கள்ளக் குறிச்சி சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ் பின்னணி என்ன?

-சாவித்திரி கண்ணன்

கள்ளக்குறிச்சி மரணத்தை தமிழக காவல்துறை கையாண்ட விதமும், அதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தை அணுகும் விதமும் தமிழ் நாட்டின் காவல் துறையை வழி நடத்துவது தமிழக முதலமைச்சரா? அல்லது ஆர்.எஸ்.எஸ் தலைமையா? என்ற சந்தேகம் வலுக்கிறது.

மைக்கேல்பட்டி மாணவி மரணத்தில் தமிழக பாஜக நேரடியாக களம் கண்டது! ஆனால், இதில் ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் இருந்து சதித் திட்டம் தீட்டி செயல்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டை சுலபத்தில் அலட்சியபடுத்த முடியாது.

உண்மையில் இந்தக் கலவரம் மக்களின் தன் எழுச்சியால் தான் உருவானது. அந்த பள்ளி நிர்வாகம் கடந்த கால் நூற்றாண்டாக மாணவர்களையும், பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மிக மோசமாக நடத்தியதன் விளைவாக மிகக் கடுமையான அதிருப்தியை சம்பாதித்து இருந்ததே மக்கள் ஒன்று திரண்டு உயிர் இழந்த மாணவியின் சார்பாக போராடியதாகும்!

அந்தப் பள்ளி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாநில நிர்வாகிக்கு சொந்தமானது என்பதாலோ என்னவோ காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டியது. பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக டிஜிபி தொடங்கி லோக்கல் இன்ஸ்பெக்டர் வரை பேசினர்.

மாணவி மேலே இருந்து கீழே விழுந்தார் என்பதற்கு எந்த சாட்சியமும் இல்லை. முதல் நாளே இறந்துவிட்டிருந்த மாணவியின் சடலத்தை அந்த நிலையிலேயே காவல்துறைக்கு அழைத்து காண்பித்திருக்க வேண்டும். காவல்துறை போட்டோகிராபர், வீடியோகிராபரை அழைத்து வந்து அனைத்தையும் பதிவு செய்த பிறகே போஸ்ட்மார்ட்டம் செய்ய, சடலத்தை காவல்துறை அகற்றி இருக்கும். இதற்கெல்லாம் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கே காவல்துறை பள்ளி நிர்வாகிகளை கைது செய்திருக்க வேண்டும்.

நான்கு நாட்கள் மக்கள் போராட்டம் முற்றிலும் அலட்சியம் செய்யப்பட்ட பிறகே போராட்டம் கொந்தளிப்பு மன நிலைக்கு செல்கிறது! அப்படி கொந்தளிப்பு மன நிலையை மேலும் வலுப்படுத்த வட இந்திய ஆர்.எஸ்.எஸ் காரர்கள் டிவிட்டரில் ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் பார் ஸ்ரீமதி என டிரண்ட் செய்துள்ளனர்.

மக்கள் போராட்டம் வலுத்த போது கறுப்பு உடையணிந்த ஏராளமான இளைஞர்கள் பைக்குகளில் வந்து அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக, சிஸ்டமேட்டிக்காக இறங்கி செய்தனர். பள்ளி ஆவணங்களை அழித்தனர். பள்ளி நிர்வாகத்தின் பஸ்கள் கொளுத்தப்பட்டதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அங்கிருந்த நூற்றுக்கு மேற்பட்ட பைக்குகள் தீக்கிரையானது எப்படி? இந்த விவகாரத்தை நன்கு ஆராய வேண்டும்.

இந்த சம்பவம் இந்து முன்னணி நிர்வாகிகள் தங்கள் காருக்கு தாங்களே தீ வைத்துக் கொண்டு பழியை கண்ணுக்கு தெரியாத எதிரி மீது சுமத்திய சில சம்பவங்கள் தான் நம் நினைவுக்கு வந்தது.

இந்த பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கான சிலம்ப பயிற்சி, கராத்தே பயிற்சி உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடந்துள்ளன. இந்த மாவட்டத்திலும், பக்கத்து மாவட்டத்திலும் இருக்கின்ற ஏராளமான ஆர்.எஸ்.எஸ் பயிற்சி பெற்ற தொண்டர்கள் இந்த கலவரத்தின் போது என்ன செய்தனர்..? அவர்களின் பங்களிப்பு என்ன? என்பது விசாரிக்கப்பட வேண்டும்.

தற்போது திமுக ஆட்சி சரியில்லை. சட்டம் ,ஒழுங்கு சரியில்லை என்று அண்ணாமலை பேசுகிறார். அர்ஜின் சம்பத் ரொம்பவே பேசுகிறார்; அவர் பேசியிருப்பது கீழே தரப்படுகிறது

இந்த சம்பவம் சரியான திட்டமிடப்பட்டு கலவரத்தை செய்யக்கூடிய ஆட்கள் அங்கே முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு, சரியான நேரம் பார்த்து தாக்குதல் நடந்தேறியுள்ளது. இதன் பின்னணியில் நாட்டு மக்களுக்கு பிரிவினைவாதத்தை மனதில் ஏற்படுத்தி அதன்மூலம் துண்டாட நினைக்கும் சில அந்நிய கைக்கூலி சக்திகளின் வேலை உள்ளது.

குறிப்பாக இதன் பின்னணியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், பிஎப்ஐ, மக்கள் அதிகாரம் போன்ற சில அமைப்புகள் உள்ளன. இவர்களின் வேலைதான் இது. இவர்கள் நாட்டின் புற்றுநோய்கள். இந்த நக்சல் கும்பல்களை நீங்கள் வேருடன் கண்டுபிடித்து அழிக்கவில்லை என்றால் நாளை உங்கள் முதல்வர் பதவிக்கே உலை வைத்துவிடும்” என குறிப்பிட்டுள்ளார்.

ஆக, பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதா? இந்த கலவத்தை உருவாக்கி, அதன் மூலம் இங்குள்ள இடதுசாரி மற்றும் திராவிட இயக்க தோழர்களை, திமுக அரசைக் கொண்டே வேட்டையாடுவது தான் இவர்களின் நோக்கம். அந்தப்படி தான் மக்கள் அதிகாரம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், புரட்சிகர இளைஞர் அமைப்புகள் அனைத்தையும் டார்கெட் செய்து கைதுகள் நடக்கின்றன. அப்பாவி இளைஞர்கள் கைதும் நடக்கின்றன!

இது தான் ஆர்.எஸ்.எஸ் ஸ்டைலாகும்! திட்டமிட்டு கலவரம் செய்வது, தாங்கள் செய்த அந்த கலவரத்திற்காக தங்கள் எதிரிகளை பொறுப்பாக்கி கைது செய்து சிறையில் அடைப்பது! இதைத் தான் கொரெகான், மற்றும் மாலேகான் சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ் செய்தது.

“எங்கோ இழைக்கப்படும்   அநீதி, எல்லா இடங்களிலும்  நீதிக்கு  ஆபத்தாக இருக்கும்” என்று கறுப்பின மக்களின் விடுதலைக்கு போராடிய மார்டின் லூதர் கிங் சொன்னது தான் நினவுக்கு வருகிறது.

கொரேகான் சம்பவம்; பிரிட்டிஷார் படையில்  தாழ்த்தப்பட்ட மகர் என்ற சாதியினர், ஆதிக்க சாதியினரான பேஷ்வாகளை  எதிர்த்து போரில் வெற்றி பெற்ற வரலாற்றை நினைவு கூறும்  இருநூறாவது ஆண்டு விழா மகாராஷ்டிரா மாநிலத்தில் பீமா கொரேகான் என்ற இடத்தில்,  2018 ஆம் ஆண்டு நடைபெற்றது..! அந்த நிகழ்வில்  இந்துத்துவாதிகள் கலவரத்தை ஏற்படுத்தினர். ஆனால், கலகம் செய்தவர்களைக் கைது செய்யாமல், நிகழ்ச்சி நடத்தியவர்களை கைது செய்துவிட்டனர். அப்படி செய்யப்பட்ட கைதுகளுக்கு ‘நகர்புற நக்சல்கள்’ ‘மாவோயிஸ்ட் தொடர்பு’ ‘பிரதமரைக் கொலை செய்ய சதி’ என்பதாக கதை சமைத்தனர்.

அந்த வகையில் தெலுங்கு கவிஞர் வரவர ராவ், மனித உரிமை ஆர்வலர்கள் சுதா பரத்வாஜ், , ஆனந்த் டெல்டும்டே, ஹானி பாபு போன்ற 16 பேர்களும் பீமா ‘கொரேகான் சதி வழக்கில்’ வலிந்து பொய்யாய் புனையப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.

மாலேகான் சம்பவம்; 2006-ம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி  மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியின் ஒரு மசூதியில் தொழுகை முடிகின்ற நேரத்தில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்து சிதறின. அதை அடுத்து அருகில் இருந்த சந்தைப் பகுதியில் ஒரு குண்டு, என்று அடுத்தடுத்து தொடர்ச்சியாக நான்கு குண்டுகள் வெடித்துச் சிதறின. இந்த தாக்குதலில் மொத்தம் 38 அப்பாவிகள் கொல்லப்பட்டனர், 200-க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர்.

இது மாலேகானில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல். இதற்கு அடுத்த பயங்கரவாத தாக்குதல் 2008 ஆம் ஆண்டின் ரம்ஜான் மாதத்தில் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் மொத்தம் நான்கு அப்பாவிகள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். அதிரடியாக களம் கண்ட காவல்துறை இதற்கு முஸ்லீம் பயங்கரவாதிகள் தான் காரணம் என்று உண்மை தெரிவதற்கு முன்பே பேசியது. சொல்லியபடியே ஒன்பது அப்பாவி முஸ்லீம்களை கைது செய்து அவர்களுக்கு சிபி அமைப்புடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி சிறையில் தள்ளினர். ஆனால் அவர்கள்  குற்றம் செய்யாத அப்பாவிகள் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு பின்பு நிரூபிக்கப்பட்டு, அவர்கள் 2012 இல் விடுவிக்கப்பட்டனர்.

உண்மையான குற்றவாளி பெண் சாமியார் சாத்வி பிரத்யாக்சிங்

உண்மை குற்றவாளிகளான இந்துத்துவாதிகளான கர்னல் புரோஹித், பெண் சாமியார் ஸாத்வி பிரக்யா சிங் தவிர்த்து ஓய்வு பெற்ற மேஜர் ரமேஷ் உபாத்யாய், அஜெய் ராகிர்க்கர், சுதாகர் தீவேதி, சுதாக்கர் சதுர்வேதி, மற்றும் சமீர் குல்கர்னி ஆகிய மூன்று இராணுவ ஜெனரல்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் மீதும் குற்றப்பதிவு தாக்கல் செய்து கைது செய்ததெல்லாம் பிறகு  கடுமையான போராட்டங்கள் வழியாகத் தான் சாத்தியப்பட்டது.

அது போலத்தான் தற்போதும் திமுக அரசை இயல்பாக செயல்படவிடாமல், திசைதிருப்பி முற்போக்கு அமைப்புகள், இடதுசாரி அமைப்புகளை காவல்துறையை வைத்து வேட்டையாடச் செய்கிறது ஆர்.எஸ்.எஸ்! தமிழகத்தில் ஆர்.என்.ரவி கவர்னராக பொறுப்பேற்றவுடன் டிஜிபி சைலேந்திரபாபு நேரடியாக சென்று சந்தத்தித்தார். உடனே, ரவுடிகளை கைது செய்கிறேன் என ஏராளமான பழைய குற்றவாளிகளை எந்தப் புகார்களுமின்றி அநியாயமாக நூற்றுக்கணக்கில் கைது செய்து சிறையில் அடைத்தார். அது முதல் கவர்னரின் கண் அசைவுகளுக்கு ஏற்ப தான் தமிழக காவல்துறை செயல்படுவதாகத் தெரிகிறது.

இதற்கு மற்றும் ஒரு உதாரணம், அக்டோபர் இரண்டு காந்திபிறந்த நாள் விழா ஒன்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜி.ஆர்.ராமகிருஷ்ணன் காந்தியைக் கொன்றது கோட்ஸே என்று பேசியதற்கு கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர் கடுமையாக ஆட்சேபம் செய்து எச்சரித்ததாகும்.முன்னதாக காந்தி பிறந்த நாள் கொண்டாட்டத்திர்கே காவல்துறை அனுமதி தர மிகவும் இழுத்தடித்தது. இதெல்லாமே தமிழக காவல்துறை பெயரளவுக்கு தான் முதல்வர் ஸ்டாலினின் கீழ் உள்ளது. நடைமுறையில் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை.

கள்ளக்குறிச்சி சம்பவத்தை திமுக ஆட்சியை பலவீனப்படுத்த கிடைத்த ஒரு நல் வாய்ப்பாக  தமிழக காவல்துறையை ஒரு ஆயுதமாக கருதுகிறது ஆர்.எஸ்.எஸ். தமிழகத்தின் பலவீனமான ஆட்சித் தலைமை தனக்கான படுகுழியை தானே வெட்டிக் கொள்கிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time