பதின்பருவத்தினர் எளிதில் உணர்ச்சிவசப் படுகின்றனர். தவறான ரோல் மாடல்களை பின்பற்று கின்றனர். உடல் உழைப்பை குறித்தோ, கடமைகள் குறித்தோ அறியாதவர்களாக வளர்கின்றனர். இவர்களிடம் சுமூகமான உறவைக் கட்டமைப்பதில் பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூகமும் என்ன செய்யலாம்?
தினச் செய்திகளில் குறைந்தது 2 செய்திகளாவது வன்முறை, தற்கொலை முயற்சி, திருட்டு, போதை பழக்கம் போன்ற பல குற்றங்களில் மாணவ/மாணவிகள் ஈடுபடும் செய்திகளை பார்க்க முடிகிறது. முக்கியமாக இவர்கள் அனைவருமே வளரிளம் பருவ வயதினராக இருக்கின்றனர்.
பொதுவாக நாம் எல்லாருமே குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தருகிறோம்.பிறகு வளர்ந்துவிட்ட பெரியவர்களூக்கு முக்கியத்துவம் தருகிறோம். நம் படைப்புகள் யாவும் கூட இந்த இரண்டு பிரிவினர் பற்றியே அதிகம் உள்ளது. இடையில் இருக்கும் வளரிளம் பருவ வயதினர் பற்றி பேசவோ, அவர்களின் சமூகப் பார்வைகள் குறித்தோ, அவர்களின் உடல் மற்றும் மனச் சிக்கல்கள் பற்றியோ நாம் பேசுவதில்லை. அதனால், இவர்கள் குழந்தைகளுக்கான ரா மெட்டீரியல், மற்றும் வளர்ந்தவர்களுக்கான ரா மெட்டீரியல்களை வைத்து தான் அவர்களுக்கான உலகை உருவாக்குகின்றனர்.
இப்படியாக நமது சினிமாவும், இலக்கிய உலகமும் வளரிளம் பருவத்தினர் என்றால், அடிப்படை கருத்தாக காதலை வைத்து தான் அடுத்த கட்ட வளர்ச்சிகளை காண்பிக்கின்றனர். உதாரணமாக கமலி பிரம் நடுக்காவேரி ஆகட்டும், சமுத்திரக் கனி அவரின் படமான சாட்டை ஆகட்டும் எல்லாமே முதலில் காதலில் ஆரம்பித்து அடுத்து அவர்களின் முன்னேற்ற பாதையைச் சொல்கின்றனர்.
இப்படி நம்ம வீட்டில் ஒரு பையனோ, பொண்ணோ காதலித்து அதன் பின் முன்னேற ஆரம்பிக்கிறேன் என்று சொல்ல முடியுமா? அதற்காக சினிமா தான் இவர்களை வழி தவற வைக்கிறது என்று சொல்லவில்லை. பருவ வயதில் படிப்பு தவிர்த்து, அவர்களின் கற்பனைத் திறனுக்கு சினிமாவும், இலக்கியமும் மிகப் பெரிய ஊக்குவிக்கும் மெட்டீரியலாக தான் அவர்கள் பார்க்கிறார்கள். பாடம் தவிர்த்து அடுத்து சினிமா உலகைத் தேடுபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது.
ஆனால், நம்ம சமூகமோ படிப்பைத் தவிர்த்து, அவர்களுக்கு வேறு எதையும் கொடுக்கவில்லை. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பாடம் தவிர்த்து அவர்களுக்கு வேறு எந்த ஒரு வேலையும் இல்லை. அப்ப படிப்பை நேசிக்காத மாணவர்கள் முழு நேரமும் வெட்டியாக தேவை இல்லாத விசயங்களை மட்டுமே சிந்திக்கின்றனர். இதனால், அவர்களின் உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் உள்ள வேகத்துக்கு இணையாக திரில்லாக செய்ய புதுப்புது விசயங்களை சமூகத்துக்கு எதிராக செய்ய முயற்சிக்கின்றனர்.
இந்த மாதிரி பசங்க கிட்ட நீங்க போய், உன்னோட ரோல் மாடல் யார்? என்று கேட்டுப் பாருங்கள். நடிகர்களை சொல்வரகளே அதிகம் இருப்பர். You tube இல் அதிகமான பருவ வயதினர் பார்க்கும் நபர் பாப் மார்லி என்பார்கள்! இவர் மிகச் சிறந்த பாடகர், பாடல் மூலம் சமூகத்துக்கு நல்ல கருத்துக்களை சொல்லி இருக்கிறார். ஆனால், நம்ம பசங்க அதை எல்லாம் விட்டுவிட்டு இவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததாக சொல்லி, தங்கள் வீட்டிலும் கஞ்சா செடி வளர்க்கின்றனர். இது ஒரு செய்தியாக நம் தமிழக செய்தித்தாளில் வந்தது. இது போக கஞ்சா சாப்பிட்டால் எத்தனை பேப்பர் அரியர் வைத்து இருந்தாலும், அத்தனையும் பாஸ் செய்து விட முடியும் போன்ற மூட நம்பிக்கையை பரப்புகின்றனர்.
தற்போதைய பொருளாதார பேராசையால் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்ற பேராசை வளரிளம் பருவத்தினரிடம் இருக்கிறது. அதற்காக திருடுவது, வீட்டுப் பொருட்களை விற்பது என்று பல குற்ற செயல்களை செய்கின்றனர். இதற்கும் விஜய் அவர்கள் நடித்த கத்தி , மாஸ்டர் படங்களை உதாரணமாக எடுத்து, மைனர் பசங்களை காவல் துறையும், நீதித் துறையும் எதுவும் செய்யாது என்று நம்புகின்றனர்.
இப்படியாக இந்த காலக் கட்டத்தில் வளரிளம் பருவத்தினரை நாம் எதுவும் கேள்வி கேட்கக் கூடாது எனவும், எதோ ஒரு விசயத்தில் அவர்கள் அடிக்ட் ஆக இருக்கவுமான யதார்ததை காண முடிகிறது. எந்த ஒரு விஷயத்தையும் சமூகத்தில் இருந்து கற்காமல், கூகிளிடம் இருந்து கற்றுக் கொள்ள முடியும் என்றும் தீவிரமாக நம்புகின்றனர். இதனால், படிக்காமல் பரீட்சையில் காப்பி அடிப்பது, சரியாக பள்ளிக்கு வராமல் இருப்பது, ஆசிரியர் எதுவும் சொன்னால் தற்கொலைக்கு முயற்சி செய்வது, சில நேரங்களில் தங்களின் குற்ற உணர்வுக்கு தனக்கு தானே தண்டனைகள் கொடுப்பது என்று, ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் பதட்டமான மன நிலையில் வைக்கின்றனர்.
இதனால் பெற்றோர்கள் தன் பிள்ளை எதும் தவறு செய்தோ அல்லது தற்கொலை முயற்சி செய்தோ செய்தியாகி விடுவார்களோ என்று பயப்படுகின்றனர். இன்றைக்கு இவர்களிடம் எதைப் பேசலாம், எதைப் பேசக் கூடாது என்று யோசித்து, யோசித்து உரையாடலை ஆரம்பிக்கும் கட்டாயத்துக்கு நாம் உள்ளோம்.
இப்படியாக இவர்களின் உணர்வு நிலையே எப்போதும் உச்சத்தில் நிலையில் இருக்கிறது. ஒன்று அளவுக்கு அதிகமான சந்தோசமும், மற்றொன்று அளவுக்கு அதிகமான துக்கமும் மட்டுமே அவர்களின் உணர்வுகளில் இருக்கிறது. நடுநிலையான, நிதானமான, சமநிலையான உணர்வுகள் என்ற வார்த்தைக்கு அவர்கள் இடமே கொடுக்கவில்லை, அப்படி இருப்பதற்கான முயற்சிக்கவும் இல்லை. அதனால், எப்பவும் உணர்ச்சி வயப்பட்ட நிலையிலேயே தங்களை வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.
இந்த உணர்வுகளை எல்லாம் கையாளத் தான் பள்ளிகளில் NSS, NCC, Sports, Eco club, Home Science club என்று எல்லாமே இருக்கும். ஆனால் தற்போதைய பள்ளிகளில் இவை எல்லாமே வருடத்திற்கு ஒரு முறை என்று செயல்படுத்துகிறார்கள். NCC யில் எல்லாம் பல விதமான உடற்பயிற்சிகளை சொல்லிக் கொடுப்பார்கள். உடல் கட்டுக் கோப்பாக இருக்கும். உடல் சார்ந்த உழைப்பே இல்லாததால் பல மாணவர்கள் ஒபிசிட்டி உடல் உபாதைகளால் பாதிக்கப் படுகின்றனர். அது போக ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே NCC இருக்கும், அதன் பின் கல்லூரியில் மட்டுமே இந்த கிளப்பை பார்க்க முடிகிறது. அடுத்து NSS வருடத்திற்கு ஒரு கேம்ப் மட்டுமே நடத்துகின்றனர்.
இப்படியாக படிப்பைத் தவிர்த்து வேறு எதுவும் செய்யாமல் இருப்பதால், இவர்களை கையாள முடியாமல் பெற்றோரும், ஆசிரியர்களும் தடுமாறுகின்றனர். சிறு,சிறு வீட்டு வேலைகள் செய்வத்ல் கூட உடல் உழைப்பை தருவதில்லை.பெற்றோர்கள் தனியாக ஆசிரியர்களிடம் வந்து பிள்ளைகளை கண்டிக்க சொல்கின்றனர். ஆசிரியர்கள் அரசாங்கத்திடம் பேசுகின்றனர். அரசாங்கமோ NGO மற்றும் காவல் துறையிடம் பேசுகின்றனர். இப்படியாக ஒவ்வொருவரும் வளரிளம் பருவ வயதினரை கை மாற்றி விடுகின்றனர். இவை எல்லாம் பொறுப்பை கை மாற்றி விடுவது மாத்திரமல்ல, பயத்தை, பதட்டத்தையும் கை மாற்றி விடுகிறார்கள்.
இப்படியான ஒரு சூழலை நாம் மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு இருக்கின்றோம். எந்த நாடு மகிழ்ச்சியாக இருக்கிறதோ, அந்த நாட்டில் கல்வியும், ஆசிரியர்களும் மிகப் பெரிய வளர்ச்சியை மாணவர்களை வைத்து கொடுக்கின்றனர். உதாரணமாக இஸ்ரேல் நாட்டில் 70% அதிகமான மாணவர்கள் ஆண்டு ஒன்றிற்கு பாடப் புத்தகங்கள் தவிர்த்து குறைந்தது வெளி புத்தகங்கள் வாசிக்கிறார்கள். இந்த வாசிப்புத் திறன் அவர்களின் கற்பனைக்கு இன்னும் புதிய வார்த்தைகளை, கருத்துக்களை அவர்களுக்கு கொடுக்கிறது.
இந்த மாதிரி நம் சமூகமும் மாற வேண்டும் என்றால், மாணவர்களின் உலகத்துக்குள் இருந்து தான் நாம் எல்லாரும் பழக ஆரம்பிக்க வேண்டும். உரையாடலை அவர்களின் மொழி உச்சரிப்பில் இருந்து தான் பேச ஆரம்பிக்க வேண்டும்.
Also read
நம் பேச்சு என்பது நம்முடைய உச்சரிப்பு ஒலி, அதன் தொனி, உடல் பாவனைகள் எல்லாம் கலந்து தான் உரையாடலை நேர்த்தியாக கொண்டு செல்ல வேண்டும். வளர்ந்த பசங்க கிட்ட என்னப்பா தம்பி, என்னமா நல்லா இருக்கியா என்று பேச ஆரம்பிப்போம். இப்படி அவரவர் உச்சரிப்பில் இருந்து பேச்சை ஆரம்பிக்கும் போது உடனடியாக அங்கு ஒரு இணக்கமான சூழல் உருவாகிவிடுகிறது. நம் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் மனம் திறந்து பேசும் வகையில் நாம் நம்மை வைத்துக் கொள்ள வேண்டும்.
இவை எல்லாவற்றையும் கடந்து மாணவர்களுக்கு நாம் மிகப் பெரிய வெளி உலகத்தை அவர்களுக்கு உருவாக்க வேண்டும். மலையாள சினிமா உலகில் எல்லாம் வளரிளம் பருவ வயதினருக்கு மட்டும் வருடத்துக்கு 4 படங்கள் எடுக்கின்றனர். நாவல்கள், சிறுகதைகள் எழுதுகின்றனர். இப்படியாக நாம் வளரிளம் பருவ வயதினருக்கு நிறைய விசயங்களை உருவாக்க வேண்டும். அது நம் கடமையும் கூட. தொடர்ந்து விவாதிப்போம்.
கட்டுரையாளர்; காயத்ரி மஹதி,
மனநல ஆலோசகர், மதுரை.
Well said ..
நன்றி,
Very good…
Well said