‘இஸ்லாமியராக இருப்பதே குற்றமாகிவிடுமா?’ என்று கேட்கப்படுகிறது. கேரளாவை சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் காப்பன் செய்தி சேகரிக்க செல்லும் போது கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைபட்டு உள்ளார். பிணையும் மறுக்கப்பட்டு வருகிறது. காரணம் என்ன?
புகழ்பெற்ற கார்டூனிஸ்ட்டான ஆர்.கே.லட்சுமணன், எப்போதோ வரைந்த படங்கள், இப்போதும் பொருத்தமானவையாக பத்திரிகைகளிலும், இணையத்திலும் உலா வந்து கொண்டு இருக்கின்றன. ஒருவரின் கழுத்தின் பின்புறம் கையை வைத்து, காவல்காரர் அழைத்துச் சென்று கொண்டிருப்பார். ‘நான் உண்மையைத்தானே சொன்னேன்’ என்பார் அவர். ‘அதனால்தான் உன்னை கைது செய்திருக்கிறேன்’ என்று பதில் அளிப்பார் அந்தக் காவல்காரர். இந்த கார்டூனானது, கடந்த 680 நாட்களாக, மதுரா சிறையில் இருக்கும், தில்லியைச் சார்ந்த பத்திரிகையாளரான சித்திக் காப்பனுக்கு பொருந்தும்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில், ஹாத்ரா என்ற மாவட்டத்தில், 19 வயதான தலித் பெண் , தாக்கூர் சமுதாயத்தைச் சார்ந்த நான்கு பேரால் பாலியல் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டாள். கொடிய வன்புணர்வினால், தண்டுவடம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 15 நாட்களுக்கு பிறகு, தில்லி மருத்துவமனையில் இறந்தாள். அவளுடைய குடும்பத்தினருக்கு கூட சொல்லாமல் அவளது உடல் இரவு 2.30 மணிக்கு உ.பி.அரசால் எரிக்கப்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்துசெய்தி சேகரிக்கச் சென்றவர்தான் சித்திக் காப்பன். கேரளாவைச் சேர்ந்த இவர், தில்லியைச் சார்ந்த பத்திரிகைகளில் ‘ப்ரிலேன்சராக’ எழுதி வந்தார்.
2020 வருடம், அக்டோபர் மாதம் 5ம் தேதி தில்லியிருந்து, ஒரு காரில் செய்தி சேகரிக்க சென்று கொண்டிருந்த இவரை, சுங்கச்சாவடியில் மடக்கி உத்திர பிரதேச காவல்துறை கைது செய்தது. இவரோடு இருந்த மேலும் மூவரும் கைது செய்யப்பட்டனர். செய்தி திரட்ட சென்ற பத்திரிகையாளரை கைது செய்து, உத்திரப் பிரதேச அரசின் புகழை கெடுக்கிற விதமாக சதி வேலை செய்ததாக பாஜக அரசு கூறுகிறது.
சித்திக் காப்பனுடன் காரில் பயணித்தது பாபுல்லர் பிரான்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் என்றும், ஆகவே, அந்த இயக்கத்தின் தொடர்பால் தான் கைது செய்யப்பட்டு உள்ளார் என்றும் காவல்துறை கூறுகிறது. அவர்மீது கொடூரமான உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு இன்றோடு 680 நாட்கள் ஆகின்றன. இடையில் அவரது உடல் நிலை மோசமான போது கூட சரியான சிகிச்சை வழங்கப்படாமல் மருத்துவமனையில் அவர் கயிற்றுடன் கட்டி வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அவருக்கு பிணை வழங்கப்பட வில்லை. இடையில் அவரது தாயாரின் மரணத்தை ஒட்டி, அவருக்கு ஐந்து நாட்கள் பிணை வழங்கப்பட்டது.
பாபுலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா என்பது தடைசெய்யப்பட்ட அமைப்பு அல்ல. சித்திக் காப்பான், கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் மட்டுமல்ல, அச் சங்கத்தின் தில்லி பிரிவின் நிர்வாகிகளில் ஒருவராக இருந்தார். “அவருக்கு பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் ஆழமான தொடர்பு இல்லை” என்று தில்லி, மற்றும் கேரள பத்திரிகையாளர் சங்கம் கூறுகிறது.
41 வயதான, சித்திக் காப்பனுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவரது மனைவி, ரெய்காநாத் காப்பன், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்து தன் கணவனின் விடுதலைக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பினராய் விஜயனும் உ.பி.முதல்வர் யோகி ஆதித்தியநாத்திற்கு கடிதம் எழுதினார். கேரளாவின் 11 எம்.பிக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இவை அவரை சிறையில் கொடுமைக்கு ஆளாக்குவதில் இருந்து சற்றே விடுவித்தது.
“ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள உபா சட்டமானது ஏற்கெனவே ஆங்கிலேய அரசு கொண்டு வந்துள்ள ரௌலட் சட்டத்திற்கு ஒப்பானது” என்கிறார் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளரான ஜான் வின்சென்ட். ” தேசத்தையே உலுக்கிய வன்புணர்வு வழக்கில், செய்தி சேகரிக்கச் செல்வது ஒரு பத்திரிகையாளர் என்கிற முறையில் இயல்பானதுதான். அதிகபட்சமாக, உபி அரசு அவரை ஹாத்ரா மாவட்டத்திற்குள் நுழையக் கூடாது என தடுத்து இருக்கலாம். ஆனால் அதற்காக உபா சட்டத்தின்கீழ் வழக்குப் போடுவது என்பதெல்லாம் கொடுஞ்செயலாகும். உபா சட்டத்தின் கீழ் ஒருவரை முதலில் ஆறுமாதம் வரையில் சிறையில் வைக்கலாம். தேவைப்பட்டால் மேலும் சிறையில் வைக்கலாம் என்ற நிலை உள்ளது. அரசாங்கங்கள் உபாவை பயன்படுத்தி தங்கள் அரசியல் எதிரிகளை பழி வாங்குகின்றன. மக்களுடைய எதிர்ப்பினால்தான், தடா, பொடா போன்ற சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. இப்போது உபா சட்டமும் அவ்வாறே தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
உலகமெங்கும் உள்ள குற்றமுறை நெறிமுறைகளின்படி காவல்துறைதான் ஒருவரை குற்றவாளி என நிரூபிக்க வேண்டும். ஆனால் ஊபா சட்டத்தின் கீழ், குற்றம் சுமத்தப்பட்டவர்தான், தாம் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும். எனவே மக்கள் சிவில் உரிமைக் கழகம் உபா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோருகிறது. ” என்றார் ஜான் வின்சென்ட் .
“இப்போது தமிழக அரசும் உபா சட்டத்தை மதுரையில் ஒரு வழக்கில் பயன்படுத்தி உள்ளது. இது மிகவும் வருத்தத்திற்கு உரிய செயலாகும். தமிழக அரசு, ஜனநாயக விரோத உபா சட்டத்தை பயன்படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும் ” என்றார் மதுரையைச் சார்ந்த வழக்கறிஞரான ஜான் வின்சென்ட் ”
சித்திக் காப்பனுக்கு 5,000 பக்க குற்றப் பத்திரிகை கொடுக்கப்பட்டுள்ளது. உ.பி அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், “சித்திக் கப்பன், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகச் செயலாளர். கேரளாவின் தேஜஸ் என்ற பத்திரிகையில் பணிபுரிவதாக அடையாள அட்டையை அவர் வைத்திருந்தார். ஆனால், அந்த பத்திரிக்கை 2018-ம் ஆண்டிலேயே நின்றுவிட்டது. தடை செய்யப்பட்ட புத்தகங்களை அவர் வைத்திருந்தார். தடை செய்யப்பட்ட சிபி அமைப்புடனும் இவருக்கு தொடர்பு இருந்துள்ளது.’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ”இதனால், வழக்கு விசாரணை முடியும்வரை பிணை கொடுக்க முடியாது” என்று உபி அரசு கூறுகிறது.
”ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் யாவுமே கொடும் தண்டனைக்கான குற்றமாகாது. இவருக்கு எந்த தீவிரவாத செயல்களிலும் தொடர்பு கிடையாது.”என்று சித்திக் காப்பான் தரப்பு வழக்கறிஞர் கூறுகிறார்.
Also read
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது, தில்லி காவல்துறை, ஜாமிய மிலியா முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனை கேரளாவில் உள்ள பத்திரிக்கைகள் பிரசுரிக்க, சித்திக் காப்பன் காரணமாக இருந்தார் என்று கூறப்படுகிறது. கேரளாவில் இருந்து வரும் ‘ஆழிமுகம்’ என்ற பத்திரிகையில் சித்திக் காப்பன் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்.
காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினரான சசிதரூர் ” பத்திரிக்கையாளர்கள் சித்திக் காப்பன், பகத் ஷா, சாஜத் குல்” ஆகியோரை விடுவிக்க வேண்டுமென பிப்ரவரி மாதத்தில் நடந்த பாராளுமன்றத்தில் கேட்டுக் கொண்டார். (மற்ற இருவரும் காஷ்மீர் வாலா என்ற பத்திரிகையின் பத்திரிகையாளர்கள் ).
செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளரை கைது செய்வதும், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக சிறையில் வைத்து இருப்பதும், அவருக்கு நீதிமன்றங்கள் பிணை வழங்காமல் வைத்திருப்பதும், நல்ல ஜனநாயகத்தின் அறிகுறியல்ல.
கட்டுரையாளர்; பீட்டர் துரைராஜ்
Leave a Reply