காட்டுயிர் வாரம் ஏன் கொண்டாடப்படுகிறது?

-செழியன் ஜா

காட்டுயிர் என்பது காடுகளில் மட்டுமே வாழும் உயிரினம் என்று நினைத்து இருப்போம். உண்மை அப்படி இல்லை. மனிதர்கள் வளர்க்கும் உயிரினங்களாக, மனிதர்களை நம்பி வாழும் உயிரினங்களாக இல்லாமல் மனிதர்கள் அருகிலேயே இயற்கை சூழலில் இரையைத் தேடி வாழும் உயிரினங்கள் அனைத்தும் காட்டுயிராகும் என்று காட்டுயிர் ஆய்வாளர் ஜெகநாதன் குறிப்பிடுகிறார். காடுகள் என்பது உயிரினங்கள் மிகுதியாக இருக்கும் இடம் மட்டுமே. ஏன் நம் வீட்டில் வாழும் எலியும்  ஒரு காட்டுயிராகும்.

இயற்கையாகவே உலகமே ஒரு காடுதான். பல ஆயிரம் வருடங்களாக மனிதன் காடுகளில் தான் வாழ்ந்தான். மனிதன் அதிலிருந்து பிரிந்து நகரங்களை உருவாக்கியதால் காடுகளை விலங்குகள் மட்டும் வாழும் இடமாக மாற்றிவிட்டான்.

அன்னையர் தினம், குழந்தைகள் தினம் என்பது போல் காட்டுயிர்களுக்கு என்று ஒரு தினம் ஆகும். இது ஒரு நாள் மட்டும் இல்லாமல் ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 2 முதல் 8 வரை காட்டுயிர் வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தேசிய காட்டுயிர் ஆணையம் (National Board of Wildlife) முதன் முதலாக 1972 ஆம் ஆண்டு காட்டுயிர் வார நிகழ்வை ஒருங்கிணைத்தது. அன்று முதல் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.

உண்மையில் மனிதனும் ஒரு விலங்கே. சிங்கம், புலி, சிறுத்தை, மான் என்று ஒவ்வொரு விலங்குகளுக்கும் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது போல் நமக்கு மனிதன் என்று பெயர் சூட்டிக் கொண்டோம்.  விலங்குகள் பார்வைக்கு மனிதனும் ஒரு விலங்காகவே தெரியும்..

காட்டுயிர் வாரம் கொண்டாடுவதால் என்ன நன்மை ?

 இதற்கு பதில் மிகச் சிறியது தான். காட்டுயிர்களை அழிவிலிருந்து காப்பாற்ற, பாதுகாக்க, எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அதற்கு பொது மக்களும் இதில் பங்கெடுக்க வேண்டும் என்பதே.

மனிதர்களை தவிர்த்து மற்ற உயிரினங்கள் போதுமான எண்ணிக்கையில் இன்று உலகில் வாழ்ந்து வருகிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம்.  அச்சுறுத்தல், உணவு, வாழிட அழிப்பு, கடத்தல், பொருட்கள் தயாரித்தல் என்று பல காரணங்களுக்கு  உயிரினங்களை மனிதன் அழித்து வருகிறான்.

தந்தத்திற்கு யானையும், பல் மற்றும் தோலுக்கு புலிகளையும், உணவுக்கு மான், உடும்பு, பறவைகள், குரங்கு போன்றவற்றையும் இன்னும் பல செயல்களுக்கு உயிரினங்களை அழித்து வருகிறோம்.

இவ்வளவு உயிரினங்கள் அழிவுக்கு மக்கள் என்ன செய்ய முடியும். இந்த செயல்களை செய்பவர்களுக்கு அரசாங்கம் தானே தண்டனை தரவேண்டும் ?

இவை உண்மை என்று தோன்றும். ஆனால் சிறிது யோசித்து பார்த்தால் மக்களும் இதில் எந்த அளவு ஈடுபட்டுள்ளார்கள் என்று தெரியவரும். உயிரினங்கள் அழிந்து வருகிறது என்று சொன்னால் உடனே நினைவுக்கு வருவது புலி, யானை அழிவு என்று தோன்றும். ஆனால் பல கோடி சிறு உயிரினங்கள் இந்த புவியில் உள்ளன. பெரிய உயிரினங்களான  யானை, புலி அழிப்பு போன்றவற்றில் பொது மக்கள் பங்கெடுக்கவில்லை என்றாலும் சிறு உயிரினங்கள் அழிவில் மக்களின் பெரும் பங்கு உள்ளது.

உங்கள் பகுதியில் உள்ள மரத்தை வெட்டுபவரும் அந்த மரத்தில் வாழும் பலவகை பறவைகள், பூச்சிகள். சிறு பாலூட்டிகள் அழிவுக்கு காரணமாகிறார்.  ரியல் எஸ்டேட் என்று பல வருடங்கள் ஆனாலும் வீடு கட்டி வாழ முடியாத இடங்கள் எல்லாம் அழித்து பிளாட் போட்டு விற்கிறார்கள். உதாரணம் சென்னைக்குள் வாழும் மனிதர்க்கு செங்கல்பட்டுக்கு மிக அருகில் இடம் என்று விற்பனை ஆசை காட்டி அவர் தலையில் கட்டிவிடுவார்கள். வாங்கிய நபர் எந்த காலத்திலும் அங்கு வீடு கட்டி குடியேறப்போவதில்லை. இப்படி வாங்கிய  லட்சக்கணக்கான இடங்கள்  மக்கள் குடியேறாமல் தமிழகத்தில் வீணாக இருக்கின்றன. அந்த இடங்களில் உள்ள மரங்கள், செடிகள், நீர்நிலைகளை அழித்து விடுவதால் அங்கிருந்த உயிரினங்கள் தங்கள் வாழ்விடத்தை இழக்கின்றன.

மனித உணவு விலங்குகள், பறவைகளுக்கு இரை கிடையாது. அப்படி  நம் உணவை உண்ணும் உயிரினங்கள்  உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடும். பெரும்பாலோர்   வீணான உணவுகளை வீட்டில் இருந்து சரியாக குப்பை போடும் இடத்தில் உள்ள தொட்டியில் போடாமல் கீழே வீசிவிட்டு வருவோம். மற்றும் அவற்றை சரியாக எடுத்து செல்லாமல் சாலையிலும் கொட்டிகொண்டே செல்வோம். இப்படி சிதறும் உணவை சாப்பிடும் அங்கு வாழும் உயிரினங்கள் உடலுக்கு தீங்கு ஏற்படும்.. இன்னும்  சிலர் சுற்றுலா செல்லும் இடத்தில் அங்கு வாழும் குரங்குக்கு பல உணவு பொருட்களை கொடுப்பார்கள். மனிதர்கள் பார்த்தால் குரங்குகள் வேகமாக வந்து கை நீட்டி கேட்கும். செஞ்சி மலையில் இன்னும் ஒரு படி மேலே  சென்று குரங்குகள் நம் உணவு பொட்டலத்தை பிடுங்கி செல்வத்தையும் பார்க்கலாம்.

செஞ்சி  மலைக்கு மனிதர்கள் செல்லக்கூடாது  என்ற நிலை  வந்தால் மனிதர்களை நம்பி தினமும் உணவு சாப்பிட்டு வந்த குரங்கு நிலைமை என்னவாகும். நாம் உணவு கொடுப்பதால் சுயமாக இரை தேடும் பண்பை குரங்குகள் இழந்திருக்கும். சிறிது நாளில் அவை உணவு இல்லாமல் இறக்க நேரிடலாம். ஏற்கனவே மனித உணவு  உயிரினங்களுக்கு ஒத்து கொள்ளாது. இதில் உணவு தேடும் சுபாவத்தையும் அவை இழந்தால் அந்த இனத்தின் எதிர்காலமே  கேள்விக்குறியாகிவிடும். இதனால் தான் அனைத்து சரணாலயங்களிலும் உயிரினங்களுக்கு உணவுகளை கொடுக்காதீர்கள்  என்று பலகை எழுதி மாட்டி இருப்பார்கள்.

ஆக, நாள்தோறும் பொது மக்கள் வழியாக நிறைய உயிரினங்கள் அழிவு நிலைக்கு செல்கிறது. இப்படி அழிந்து கொண்டு இருக்கும் காட்டுயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும், அவற்றின் எண்ணிக்கை உயரவேண்டும் அதற்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என்று 1972 ஆம் வருடம் முதல் காட்டுயிர் வாரம் கொண்டாடப்படுகிறது.. இந்த ஆண்டு 66வது காட்டுயிர் ஆண்டு ஆகும்.

இந்த ஒரு வாரத்தில் இந்தியா முழவுதும் காட்டுயிர் பற்றிய விழிப்புணர்வு, கூட்டங்கள், காட்டுயிர் ஓவியப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள், காட்டுயிர் பற்றிய அறிமுகங்கள், வினாடி வினா போட்டிகள், பறவை நோக்குதல் என்பதாக நடைபெறுகின்றன. இதில் அரசாங்கமும், தனியார் இயற்கை அமைப்புகளும், ஆய்வாளர்களும் ஈடுபடுகிறார்கள்.

தமிழக அரசின் வண்டலூர் உயிரியல் பூங்கா இந்த ஒரு வாரத்திற்கு மாணவ மாணவிகளுக்கு வினாடி வினா போட்டிகளை நடத்துகிறது. இதில் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்குகிறது. கலந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த இணையத்தளத்தில் சென்று பதிவு செய்துக் கொள்ளலாம்.

https://www.aazp.in/wildlife-week-quiz/

கேரள வனத்துறை ஒரு வாரம் பல வித போட்டிகள் வழியாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. ஓவியப் போட்டி, குறும்பட போட்டி, வினாடி வினா போட்டிகளில் யார் வேண்டுமென்றாலும் கலந்து கொள்ளலாம். கிழுள்ள இணைப்பு வழியாக கலந்து கொண்டு காட்டுயிர் பற்றி நிறைய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

http://forest.kerala.gov.in/index.php/dept-news?id=672

கர்நாடக வனத்துறை, ஒரு வாரம் விவசாயிகளுக்கு பந்திப்பூர் புலிகள் சரணாலாயத்தில் சபாரி ஏற்பாடு செய்து உள்ளது. மற்றும் கர்நாடக வனத்துறை 2 முதல் அக்டோபர் 8 வரை 66வது வனவிலங்கு வாரத்தை கொண்டாடுகிறது. முதலமைச்சர் திரு பி. எஸ். எடியூரப்பா அவர்கள் இந்த செய்தியை மாநிலம் முழுவதும் பகிர்ந்துள்ளார். சஞ்சய் மோகன் – தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரி (வனப்படைத் தலைவர்) வனவிலங்கு வாரத்தில், வனவிலங்கு பாதுகாப்புக்காக நாம் அனைவரும் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆந்திரப்பிரதேஷ் இந்திராகாந்தி உயிரியல் பூங்கா இணையம் வழியாக வினாடி வினா, கட்டுரை போட்டி என்று நிறைய போட்டிகளை காட்டுயிர் வாரத்தில் நடத்துகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவார்கள் கீழுள்ள இணையம் வழியாக கலந்து கொள்ளலாம்.

https://diz.ae/IlzVT

கலுவகோடி(Jerdon’s Courser) என்று மிக அரிதான பறவை வாழும் மாநிலம் ஆந்திரா ஆகும். இன்று இந்த பறவை வாழ்கிறதா என்று தெரியாமல் பறவை ஆராய்ச்சியாளர்கள் ஆந்திரா காட்டுபகுதியில் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த பறவை அழிவுக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது அதன் வாழிடம் மிகப் பெரிய அழிப்புக்காளானதாகும்!

.மகாராஷ்டிரா வனத்துறை, இணையம் வழியாக நிறைய கருத்தரங்களை காட்டுயிர் வாரத்தில் நடத்துகிறது.  இதில் காட்டுயிர் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். அதனால்  அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கிறார்கள்.

https://mahaforest.gov.in/view_event.php?FID=159&lang_eng_mar=Eng

ஒரிசா சுற்றுச்சூழல் அமைப்பு மிக சிறப்பாக காட்டுயிர் வாரத்தை கொண்டாடுகிறது. வினாடி வினா செப்டெம்பர் மாதமே நடத்தி முடித்துள்ளது. மற்றும் காட்டுயிர்களை பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் ஈடுபடவேண்டும் என்று மிக நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.  இந்த மாநிலத்தில் உள்ள சிலிகா ஏரி அதிக  உயிரினங்கள் வாழும்  பகுதியாகும்..

http://orienvis.nic.in/index1.aspx?lid=912&mid=5&langid=1&linkid=3892

 அஸாம் வனத்துறை அமைச்சர் திரு.பரிமல் சுக்லாபைடியா வழக்கமாக காட்டுயிர் வாரத்தை மிக சிறப்பாக கொண்டாடுவோம். கொரோனா காலம் என்பதால் கொஞ்சம் வித்தியாசமாக கொண்டாடுகிறோம் என்று தெரிவித்து உள்ளார். இந்த ஒரு  வாரம் முழுவதும் கட்டுரை போட்டி, ஓவிய போட்டி மற்றும் .காண்டாமிருகம் பிரசித்த பெற்ற சரணலாயம்  இருக்கும் மாநிலம் என்பதால் அவற்றின் உருவ பொம்மையை ஊர்வலமாக கொண்டு  செல்கிறார்கள்.

இப்படி நாடு முழுவதும் காட்டுயிர் வாரத்தை மக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படும் விதமாக நிறைய செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நிறைய தனியார் இயற்கை அமைப்புகளும் அந்த அந்த பகுதிகளில் காட்டுயிர் ஓவிய போட்டி, வினாடிவினா, இணையக் கருத்தரங்கம் போன்றவற்றை நடத்துகிறார்கள்..

நம்முடன் வாழந்து வரும் பல உயிரினங்கள் எதிர்காலத்திலும் நம்முடன் வாழவேண்டும். அவற்றை அழித்து மனிதர்கள் மட்டும் வாழ்வது இயற்கையின் சமன்பாட்டை கலைப்பதற்கு சமமாகும்.

மனிதன் என்றும் இயற்கை முன்பு சிறு துரும்பு மட்டுமே. என்றைக்கும் இயற்கையை வெற்றி கொள்ள முடியாது.  சுனாமி நம்  வாழிடத்தை தூக்கி வீசியது போல்  மிக சாதாரணமாக இயற்கை மனிதர்களை இந்த பூமியில் இருந்து அழித்துவிடும். மனிதனை விட மிக பெரிய விலங்கான டைனசோர்களே அழிந்த பூமி இது! மனிதன் மிகச் சிறியவனே, அவற்றுடன் ஒப்பிட்டால்! என்றைக்கும் இயற்கையுடன் இயைந்து வாழ்வோம் அனைத்து உயிரினங்களையும் .பாதுகாப்போம்.காட்டுயிர் மீது அன்பு வைப்போம். நாமும் வாழ்வோம் நம் வீட்டில் பல்லியும் வாழட்டும்.

மனிதனும் ஒரு விலங்கு தான்  என்பதை  ஆழமாக நினைவில் வைத்துக் கொண்டால் மற்ற விலங்குகள், உயிரினங்களை நம் நண்பனாக பார்ப்போம்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time