மலையாள சினிமாக்களில் மீண்டும் ஒரு அற்புதம் நிகழ்ந்து இருக்கிறது. ஒரு இனிய குடும்பத்தில் நிகழும் யதார்த்தமான சம்பவங்கள் மிக உயிர்ப்புடனும், இயல்பான நகைச்சுவையுடனும் சொல்லப்பட்டு உள்ளது. கண்ணையும் காதையும் கிழிக்கும் போலிப் பிரம்மாண்டங்களுக்கு மத்தியில் அசத்தலான படம்!
தென்னிந்திய சினிமாக்களில் மலையாள மொழியில் வெளிவரும் படங்கள் எப்போதுமே தங்களது தனித்தன்மையை பாதுகாப்பதில் அதிக முனைப்பு கொண்டவை. சமீபகாலமாக அங்கு வெளிவரும் படங்கள் மலையாள சினிமாவில் புதிய அலையை உருவாக்கி இருக்கின்றன என்றால் அது மிகையில்லை.
பகத் பாசி, திலீஷ் போத்தன், மகேஷ் நாராயணன், ஜீத்து ஜோசப் போன்ற இளம் படைப்பாளிகள் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி வருகிறார்கள். வணிக சினிமா வரையறைக்குள் யதார்த்தமும் இயல்பான கதைகளும் படம் பார்ப்பவர்களை கட்டிப் போடுகின்றன. அதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளிவந்த ஹோம், அர்ச்சனா 31 நாட் அவுட், ஜோஜி, கூகுள் குட்டப்பன், பட போன்ற திரைப்படங்களை சொல்ல முடியும். அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் ஜோ & ஜோ என்ற படமும் இணைந்து இருக்கிறது.
ஜோ அண்ட் ஜோ படம் மிக எளிய கதையைக் கொண்டது. கேரளாவின் சிற்றூரில் வசிக்கும் கத்தோலிக்க குடும்பத்தில் நிகழும் நவீன உறவுச் சிக்கலை போகிற போக்கில் காட்டுகிறது. அக்கா, தம்பி என்ற இருவருக்கும் ஜோ என்ற பெயர் இருப்பதால் நிகழும் குழப்பத்தை சுவையாக விவரிக்கிறது.
அக்கா, தம்பி இருவருக்குள்ளும் நிகழும் போட்டி, சண்டை, பொறாமைகளை படத்தின் துவக்கக் காட்சிகளிலேயே அறிமுகப்படுத்தி விடுகிறார்கள். அக்கா தனது தம்பியை, அம்மாவிடம் போட்டுக் கொடுப்பது, பதிலுக்கு தம்பி அக்காவை பழிவாங்க போட்டுக் கொடுப்பது என்று நமது குடும்பத்தில் நிகழும் சம்பவங்களைப் போலவே கதை நகர்கிறது.
அக்காவாக நிகிலா பிரமாதப்படுத்தி இருக்கிறார். தம்பியுடன் சண்டை, அம்மாவுடன் சண்டை, பாட்டியின் சினேகிதம், அப்பாவுடன் வாக்குவாதம் என்று எல்லாக் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.
தம்பியாக நடித்திருக்கும் 19 வயதே ஆன மேத்யூ தாமஸின் அசாத்தியமான நடிப்பு இந்த படத்திற்கு பெரும் பலம். ஏற்கனவே கும்பலாங்கி நைட்ஸ் படத்திலும் கலக்கி இருந்தார் மேத்யூ. இந்தப் படத்தில் அக்காவுடன் சண்டையிடுவது, கண்காணிப்பது, அம்மாவுடன் கொஞ்சிக் கொண்டே அக்காவை போட்டுத் தருவது என்ற 2கே கிட்ஸ்களின் இயல்பை கண் முன்னே கொண்டு வருகிறார். அவருக்கு நண்பர்களாக வரும் நஸ்லன், மெல்வின் ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
அம்மாவாக வரும் ஸ்மினு சிஜோ, சமையலறையிலும், டைனிங் டேபிளிலும் தன் மகளுடன் வாக்குவாதம் செய்து கொண்டே புலம்பும் காட்சிகளில் அசத்தல். அவரது கணவராக ஜானி ஆண்டனி, மொத்த உணர்வு மோதல்களையும் பதட்டமே இன்றி கையாளும் முதிர்ந்த கதாபாத்திரத்தில் நச் என்று பொருந்துகிறார்.
கதை மிக எளிது. அக்கா, தம்பி இரண்டு பேரின் பெயரும் ஜோமோள், ஜோமோன். வீட்டுக்கு வரும் ஒரு காதல் கடிதத்தில் வெறும் “ஜோ” என்று குறிப்பிடுகிறது. இதை வைத்து அக்கா தம்பியையும், தம்பி அக்காவையும் துப்பறிய தொடங்குகிறார்கள். யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸில் கதை முடிகிறது.
Also read
ஆனால், படம் முழுக்க வரும் யதார்த்தமும், காட்சிக் கோர்வைகளும் விறுவிறுப்பாக நகர்கின்றன. கேமரா கோணங்களும் அதன் நகர்வுகளும் நாமும் அந்த வீட்டின் ஒரு உறுப்பினராக மாறுவதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன. பரபரப்பான சண்டைக் காட்சிகள் இல்லை, கோமாளித்தனமான காதல் டூயட்டுகள் இல்லை, அபத்த நகைச்சுவைக் காட்சிகள் இல்லை, ஆனாலும் படம் மிக சுவாரஸ்யமாக செல்கிறது.
கோவிட் லாக்டவுண் காலத்தில் நடக்கும் கதை என்பதால் மெனக்கெட்டு காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். கோவிந்த் வசந்தாவின் இசை படத்தை மேலும் அழகாக்குகிறது.
பிரம்மாண்ட படங்கள் என்று சொல்லி ரசிகர்களின் கண்ணையும் காதையும் கிழிக்கும் போலிப் படங்களுக்கு மத்தியில் ஜோ அண்ட் ஜோ போன்ற மலையாள சினிமாக்கள் தலை நிமிர்ந்து நிற்கவே செய்கின்றன.
இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது.
திரை விமர்சனம்; தயாளன்
Leave a Reply