புதுப்பிக்கப்படும் ஆஷ் மண்டபம்! பொங்கி எழும் தேச பக்தர்கள்!

அஜீத கேசகம்பளன்

தமிழகத்தின் தன் நிகரில்லா மக்கள் தலைவராகவும், மாபெரும் தியாகியாகவுமான செக்கிழுந்த செம்மல் வ.உ.சிதம்பரனார் சிறைபடவும், துயருரவும் காரணமானவர் அந்நாள் தூத்துகுடி மாவட்ட கலெக்டராக இருந்த ஆஷ் துரை ! இவரை போற்றும் வகையில் மத்திய பாஜக அரசின் நிதி உதவியால் நினைவு மண்படம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் தோன்றியுள்ளன! இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வ.உ.சி ஆய்வு வட்டத்தின் செயலாளர் குருசாமி மயில்வாகனன் அவர்கள் முதல்வர் ஸ்டாலின், தூத்துகுடி மா நகராட்சி ஆணையர் மற்றும் மேயர் ஜெகன் ஆகியோருக்கு அனுப்பிய கடிதம் கீழே தரப்பட்டு உள்ளது.

`ஸ்மார்ட் சிட்டி` திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் சமீபத்தில் தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட வ.உ.சி சாலையில் அமைந்துள்ள பிரிட்டிஷ் ஆங்கில கலெக்டர் ஆஷின் மணிமண்டபம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது என்பதையும் அதைத் தாங்கள் பார்வையிட்டதையும் அறிந்தோம்.

பிரிட்டிஷ் இங்கிலாந்தானது இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த 1907 – 1908ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் தமிழகத்திற்கே முன்மாதிரியாகவும் முதன்முதலாகவும் தூத்துக்குடி மக்கள் எழுச்சியோடு நடத்திக் காட்டிய ஆங்கில எதிர்ப்புச் செயல்பாடுகளை ஒடுக்குவதற்காகவே ஆங்கிலேய அரசால் கலெக்டராக நியமிக்கப்பட்டவன் கலெக்டர் ஆஷ். இயல்பாகவே கறுப்பின எதிர்ப்பு நிறவெறிக் குணம் கொண்டிருந்த அவனால் தூத்துக்குடி மக்கள் அடைந்த இன்னல்கள் பல.

இந்தியத் துணைக் கண்ட விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்மைப் பங்காற்றிய தூத்துக்குடி மக்களின் துணையுடன் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கப்பல் கம்பெனிக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் ஓட்டிய பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின்மீது பொய் வழக்குச் சுமத்தி 40 ஆண்டு கால இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யக் காரணமாக இருந்தவன் கலெக்டர் ஆஷ். அதனால் தேசபக்தி கொண்ட இளைஞன் வாஞ்சியால் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்டான். தமிழக அரசால் வாஞ்சி தியாகியாக நினைவுகூரப்பட்டு சிலையும் மண்டபமும் எழுப்பப்பட்டுள்ளது.

அதேசமயம் வாஞ்சியால் கொல்லப்பட்ட மக்கள் விரோதியான கலெக்டர் ஆஷிற்கும் தூத்துக்குடியில் நினைவுச் சின்னத்தை வைத்திருப்பது தமிழர்களின் தியாகமிக்க விடுதலை உணர்வைக் கொச்சைப்படுத்துகிறது.

பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150ஆம் ஆண்டினைத் தமிழக அரசு சிறப்பாகக் கொண்டாடி வருகின்ற இவ்வேளையில் அவரைக் கொடுமைப்படுத்திய ஆஷின் மணிமண்டபத்தினைப் புதுப்பித்து அலங்கரித்துக் காட்டுவது பெருமைக்குரிய செயல்லல. இது தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றின்மீது கறைபடிய வைக்கும் செயலாகும்.

உண்மையில் ஆஷின் மணிமண்டபம் அகற்றப்பட்டிருக்க வேண்டும். இனி அவ்வாறு செய்ய இயலாவிட்டாலுங்கூட அதை அலங்காரமாகப் புதிப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் அவ்வாறு புதுப்பித்தே ஆக வேண்டுமென்ற கட்டாயமிருந்தால் கீழ்க்கண்ட கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

`கலெக்டர் ஆஷ் தமிழக, குறிப்பாகத் தூத்துக்குடி மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக நியமிக்கப்பட்டு மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஆங்கிலேய இனவெறி பிடித்த அதிகாரி. கப்பலோட்டிய தமிழன் பெரியவர் வ. உ. சிதம்பரம்பிள்ளையின் சுதேசக் கப்பல் கம்பெனியை ஒழித்துக் கட்டியவன். அவரைச் சிறைக்குள் தள்ளியவன். அவர் துயரப்படக் காரணமாக இருந்தவன், அதனாலேயே வாஞ்சியால் சுட்டுக் கொல்லப்பட்டவன்’ என்பதைப் பார்வையாளர்களுக்கு நினைவூட்டும் வகையில் இவ்வரலாற்றுச் செய்தியைப் பொருத்தமான வாசகங்களால் எழுதி புதுப்பிக்கப்படுகின்ற ஆஷின் மணிமண்டபத்தில் தகவல் பலகையாக வைக்கப்பட வேண்டும்.

கொடுமையான சித்திரவதைகளை அனுபவித்த தூத்துக்குடித் தியாகிகளின் தியாகத்திற்கு மதிப்பளித்து எங்களது இக்கோரிக்கையினை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் உள்ளது. இதே போல மேலும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழர் சமூக முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மலர்விழி என்பவரும் ஆஷ் மணிமண்டபத்திற்கு எதிராக தீவிரமாக பேசி வருகிறார்.

”ஆஷ் துரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவியதாகவும், தீண்டாமைக்கு எதிராக செயல் பட்டதாகவும் பல்வேறு புனைவுகள் உள்ளன. இது, உண்மையாக இருக்கும் பட்சத்தில் எதையும் ஆவணப்படுத்தும் பிரிட்டிஷார் இதை ஆவணப்படுத்தாமல் இருக்கமாட்டார்கள். அப்படி எதுவும் வரலாற்று ஆவணங்கள் இல்லை. எனவே, அவை திட்டமிட்ட புனைவு , சுவையான கட்டுக் கதைகள்” என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்!

”பஞ்சாப்பில் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான ஜெனரல் டயருக்கு மணிமண்டபம் கட்ட முடியுமா?”

”இது போன்ற முயற்சியை அங்கே பஞ்சாபில் பாஜக அரசால் செய்ய முடியுமா? அதை அங்குள்ள ஆம் ஆத்மி ஆட்சியும், மக்களும் விட்டு விடுவார்களா?”

”தமிழர்கள் இளிச்சவாயர்கள் என நினைக்கிறார்களா..? ”என்ற கேள்விகள் சமூக வளை தளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன!

மக்கள் எதிர்ப்புகளை மீறி புதுபிக்கப்படும் பிரிட்டிஷ் அதிகாரி ஆஷ் நினைவு மண்டம் குறித்து தமிழக பாஜகவின் நிலைபாடு என்ன? மற்றவர்களுக்கு தேச பக்தி குறித்து பாடம் எடுக்கும் பாஜகவினர் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

அஜீத கேசகம்பளன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time