அரசியல் சதுரங்கத்தில் தடுமாறுகிறதா திமுக?

சாவித்திரி கண்ணன்

தமிழக அரசும், காவல் துறையும், உளவுத் துறையும் இந்துத்துவ சக்திகளின் அரசியல் அஜந்தாக்களை நிறைவேற்றத் துணை போகிறதோ..? என திகைக்க வைக்கும் சம்பவங்கள்! திசை மாறுகிறதா திராவிட மாடல்? கள்ளக்குறிச்சி சம்பவம் தொடங்கி, பிரதமர் மோடி வருகை வரை ஒரு பார்வை!

”நடப்பது திராவிட மாடல் ஆட்சியாக்கும்” என்று அது குறித்த பெருமிதங்களையும், கற்பிதங்களையும் மேடைகளில் எழுத்துக்களில் தொடர்ந்து கட்டமைத்து வந்தது திமுக! ஆனால், நடைமுறையோ அதற்கு துளியும் சம்பந்தமில்லாமல் உள்ளது.

‘விட்டுக் கொடுத்து போவது’, ‘விரோதமில்லாமல் நடந்து கொள்வது’ என்றால், அதில் தவறு காண ஒன்றுமில்லை. ஆனால், முட்டுக் கொடுத்து பாதுகாப்பது, முழுமையாக சரணடைந்து நடப்பது என்பது தான் சகிக்க முடியவில்லை.

அதிமுக ஆட்சியில் இருந்த போது, மோடி தமிழகத்திற்கு வந்த போது, ‘கோ பேக் மோடி’ என சமூக வலைத்தலங்களில் டிரெண்ட் செய்ய அனுமதிக்கப் பட்டது. அந்தச் சூழலில் அன்று அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தான் திமுக பலம் பெற்று ஆட்சி பீடம் ஏறியது. ஆட்சிக்கு வந்ததும் தற்போது சமூக வலைதளங்களில் மோடி வருகையை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை காவல்துறை ஆணையர் சொல்கிறார் என்றால், இந்த ஜனநாயக முடக்கத்தை செய்ய தமிழக காவல் துறைக்கு கட்டளை இட்டது யார்?

தமிழக அரசு நடத்தும் நிகழ்ச்சிக்கு இனி பிரதமரை அடிக்கடி அழைக்கப் போகிறீர்கள் என தெரிய வருகிறது. விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை அழைத்தது புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால், சம்பந்தமில்லாத எல்.முருகனை அழைத்து மோடி பெருமையை பேச வைக்கிறீர்களே! வாழ்த்துக்கள்!

உங்கள் அரசை தினசரி அசிங்கப்படுத்தும் அண்ணாமலையை புகழ்கிறாரே மூத்த அமைச்சர் துரைமுருகன்! இந்த அளவுக்கு ஒரு ஜென் மன நிலை உங்களுக்கு ஏற்பட்டதற்கு வாழ்த்துக்கள்!

கள்ளக்குடி கலவரத்தை இந்துத்துவ சக்திகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு போவதற்கு சகல விதத்திலும் மாநில அரசுத் தலைமையும், காவல்துறையும், உளவுத் துறையும் துணை போவதைப் பார்க்கும் போது திகைப்பாக உள்ளது.

ஒன்றை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதற்கு முன்பிருந்த அதிமுக ஆட்சி பாஜகவின் அடிமையாக இருந்தது என நம்மால் விமர்சிக்கப்பட்ட ஆட்சி! ஆனால், அப்போது கூட தமிழக போலீஸ் அன்றைய ஆட்சியாளர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகத் தான் இயங்கியது. உளவுத் துறை மாநில நிர்வாகத்திற்கு விசுவாசமாகத் தான் செயல்பட்டது.

ஆனால், இன்றைய நிலைமையோ தமிழக வரலாறு கண்டிராத ஒன்றாகும். தமிழக காவல்துறை முழுக்க, முழுக்க ஒன்றிய அரசு அதிகாரத்தின் கீழ் சென்றுவிட்டது. கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தை விசாரிக்கும் அணுகுமுறையிலும், கலவரத்தை கையாளும் விதத்திலும், மோடியின் தமிழக வருகையிலும் இந்த முடிவுக்கு தான் நாம் வரமுடிகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தது தொடங்கி மோடியின் தமிழக வருகையின் போது வழக்கத்திற்கு மாறாக கூடுதலான பாதுகாப்பு நெருக்கடிகளை மக்களுக்கு ஏற்படுத்துவது ஏன்? ஏன் இரண்டே மாத இடைவெளியில் மீண்டும் பிரதமரை தமிழகத்திற்கு அழைக்கிறதே திமுக அரசு?

இன்றைய நிகழ்ச்சியில் சிலப்பதிகாரத்தில் கண்ணகி நீதிகேட்ட வரலாற்றை நவீன நாடகமாக வடிவமைத்து அதற்கு கீழ் ‘அரசனையும் தாண்டி உண்மையே வெல்லும் என்ற உண்மையை உணர்த்திய இலக்கியம் சிலப்பதிகாரம்’ என்றும் பதிவிட்டீர்களே! அந்த நிமிடம் எந்தக் குற்றவுணர்வும் உங்கள் மனதில் எழவில்லையா? முதல்வர் ஸ்டாலின் அவர்களே! தமிழகத்தையே கொந்தளிக்க வைத்த கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உங்கள் நிலைபாட்டை கனத்த கள்ள மெளனத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு உணர்த்தியுள்ளீர்களே, நன்றி!

ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான திறமை கொண்டது தமிழக காவல்துறை. ஆனால், அது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஏனோ கவிழ்ந்து விட்டது.

விடை தேடும் வினாக்கள்;

# முதலாவதாக தனியார் பள்ளி நிர்வாகிகளின் செல்போன் ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை? அதில் 12 ந்தேதி இரவு தொடங்கி, அவர்கள் யாருக்கெல்லாம் தொடர்பு கொண்டார்கள் என ஆய்வு செய்யவில்லை? குற்றச் செயல்களை கண்டுபிடிப்பதில் செல்போனின் பங்களிப்பு காவல்துறை அறியாததா?

# அன்றைய இரவு பிறந்த நாள் விருந்து பள்ளி வளாகத்தில் நடந்த போது அதில் கலந்து கொண்டவர்கள் யார்? யார்? அதில் அரசியல்வாதிகளோ, செல்வாக்கான அதிகாரிகளோ இருந்தனரா? அது தொடர்பான சி.சிடிவி பதிவுகளை கைபற்றினீர்களா?

# அதில் மது பரிமாறப்பட்டு உள்ளதே.. மது விருந்தை பள்ளி வளாகத்தில் நடத்தலாமா? அதை பள்ளி மாணவிக்கு தரலாமா? அப்படி தந்துள்ளதை, ‘போதைப் பொருள் பயன்பாட்டிற்கு குழந்தைகளை பயன்படுத்தல்’ என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிந்த பிறகு அதை மாற்றும்படி நிர்பந்தம் தந்தது யார்?

# சந்தேகத்திற்கிடமான மரணத்தில் பிரேதத்தை காவல்துறை வருவதற்கு முன் அப்புறப் படுத்தியதாக ஏன் நிர்வாகத்தின் மீது வழக்கு பதியவில்லை. சம்பவ இடத்திற்கு ஏன் மோப்ப நாய் வரவழைக்கப்படவில்லை. மோப்ப நாய் தவிர்க்கப்பட்டதற்கான காரணம் என்ன?

# சந்தேகத்திற்கு இடமான மரணத்தில் சந்தேகத்திற்கு உரிய பள்ளி உரிமையாளரை டெல்லி செல்ல அனுமதித்தது ஏன்?

# தற்கொலை தான் என நிர்வாகம் சொன்ன கட்டுக் கதைக்கு போலீஸ் முட்டுக் கொடுத்தது ஏன்? ”பள்ளி நிர்வாகம் மீது எந்தத் தவறுமில்லை” என விசாரிக்கும் முன்பே தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நற்சான்றிதழ் வழங்கியது ஏன்?

# மிகப் பெரிய அளவில் 17 ந்தேதி போராட்டத்திற்கு மிக வீரியமான மக்கள் இயக்கங்களின் அணி திரட்டல் நடக்கிறது என உள்ளூர் உளவுத்துறை தமிழகத் தலைமைக்கு தெரிவித்த பிறகும், அதை எதிர்கொள்ளும் வகையிலான போலீஸ் பலத்தை களத்தில் நிறுத்த தவிர்க்கும் முடிவை எடுத்தற்கு என்ன காரணம்?

# களத்தில் பெருங்கூட்டமும், வன்முறையும் தலைதூக்கிய போதே அருகில் உள்ள உளுந்தூர்பேட்டை சிறப்பு ஆயுத காவல் பிரிவை அனுப்பாமல், கலவரத்தை கண்ட்ரோல் பண்ணாமல், முழுமையாக வேடிக்கை பார்க்கும்படி அன்றைய தினம் காவல்துறைக்கு கட்டளை இட்டது யார்?

# போராட்டத்திற்கு வந்த மக்களின் நூற்றுக்கணக்கான இரண்டு சக்கர வாகனங்களை தீயிட்டு கொளுத்திய தீய சக்திகள் குறித்த உண்மைகளை மறைப்பது ஏன்? அவர்களை இன்று வரை கைது செய்யாதது ஏன்? அந்த பைக்குகளை பறிகொடுத்த எளியவர்களுக்கு நீதி இல்லையா?

# களத்தில் இருந்த தாழ்த்தப்பட்ட இளைஞர்களை மாத்திரமாக தேடிக் கண்டடைந்து காவல்துறையிடம் ஒப்படைத்தது யார்? அவர்கள், ”இவர்களை கைது செய்து உள்ளே போடுங்கள்” என காவல்துறைக்கு எப்படி கட்டளையிட முடிந்தது…?

# தற்போது வரை இந்த மர்ம மரணத்தில் சந்தேகிக்கப்படும் பள்ளி உரிமையாளரின் மகன்களை விசாரணை வளையத்திற்கு கொண்டு வராதது ஏன்?

# மாணவியின் மர்ம மரணத்தின் உடற்கூராய்வில் குடும்ப தரப்பு மருத்துவரை அனுமதிக்க மறுத்து கடுமை காட்டியது ஏன்?

# கள்ளக் குறிச்சியில் காவல் பணியில் உள்ள காவலர்களுக்கு கொங்கு திருமண மண்படத்தில் இருந்து தினசரி மட்டன், சிக்கன் பிரியாணி தயார் செய்து அனுப்புபவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? அதை ஏற்பது காவல்துறைக்கு இழிவில்லையா?

# நாளும், பொழுதும் இறந்த இளம் மாணவியின் மாண்புக்கு இழுக்கு சேர்க்கும் வகையில் கட்டுக் கதைகளை கட்டவிழ்த்து விடுவதன் நோக்கம் என்ன?

இவையாவும் – இந்த 15 கேள்விகளும் – தமிழக காவல்துறையிடம், மக்கள் கேட்கத் துடிக்கும் கேள்விகளாகும்.

தமிழக உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவார்சிவாதம் பாஸ்போர்ட் மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை கிழி, கிழியென்று கிழித்து தொங்கவிட்டு வெளுத்து வாங்கினார்! டேவிடசன் ஸ்டாலினுக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அனுதினமும் பேசி வருபவர். இந்த விவகாரத்தில் அண்ணாமலை சொல்வது தவறு என்றால் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது மான நஷ்ட வழக்கே போட்டு இருக்கலாம். ஆனால், இந்த மாதிரியான எதிர்ப்பை சரிகட்டத்தானோ என்னவோ, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக உளவுத்துறை இந்துத்துவ சக்திகளின் கைப்பவையாக மாறிவிட்டது என எண்ணத் தோன்றுகிறது.

ஆர்.எஸ்.எஸ் விசுவாசியான நீதிபதி சுவாமிநாதன் குற்றம் சாட்டிய அண்ணாமலையையும் புகழ்கிறார். டேவிசனுக்கும் ”குற்றமற்றவர், நேர்மையான அதிகாரி” என்ற சான்றிதழ் வழங்குகிறார். டேவிட்சன்னு கர்த்தருருடைய ஆசீர்வாதம் கிடைக்குதோ, இல்லையோ, நீதிபதி அவர் பாவத்தை துடைத்து  ஞானஸ்தானம் செய்துவிட்டார்! குற்றவாளி என சொல்லப் பட்டவருக்கு ‘நேர்மைச் சான்றிதழ்’ என்றால், குற்றமற்றவரை குற்றவாளியாக்கியவருக்கு ‘ஜனநாயகக் காவலர்’ பட்டம்! சூப்பர் நீதிபதி தான்!

ஆக, இந்த அளவுக்கு இந்துத்துவ சக்திகளின் விருப்பத்திற்கு உரியவராக டேவிட்சன் மாறுவதற்கு தமிழக அரசும், டேவிட்சன்னும் கொடுத்த விலை மிகப் பெரியது.

இது உளவுத்துறைக்கு கேட்கப்படும் கேள்விகள்:

# மாணவி மரணத்திலும், கலவரத்திலும் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை பாதுகாத்து பொய்யான கதைகளை பரப்புவது யார் கொடுத்த அஜந்தா!

# அநீதிக்கு எதிரான மக்கள் போராட்டத்தை சாதி மோதலாக கட்டமைத்து பொய்களை பரப்பச் சொன்னது யார்?

# இந்துத்துவ சனாதன ஆதிக்கத்தை எதிர்ப்பதில் சளைக்காமல் ஈடுபட்டுள்ள விடுதலை சிறுத்தைகளை வில்லாதி வில்லன்களாக சித்தரிக்கும் அஜந்தாவை போட்டுக் கொடுத்தது யார்?

# விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தை திமுக கூட்டணியில் இருந்து விலக்கிடும் இந்த சதி திட்டத்தின் சூத்திரதாரி யார்?

மக்கள் மனதில் எழும் இந்த கேள்விகளை அலட்சியபடுத்தினால், அதற்கான விலையை எதிர்காலத்தில் திமுக தர வேண்டி இருக்கும், தப்ப முடியாது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time