உமர் காலித் : நசுக்கப்படும் உரிமையின் குரல்!

-பீட்டர் துரைராஜ்

தில்லி பல்கலைக் கழக மாணவர் உமர் காலிக் படிப்பில் கெட்டிக்காரர். கூடவே சமூக செயற்பாடு களிலும் ஆர்வமுள்ளவர். சிறந்த பேச்சாளர், வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்டவர். இவரை உபா சட்டத்தில் சிறையில் தள்ளிவிட்டது பாஜக அரசு! இவர் செய்த தவறு என்ன?

“அறிவார்ந்த, இளைஞனான உமர் காலித்,  கடந்த 20 மாதங்களாக அமைதியாக்கப்பட்டுள்ளார்” என்று, காந்தியின் பேரனான ராஜமோகன் காந்தி, ஒரு காணொளியை இந்த மாதம், அமெரிக்காவிலிருந்து வெளியிட்டுள்ளார். உபா சட்டத்தில், தில்லிச் சிறையில் அடைக்கப் பட்டுள்ள உமர் காலித்திற்கு பிணை இன்னமும் கிடைக்கவில்லை.

உமர் காலித், தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர். இவரை, தில்லி காவல்துறை  உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 2020 ஆண்டு செப்டம்பர் 13 அன்று கைது செய்தது. இன்று வரை விசாரணைக் கைதியாகவே இருக்கிறார். இவரது பிணை தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு, தற்போது வழக்கு தில்லி உயர்நீதி மன்ற விசாரணையில் உள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தம் நாடு முழுவதும் பெரும் போராட்டங்களுக்கு வித்திட்டது. சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களின் குடியுரிமை பறிக்கப்படும் அபாயம் ஏற்படும் எனக்கூறி அனைத்து மதத்தினர், மாணவர்கள், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாணவர்களை அணி திரட்டினார், வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கினார். ஆகவே, இவருக்கு கலவரத்திலும் சம்பந்தம் இருக்கிறது, என்பதாக உமர்காலிக் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.

குடும்பத்தாருடன் உமர் காலித்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து புதுதில்லியில், ஷாஹீன் பாக் பகுதியில் நடைபெற்ற தொடர் போராட்டத்தின் போது, இந்துத்துவர்கள் பிப்ரவரி  2020 ல் கலவரத்தை ஏற்படுத்தினர். அப்போது போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள், பெண்கள், இஸ்லாமியர்கள் மீது சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதில் 53 பேர் கொல்லப்பட்டனர். 700 பேர் படுகாயமடைந்தனர். வீடுகள், மசூதிகள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்தக் கலவரம் ஏற்பட உமர் காலித் காரணமாக இருந்தார்; வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி, கலவரத்தை தூண்டினார் என்று காவல்துறை குற்றம் சாட்டுகிறது. ஆனால், பாதிப்பை ஏற்படுத்தும் சட்டத்தை விலக்கக் கோரி ஜனநாயக ரீதியாகத் தான் உமர்காலித் போராடினார்.

உமர் காலித் விடுதலையை வலியுறுத்தி அமெரிக்காவின் சிந்தனையாளரான நோம் சோஸ்கி ” இந்தியாவின் பாரம்பரியமான, மதச்சார்பற்ற ஜனநாயகத்தை நொறுக்குக்கின்ற முயற்சியாக இதுபோன்ற கைதுகள் அமைந்துள்ளன” என தெரிவித்துள்ளார்.

விக்கி மகேசரி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்

இது குறித்து தில்லியைச் சார்ந்த,  அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் பொதுச் செயலாளரான சார்ந்த விக்கி மகேசரியிடம் கேட்டபோது ” வேறுபட்ட அரசியல் கொள்கை ஒருவருக்கு இருக்கலாம். அதற்காக சிறையில் அடைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.  இந்த ஆட்சியில், சிறையில் இருக்க வேண்டியவர்கள் வெளியில் இருக்கிறார்கள். பாஜகவைச் சேர்ந்த நுபுர் சர்மாவின் பேச்சினால், அரபு நாடுகளிடம் இந்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை உருவானது. அந்த நுபு சர்மா கைது செய்யப்படவில்லை. மக்களின் உணவு, சுகாதாரம் போன்ற அடிப்படை உரிமைகளுக்காக போராடுபவர்கள் சிறையில் இருக்கிறார்கள். பாஜகவின் பாசிசக்  குணம் இது.  தீஸ்தா செதால்வாட் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்டேன் சாமி சிறையிலேயே இறந்து போனார். வரவர ராவ், ரோனா வில்சன், சுரேந்திர காட்லிங், உமர் காலித் போன்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் குரல் வலுப்பெற்று வருகிறது.. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஒரு இளைஞனின் வளமான  ஆண்டுகளை வீணடிக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது” என்றார்.

ஜவகர்லால் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்வுக்காக, தேசத் துரோக வழக்கில் கன்னையா குமார், அனிர்பான் பட்டாச்சாரியா உள்ளிட்டவர்களோடு உமர் காலித் கைது செய்யப்பட்டு,  2016 ம் ஆண்டு சில காலம் சிறையில் இருந்தார். பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் 2013 ல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு, காஷ்மீருக்கு தனி நாடு கோரிய, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட (1984) மக்பூல் பட் ஆகியோருக்கு ஆதரவாக கூட்டம் நடத்தியதற்கும் தண்டிக்கப்பட்டு உள்ளார். இறுதியாக சி.ஏ.ஏவிற்கு எதிராக போராடியதால் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் உமர் காலித், காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் இஷ்ரத் ஜஹான், ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் உள்ளிட்ட பலரை டெல்லி காவல்துறை தேசதுரோக வழக்கிலும், UAPA சட்டத்தின் கீழும் கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைத்தது பாஜக அரசு.


இதன் தொடர்ச்சியாக நடந்த விசாரணையில், ஒரு பருவம்  (செமஸ்டர்) வீணாகும் வகையில், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்  உமர்காலித்திற்கு தண்டனை வழங்கியது. ஆய்வேட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என பல்கலைக்கழகம் முதலில் கூறியது. பின்னர், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தனது ஆய்வேட்டை (PhD thesis)  சமர்ப்பித்தார்.

உமர் காலித் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். மகாராஷ்டிரா,  பீமா கொரேகனில், தலித் தலைவரான  ஜிக்னேஷ் மேவானியோடு சேர்ந்து ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாக காவல்துறை கூறியது.ஆதிக்க சக்திகளுக்கு எதிரான அவரது பேச்சுக்களால் 2008 ல் அவரை கொலை செய்ய முயற்சியும்  நடந்தது.

இப்போது, வட கிழக்கு தில்லியில் கலவரம் நடக்கச் சதி செய்தார் என்று கூறுகிறார்கள்.  இந்தக் கலவரங்களில் குற்றம் சாட்டப்பட்ட, ஆம் ஆத்மி கட்சியில் இருந்த  மன்ற உறுப்பினரான, தாகிர் ஹுசைனை சந்தித்தையே குற்றமாக  காவல்துறை கூறுகிறது. இவருடைய பேச்சுகளுக்கு ஆதாரமாக,  ரிபபிளிக் டிவி, நியூஸ் 18 போன்றவைகளின் வெட்டப்பட்ட (edited) காணொளித் தொகுப்புகள் தரப்பட்டன . அவைகளை பாஜகவைச் சேர்ந்தவர்கள் தந்ததாகவும் சொல்லப்படுகிறது. பிணை விசாரணையின் போது வழக்கின் விபரங்களை முழுமையாக விசாரிக்க வேண்டியதில்லை என சொல்லப்பட்டு ஒரு வரியில் இவரது பிணை  நிராகரிக்கப்பட்டது.. ஆனால், தீர்ப்பை அறிவிக்கவே தில்லி நீதி மன்றம் எட்டு மாதம் தாமதித்தது.

“ஆர்எஸ்எஸ், இந்து மகாசபா போன்ற அமைப்புகள் வெள்ளைக்கார அரசாங்கத்தின் முகவர்களாக செயல்பட்டனர்” என்று உமர் காலித் பேசினார் என்பது  பெரும் குற்றமாக்கப்படுகிறது. ஆனால், இது போன்ற பேச்சுக்களுக்கு தேச விரோத குற்றத்தைச் சுமத்த முடியுமா ?”   என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

எந்தக் குற்றச் செயலையும் காரணம் காட்டமுடியாமல் விசாரணைக் கைதியாகவே, இரண்டு ஆண்டுகளாக வைத்திருப்பது என்பது குற்றவியல் சட்ட நெறி முறைகளுக்கு எதிரானது. ஒருவருடைய சுயேச்சையான செயல்பாட்டை தடுப்பது  என்பது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கே விரோதமானது. உபா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், மக்கள் சிவில் உரிமைக் கழகம் போன்ற அமைப்புகளும் கோரிக்கை எழுப்பி  வருகின்றன. ஏனெனில், உபா சட்டத்தின் கீழ்  விசாரணை இல்லாமலேயே ஒருவரை நீண்ட காலம் சிறையில் வைக்க முடியும். காவல் அதிகாரியிடம் கொடுக்கும் வாக்குமூலத்தை வைத்தே ஒருவரைத் தண்டிக்க முடியும்.

அமெரிக்காவின், இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும்   ராஜ்மோகன் காந்தி,  வெளியிட்டுள்ள காணொளியில் ” உலகமெங்கும் மேலாதிக்கத்திற்கும் சமத்துவத்திற்கும் இடையே போராட்டம் நடந்து வருகிறது. இந்தியா, இந்தப் போராட்டங்களின் மையமாக இருக்கிறது. உமர் காலித் போல, ஆயிரக்கணக்கானோர் சிறைகளில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களை விடுவிப்பதை, தாமதிக்கும் ஒவ்வொரு நாளும், இந்தியாவின் ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும். இது போன்ற கைதுகளால் இந்தியாவின் நற்பெயருக்கு  களங்கம் உண்டாகும் ” என்று  தெரிவித்துள்ளார். உமர் காலித் இன்னும் எவ்வளவு காலம் சிறையில் இருக்க நேரிடுமோ…!

கட்டுரையாளர்; பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time