உளவுத் துறையும், ஊடகங்களும் பரப்பும் கட்டுக் கதைகள்!

கலவரம் செய்தது ஆதி திராவிடர்களாம்! கவுண்டர் சமூகத்திற்கு அவர்கள் விரோதிகளாம்! நடந்தவை சாதிய பழிவாங்கலாம்! இது சாதிக் கலவரமாக மாறுமாம்! இது உளவுத் துறையின் திரைகதை! இதற்கு ஊடகங்கள் பரப்புரை! இதன் மூலக்கதை யார்? விதவிதமான கட்டுக் கதைகளின் பின்னுள்ள நோக்கங்கள் என்ன?

கலவரம் நடந்த அடுத்த நாளே வட இந்திய ஆங்கில ஊடகமான தி குயிண்ட் (the quint) பள்ளியில் நடந்த கலவரத்தின் பின்னணியில் சாதிய சக்திகள் இருந்தன என காவல்துறை கூறியதாக எழுதியது!

அதையே தற்போது மேலும் விரிவாக உளவுத் துறை அறிக்கை எனச் சொல்லி பிரபல ஆங்கில பத்திரிகையான தி இந்து ஒரு செய்தியை பிரசுரித்து உள்ளது. கலவரத்தின் பின்னணியில் ஏழு கிராமங்களைச் சேர்ந்த ஆதிதிராவிட சமுதாயத்தினர் இருந்தனர் என்றும் இவர்களும் அகமுடைய சமூகத்தவரும் கவுண்டர்களுக்கு எதிராக ஒன்றுதிரண்டு இந்தக் கலவரத்தை நடத்தியதாகவும் உளவுத் துறை அறிக்கை கூறுகிறது. கவுண்டர்களுக்கு வன்னியர் ஆதரவு என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆக, சாதிக் கலவரமாக இது உருப்பெற வாய்ப்பு உள்ளதாக உளவுத் துறை கணித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது!

இதில் எதுவுமே உண்மையில்லை. ஸ்ரீமதி இறப்புக்கு நீதி கேட்டு திரண்டவர்களில் அனைத்து சமூகத்தினரும் இருந்தனர். அப்படி போராடிய பலருக்கு ஸ்ரீமதியின் சாதி கூடத் தெரியாது. இயல்பான மனித நேயமும், அறச்சீற்றமும் தான் அவர்களை ஒன்றிணைத்தது. இந்த போராட்டத்தால் சுய ஆதாயம் எதையும் யோசிதிராத மக்கள் அர்ப்பணிப்புடன் இறங்கி போராடிய போராட்டம் தான் அது என்பதில் சந்தேகம் இல்லை.

அடுத்ததாக காவல்துறை இவ்வளவு அதிக கூட்டம் கூடும் என்பதை எதிர்பார்க்காத நிலையில் திரண்ட கூட்டம் என்பது முழுப் பொய்யாகும். காவல்துறையின் கட்டமைப்பையும், தினசரிக் கடமைகளையும் நன்கு உணர்ந்தவர்கள் இதை கடுகளவும் நம்ப மாட்டார்கள். உண்மையில் தமிழக போலீசார் செய்திகளை திரட்டுவதில் கைதேர்ந்தவர்கள். அதுவும் தமிழக உளவுத் துறை போலீசார் அதி திறமைசாலிகள்! தங்கள் எல்லைக்குள் நடக்கும் அல்லது நடக்க போகும் எதுவும் அவர்களுக்கு தெரியாமல் நடக்காது! இதற்காகவே ஒவ்வொரு ஸ்டேசனிலும் ஒரு ஐ.எஸ் கான்சிடபிளும், இன்ஸ்பெக்டரும் இருப்பார்கள். கள்ளக்குறிச்சியில் மகளிர் போலீஸ் ஸ்டேசன் உள்ளிட்ட பத்து காவல் நிலையங்கள் உள்ளன. தினசரி தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் என்ன நடக்கிறது அல்லது நடக்க திட்டமிடப்படுகிறது என்பதை இவர்கள் நாள்தோறும் எழுதி உயர் நிலை அதிகாரிகளுக்கு அனுப்புவார்கள். இவர்களுக்கு உயர் நிலையில் எஸ்.பி. டி.ஐ.ஜி என பல நிலைகளிலும் உள்ள அதிகாரிகள் அதை மேற்கொண்டு செக் செய்து தமிழக உளவுத் துறை தலைமைக்கு அனுப்புவார்கள்! ஒரு போராட்டத்தின் உளவியலை கணிப்பதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள்! ஆக, மிகப் பெரும் கலவரம் உருவாக உள்ளது என்று அவர்கள் விரிவாகவே அறிக்கை தந்திருந்தனர் என்பது சர்வ உண்மை!

ஆனாலும், தேவைக்கான காவல்துறை பலம் அங்கு நிறுத்தப்படவில்லை. காலை 9 மணிக்கே அதன் தீவிரம் வெளிப்படத் தொடங்கியது. அப்போதாவது பலத்தை அதிகரிக்க முடிவெடுத்தால் கூட அடுத்த அரை மணியில் இருந்து ஒரு மணிக்குள் உளுந்தூர்பேட்டை சிறப்பு ஆயுதப் படை முகாமில் இருந்து ஒரு பெரும் போலீஸ் பட்டாளத்தை அழைத்திருக்க முடியும். பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் காவலர்களை எவ்வளவு வேண்டுமானலும் தருவித்து இருக்க முடியும். ஆனால், ஏன் தருவிக்கவில்லை? ஏன் என்றால், அப்படி தருவிக்க விருப்பமில்லை. கலவரம் படுஜோராக நடப்பதை அனுமதிப்பதாகவே அவர்கள் அணுகுமுறை இருந்தது.

பள்ளிக்குள் நுழைவதற்கான அனைத்து வாசல்களிலும் காவல்துறையினரை நிறுத்தவும் இல்லை. பின் வாசல், பக்க வாசல்களில் நுழைந்தவர்களை தடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அதே சமயம் வெறுமே கோஷங்களை மட்டும் எழுப்பி வழக்கமான முறையில் போராடியவர்களை குறிப்பிட்ட பகுதியிலேயே நிறுத்திவிட்டனர். ஆனால், வன்முறை நோக்கில் உள்ளே நுழைந்து கொண்டு இருந்தவர்களை தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். இது களத்தில் போராடிய ஒரு இளைஞர் அமைப்பினர் கண்கூடாக கண்ட அனுபவமாகும்.

குறிப்பாக பாஜகவுக்கு நெருக்கமான கவுண்டர் சமுதாய அமைப்பான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை அமைப்பின் இளைஞர்கள் ஆர்கனைசாக வந்து உள்ளே நுழைவதையும், ஒவ்வொரு வகுப்பறையாக தீயிட்டதையும் காவல்துறை தடுக்கவே இல்லை. பள்ளியின் உரிமையாளரும் இந்த சமூகத்தை சேர்ந்தவர் தான். இந்த அமைப்பினருக்கு லட்சலட்சமாக நன்கொடைகள் வழங்கி போஷிப்பவர்கள் சக்தி ரவிக்குமார் உள்ளிட்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி முதலாளிகள் தான். தங்கள் சமூகத்தவருக்கு ஒரு பிரச்சினை என்றால், அங்கே நூற்றுக்கணக்கில் ஆயுதங்களுடன் களம் காண்பது இவர்கள் வழக்கமாகும். அந்த மாதிரி அன்று வந்தவர்கள் வன்முறையை அரங்கேற்றியதோடு, அங்கு போராட வந்த இளைஞர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை எரித்துவிட்டனர். இவர்களிடம் தான் அங்கிருந்த போலீசார் எவ்வளவு நேரம்ப்பா சீக்கிரம் வெளியே போங்கப்பா..என்று நட்புடன் கேட்டுக் கொண்டனர் என்பது அங்கு களத்தில் இருந்த மக்கள் கண் கூடாக கண்ட அனுபவமாகும். கவுண்டர் படை அங்கிருந்து புறப்படும் போது, அங்கு போராட்டத்தில் இருந்த சில இளைஞர்களை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்த கலவரத்தை வரலாறு காணாத விதமாக வன்முறைக் களமாக மாற்றியதன் மூலமும்,பெரும் சேதாரத்தை உருவாக்கியதன் மூலமும் மாணவியின் மரணம் பின்னுக்கு தள்ளப்பட்டு கலவரம் தான் அதிகமான பேசுபடு பொருளாக மாறியது. இது தான் அவர்களின் விருப்பம். இழப்புகளுக்கு இன்சூரன்ஸ் வாங்கிவிடுவார்கள்! போராட்டக்காரர்களை வன்முறையாளர்களாக முத்திரை குத்தி முற்றிலுமாக மக்கள் அமைப்புகளின் கதையை முடிப்பது தான் அவர்களின் இரண்டாவது நோக்கம். அதைத் தான் காவல்துறை அதிகாரி பிரவீன்குமார் அபிநவ்  மூலமாக தற்போது நிறைவேற்றி வருகின்றனர்.

குற்றவாளிகளை தப்பிக்கவிட்டு, நிரபராதிகளை அச்சப்படுத்தும் வகையில் கள்ளக்குறீச்சியிலும், மாணவியின் சொந்த ஊரிலும் போலீஸ் பட்டாளம் குவிக்கப்பட்டு உள்ளது! இப்படி களத்தில் இருக்கும் காவல்துறைக்கு சின்னசேலம் அருகில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் இருந்து தினசரி பிரியாணி செய்து அனுப்பப்படுகிறது. இவையாவும் ஆதிக்க சக்திகள் காவல்துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து போஷிக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

கள்ளக்குறிச்சியை சேர்ந்த நாம் தமிழர் அமைப்பினர் முதல் நான்கு நாட்கள் மாணவிகளுக்கான நீதி கேட்கும் போராட்டத்தில் மக்களோடு மக்களாக ஈடுபட்டனர். ஆனால், 17 ஆம் தேதி பெரும் போராட்டத்தில் அவர்களை கலந்து கொள்ள வேண்டாம் என தலைவர் சீமான் சொல்லிவிட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

கள்ளக்குறிச்சியில் உள்ள பள்ளிகளில் கணிசமாக பக்கத்து வட மாவட்டங்களில் இருந்து தலித் மாணவர்கள் படிக்கின்றனர். குறிப்பிட்ட அளவேனும் கல்வி நிலையங்களில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை இருக்க வேண்டும் என ஏதோ ஒரு விதிமுறை இருக்கிறது போலும். அதற்காக அவர்கள் தலித் மாணவர்களை அனுமதிக்க வேண்டியுள்ளது! தனியார் கல்வி நிறுவனங்களில் 25 சதவிகித ஏழை,எளிய மாணவர்களுக்கு அரசாங்கமே கல்வி கட்டணம் கட்டி விடுகிறது. அதை வறுமையில் உழலும் தலித் மாணவர்களுக்கு விட்டுத் தருவதில் இந்த கல்வி நிறுவன முதலாளிகளுக்கு விருப்பமில்லை. அது தான் தற்போது உளவுத் துறை அறிக்கையில் தலித் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்லுறவு இல்லை என்பதாக தெரிவித்து உள்ளனர். இது உண்மைக்கு புறம்பான தகவல். நாம் விசாரித்த போது, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களில் கணிசமானவர்கள் திருநெல்வேலி, நாகர்கோவிலை சேர்ந்தவர்கள் தாம். இவர்களுக்கும், தலித் மாணவர்களுக்கும் எந்த பிரச்சினையுமில்லை என்றனர்.

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்தை இந்துத்துவ சக்திகள் காலூன்றுவதற்கான அம்சமாக ஆரம்பத்தில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது என்பதை நான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன். மீண்டும் ஆரம்பத்தில் சொன்ன விவகாரத்திற்கு வருகிறேன்! இப்படி கட்டுக் கதை பரப்படுவதற்கான காரணம், ஒருவித சாதிய பதட்டம் இருப்பதால் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் மாணவி கற்பழித்து ,கொல்லப்பட்ட உண்மையை வெளியிடுவது சமூக அமைதிக்கு குந்தகமாகிவிடும் என்ற தோற்றத்தை வலுப்படுத்தி நீதிமன்றம் இந்த விவகாரத்தில் அரசின் நெருக்கடியை புரிந்து அனுசரணை காட்ட வேண்டும் என நிர்பந்தம் தரப்படலாம்.

வேடிக்கை பார்த்து நிற்கும் போலீசார்!

போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு ஸ்ரீமதி குடும்பத்தினர் வேண்டுகோள் வைத்த போது, அதை காவல்துறை கடுமையாக எதிர்த்தது. அப்படி சேர்க்கப்படும் டாக்டரின் கருத்து வேறுபட்டு இருந்தால், அது கலவரத்திற்கு நெய்வார்க்கும் என்பதான கருத்தாக்கத்தை முன் வைத்து ஒரு நெருக்கடியை நீதிமன்றத்திற்கு காவல்துறை தந்துள்ளது. அதே போல சாதிய பதட்டம் நிலவுவதால் போஸ்ட்மார்ட்டத்தில் உண்மை வெளிவராமல் இருக்க ஒத்துழைக்க கோரி மருத்துவர்களுக்கும் நெருக்கடி தரப்படலாம். அதற்கான திட்டமிடலின் ஒரு அம்சம் தான் ஊடகங்களில் இது போன்ற செய்திகளை உளவுத்துறை பரப்புகிறது. இதன் மூலம் சாதிகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தை கெடுக்க வேண்டும். அதைக் கொண்டு நம் அரசியலை வலுப்படுத்த வேண்டும் என்ற இந்துத்துவ அரசியல் செயல்திட்டத்திற்கு வடிவம் தரப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் எப்போதுமே மிகுந்த தொலை நோக்கத்துடன் செயலாற்றும். ஐந்து வருடத்திற்கான அரசியல் திட்டங்களை உருவாக்கி அதற்கு ஏற்ப காய் நகர்த்தும். கலவரம் என்பது ஆர்.எஸ்.எஸ்சுக்கு மிகப் பிடித்தமான ஒரு செயல்திட்டம். பாஜக அண்ணாமலையால் தனக்கு தரப்படும் நெருக்கடிகளுக்கு பயந்து, இது போன்றவற்றுக்கு தமிழக உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன் தேவார்சிர்வாதம் ஒத்து போகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது. முதலமைச்சர் ஸ்டாலினோ முற்றிலும் நிர்வாகத் திரானியற்று உள்ளார்!

ஒன்று கலவத்தை உருவாக்கும். அல்லது உருவாகும் கலவரத்தை தனக்கு சாதகமாக திருப்பிவிட்டு பயன்படுத்திக் கொள்ளும். தற்போது இதைத் தான் செய்து கொண்டுள்ளது. தமிழகத்தில் 800 ஆர்.எஸ்.எஸ் முழு நேரத் தொண்டர்கள் உள்ளனர். (இதைத் தவிர பல்லாயிரம் தன் ஆர்வலர்கள் உள்ளனர்) இவர்களுக்கு அடையாள அட்டையும் கிடையாது. உறுப்பினர் பதிவேடுகளும் கிடையாது! இது ஒரு ரகசிய இயக்கம். அதனால் தான் குற்றவாளி என தங்கள் இயக்கத்தவர் பிடிபட்டால், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என சொல்லிவிடுவார்கள். ஆனால், மறைமுகமாக உதவி செய்வார்கள்! கொங்கு மண்டலத்தில் உள்ள பெரும்பாலான கல்வி நிறுவன முதலாளிகள் ஆர்.எஸ்.எஸ்சின் நலவிரும்பிகள்! அதனால், அவர்களை லேசில் கைவிட்டுவிடாது ஆர்.எஸ்.எஸ்! மத்திய அரசின் முழு அதிகார பலமும் கள்ளக் குறிச்சி மாணவியின் மரணத்தில் உள்ள உண்மையை மூடிமறைக்க பயன்படுத்தப்படுகிறது. தமிழக அரசோ, அதை தடுக்க திரானி இன்றி, துணைபோகின்றது.

மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தாள். காவல்துறை குற்றவாளிகளை காப்பாற்ற துடித்தது. பொதுமக்கள் நான்கு நாட்கள் போராடினர். ஐந்தாவது நாள் அது பெரும் கலவரமானது! இந்த நிகழ்வை சாதிக் கலவரமாக சித்தரித்து, வேறு தளத்திற்கு காய் நகர்த்துகின்றன இந்துத்துவ ஆதிக்க சக்திகள்! அதற்கு தி இந்து உள்ளிட்ட ஆங்கில இதழ்களும், சில தொலைகாட்சி ஊடகங்களும் அறிந்தோ அறியாமலோ துணை போகின்றன. உளவுத் துறையின் உள் நோக்கம் கொண்ட யூகங்களை பொது தளத்திற்கு கொண்டு போய் பரப்ப வேண்டிய அவசியம் தான் என்ன? ஆர்.எஸ்.எஸ்சின் அஜந்தாவை நிறைவேற்றவா ஊடகங்களும், உளவுத்துறையும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time