கள்ளக் குறிச்சி மாணவி மர்ம மரண விவகாரத்தில் விரும்பத்தாக வன்முறை வெடித்தது வருத்தத்திற்குரியது. ஆனால், நடந்த வன்முறைக்கான பழியை ஒட்டு மொத்தமாக அறச் சீற்றத்துடன் அணி சேர்ந்த மக்கள் மீதும், முற்போக்கு இயக்கங்கள் மீதும் போட்டு, சகட்டுமேனிக்கு கைது செய்வதன் மூலம் தங்கள் பலவீனங்களை அரசு நிர்வாகமும், காவல்துறையும் மறைத்துவிட்டு, யார், யாரையோ திருப்திபடுத்த துடிக்கின்றனவா?
அநீதிக்கு எதிராக போராடிய மக்களை சமூக விரோதிகள், வன்முறை கும்பல் என்ற அடைமொழிகளில் முக்கியமான மெயின்ஸ்டீரிம் பத்திரிகைகள் எழுதுகின்றன.
25 ஆண்டுகளாக இயங்கும் ஒரு பள்ளி மக்களிடம் பெரு மதிப்பும், பேரன்மையும் பெற முடியாமல் பெரும் கோபத்தை அல்லவா சம்பாதித்து உள்ளது. பல ஆண்டுகளாக மக்கள் மனதில் இருந்த கொந்தளிப்பு தான் மக்களிடம் இருந்து வெளிப்பட்டு உள்ளது என்ற யதார்த்தத்தை புறந்தள்ளி விட்டு இந்த பிரச்சினையை அணுகக் கூடாது.
முதல் பிரேத பரிசோதனை அறிக்கையில், அந்த மாணவி இறந்து 36 மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது என்று சொல்லி உள்ளதானது பள்ளி நிர்வாகம் மாணவி இரவு 10.30 க்கு இறந்ததாக சொல்வதை நிராகரிக்கிறது. அதற்கும் முன்பே இறந்து இருக்க வேண்டும். இரவு பத்தரை மணிக்கு ஹாஸ்டல் மாணவி ஸ்கூல் யூனிபார்மை, அதுவும் மேல்கோட்டைக் கூட கழற்றாமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.மேலும் மாணவியின் மார்பில் இருந்த கீறல், உடலின் பல பாகங்களில் இருந்த காயங்கள், அதிக ரத்தம் வெளியேறியது, பிறப்பு உறுப்பு விரிந்து இருந்துள்ளது போன்றவை குறித்து பெற்றோருக்கு ஏற்படும் சந்தேகங்கள் நியாயமானவை!

அந்த ஹாஸ்டல் வார்டன், அந்த மாணவி குற்றம் சாட்டியுள்ள ஆசிரியைகள்,(அது அந்த மாணவி எழுதிய கடிதமா? என்பதையும் சேர்த்தே விசாரிக்க வேண்டுமே) பள்ளியின் நிர்வாகத் தலைமை ஆகியோரை கைது செய்யாவிட்டாலும் கூட, போலீஸ் ஸ்டேசனுக்கு விசாரணைக்காவது அழைத்திருக்க வேண்டாமா? காவல்துறையின் தலைமையே பள்ளி நிர்வாகத்தின் பக்கம் நின்றது தான் மக்கள் கோபத்திற்கு காரணம். காவல் துறையின் மெத்தன போக்கிற்கும், உளவுத் துறையின் தோல்விக்கும் என்ன தண்டனை?
பள்ளி நிர்வாகி ஆர்.எஸ்.எஸ்சின் மாநில அமைப்பாளர் என்ற முக்கிய பதவி வகிப்பவர் என்பதால், இதில் ஒன்றிய அரசு திமுக அரசுக்கு நெருக்கடி தந்ததா? இந்தக் கலவரத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இல்லாமல் இருக்க வாய்ப்பு இருக்குமா? மாணவி ஸ்ரீமதிக்கு ஆதரவான டிவிட்டர் டிரண்டிங்கில் வட இந்தியர்கள் கணீசமாக பங்கேற்றது எப்படி? பள்ளி நிர்வாகி ரவிக்குமாருக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் ஏதேனும் உட்பகை இருந்ததா..? என்ற கோணத்திலும் விசாரணை நடக்க வேண்டும்.
சங்கராபுரம் திமுக எம்.எல்.ஏ, தா.உதயசூரியன், ரிஷிவந்தியம் திமுக எம்.எல்.ஏ, வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் போராடும் மக்கள் பக்கம் நிற்காமல், பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக காவல் துறையை நிர்பந்தித்தது உள்ளனர். (கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ கூட இந்த போராட்டத்தில் மக்களுக்கு ஆதரவாக இல்லை) இதற்காக இவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் பெரும் பணம் பெற்றதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு அலட்சிபடுத்த தக்கதல்ல. பணத்திற்காக ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியிடம் விலை போன இந்த எம்.எல்.ஏக்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் திமுக தலைமை மீது சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
ஒரு மாணவி அநியாயமாக இறந்துள்ளார். பள்ளி நிர்வாகம் பண பலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் எல்லாவற்றையும் மறைத்து விடத் துடிக்கிறது எனும் போது மக்களுக்கான இயக்கங்கள் அதற்காக களம் காண்பது இயற்கை தானே? அப்படிப்பட்ட இயக்கங்களை இன்று காவல்துறை கைது செய்வது என்ன நியாயம்? இந்த சம்பவத்தை பயன்படுத்தி ஒன்றிய எஜமானர்கள் தங்களை விமர்சிக்கும் அரசியல் எதிரிகளை பூண்டோடு அழித்து, துவம்சம் செய்ய திமுக அரசு துணை போகலாமா?
தந்தை பெரியார் திராவிட கழக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பிரபு , மக்கள் அதிகாரம் அமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ராமலிங்கம் ஆகியோரும், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பின், மாநில பொருளாளர் கரூரை சேர்ந்த சுரேந்திரன் மற்றும் சிவா, சங்கர், தமிழரசன் ஆகிய இளைஞர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தவிர வாட்ஸ் அப்பில் மாணவிக்கு நியாயம் கேட்டவர்கள் பலரும் கைதாகி உள்ளனர்.

இதன் மூலம் தமிழக அரசுக்கு, நீதிக்காக போராடியவர்களையும், வன்முறையாளர்களையும் பிரித்து பார்க்க தெரியவில்லை என புரிந்து கொள்வதா? சமூக செயற்பாடாளர்களை முடக்குவது பாஜக அரசுடைய பாணியல்லவா? இப்படி பாஜக எதிர்ப்பாளர்களை கைது செய்வதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டதற்கு திமுக அரசு பரிகாரம் செய்கிறதா? யாரை திருப்திபடுத்த இந்தக் கைதுகள்? மக்கள் போராட்டத்தின் ஊடாக நுழைந்த சமூக விரோதிகளை மட்டும் அடையாளப்படுத்தி, கைது செய்யுங்கள்!
நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அதிகார பூர்வமாகவும், அதிகார பூர்வமற்றும் கைது செய்யப்பட்டு தனியாக ஓரிடத்தில் வைத்து காவல்துறையால் தாக்கப்படுவதாக சில தகவல்கள் வருகின்றன. இது உண்மையாக இருப்பின், காவல்துறையின் நோக்கம் ‘இனி யாருக்கும் அநீதிகளை எதிர்க்கும் அறச் சீற்ற உணர்வு என்பது அறவே கூடாது, போராட்டம் என்பதை நினைத்தே பார்க்கக் கூடாது’ என்பது தானா?
தனியார் பள்ளிகளை மக்கள் நாடுகிறார்கள்! எவ்வளவு அதிக கட்டணம் என்றாலும், கடனை வாங்கி பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள்! ஆனால், தங்களை அந்த நிர்வாகத்தினர் நடத்தும் முறைகளால் கசந்த அனுபவங்களுடனும், கனத்த மனத்துடனும் தான் உறவை பேணுகிறார்கள்! குறைவான சம்பளத்திற்கு ஆசிரியர்களை கொத்தடிமைகளாக நடத்தும் கல்வி நிறுவனங்கள் கல்வியை வியாபாரமாக மட்டும் பார்ப்பதில்லை. அதிகாரமாகவும் கட்டமைத்துக் கொள்கிறார்கள்.
இந்தக் கோபங்கள் மக்களின் அடிமனதில் நீருபூத்த நெருப்பாக கழன்று உள்ளது. அதன் விளைவு தான் இந்த பள்ளியின் முன்னாள், மாணவர்களும், அசிரியர்களுமே சமூக வளைதளங்களில் இந்த பள்ளியை கடுமையாக விமர்சித்து உள்ளனர் என புரிந்து கொள்ள முடிகிறது.
அதுவும், இந்தப் பள்ளியை பற்றி பேசும் போது இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் வளர்மதி ”இந்தப் பள்ளி எப்போதும் யாகம், வேள்விகள் என அடிக்கடி நடத்தும் மூட நம்பிக்கையில் திளைக்கும் பள்ளியாகும். அங்கே மாணவ, மாணவிகள் சாவு என்பது ஒரு தொடர் கதையாக உள்ளது. படிக்க வந்த பிள்ளைகள் மர்மமான முறையிலோ அல்லது தற்கொலை செய்து கொண்டோ இறப்பது கடந்த காலங்களிலும் கணிசமாக நடந்துள்ளது.” என்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.வி.சரவணனிடம் பேசிய போது, ”15 ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் இந்த பள்ளியை இழுத்து பூட்ட வேண்டும் என போராட்டம் நடத்தி உள்ளோம். காரணம் 2004 ராஜா என்ற மாணவர் இறந்தார். 2005 ல் பிரதிக்ஷா என்ற மாணவி பள்ளி மைதானத்திலேயே வேன் ஏற்றிக் கொல்லப்பட்டாள். இப்படி அடுத்தடுத்து சாவுகள் நடந்து கொண்டே இருந்தன. காவல்துறை எப்போதுமே இது தொடர்பாக சீரியஸாக நடவடிக்கை எடுத்ததே இல்லை. சம்பந்தப்பட்ட நிகழ்வை பொறுத்த அளவில் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கவே வாய்ப்பு இல்லை. அது தைரியமான பொண்ணு என்பதே அனைவரும் சொல்வது.’’ என்றார்.
ஒரு பக்கம் சென்னை உயர்நீதிமன்றம், உயிர் இழந்த மாணவியின் மீதான பரிவை வெளிப்படுத்துவதை விடவும், பள்ளியின் உடமைகள் சூறையாடப்பட்டதற்கு தான் பொங்கி எழுகிறது! மறுபிரேத பரிசோதனைக்கு பெற்றோர்கள் குறிப்பிடும் மருத்துவரை அனுமதிக்க மறுக்கிறது. பிரேத பரிசோதனை முடிவில் எந்த பிரச்சினையும் செய்யக் கூடாது என கண்டிஷன் போடுகிறது. அதாவது, பிரேத பரிசோதனை முடிவில் மாணவி கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்றால், அதை பெற்றோர்கள் பணிவுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நீதிபதி விரும்புகிறாரா தெரியவில்லை.
Also read
இதை எதிர்த்து பெற்றோர் உச்ச நீதிமன்றம் சென்ற நிலையில் மாநில அரசு அவசரம், அவசரமாக பெற்றோரின் வேண்டுகோளை ஏற்காமல், பிரேத பரிசோதனை செய்கிறது, அதற்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனுமதிக்கிறார்! நியாயப்படி, கோர்ட்டுக்கு செல்லாமலே பெற்றோர் கோரிக்கை மாநில முதல்வரால் ஏற்கப்பட்டு இருக்க வேண்டும். பெற்றோர் கேட்கும் மருத்துவரை பிரேத பரிசோதனைக்கு அனுமதிப்பதில் திமுக அரசுக்கு என்ன தயக்கம்?
இது வரையிலான நிகழ்வுகளை வைத்து பார்க்கையில், மாநில அரசு நடவடிக்கைகளில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வாய்ப்பற்ற செயல்பாடுகளே தொடர்கிறது.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
#EducationalInstitutions
#கல்விக்கூடங்கள்எண்ணிகை
கல்விக் கூடங்கள் உயர்நிலை கல்விக்கு தக்கவாறு பகுதி வாரியாக தொகுதி வாரியாக வசிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தக்கவாறு உரிய எண்ணிக்கையில் அமைக்க வேண்டும்.
தங்கி படிக்கக்கூடிய பள்ளிகளோ கல்லூரிகளோ இருக்க கூடாது.
மாணவர்கள் அவரவர் வீட்டில் இருந்து தினம் சென்று படித்து வரும் அளவில் கல்விக்கூடங்கள் எண்ணிக்கை இருக்க வேண்டும்.
ஒரு கல்வி கூட வளாகத்தில் 500 மாணவர்களுக்கு மேல் இருக்கக் கூடாது.
ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு வகுப்புக்கு 20 மாணவர்கள் வீதம் ஐந்து வகுப்புகள் 100 மாணவர்கள் அதற்கு மேற்பட்டு தனி பள்ளிக்கூடம் என்ற அளவில் இயங்க வேண்டும்.
உயர்நிலைப் பள்ளிக்கூடங்கள். ஒரு வகுப்புக்கு 40 மாணவர்கள் வீதம் ஐந்து வகுப்புகள் 200 மாணவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே இயங்க வேண்டும்.
மேற்கொண்டு உயர்நிலை படிப்புகளுக்கு தக்கவாறு ஒரு வகுப்புக்கான மாணவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை வரையறை செய்யப்பட்டு 500 மாணவர்களுக்கு மீகாமல் கல்வி கூட வளாகங்கள் அமைய வேண்டும்.
ஒரே பகுதியில் தொகுதியில் அரசு பள்ளியும் தனியார் பள்ளியும் இயங்கக் கூடாது.
பகுதி தொகுதி இடங்களில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு கல்வி கூடங்களின் எண்ணிக்கை தேவையான கல்விக்கு ஏற்றவாறு அமைவது அவசியம்.
ஒவ்வொரு பகுதி தொகுதியில் 20 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களின் புள்ளிவிவரம் அரசிடம் அன்றைய தேதியில் வரை நடப்பில் இருக்க வேண்டும். அதற்கு தக்கவாறு கல்விக்கூடங்களில் சேர்க்கையை அரசு நிர்வாகம் வரன்முறை படுத்த வேண்டும்.
எல்லோருக்கும் சமச்சீரான தரமான சமத்துவ கல்வி முறை கல்வி கற்பிக்கும் வர்த்தகத்தில் போட்டா போட்டி நிலவுவதை தடுக்கும்.
ஒரு கல்வி கூட வளாகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கியும் தினம் வந்து செல்லும் வகையில் இருக்கும் பட்சத்தில் நிர்வாகம் சரிவர செய்ய இயலாது.
மாணவரின் எண்ணிக்கை வரையறை மிகவும் முக்கியம்.
அந்தந்த பகுதி தொகுதி வட்ட
மாவட்ட மாணவர்கள் அந்தந்த பகுதி தொகுதி வட்டத்தில் மாவட்டத்துக்குள் கல்வி பயிலும் வாய்ப்பை வசதியை உருவாக்குவது குடியரசின் கடமையாகும்.
தேவையில்லாத போட்டோ போட்டி தேர்வு திட்டங்கள் பொதுமக்களிடையே போட்டோ போட்டி பொறாமை போன்றவற்றை உருவாக்கும் அதனால் பல பொது பிரச்சனைகள் தோன்றும்.
பிரச்சனை இல்லா கல்வி சூழலை உருவாக்குவோம்.
இந்த நிகழ்விற்க்கு பிறகாவது அண்மை பள்ளிகளை அரசு ஏற்படுத்த வேண்டும்.
மக்களும் அதில் தங்கள் குழந்தைகளை சேர்க்க முன் வர வேண்டும்.
மாநில அரசு விளமபரங்களில் சமுக வளைதளங்களில் காட்டும் ஆர்வத்தை இனியவது உண்மையான மக்கள் சேவையில் காட்ட வேண்டும்.
நல்ல ஒர் நபரை தேர்ந்தெடுத்து அவரிடம் பள்ளி கல்விதுறை அமைச்சராக அக்குவாரா முதல்வர் அவர்கள்
தெளிவான அலசல்…
பொதுவாக இத்தகைய பள்ளிகளில் கடன்வாங்கியாவது படிக்க வைக்க வேண்டும் என்கிற மனநிலை மாறவேண்டும்….