அயர்லாந்தின் அமைதிப் புறா மறைந்தது!

-ஆனந்த் பாசு

அயர்லாந்தில், கிறித்துவத்தின் இரு பெரும் பிரிவுகளான கத்தோலிக்கர்கள், பிராட்டஸ்டன்டு களிடையே இருந்த கடும் மோதலை புனித வெள்ளி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு கொண்டு வந்தது தொடங்கி, வாழ்நாள் முழுமையும் அமைதிகான முன்னெடுப்பை நிகழ்த்திய டேவிட் டிரிம்பிளின் வாழ்க்கை நினைவு கூறத்தக்கது!

சர்வதேச அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புனித வெள்ளி ஒப்பந்தம் உருவாகக் காரணமாய்த் திகழ்ந்த, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற டேவிட் டிரிம்பிள் ஜூலை 25 அன்று, 77ஆவது வயதில், காலமானார். அவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பொது வெளியில் டிரிம்பிள் இறுதியாகத் தோன்றியது, சில வாரங்களுக்கு முன், பெல்ஃபாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வில்தான். அவரது உரையில், “வடக்கு அயர்லாந்தில் புனித வெள்ளி ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவர்கள் அதிலுள்ள எல்லாவற்றையும் ஒப்புக்கொள்கிறார்கள் என்று அர்த்தமல்ல. இருப்பினும், ஒப்பந்ததின் அடிப்படை விஷயங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. மக்கள் உண்மையில் ஒப்பந்தத்தை துண்டு துண்டாக வீசி விடவில்லை” என்று தாம் காரணகர்த்தவாக விளங்கிய, தனக்கு நோபல்  பரிசு பெற்றுத் தந்த, புனித வெள்ளி ஒப்பந்தத்தைப் பற்றிய யதார்த்தத்தோடு குறிப்பிட்டுள்ளார். ஆம், புனித வெள்ளி ஒப்பந்தம், ஐக்கிய ராஜ்ஜியப் (United Kingdom) பிராந்தியத்தில்  அமைதிக்கான வலுவான அடித்தளமிட்டுள்ளது. காலத்திற்கும் அமைதிக்கான அவரது முனைப்பை அது பறை சாற்றும்.

டேவிட் டிரிம்பிள் 1944 ஆம் ஆண்டில், 15 அக்டோபர் அன்று வடக்கு அயர்லாந்தில் உள்ள பாங்கூர் எனும் இடத்தில் பிறந்தார். அங்கு பள்ளிக்கல்வி பயின்றவுடன் பெல்ஃபாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் 1968 ஆம் ஆண்டு சட்டப்படிப்பில் முதல் தரப் பட்டம் பெற்றார். அவர் 1969 ஆம் ஆண்டில், அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரானார். படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று, 80 களில் துறைத் தலைவராகவும் அரும்பணி ஆற்றினார். 1978ல் டாப்னே எலிசபெத் என்பவரை மணந்தார். அவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

வான்கார்ட் யூனியனிஸ்ட் கட்சியின் சார்பாக அவரருடைய அரசியல் பிரவேசம்  1975 ல் நிகழ்ந்தது. பின்னர், அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1990 ஆம் ஆண்டில், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இன்றளவும், அதே தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு, 1995 ல் கட்சித்தலைவராகப் பொறுப்பேற்ற, அவருடைய பொது வாழ்வில் 1996 ஆம் ஆண்டு, ஒரு முக்கிய  மைல்கல் எனலாம். அந்த ஆண்டில்தான், ஐக்கிய இராச்சியம் (United Kingdom) மற்றும் ஐரிஷ் (Irish) அரசாங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவை வழிநடத்தி இறுதியில் வெற்றிகரமாக பெல்ஃபாஸ்ட் ஒப்பந்தம் உருவாக வழி வகுத்தார்.

இந்த ஒப்பந்தம், புனித வெள்ளி தினமான, 1998 ஆம் ஆண்டு  ஏப்ரல் 10 அன்று, கையெழுத்திடப்பட்டதால்,  புனித வெள்ளி ஒப்பந்தம் என்றழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம், 22 மே 1998 அன்று, பிரச்னைக்குரிய வடக்கு அயர்லாந்தில் 71 சதவீத வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு நடைபெற்ற, புதிய வடக்கு அயர்லாந்து சட்டமன்றத் தேர்தலில், டிரிம்பிள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருடைய கட்சியும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. புனித வெள்ளி ஒப்பந்த நாயகனான டேவிட்  டிரிம்பிள், புதிய வடக்கு அயர்லாந்தின் முதல் அமைச்சராகப் பொறுப்பில் அமர்த்தப் பட்டார். இதனுடன், அயர்லாந்தின் இரு பகுதிகளையும் இணைத்து, வடக்கு-தெற்கு அயர்லாந்து கூட்டு மந்திரி சபையை நிறுவுதல், மற்றும், பிரிட்டிஷ் தீவுகளில் உள்ள இரண்டு அரசாங்கங்களையும், மற்ற நிர்வாகங்களையும் இணைத்து, பிரிட்டிஷ்-ஐரிஷ் கவுன்சிலை நிறுவுதல் ஆகிய பொறுப்புகளும், அவருக்கு  அளிக்கப்பட்டது.

பிரிட்டன், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, அயர்லாந்தை ஆண்டு வந்தது. அயர்லாந்துப் பகுதியில், கிறித்துவத்தின் இரு பெரும் பிரிவுகளான கத்தோலிக்கர்கள் மற்றும் பிராட்டஸ்டன்டுகளிடையே கடும் மோதல், முப்பதாண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தது. அவர்களுள், பெரும்பான்மை சமூகமான பிராட்டஸ்டன்டுகளிடம், பிரிட்டனின் அதிகாரம் இருந்ததால், கத்தோலிக்கர்களுக்கு இணக்கமற்ற ஆட்சியாக அது இருந்தது. (இன்றளவும், இது ஒரு விவாதப் பொருளாகவே உள்ளது) எனவே, இதை எதிர்க்கும் வண்ணம் 60 களில், உள் நாட்டு சிவில் உரிமைப் போராட்டங்கள் கத்தோலிக்கர்களால் முன்னெடுக்கப்பட்டன. வன்முறை வெடித்ததால், பிரிட்டிஷ் நிர்வாகம் ராணுவத்தை ஏவியது.

இரு தரப்பினரிடையே நிகழ்ந்த தொடர்ந்த குண்டு வெடிப்புகளாலும், கலவரங்களாலும், ஏராளமானோர் இன்னுயிர் இழந்தனர். இதைத் தொடர்ந்து, ஆயுதமேந்திய போர்க்குழுக்கள், இரு தரப்பிலும் உருவாகியது. IRA எனப்படும் ஐரிஷ் குடியரசுப் படை (Irish Republican Army) இவற்றுள் பலம் வாய்ந்ததாக இருந்தது. இந்தக் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில், இரு பக்கத்திலும் மோசமான இழப்புகளே மிஞ்சின.

இறுதியாக, 1994 ஆம் ஆண்டில், ஐரிஷ் குடியரசுப் படை முன்னெடுப்பால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, அமைதிப் பேச்சு வார்த்தைக்கான கதவுகள் திறக்கப்பட்டன. ஆங்காங்கே சிறு சிறு கலவரங்கள் நடந்தாலும், பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பின் 1998 ஆம் ஆண்டில், இரு தரப்பினரிடையே,  புனித வெள்ளி ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த வரலாற்றுப் புகழ் மிக்க ஒப்பந்தத்தில், பல்வேறு அங்கத்தினர்கள் பங்கேற்றாலும், இரு தரப்பினரையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற, UUP எனப்படும் அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சியின் (Ulster Unionist Party) சார்பாக டேவிட் டிரிம்பிள் மற்றும் SDLP எனப்படும் சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் (Social Democratic and Labour Party) சார்பாக ஜான் ஹ்யூம் இருவரும் கையெழுத்திட்டினர். இந்த அரும்பணியினை சிரமேற்கொண்டு செய்ததினால் இருவருக்கும் இணைந்த நோபல் பரிசு 1998 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற டேவிட் டிரிம்பிள், ஜான்ஹியூம்

இந்த ஒப்பந்தத்தின் மீதான முக்கிய விமர்சனம், இது அமைதி மற்றும் பிற சிக்கல்களைத் தீர்ப்பது பற்றிப் பேசினாலும, எந்த நடைமுறைக் கட்டமைப்பையும் வழங்கவில்லை என்பதுதான். மற்றுமொரு விமர்சனம் என்னவென்றால், இந்த ஒப்பந்தத்தில் அரசியல் நல்லிணக்கத்திற்கான ஏற்பாடுகள் உள்ளன; ஆனால் கலாச்சார நல்லிணக்கத்திற்கான வலுவான கூறுகள் இல்லை என்பது. இரு சமூகங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒப்பந்த விதிகளை செயல்படுத்துவதற்கான  நடைமுறை, எஞ்சியிருக்கும் முக்கிய பிரச்சனைதான். இதற்கிடையில், ‘பிரெக்சிட்’ (Brexit) எனப்படும், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதன் விளைவாக ஏற்பட்டுள்ள அயர்லாந்திற்கும், பிரிட்டனுக்குமிடையே புவிசார் பிரிவை உருவாக்கக்கூடிய சூழல், இந்த ஒப்பந்த அமுலாக்கத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

ஆயினும்கூட, வட அயர்லாந்து மக்களுக்கு சுயநிர்ணய உரிமையை வழங்கியது உள்ளிட்ட நேர்மறையான அம்சங்கள், இந்தப் பிராந்தியத்தில் அமைதியை வளர்த்தெடுக்க வழி வகுத்துள்ளது. முப்பதாண்டுகளாக நீடித்த இனரீதியான மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து, அந்தப் பிராந்தியத்தில் அமைதிக்கு வழி வகுத்ததில் இந்த ஒப்பந்தம் உருவாக அயராது பட்டுபட்ட டேவிட் டிரிம்பிளின் பங்கு அளப்பரியது.  அவர் மறைந்தாலும், அவர் விட்டுச் சென்றுள்ள அமைதி ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்ட பேச்சு வார்த்தைகளும், நடவடிக்கைகளும் அந்தப் பிராந்தியத்தில் மென்மேலும் அமைதியை நிலை நாட்ட வழி வகுக்கும்.

கட்டுரையாளர்; ஆனந்த் பாசு

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time