மியூச்சுவல் ஃபண்ட்களை எப்படி நம்புவது?

-இளம்செழியன்

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பாதுகாப்பானவையா? இவை எப்படி செயல்படுகின்றன? அதை தெரிந்து கொள்வது எப்படி? ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை என்ன?

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தை, கடன் சந்தை மட்டும் இல்லாமல் தங்கத்திலும்  முதலீடு செய்யும் திட்டங்களையும் வெளியிடுகிறது. அன்றைய தங்க விலைக்கு ஏற்ப உங்கள் முதலீடு உயரும், குறையும். ஆனால்,  நாம் முதலீடு செய்யும் தொகைக்குத் தங்கமாக தரமாட்டார்கள்.  பணமாகத்தான் தருவார்கள். அந்த தொகையைக் கொண்டு நாம் வெளியே தங்கம் வாங்கிக் கொள்ளலாம்.

ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் அளவை பொருத்து இதில் தேவைக்கேற்ப முதலீடு செய்து கொள்ளலாம். முதலில் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள் எவை? எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.

இந்திய பங்குச்சந்தையில் மூன்று விதமான சந்தை மதிப்பு உள்ள நிறுவனங்கள் உள்ளன.  சிறு நிறுவனங்கள் (small Cap), நடுத்தர நிறுவனங்கள் (Mid Cap), பெரிய நிறுவனங்கள்(Large Cap). ஆகும்.

ரிலையன்ஸ், இன்போசிஸ், டாடா போன்ற நிறுவனங்கள்  பெரிய நிறுவனங்களாகும்.

SEBI வரையறுத்துள்ள வகைப்படி இப்படி ஒரு 100 மிகப் பெரிய  நிறுவனங்கள் உண்டு. அடுத்ததாக நடுத்தர அளவில் 150 நிறுவனங்களும், அதற்கடுத்ததாக 5000 சிறிய நிறுவனங்களும் பங்குச்சந்தையில் உண்டு.

தற்பொழுது இருபதாயிரம் கோடிகள் மேல் உள்ள நிறுவனங்கள் பெரிய நிறுவனம். ஐயாயிரம் கோடி முதல் இருபதாயிரம் கோடி வரை உள்ள நிறுவனங்கள் நடுத்தர நிறுவனம். ஐயாயிரம் கோடிகள் வரை உள்ள நிறுவனங்கள் சிறிய நிறுவனங்கள் ஆகும்.

பெரிய, நடுத்தர, சிறிய என்ற இந்த அளவுகோலின் மதிப்பீடை அவ்வப்பொழுது SEBI மாற்றி அமைக்கும்.

 

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெரும் பணத்தை இந்த மூன்று விதமான சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்யும்.

பெரிய நிறுவனங்கள்(Large Cap Companies)

பெரிய நிறுவனங்கள் நன்கு வளர்ந்து ஆலமரம் போன்று தங்களை  நிலை பெற்று இருக்கும். நாட்டின் பொருளாதாரத்திற்குப் பக்கபலமாக இருப்பவை. இதன் வரவு-செலவு கணக்குகள் சரியாக இருக்கும். எளிதில் கவிழ்ந்துவிடாது. நிலையான வருமானம் வரும். லட்சக்கணக்கான மனிதர்கள் வேலையில் இருப்பார்கள். அரசு இவ்வகை நிறுவனங்களுக்கு அவ்வப்பொழுது சலுகைகளும் கொடுக்கும்.

இப்பொழுது நமக்கு ஒரு எண்ணம் வரலாம். இது போல் உள்ள பெரிய நிறுவனத்தில் மட்டும் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால்  பாதுகாப்பாக இருக்கும். நிலையான வருமானம் வரும் என்றும்  யோசிக்கலாம்.

பெரும் நிறுவனங்கள் எளிதில் கவிழாது என்றாலும், அந்த நிறுவனத்தின் தவறான முடிவுகள் நிறுவனத்தைக் கவிழ்க்கவும் வாய்ப்பு உண்டு. அணில் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனம் , இராமலிங்க ராஜு சத்யம் கம்ப்யூட்டர்ஸ், விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் போன்றவை சரிந்தும்  உள்ளன.

ஆனால், சிறிய-நடுத்தர நிறுவனங்களை ஒப்பிட்டால் பெரிய நிறுவனங்கள் நிலைத்து நின்று லாபம் தருவதற்கே வாய்ப்புகள் அதிகம். குறைவான ரிஸ்க் உண்டு.

நடுத்தர நிறுவனங்கள் (Mid Cap Companies)

நடுத்தர நிறுவனங்கள் பல வருடங்கள் சந்தையில் இருப்பதால், பல ஏற்ற இறக்கங்களை பார்த்து ஒரு இடத்தில் தன்னை நிலை நிறுத்தி கொண்டு இருக்கும். இதன் இலக்கு பெரிய நிறுவனமாக மாறுவது. அதற்கு ஏற்ப திட்டங்களைத் தீட்டிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். முந்தைய கால நிறுவன வரலாறு இருப்பதால் நிறுவனத்தின் உண்மைத் தன்மையை அலச முடியும்.

நல்ல லாபம் தரும் நிறைய நடுத்தர நிறுவனங்கள் உண்டு. இத்தகைய நிறுவனங்கள் சிறப்பான கணக்கு வழக்குகள் கொண்டு இருக்கும்  ஆனால் பெரிய நிறுவனத்துடன் ஒப்பிடும்பொழுது நடுத்தர நிறுவனங்கள் கொஞ்சம் அதிக ரிஸ்க் உண்டு. அதேபோல்  கொஞ்சம் லாபம் அதிகம் வரவும் வாய்ப்பும் உண்டு.

சிறிய நிறுவனங்கள் (Small Cap Companies)

சில நூறு  கோடிகள் முதல் ஆயிரம் கோடிகள் வரை இதன் சந்தை மதிப்பாக இருக்கும். ஒவ்வொரு வருடமும் பல சிறிய நிறுவனங்கள் உருவாகிறது. அதில் பல நிறுவனங்கள் சில வருடங்களில் நலிவடைந்து மூடப்படுகிறது. ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே நடுத்தர நிறுவனங்கள் நிலையை அடைகிறது.

புதியதாக உருவான சிறிய நிறுவனத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. எப்படி எதிர்காலத்தில் செயல்படும் என்று பழைய வரலாறு இருக்காது. ஆனால் மிக,மிக வேகமாக வளரக்கூடிய சாத்திய கூறுகள் இந்த சிறிய நிறுவனங்களுக்கு உண்டு. உதாரணமாக OLA, Zomato , paytm நிறுவனங்களைச் சொல்லாம். அதில் சில நிறுவனங்கள் நடுத்தர நிறுவனத்தை விட நல்ல லாபம் தரத் தொடங்கலாம்.

ஆனால் பெரிய-நடுத்தர நிறுவனங்களை ஒப்பிட்டால் சிறிய நிறுவனங்கள் மிக அதிக ரிஸ்க் உடைய நிறுவனங்கள் ஆகும்.

பங்குச் சந்தையில் இந்த மூன்று வகை நிறுவனங்கள்தான்  உண்டு.  மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்த மூன்று நிறுவனத்தில்தான் முதலீடு செய்கிறது. ஆனால் எப்படி பலவாறு கலந்து முதலீடு செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

மியூச்சுவல் ஃபண்டில் நிறையத் திட்டங்கள் உண்டு.

Large Cap Fund

கொஞ்சம் பாதுகாப்பான, குறைவான ரிஸ்க் உள்ள பெரிய நிறுவனத்தில் முதலீடு செய்ய விரும்பினால் large cap fund தேர்ந்து எடுக்கலாம்.  புதியவர்களை இந்த திட்டத்திலிருந்து தொடங்கச் சொல்வார்கள். காரணம் இதன் லாபம்- நஷ்டமும் சம அளவில் இருக்கவே வாய்ப்பு உண்டு.

கோவிட் போன்ற பொருளாதார நெருக்கடியில் கூட பெரிய நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கவில்லை. உடனே மூடிவிட மாட்டார்கள். மியூச்சுவல் ஃபண்ட் கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் Large cap fundல் மாதம் 500ரூபாய் ஒரு வருடம் செலுத்தி அதன் செயல்பாடுகள், லாபம்-நஷ்டம் எவ்வளவு வருகிறது என்று கற்றுக் கொள்ளச் சொல்வார்கள்.

இதன் மூலம் ஒருவர் மியூச்சுவல் ஃபண்ட் செயல்பாடுகளை கற்றுக் கொள்ள முடியும் அப்படி தன்னுடைய சேமிப்பின் 10 சதவிகிதத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வரலாம்.

Canara Robeco Bluechip Equity Fund, Axis Bluechip Fund போன்றவை நன்கு செயல்படும் திட்டங்கள் ஆகும். இதன் செயல்பாடுகளை இணையத்தில் பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும்.

Mid Cap Fund

கொஞ்சம் ரிஸ்க் எடுக்க முடிவு செய்பவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் திரட்டப்படும் பணம் நடுத்தர நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படும். எந்தெந்த நடுத்தர நிறுவனங்களில் முதலீட்டை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் செய்து உள்ளது என்று அறிக்கை(Portfolio Sheet) தருவார்கள்.  அந்த நடுத்தர நிறுவனங்கள் எப்படி செயல்படுகிறது என்று இணையத்தில் தேடித் தெரிந்து கொள்ள முடியும்.

அனைத்து திட்டத்திற்கும்  மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனம் இது போல் அறிக்கை(Portfolio Sheet) கொடுப்பார்கள்.

இந்த திட்டத்தில் லாபமும்-நஷ்டமும் கொஞ்சம் அதிகம் இருக்கும். நாட்டில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி இந்த நிறுவனத்தையும் பாதிக்கும். ஆனால் சிறிய நிறுவனங்கள் போன்று உடனே ஆட்டம்கானது.  பெரிய நிறுவனங்களை விட லாபம் அதிக வர வாய்ப்பும் உண்டு.

PGIM India Midcap Opportunities Fund,  மற்றும் Quant Mid Cap Fund போன்ற திட்டங்களின் செயல்பாடுகளைக்  கவனியுங்கள்.

Small Cap Fund 

அதிக ரிஸ்க் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். பெரிய-நடுத்தர நிறுவனங்களை ஒப்பிடும்பொழுது லாபமும்-நஷ்டமும் அதிக அளவில் இருக்கும். நாட்டில் ஏற்படும் சிறு பொருளாதார நெருக்கடி கூட பெரிய அளவில் இந்த நிறுவனங்களைப் பாதிக்கும். கோவிட் காலத்தில் பல ஆயிரம் சிறிய நிறுவனங்கள் மூடியது நினைவில் இருக்கலாம்.

சிறிய நிறுவன திட்டத்தில் முதலீடே செய்யக் கூடாதா என்றால்? அப்படி இல்லை. முதலீடு செய்யலாம். இன்று பல சிறிய நிறுவன திட்டங்கள் நன்கு லாபம் கொடுக்கிறது. உதாரணமாக Nippon small cap fund, SBI small cap fund போன்றவற்றைச் சொல்லாம்.

பெரிய-நடுத்தர நிறுவனங்களை விடச் சிறிய நிறுவன திட்டங்கள் லாபம் நிறையச் சம்பாதிக்கும் அதே அளவு நஷ்டமும் ஏற்பட வாய்ப்பும் உண்டு என்பதால் புதியவர்கள் முதலில் Large cap fundல் முதலீடு செய்து பிறகு மியூச்சுவல் ஃபண்ட் கற்றுக் கொண்டு சிறிய நிறுவன திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்கலாம்.

ரிஸ்க் என்பது வாழ்க்கையின் அனைத்து செயல்களிலும் உண்டு என்பதால் வங்கி சேமிப்பு, அரசு சேமிப்பு என்று மட்டும் கவனம் செலுத்தாமல் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் ஒருவர் மிகச் சிறிய தொகையை முதலீடு செய்து கற்றுக் கொள்ள வேண்டும்.

பொதுவாக பங்குச் சந்தை சார்ந்த(Equity Schemes) திட்டங்கள் குறுகிய காலத்திற்கு முதலீடு செய்து லாபம் வருமா என்று எதிர்பார்க்காமல் நீண்ட வருடம் குறைந்தது 3 வருடம் முதல் 7 வருடம் வரை காத்திருந்தால் லாபம் வரவே அதிக வாய்ப்பு உண்டு. அதனால்  சிறிய தொகையைக் கூட முதலீடு செய்து காத்திருங்கள்.

நஷ்டம் அடைந்த  பலர் உடனடியாக லாபம் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் மற்றும் திட்டங்களைக் கவனித்து வாங்காமல் ஏதோ ஒன்றை வாங்குபவர்கள் ஆவர்.

இன்னும் பல திட்டங்கள் குறித்து அடுத்தடுத்து பார்ப்போம்.

கட்டுரையாளர்; இளம்செழியன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time