தனியார் பள்ளி நிர்வாகிகள் தமிழக அரசை மிரட்டுவதா?

-சாவித்திரி கண்ணன்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, மாணவியின் சாவுக்கு காரணமான கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல் நிலை பள்ளிக்கு ஆதரவாக நாளை முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் தனியார் பள்ளிகள் ஈடுபட உள்ளதாகவும், இதனால் தனியார் பள்ளிகள் இயங்காது என்றும் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் அறிவித்து உள்ளனர். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்குவர் எனத் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், மருத்துவமனைக்கு அளிக்கப்படுவதைப் போன்று தனியார் பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், தனியார் பள்ளி சங்க நிர்வாகி நந்தகுமார் அறிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தமிழக அரசு 2 நாட்களுக்குள் உரிய முடிவை அறிவிக்கா விட்டால் தனியார் பள்ளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சிபிஎஸ்சி கல்வி முறையில் இயங்கும் பள்ளிகளையும் சேர்த்து மொத்தம் உள்ள 15 ஆயிரம் தனியார் பள்ளிகள் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளால் பல லட்சம் மாணவ மாணவிகளின் கல்வி கேள்விக் குறியாகி உள்ளது.

நியாயப்படி பார்த்தால் இது போன்ற ஒரு போராட்டத்தை தமிழக தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் தான் அறிவித்து இருக்க வேண்டும். உண்மையில் தனியார் பள்ளிகளின் நிர்வாகங்கள் தான் அங்கு படிக்கும் மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் அச்சுறுத்தல்!  தனியார் பள்ளிகளிடம் இருந்து தான் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பாதுகாப்பு தேவைப்படுகிறது. தனியார் பள்ளி நிர்வாகங்கள் அறத்தோடு செயல்பட்டால், அதுவே அவர்களை பாதுகாக்கும். உயர்த்தும். மரியாதையை பெற்றுத் தரும்.

இது ஒட்டு மொத்த தமிழக மக்களையும், தமிழக அரசையும் அவமதிக்கும் செயலாகும்! ஒரு தனியார் பள்ளி அக்கிரமம் செய்தால், அதற்கு அனைத்து தனியர் பள்ளிகளும் கண்ணை மூடிக் கொண்டு துணை போவதா?

நான்கு நாட்கள் தொடர் போராட்டம் மக்கள் நடத்தியும் அந்த பள்ளி நிர்வாகிகள் தங்கள் தவறை ஒத்துக் கொள்ளாமல் பண பலத்தால் எல்லாவற்றையும் தடுத்து வைத்திருந்தனர். தங்கள் பணபலத்தால் எதையும் சாதிக்க முடியும் என நினைத்த அந்த அராஜக தனியார் பள்ளியின் மீது பொது மக்கள் கொதித்து எழுந்து போராடினார்கள்.  மக்கள் போராட்டத்தை அவர்கள் கிஞ்சித்தும் மதிக்காத காரணத்தால் தான் கோபத்தின் உச்சத்திற்கு சென்றனர் பொது மக்கள். இந்த சம்பவத்தின் மூலம் படிப்பனை பெறுவது தான் தனியார் பள்ளி நிர்வாகங்களின் எதிர்காலத்திற்கு நல்லது.

மாறாக, அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு கொலை குற்றவாளிக்கு ஆதரவாக பரிந்து பேசுவதோடு மாணவர்களின் படிப்பையே முடக்க நினைப்பது அயோக்கியத்தனமாகும்!

மெட்ரிகுலேசன் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தனியார் பள்ளிகள் இயங்காது என எவ்வித முன் அனுமதியும் பெறவில்லை. தனியார் பள்ளிகள் மூடப்படுவதாக இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. முன் அனுமதி பெறாமல் விடுமுறை அளித்தால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுப்பர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு கல்வி அமைச்சரிடம் இருந்தோ, முதல்வரிடம் இருந்தோ இன்னும் வலுவாக வெளிப்பட்டு இருக்க வேண்டும். அரசையே மிரட்டும் அளவுக்கான தைரியம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது?

மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்வி கற்றுத் தர கொள்ளை பணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள், பாடம் நடத்தமாட்டோம், பள்ளியும் இயங்காது, தொடர் போராட்டம் நடத்துவோம் என்றால், இதை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது! பள்ளிக் கல்வித் துறையின் எச்சரிக்கையை மீறி பள்ளியை மூடினால், இவர்களின் பள்ளி உரிமத்தை ரத்து செய்வோம் என்று சொல்லுவதோடு மீறுபவர்களை அதன்படி செய்ய வேண்டும்.

கல்வியை இவர்கள் வியாபாரமாகத் தான் செய்கிறார்கள். வியாபாரிகளே நுகர்வோருக்கு எதிராக செயல்பட முடிவது கல்வித் துறையில் மட்டுமே இருக்கும் சாபம். நம் பணத்தை வாங்கி பிழைக்கும் இந்த கல்வி முதலாளிகள் நம்மிடமே அதிகாரம் செய்வதும் சர்வாதிகார தோரணையில் மிரட்டுவதும் அடாத செயலாகும்.

தமிழக அரசு இனி மாணவர்களிடம் இருந்தோ, பெற்றொர்களிடம் இருந்தோ புகார்கள் வரும்பட்சத்தில் நாங்கள் கறாராக நடவடிக்கை எடுக்க வேண்டியது இருக்கும். ஆகவே, கல்வியை கற்றுத் தருவது இருக்கட்டும். முதலில் கனிவோடும் கருணையோடும் நடந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்த வேண்டும்.

அரசின் எச்சரிக்கையை மதிக்க மாட்டோம் என்று இவர்கள் அத்துமீறி நாளை பள்ளிகளை மூடினால், அரசு இனி தனியார் பள்ளிகள் தேவையில்லை, அரசிடம் ஒப்படைத்துவிடுங்கள் அல்லது அரசே எடுத்துக் கொள்ள நேரிடும் என சொல்ல வேண்டும்.

நாளை தனியார் பள்ளி நிர்வாகிகளோடு பள்ளிக் கல்வி அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவ்வாறு, நடத்தும் போது அவர்கள் கை ஓங்கிவிடாதபடிக்கு அவர்களை கட்டுப்படுத்தி வைக்க கிடைத்த வாய்ப்பாக கள்ளக் குறிச்சி சம்பவத்தின் விளைவுகளை புரிய வைக்க வேண்டும். தமிழக அரசு காட்டும் உறுதிபாட்டில் தான் தமிழக மாணவர்களின் எதிர்காலமே அடங்கியுள்ளது.

சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time