பகை தொடர்ந்தால் பலியாகும் இரு நாடுகளுமே! -நேரு

- பீட்டர் துரைராஜ்

இவ்வளவு வெளிப்படையாகவும், இணக்கமாகவும் மாநில முதல்வர்களுடன் ஒரு பிரதமர் தொடர்ந்து உறவாடி இருக்க முடியுமா? என்ற ஆச்சரியத்தை தருகின்றன, நேருவின் கடிதங்கள்! பாகிஸ்தான் உடனான உறவை பகையின்றி பேணுவதில் தான் இரு நாடுகளுக்குமே எதிர்காலம்.. போன்ற கருத்துக்கள்!

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்கலால் நேரு, மாநில முதலமைச்சர்களுக்கு, 1947 முதல் 1963 வரை 15 நாட்களுக்கு ஒரு முறை கடிதங்கள் எழுதியுள்ளார். ஆய்வாளரான மாதவ் கோஸ்லா (Madhav Khosla), இந்தக் கடிதங்களை, ‘Letters for a Nation’ என்ற பெயரில் நூலாக தொகுத்துள்ளார். இதனை ‘ஒரு தேசத்திற்கான கடிதங்கள்’ என்ற பெயரில், நா.வீரபாண்டியன் மொழி பெயர்த்துள்ளார். ‘எதிர் வெளியீடாக’ வந்துள்ள இந்த நூல், சமகால அரசியலை புரிந்து கொள்ள உதவும் சாவி என்று சொல்லலாம்.

நேரு இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். இந்தியா திரும்பிய பிறகு விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர். ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்தவர். காந்தியின் முதன்மையான சீடர். காங்கிரஸ் கட்சியை வழி நடத்தியவர். 1946 ல் இடைக்கால பிரதமராக பதவியேற்றது முதல் , மரிக்கும் வரையில் (1964) பிரதமராக இருந்தவர். மேற்கத்திய கல்விமுறையாலும், விடுதலைப் போராட்ட அனுபவத்தாலும்  நவீன அரசியல் கண்ணோட்டம் கொண்டவராக இருந்தார். மக்களின் பேரன்பை பெற்றிருந்தார். விடுதலை அடைந்த இந்தியா உருப்பெற நேரு அடித்தளம் இட்டார் என்று சொல்லலாம்.

பிரதமர் என்கிற வகையில், எல்லா முதலமைச்சர்களுக்கும் அக்டோபர் 15, 1947 அன்று கடிதம் எழுதுகிறார். அதில் ‘ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் பதினைந்தாம் தேதிகளில் உங்களுக்கு எழுத நான் திட்டமிட்டுள்ளேன்’ என்று கூறுகிறார். அவ்வாறே எழுதத் தொடங்கி, தனது இறுதிக் கடிதத்தை 1963 டிசம்பர் 21 ம் தேதி அன்று எழுதியுள்ளார். அதன் பிறகு சில மாதங்கள் நோய்வாய்ப்பட்டு 1964, மே 27 ம் நாள் இறக்கிறார். இவ்வாறு கிட்டத்தட்ட 400 கடிதங்கள் எழுதப்பட்டன. ‘இந்தக் கடிதங்கள் அதிகாரப் பூர்வமாக எழுதப்பட்டனஎன்றாலும், அவை அறிவுறுத்தல்கள் அல்ல’.

பிரச்சினைகளோடு தான் இந்தியா விடுதலை அடைந்தது. இந்தியா -பாகிஸ்தான் பிரிவினை, வகுப்புக் கலவரம், காந்தி படுகொலை, அகதிகள் பிரச்சினை, உணவுப் பஞ்சம், அரசியல் அமைப்புச் சட்ட உருவாக்கம், அதிகாரத்தை சுவைக்கத் தொடங்கும் காங்கிரஸ் கட்சி என  பல்வேறு சிக்கல்களை இந்தியா எதிர்கொண்டது. பிரதமரான நேரு இது போன்ற விஷயங்களை எப்படி எதிர் கொண்டார் ! அவருடைய மனப்பாங்கு என்ன என்பதை இந்தக் கடிதங்கள் காட்டுகின்றன.

காந்தி இறந்து விட்டார்; ஆர்.எஸ். எஸ். தடை செய்யப்பட்டு விட்டது. அப்போது டிசம்பர்6, 1948 ல் எழுதுகிறார்: ” ஆர் எஸ் எஸ். அமைப்பானது உறுப்பினர் விதிகள் ஏதுமின்றி, பதிவேடுகள் எதுவும் இல்லாமல்,  பெரிய அளவுக்கு நிதி திரட்டப்பட்டு, கணக்குகள் எதுவுமின்றி செயல்படும் ஒரு இரகசிய அமைப்பாகும். அமைதியான முறைகளையோ அல்லது சத்யாகிரகத்தையோ அவர்கள் நம்புவதில்லை. பொதுவெளியில் அவர்கள் சொல்லும் எல்லாம், அந்தரங்கமாக அவர்கள் செய்வதற்கு எதிரான தோற்றமாகும்” என்கிறார். இது போல    இன்றைக்கும்  பொருத்தமுடைய பல செய்திகளை இந்த நூலில் நாம் காண முடியும்.

நேரு எழுதிய கடிதங்களை மாதவ் கோஸ்லா,  பொருள் வாரியாக தொகுத்துள்ளார். குடிமகனும் தேசமும், ஜனநாயகத்தின் நிறுவனங்கள், தேசியத் திட்டமிடலும் வளர்ச்சியும், போரும் அமைதியும், இந்தியாவும் உலகமும் என்ற தலைப்புகளின் கீழ் கடிதங்கள்,  தொகுக்கப்பட்டுள்ளன.

மாதவ் கோஸ்லா, நவீன வரலாற்று பேராசிரியர். India’s Founding Moment, The Oxford Handbook of the Indian Constitution போன்ற நூல்களை எழுதியுள்ளார். ‘ஜனநாயகம் மட்டுமே அவர் (நேரு) எப்போதும் ஏற்றுக் கொண்ட அரசியல் அமைப்பின் ஒரே வடிவம்’ என்று இந்த நூலின் அறிமுகத்தில் மாதவ் கோஸ்லா குறிப்பிடுகிறார். இந்த நூலை நாம் எப்படி பார்க்க வேண்டும் என்பதை இந்த நூலின் அறிமுகம் சொல்லுகிறது.

நேரு குறிப்பிடும் பல பிரச்சினைகள் இன்றைக்கும் தொடர்கின்றன. சில பொருத்தமற்றவையாக மாறிவிட்டன. ஆனாலும், பிரச்சினைகளை நேரு எப்படி பார்த்தார் என்பது முக்கியமானது. உதாரணமாக ” அவர்களே விரும்பினால் கூட வேறெங்கும் செல்ல முடியாத ஒரு முஸ்லிம் சிறுபான்மையினரை நாம் கொண்டுள்ளோம். அவர்கள் இந்தியாவில் தான் வாழ்ந்தாக வேண்டும். அது அடிப்படையான உண்மை. அதில் எந்த விவாதமும் இருக்க முடியாது. பாகிஸ்தானின் ஆத்திரமூட்டல் எதுவாக இருப்பினும், அங்கே உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் மேல் இழைக்கப்படும் அவமானங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் எதுவாயினும், இந்தச் சிறுபான்மையினரை நாகரிகமான முறையில் தான் நாம் நடத்தியாக வேண்டும்” என்று கூறுகிறார்.

‘போதுமான எண்ணிக்கையுள்ள பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அவசியம் பற்றி உங்களுக்கு நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்’ என்கிறார். ‘அரசுப் பணிகளில், பொதுவாகச் சொன்னால், சிறுபான்மை வகுப்பினரின் பிரதிநிதித்துவம் குறைந்து கொண்டிருக்கிறது’ என்று கவலைப்படுகிறார். ‘பெருமளவு எண்ணிக்கையிலான மக்கள் தடுப்புக் காவலின் கீழ் வைக்கப்பட்டார்கள் என்ற உண்மை அரசாங்கங்கள் என்ற முறையில் நமக்கு பொதுவான நற்பெயரைச் சேர்க்கவில்லை’ என்கிறார்.

நேரு மாநில முதலமைச்சர்களுக்கு எழுதுகிறார்; அவர்கள்  இவரோடு சக பயணிகளாக இருந்தவர்கள்; காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்; சிலர் இவரை விட மூத்தவர்களும் கூட. எனவே, வார்த்தைகளை நிதானமாக கையாள்கிறார். நேரு என்ன எழுதினாலும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவர்கள் தான். எனவே அவர்களை சமாதானப்படுத்தும் தொனியில் எழுதுகிறார். மற்ற நாடுகள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்கிறார்; உலக அரங்கில் நமது நற்பெயருக்கு குந்தகம் ஏற்படும் என்கிறார்; காந்தி கொள்கையை நினைவு படுத்துகிறார். இந்தக் கடிதங்களில் தன்னை முன்னிலைபடுத்தாத நேருவின் தாழ்ச்சியை நாம் காண இயலும்.

நேரு வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பையும் வகித்தவர். உலகின் நிகழ்வுகள் குறித்தும் தமது முதலமைச்சர்களுக்கு இந்தக் கடிதங்களில் எழுதுகிறார். ‘பாகிஸ்தான் அரசாங்கம் குறிப்பாக நடுத்தர வர்க்கங்களை நசுக்குகின்ற ஒரு கொள்கையை பின்பற்றியது’ என்கிறார். ‘இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற இரு நாடுகளும் தங்களுக்கிடையேயான பகை உணர்வை தொடர்வது என்பது இரண்டு நாடுகளையும் அழித்துவிடும்’. ஆகவே, பகை உணர்வை தவிர்க்கும் வழிமுறைகள் அவசியம்’’ என்கிறார்.

புது தில்லியில் ஆசிய மாநாட்டை கூட்டியதன் மூலம், அகில உலக விவகாரங்களில் இந்தியா வகித்த முக்கியமான பாத்திரம் குறித்து பெருமிதப்படுகிறார். சீனா, சூ என் லாய், கொரியா போர், திபெத், கூட்டு சேராக் கொள்கை என பல விஷயங்களைப் பற்றி இந்த நூல்  பேசுகின்றது. கடிதங்களாக அவை இருப்பதால் விரைவாக படிக்க முடியவில்லை. அந்தச் சமயங்களில் நிலவிய சூழலை ஒட்டியே கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. சோவியத் ஒன்றியத்தில் ஏன் தனிநபர் உரிமைகள்  குறுக்கப்பட்டன என்பதற்கான காரணத்தை விளக்கும் அதே சமயத்தில், ‘ஒரு நன்கு கற்ற, பயிற்சி பெற்ற சமுதாயம், நீண்ட காலத்திற்கு தனிநபர் சுதந்திரம் மீதான பல தடைகளுக்கு இணங்கிப் போக வாய்ப்பில்லை’ என்பதை சரியாக அவதானித்துள்ளார். கம்யூனிசத்தின் வன்முறை குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

நிலச் சீர்திருத்தம், துப்பாக்கி சூடுகள், நீதிமன்ற முனைப்பு,  தேர்தல்களின் போது அமைச்சர்கள் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறை என எண்ணற்ற பொருள் குறித்து நேரு எழுதியிருக்கிறார். ஆனால்  ‘அவருடைய தோல்விகள் மிகப் பெரியதாக்கப்பட்டும், அவருடைய சாதனைகளும், முயற்சிகளும் மறைக்கப்பட்டும்’ ஒரு ‘சோக உருவமாகவே’ சித்தரிக்கப்படும் நேருவின் ஆகிருதியை இந்த நூல் வெளிக்காட்டுகிறது. இந்த நூலை வெளியிட்டதன் மூலம் எதிர் வெளியீடு ஒரு மெச்சத்தகுந்த பணியை செய்துள்ளது.

‘அரசியல் என்னைப் பற்றி இழுத்து, அதற்கு பலியாக என்னை ஆக்கிக் கொண்டாலும், நான் மிகச் சிறந்த அரசியல்வாதி அல்ல’ என்று சொல்லும் நேருவின் இந்த நூல்  ‘கடித இலக்கியத்திற்கான முழுமையான தகுதிகளுடன்’ உள்ளது என்கிறார், இந்த நூலை மொழிபெயர்ப்பாளர்.

விமர்சனம்; பீட்டர் துரைராஜ்

ஒரு தேசத்திற்கான கடிதங்கள்

எதிர் வெளியீடு,

விலை ரூ.499.

96, நியூ ஸ்கீம் ரோடு,

பொள்ளாச்சி- 642 002/

செல் பேசி: 99425 11302/

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time