நீர்வளத்தை சூறையாடுவதற்கா அமைச்சர் பதவி?

-சாவித்திரி கண்ணன்

ராட்சத மணல் கொள்ளைகள் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து நடைபெற்றுக் கொண்டுள்ளன! நீர்வளத் துறை அமைச்சர் பொறுப்புக்கு முற்றிலும் பொருந்தாதவராக நீர் வற்றும் வாய்ப்புகளை நாளும், பொழுதும் ஆராய்ந்து, மணல் கொள்ளையில் மலைக்க வைக்கும் சாதனை நிகழ்த்துகிறார் துரைமுருகன்!

திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்த ஆண்டு அக்டோபரில் புதிதாக 15 மணல்குவாரிகளை ஏற்படுத்தினார் துரைமுருகன்.

தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 41 மணல் குவாரிகள் செயல்படுகின்றன! 21 மணல் குவாரிகள் லாரிகள் மூலமாகவும், 30 மணல் குவாரிகள் மாட்டு வண்டி மூலமாகவும் மணல் அள்ளப்பட்டு வருகின்றன! இவற்றில் நாள்தோறும் பல்லாயிரம் லாரி லோடுகளும், பல்லாயிரம் மாட்டு வண்டி லோடுகளும் அள்ளப்பட்டு வருகின்றன! தமிழகத்தில் ஓராண்டுக்கு சுமார் 60 லட்சம் லாரி மற்றும் மாட்டு வண்டி லோடு மணல் அள்ளப்படுகின்றன! இதனால், ஆற்றுப் படுகைகள் 80 அடி ஆழம் வரை தோண்டப்பட்டு பள்ளத்தாக்குகளாக காட்சி அளிக்கின்றன!

ஆனால், இந்த அநீதி போதாது என்று தொடையைத் தட்டிக் கொண்டு களம் கண்டு, ”புதிதாக மணல் அள்ளப் போகிறோம்” என்று கூறி கடலூர், திருச்சி, வேலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம், பாலாறு, வெள்ளாறு ஆகிய ஆறுகளில் புதிதாக 9 மணல் குவாரிகளுக்கு திட்டமிட்டு உள்ளார். மேலும், சுற்றுச் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏற்கெனவே மாட்டு வண்டிகளில் மட்டும் மனித சக்தியைக் கொண்டு மணல் அள்ள அனுமதிக்கப்பட்ட 30 மணல் குவாரிகளில் எந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளவும் அனுமதி கோரி தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் நீர்வளத்துறை சார்பில் அமைச்சர் துரைமுருகன் சமீப காலமாக  விண்ணப்பித்து நிர்பந்தித்து வந்தார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில் வெள்ளாறு பாய்கிறது! இங்கே ஒரு கீ.மீக்கு ஒரு மணல் குவாரி என்ற வகையில் 8 இடங்களில் எந்திரம் மூலம் மணல் அள்ள அரசு திட்டமிட்டிருக்கிறது. இதே போல,

நாமக்கல் மாவட்டத்தின் மோகனூர் தாலுகாவில் காவேரி ஆற்றில் 3 இடங்களிலும்,

கரூர் மாவட்டத்தில் காவேரி ஆறு பாயும் மண்மங்கலம் தாலுகாவில் 5 மற்றும் கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் 2 இடங்களிலும்,

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆறு பாயும் கும்பகோணம் தாலுகாவில் 3 மற்றும் பாபநாசம் தாலுகாவில் 2 இடங்களிலும்,

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாறு பாயக் கூடிய அறந்தாங்கி தாலுகாவில் 2 இடங்களிலும்,

தூத்துக்குடி மாவட்டத்தில் வைப்பாறு பாயக்கூடிய விளாத்திக்குளம் தாலுகாவில் 1 இடத்திலும்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பார் பாயக்கூடிய திருவாடானை தாலுகாவில் 2 இடங்களிலும், கோட்டக்கரை ஆறு பாயக்கூடிய ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் 2 இடங்களில் உள்ள மணல் குவாரிகளுக்குமாக மொத்தம் 30 குவாரிகளில் மணல் அள்ளும் முறையில் திருத்தம் கோரி, சுற்றுச் சூழல் துறைக்கு நிர்பந்தம் கொடுத்துள்ளார் துரைமுருகன்.

துரைமுருகனின் சொந்த மாவட்டத்தில் பாலாறை காப்பாற்ற போராடும் மக்கள்!

இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி உள்ளது. ”இயந்திர முறையில் மணல் அள்ளுவதற்கான அனுமதிகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கத் தொடங்கியிருப்பது ஆறுகளின் அழிவிற்கு வித்திடும். புதிய குவாரிகளுக்கு அனுமதி கொடுப்பதிலும் உரிய ஆய்வுகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

உரிய ஆய்வுகள், வழிகாட்டுதல்கள், கண்காணிப்புகள் இன்றி ஆற்று மணல் குவாரிகள் அமைப்பதால் ஆற்றுப்படுகை அழிந்து நிலத்தடியில் நீர் சேகரமாவது தடைபடும். ஆற்றின் கரைகள் உடைக்கப்படுவதோடு, தடுப்பணைகளின் மணல் அரிப்பு ஏற்பட்டு கட்டுமானம் நிலைகுலையும். ஆறுகளின் இயல்பான நீரோட்டம் தடைபடுவதோடு ஆற்றங்கரை உயிர்ப்பன்மையத்தின் சமநிலை கெடும் நிலை ஏற்படும்.ஆகவே கண்டிப்பாக சுற்றுச் சூழல் அமைச்சர் மெய்யநாதன் இதை அனுமதிக்கக் கூடாது” எனக் கூறியுள்ளது.

ஆனால், முதலமைச்சருக்கு அடுத்த நிலையில் சகல அதிகாரத்துடன் வலம் வரும் துரைமுருகனுக்கு செக் வைக்கும் தைரியம் மெய்யநாதனுக்கு இருக்குமா? என்பது கேள்விக்குறியே!

மணல் அள்ளுவதை எதிர்த்து மக்களும், விவசாயிகளும் ஏராளமான போராட்டங்களை நடத்தி சோர்ந்துவிட்டனர். காவிரி ஆற்றுப்படுகையில் கதறக் கதற மண் அள்ளப்பட்டு வருவது குறித்து காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.சமீபத்தில் அவர்கள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

”கரூர் மாவட்டத்தில், மண்மங்கலம் வட்டம், நெரூர் வடக்கு (மல்லம்பாளையம்) 4.90 ஹெக்டேர் பரப்பளவில் புதிய மணல்குவாரி அமைக்க, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த இடத்துக்கு அருகே, 500 மீட்டர் துாரத்தில் ஏற்கனவே மணல் குவாரிகள் செயல்பட்டன.

மேலும், தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுகளை புறந்தள்ளியும், ஏற்கனவே மணல் குவாரிகள் இயங்கியதை மறைத்தும், தற்போது குவாரி அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதன்படி, புதிய மணல் குவாரிகளுக்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமலேயே, பொய்யான ஆவணங்கள் மூலம் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட அரசு துறைகளின் குடிநீர் திட்டங்கள் அல்லது மேற்கண்ட எந்த அரசு பயன்பாட்டு இடங்களுக்கும், அதற்கு ஒட்டிய, 500 மீட்டர் சுற்றளவிற்கு எவ்வித மணல் எடுப்பு பணியும் அமையக் கூடாது” என, தெளிவாக கூறப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளைக்கு எதிராக மக்கள்

ஆனால், புதிய மணல் குவாரிக்கு அருகிலேயே நீர் எடுக்கும் நிலையங்கள் இருப்பதை மறைத்து அனுமதி பெறப்பட்டுள்ளது. இதனை தொடங்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாது.

என அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப்படுகைகளில் 8 மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. இந்த மணல் குவாரிகளால் நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்படுவதாகவும், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மணல் குவாரிகளை ஆய்வு செய்ய கோர்ட்டு குழுவை அமைத்து உத்தரவிட்டது. அந்த குழுவின் அறிக்கைபடி, ”கரூர், திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும்” என்று உயர் நீதிமன்றம் நவம்பர் 29, 2017ல் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அரசின் பொதுப்பணித்துறை சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மணல் குவாரிகளில் முறைகேடு நடக்காதவாறு சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும், மணல் அள்ளப்படும் இடத்தில் இருந்து சேமிப்பு கிடங்கு வரை செல்லும் மணல் லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும், குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே மணல் அள்ளப்படும், ஒரு லாரிக்கு 2 அல்லது 3 யூனிட் மணல் மட்டுமே விற்பனை செய்யப்படும், ஆன்லைனில் மட்டும் மணல் புக் செய்து விற்பனை செய்யப்படும்’’ என்ற உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டன.

அதிமுக ஆட்சியில் மணல் கொள்ளையில் சரித்திரம் படைத்த எடப்பாடி பழனிச்சாமி!

இதை ஏற்றுக் கொண்ட மதுரை ஐகோர்ட்டு  2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதி மாயனூர் காவிரி ஆற்றில் மணல் குவாரி செயல்பட அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து மாயனூர் காவிரி ஆற்றில் மணல் குவாரி செயல்பட தொடங்கியது. இதுபோல் பல்வேறு இடங்களில் கோர்ட்டு அனுமதி பெற்று மணல் குவாரிகள் செயல்படத் தொடங்கின. இதற்கிடையே கட்டுமானப் பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு நிலவுவதாக சொல்லி, புதிதாக 27 மணல் குவாரிகளை தொடங்க அதிமுக அரசு முடிவு செய்தது. அதன்படி தஞ்சாவூர், நாமக்கல், திருச்சி, சிவகங்கை, கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இந்த 27 குவாரிகளும் திறக்கப்பட்டன! அவை யாவும் ஆற்றோரங்களை மேன்மேலும் பள்ளத்தாக்குகளாக மாற்றின.

இவ்வாறு, அதிமுக, திமுக என மாறி, மாறி ஆட்சிக்கு வந்து, மணல் அள்ளி தமிழகத்தை பாலைவனமாக்க சூறையாடுவதில் ஒரே மாதிரி செயல்படுகின்றனர்.

கேரளாவில் 2006 ஆம் ஆண்டு முதல் மணல் அள்ளத் தடை விதிக்கப்பட்டு, அது எந்த மீறல்களும் இன்றி 16 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. தங்கள் தேவைக்கு தமிழ் நாடு அல்லது வெளிநாடுகளில் இருந்து தான் மணலை வாங்குகிறது கேரள அரசாங்கம். தங்கள் மண்ணின் இயற்கை வளம் அழியக் கூடாது என்பதில் அங்குள்ள அனைத்து கட்சிகளுமே ஒருமித்து செயல்படுகின்றன! ஆனால், தமிழ்நாட்டிலோ இயற்கை வளங்களை சுரண்டிக் கொழுப்பதில் தான் கட்சிகள் ஒன்றுபடுகின்றன!

கொரோனா காலத்தில் மலேசியாவில் இருந்து 5,20,000 டன்கள் மணல் இறக்குமதி ஆனது. அது யூனிட் ரூ10,000 தான்! ஆனால், தமிழகத்தில் தோண்டி எடுக்கப்படும் மணலோ யூனிட் ரூ12,000 விற்கப்படுகிறது. விலை குறைவாக கிடைக்கும் மணலை இறக்குமதி செய்துவிட்டு போகலாமே! இன்னும் சொல்வதென்றால், விலை அதிகமாக இருந்தாலுமே கூட மணலை கேரளாவை போல இறக்குமதி செய்வதே நல்லது. ஏனெனில், இயற்கை என்பது விலை மதிப்பு இல்லாதது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time