப்பட்ட குடும்பம் இன்று உ.பி அரசால் குற்றவாளியாக நடத்தபடுகிறது! ஏதோ ஒரு உலகமகா தீவிரவாதியைக் கண்காணிப்பது போல அந்த குடும்பத்தின் உறுப்பினர்கள்  போலீஸ் பட்டாளத்தின் பிடியிலும்,கண்காணிப்பிலும் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் யாருக்கு போன் பேசினாலும் அதை காவல்துறை ஒட்டுக் கேட்கிறது! தங்கள் பெண்ணுக்கு இறுதி சடங்கு கூட நடத்தமுடியவில்லையே என்ற அந்த குடும்பத்தின் தீரா துயரத்தை வெளிப்படுத்தக் கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரிக்கிறார்!ஆனால் நாங்கள் கெஞ்சியும் எங்கள் பெண்ணின் சடலத்தை தரமறுத்து போலீஸ் அவசர,அவசரமாக எரித்தது என்று உறவினர்கள் சொல்லிவிட்டனர்.அப்படி சொல்லியதால் மீண்டும் காவல்துறையால் தாக்கப்பட்டுள்ளனர் அந்த குடும்ப உறுப்பினர்கள்.

யோகி ஆதித்தியநாத்தின் அராஜகங்களை தாக்குப்பிடிக்க முடியாமலும், தன் மீதுள்ள வழக்குகள் நோண்டப்பட்டுவிடுமோ என்ற பயத்திலும் அகிலேஷ் யாதவ் இலண்டன் சென்றுவிட்டார். போராட வேண்டிய  சமாஜ்வாதி கட்சி முடங்கியுள்ளது. தலித் பெண் விவகாரத்தில் கூட சீறி எழ முடியாதவராக  மாயாவதி வெறும் அறிக்கை,பேட்டியோடு நிறுத்திக் கொள்கிறார். ஆனால்,இந்தச் சூழலில் பிரியங்காவும்,ராகுலும் தீவிரத் தன்மையுடன் அவமானங்களைக் கடந்து, நீதியை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்காக பெற்றே தீருவது என்ற முனைப்புடன் இயங்குகிறார்கள்!

கடந்த ஐந்தாறு நாட்களில் இந்த சம்பவங்களில் ராகுல் மூன்று இடங்களில் மீண்டும், மீண்டும் போலீசாரால் உடல் ரீதியாக தாக்கப்பட்டுள்ளார். பிரியங்காவின் துப்பட்டாவை பிடித்து இழுக்கிறார் ஒரு போலீஸ்! ஒரு தேசிய கட்சியின் தலைவர்களுக்கே இந்த கதியா என்று நாடே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. மீண்டும்,மீண்டும் தாக்கப்பட்டாலும் பின்வாங்காமல் தொடர்ந்து முயன்று, அந்த குடும்பத்தை சந்தித்து பேசி ஆற்றுப்படுத்துகிறார்கள்!  இந்த கொரானா காலகட்டத்திலும் அந்த குடும்ப உறுப்பினர்களைக் கட்டித் தழுவி ஆறுதல் சொல்லியுள்ளார் பிரியங்கா! இருவரும் 35 நிமிடங்கள் அந்த சின்னஞ் சிறு குடிசையில் நெருக்கடியாக உட்கார்ந்து நிதானமாக பேசி வருகிறார்கள்! உண்மையான மனித நேயம் இல்லாமல் இது சாத்தியமில்லை!

இந்த சம்பவத்தில் தான் என்றில்லை! தாத்ரியில் அக்லாக் அகமது என்பவர் வீட்டில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என கொடுமையாக தாக்கப்பட்ட போதும், தடைகளை மீறி ஒரு தொண்டரின் பைக்கின் பின் அமர்ந்து சென்று போய் அந்த குடும்பத்தை பார்த்துப் பேசி வந்தார் ராகுல்!

சி.ஐ.ஐ க்கு எதிரான போராட்டங்களில் பிஜினவரில் அடித்துக் கொல்லப்பட்ட  குடும்பங்களை பிரியங்கா சந்திக்க சென்றார்! ஆகவே,தடைகளை மீறித் தயங்காமல் மனித நேயத்தை வெளிப்படுத்துவதில் பிரியங்கா தீயாய் இருக்கிறார் என்று தான் தெரிகிறது!

நேற்றைய தினம் என்ன நடந்தது என்று அந்த ஸ்பாட்டிலே இருந்த காங்கிரஸ்  எம்.பி ஜோதிமணியிடம் தொலைபேசியில் பேசிய போது, ’’எவ்வளவு தடைகள் வந்தாலும் பின்வாங்கப் போவதில்லை என்ற திடமனதுடன் நாங்கள் இரு சபைகளையும் சேர்ந்த அறுபதிற்கு மேற்பட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் உ.பிக்கு சென்றோம்.ஏதோ பாகிஸ்தான் எல்லைக்குள் நாங்கள் அத்துமீறு நுழைவதைப் போல மிகப் பெரிய போலீஸ் படையை உ.பி.எல்லையில் குவித்திருந்தார்கள்! அதிலும் பெண் காவலர்கள் தான் முன்னிறுத்தப்பட்டிருந்தனர். காங்கிரஸ் தொண்டர்கள் பெருந்திரளாக வந்திருந்தனர்! அதைக் கண்டு பதறிய காவல்துறை கண்மூடித்தனமாக தாக்க ஆரம்பித்தனர். இதனால் பல தொண்டர்களுக்கு கைகால் முறிந்தது.சிலருக்கு மண்டை உடைந்தது! உதடு கிழிந்தது! இதனால் காரில் முன்னால் சென்ற பிரியங்கா கீழே இறங்கி பேரியரை தாண்டிக் குதித்து வந்து போலீசாரின் லத்தியை பிடித்து தடுத்தார். ’’இங்கே யாரும் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை.யாரிடமும் ஆயுதங்களும் இல்லை.ஏன் தாக்குகிறீர்கள்’’…என்றார்.அதே போல ராகுலும் உடனே காரைவிட்டு இறங்கி காவல்துறையினரிடம் பேசினார். அப்போது காவல்துறையினர் வரம்பு மீறி,அவரை இழுத்துச் சென்றனர். இத்தனையும் நடந்து கொண்டிருக்கும் போது பீகார் எம்.பி.ஜாவித் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்! இவ்வளவையும் சந்தித்தே, அவர்களால் அந்தக் குடும்பத்தினரை சந்திக்க முடிந்தது!

பாஜகவை பொறுத்த அளவில் அவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் பெண்  எம்.பிக்களான என்னையும்,ரம்யாவையும் மார்ஷலை வைத்து நெட்டித் தள்ளினர்! தற்போது தேசியத் தலைவர்களையே பொது தளத்தில் தாக்குகின்றனர் என்றால்,இங்கு சாதாரண மனிதர்களுக்கு என்ன பாதுகாப்பு என்ற கேள்வி தான் எழுகிறது!’’ என்றார்.

உ.பி சம்பவங்களை நாடு முழவதுமே உன்னிப்பாக கவனித்துக் கொண்டுள்ளது.இதற்கான தீர்ப்பை மக்கள் சரியான நேரத்தில் எழுதுவார்கள் தானே!

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time