நீதித்துறை சந்திக்கும் சவால்கள் என்னென்ன..?

- ச.அருணாசலம்

நமது நீதிமன்றங்களில் சுமார் 5 கோடி 50 லட்சத்திற்கு மேற்பட்ட வழக்குகள் தேங்கியுள்ளன! பாட்டன் போட்ட வழக்கை பேரன் நடத்தும் நிலைமைகள்! வழக்கிற்காக வாழ்க்கையை தொலைத்தவர்கள் அதிகம்! ஏன் வழக்குகள் தேங்கின்றன?  நீதித் துறைக்குள் நிலவும் சிக்கல்கள் என்ன?

விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகு செம்மையான அரசியல் சாசனத்தை பெற்ற இந்திய மக்கள் 1950 ஆண்டு முதல் இந்திய உச்ச நீதி மன்றத்தின் தலைமையில் இந்திய நீதி துறை செயல்பட தொடங்கியதை கவனித்து வருகிறார்கள். எத்தனையோ வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கியது என்றும், இந்திய நீதிபதிகளின் நியாயச் செயல்பாடு உலகிற்கே புதிய பரிணாமத்தை காட்டியுள்ளது என்றும் நாம் பெருமிதம் கொள்ளலாம், தவறில்லை.

ஆனால், பாமர இந்தியனுக்கு – ஒரு சராசரி குடிமகனுக்கு – தகுந்த நேரத்தில் இந்திய நாட்டில் நியாயம் கிடைக்கிறதா என்றால், அதற்கு பதில் சன்னமாகவே ஒலிக்கும் . காரணம், மோசமாக நடக்கும் நீதி பரிபாலனம்தான்.

தேங்கி கிடக்கும் வழக்குகள்:

நீதி மன்றத்திற்கு சென்றால் நீதி கிடைக்கும் என்பதைவிட வாழ்நாள் தான் விரயமாகும் என்ற சாதாரண இந்தியக் குடிமகனின் புரிதலை இன்றுவரை மாற்றியமைக்க எவராலும் முடியவில்லை.

நாடாளுமன்ற மேலவையில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றிய  உறுப்பினரின் கேள்விக்கு

சட்டம் மற்றும் நீதி துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜ்ஜு 21-07-2022 அன்று நிலுவையிலுள்ள வழக்குகளை கீழ்வருமாறு பட்டியலிட்டுள்ளார் :

உச்ச நீதிமன்றத்தில் உள்ள நிலுவை வழக்குகள்  (01-07-2022 வரை)     – 72,062

உயர் நீதி மன்றங்களில் உள்ள நிலுவை வழக்கு.  (15-07-2022 வரை)        – 59,45,709

மாவட்ட மற்றும் கீழமர்வு நீதிமன்றங்களில் உள்ள நிலுவை (15-07-2022 வரை)  – 4,19,79,353

ஏன் இந்த நிலுவை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது?

நீதி மன்ற நடைமுறைகள் மக்களிடமிருந்து மொழிவாரியாக அந்நியப்பட்டும், கடினமான , நேரத்தை வீண்டிக்கும் கவைக்குதவாத வழிமுறைகளை உயர்த்திப் பிடிப்பது ஒரு காரணம்; மற்றொன்று வாய்தா வழக்குகள் – வழக்குகளை இழுத்தடித்து தீர்ப்புகளை தள்ளிப் போடுவதன் மூலம் நீதியை மறுப்பது!  இம்முறை வசதி படைத்தவனுக்கே வழி விடுவதால் இதை  Luxurious litigation  என்று நீதிமன்ற வளாகங்களில் குறிப்பிடுவர்.

இது தவிர மற்றொரு முக்கிய காரணமாக நீதியரசர்கள் குறிப்பிடுவது, பற்றாக்குறை மற்றும் வேலைப்பளு என்ற காரணம்தான்.

நீதிபதிகள் எண்ணிக்கை

25 உயர் நீதி மன்றங்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 400 நீதிபதிகளது இடம் நிரப்பப்படாமல் காலியாக ( vacant)  உள்ளது என்றும்,

மாவட்டம் மற்றும் கீழமர்வு நீதி மன்றங்களில் உள்ள நீதிபதி பணியிடங்களில் 5,000 க்கும் அதிகமான இடங்கள் காலியாக நிரப்ப படாமல் உள்ளன என்றும் ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

இது தவிர சிறப்பு நீதி மன்றங்கள், விரைவு நீதி மன்றங்கள் சி பி ஐ மற்றும் என் ஐ ஏ நீதிமன்றங்களில் உள்ள காலி பணியிடங்கள் நீதி வழங்கும் முறையை முற்றிலுமாக சிதைக்கிறது.

இடப்பற்றாக்குறை (கட்டிடம் மற்றும் இருக்கை அதையொட்டிய வசதிகளின்மை) மற்றும் ஆள் பற்றாக்குறை நீதி பரிபாலனத்தை- நீதி வழங்கும் நடைமுறையை – முடக்குகிறது என்பதும் உண்மை.

இவற்றால் நீதிமன்ற நடவடிக்கைகள் தாமதபடுத்தப்பட்டு நீதிபதிகளின் வேலைப்பளு கூட்டப்பட்டு நீதியரசர்கள் ‘இயல்பாக’ பணியாற்ற முடியாமல் தவிக்கின்றனர் என்பது பிரச்சினையின் ஒரு பக்கம் மட்டுமே. மறுபக்கம் இத்தகைய பணி முடக்கத்தால் நீதி மறுக்கப்பட்டு இன்னலுக்கு உள்ளாகும் மக்களை – வழக்கில் பிணைக்கப்பட்ட சாதாரண மக்களை – சற்று எண்ணிப்பாருங்கள்.

வழக்கில் பிணைக்கப்பட்ட மக்களின் துயரம் இதனால் பன்மடங்காக பெருகும் என்றால்,

இவ்வழக்குகளின் அடிப்படையில் சிறையிலடைக்கப்பட்ட நபர்களின் நிலையை சற்றே எண்ணிப்பாருங்கள்.

UNDERTRIALS – விசாரணையின்றி அடைக்கப்பட்டவர்கள்!

சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோர் இந்தியாவில் உள்ள சிறை கைதிகளில் 76% சதவிகித நபர்கள் விசாரணையின்றி சந்தேகத்தின் அல்லது அனுமானத்தின் அடிப்படையில் சிறையிலடைக்கப்பட்டவர்களே என்று தேசிய குற்ற ஆவணக்குழும்ம் – National Crime Records Bureau NCRB-  கூறுகிறது.

இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் நான்கு பேர்களில் மூன்று பேர் விசாரணையின்றி அடைக்க பட்டுள்ள கைதிகளாவர் . மொத்தமுள்ள 4,88,511 கைதிகளில் 3,71,848 கைதிகள்-அதாவது 76.1% நபர்கள் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டோர், மீதமுள்ள 1,12,589 பேர் அதாவது 23% பேர் தண்டிக்கப்பட்வர்கள் ஆவர் . இதெல்லாம் NCRB ன் 2020 ம் ஆண்டு புள்ளிவிவரம்.

இதில் – விசாரணையின்றி அடைக்கப்பட்ட கைதிகளில் முஸ்லீம்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரான எஸ்.சி, மற்றும் எஸ்.டி பிரிவினரும், சீக்கியர்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அதாவது, இந்திய (2011)  மக்கள் தொகையில் அவர்களது பங்கை காட்டிலும், கைதிகளில் அவர்கள் பங்கு அதிகமுள்ளதாக NCRB  புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

உதாரணமாக இந்திய மக்கள் தொகையில் 14.2% உள்ள முஸ்லீம் மதப்பிரிவு மக்கள் விசாரணையின்றி அடைபட்டுள்ள கைதிகளில் 19.6% உள்ளனர்.

இந்திய மக்கள் தொகையில்1.7% கொண்ட சீக்கியர், கைதிகள் தொகையில் 3.7 சதவிகிதம் உள்ளனர்!

மக்கள் தொகையில் 16.6 சதவிகிதம் உள்ள தலித் சமுதாய மக்கள் அடைபட்டுள்ள கைதிகளில் 20.9% சதவிகிதமாக உள்ளனர் .

இந்த புள்ளிவிவரங்களில் இருந்து தாமதிக்கப்பட்ட நீதி யாருக்கு அதிகம்  மறுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவரும். இத்தகைய நீதி மறுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2015ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் 16 சதவிகிதம் அதிகரித்துக் கொண்டு வந்துள்ளது, குறிப்பாக 2019 – 2021 காலங்களில் அந்த அதிகரிப்பு 19% சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை பெருகி வருவதற்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை குறுகி காலியிடங்கள்-  vacant positions in judicial roll- பெருகி வருவதற்கும் சம்பந்தமுள்ளது.

இதற்கு காரணமாக ஆட்சி நிர்வாகத்தை ( Executive) நீதித்துறையை சார்ந்தோறும் பொது மக்களும் குற்றஞ்சாட்டும் அதே வேளையில் ஆளுங்கட்சி அமைச்சர்கள் நிலுவை வழக்குகளுக்கு நீதித்துறையினரை குறை கூறுவதும் நடந்து வருகிறது.

நாட்டின் வளர்ச்சி என்பது வெறும் பொருள் உற்பத்தியின் முன்னேற்றத்தால் தீர்மானிக்கப் படுவதில்லை, நாட்டு மக்களின் வாழும் முறையால் அது தீர்மானிக்கப்படுகிறது. அவர்கள் தங்களுகிடையேயான மனித மற்றும் பொருளுறவுகளை எங்கனம் (நாகரீகமாக) கையாளுகிறார்கள் என்பதை பொறுத்தே வாழும் முறை அமையும் . அதற்கான அடிப்படை தேவை செம்மையான சட்டமும், திறமையான நியாயமான நீதி முறையும் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.

கொலிஜியம் vs  ஆட்சியாளர்கள்

நீதிபதிகளை நியமனம் செய்வதும் மாறுதல் செய்வதும் உச்ச நீதி மன்றத்தின் கொலீஜியம்.

Collegium கொடுக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் நடைபெறும் என்பது அங்கீகரிக்கப்பட்ட முறையாக இருந்தாலும் அதை முடக்கி ஆளும் தரப்பு தனது முடிவுகளை அமல் படுத்தி வருவதை நாம் பார்த்து வருகிறோம் .கொலீஜியத்தின் பரிந்துரைக்குப் பின்னரும் நீதிபதி அகில் குரேஷிக்கு உச்ச நீதி மன்ற நீதிபதி நியமனம் மறுக்கப்படுவதும், அவரது சீனியரிட்டி சிதைக்கப்படுவதும் சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி பானர்ஜி இரவோடிரவாக மேகாலயாவிற்கு தூக்கியடிக்கப்படுவதும் ஒன்றிய அரசு (Executive)  கொலீஜியத்தின் பரிந்துரைகளை புறந்தள்ளி தனக்கு வேண்டியவர்களை நியமனம் செய்கிறது, மாற்றுகிறது பதவி உயர்வு அளிக்கிறது என்பதற்கான ஒரு உதாரணம் ஆகும்! இடமும் நேரமும் கருதி மற்ற உதாரணங்களை -அத்துமீறல்களை – இங்கு பட்டியலிடவில்லை.

இத்தகைய ஒன்றிய அரசின் போக்கிற்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் இன்றைய உச்ச நீதிபதிகளும், கொலீஜியமும் உள்ளது என்பதை மூத்த வழக்கறிஞர்களும் அறிந்தே எதிர்ப்புக்குரல் கொடுக்கின்றனர்.

கொலீஜியத்தின் அமைப்பு பலவீனமும், அதன் வெளிப்படை தன்மையில்லாத செயல்பாடும் முக்கிய காரணங்கள் என்று அனைவரும் அறிவர். நீதித்துறையில் உள்ள ஊழலும் அரசின் கையிலுள்ள அதிகாரமும் இதை ஆளுபவர்களின் எண்ணத்திற்கேற்ப வளைக்க பெரிதும் உதவுகிறது. இதனால் பாதிக்கப்படுவது இந்திய மக்களே.

பாதிக்கப்பட்ட பொதுமக்களின் கடைசி புகலிடமாக கருதப்படும் உச்ச நீதி மன்றம் தனது கடமையில் இருந்து நழுவுவதையும் கடந்த சில ஆண்டுகளில் கண்ணுற்றோம், இன்றும் காண்கிறோம்.

தேர்தல் நன்கொடைபத்திர வழக்கு, ஆதார் வழக்கு, அரசியல் பிரிவு 370 ரத்து, இந்திய குடியுரிமை திருத்த சட்டம் எதிர்த்த வழக்குகளை உச்ச நீதி மன்றம் உரிய விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் இழுத்தடிப்பது உண்மையில் இந்திய மக்களுக்கு மறுக்கப்படும் நீதிதானே! இதனால் பயன்பெறுவது  Luxurious litigant  ஒன்றிய அரசுதான் என்பதை மறுக்கவியலுமா?

ஆள்கொணர்வு மனு மீதான விசாரணையை தள்ளிப்போட்ட உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடு உலகெங்கிலும் உள்ள நியாயவான்களின் கண்டனத்தை பெற்றதை மறக்கவியலுமா?

தாமதப்படுத்தப்படும் நீதி, நிர்வாக மற்றும் நீதித் துறை மோதலாலும் ஏற்படுகிறது, கள்ளத்தனமான கூட்டுறவாலும் ஏற்படுகிறது, நீதி மறுக்கப்படுகிறது. நிர்வாகமும், நீதித்துறையும் தங்களது அதிகார எல்லைகளை புரிந்து கொண்டு separation of powers  என்ற கேட்பாட்டில் நம்பிக்கை வைத்து செயல்படுவது என்பது இலக்கு மட்டுமல்ல, அன்றாட தேவை என்பதை உணர்ந்து காந்தியும், நேருவும் அம்பேத்கரும் இந்த அரசியல் அமைப்பையும் சட்டத்தையும் இந்திய மக்களுக்கு அளித்துள்ளனர் . அத்தகைய நம்பிக்கையான இலட்சியமான சூழலில் நீதித்துறையில் புதிய இருப்பிடங்களும் வசதிகளும் ஏற்படுத்துவது, நீதி துறை ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவது, தேங்கியுள்ள வழக்குகளை விடுவிப்பது போன்ற சீர்திருத்தங்கள் மூலம் புனரமைக்கலாம் , நீதி வழங்கலை துரிதப்படுத்தலாம் .

மத்தியஸ்தம் மற்றும் சமரச நடவடிக்கைகள் மூலம் தேங்கியுள்ள வழக்குகளை குறைக்க முயற்சிக்கலாம். இவையெல்லாம் சொத்து மற்றும் பணம் சம்பந்தப்பட்ட சிவில் வழக்குகளுக்கு உதவலாம்

ஆனால், உரிமைகள் – தனி மனித உரிமைகள், மனித உரிமைகள், மக்கள் தொகுதியினரின் உரிமைகள் – சம்பந்தபட்ட பிணக்குகளில் உதவாது.

வேண்டிய கட்டிடங்களும், இருப்பிடங்களும், வசதிகளும்,வேண்டிய நீதிபதிகளும் இப்பிரச்சினையின் ஆணிவேரை அகற்ற போவதில்லை.

இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கூறுகளான மனித உரிமை, பத்திரிக்கை சுதந்திரம், தடைகளற்ற நாடாளுமன்றம், நடுநிலையான காவல் துறை, சுயாட்சி உள்ள அமைப்புகள்,சுய தன்மை இழக்காத மாநிலங்கள் , பாரபட்சமற்ற தேர்தல் நடைமுறைகள் ,களங்கள்

மதக்கலப்பில்லாத அரசியல் ஆகியவற்றிற்கு வேட்டு வைத்துள்ள சட்ட திருத்தங்களை, நடைமுறை மாற்றங்களை கேள்வி கேட்காத ஏன் விசாரணைக்கு எடுக்காத நீதிமன்றங்களின் செயல் நீதியை தாமதப்படுத்துகிறது, மறுதலிக்கிறது.

நீதிமன்றங்களில் முக்கியமான வழக்காடுபவராக, நீதிமன்றங்களின் நேரத்தை அதிகம் ஈர்க்கும் அமைப்பாக Important and influential litigant  ஆக இருப்பது அரசுகள் தான்(ஒன்றியம் மற்றும் மாநில அரசுகள்)   நீதிபதிகள் அரசிலிருந்து விலகி சுதந்திரமாக செயல்படவேண்டியது இதன் பொருட்டாவது மிக மிக அவசியமாகிறது.

எனவே Separation of powers என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நீதித்துறை செயல்படுவது தாமதிக்கபடும் நீதியை துரிதப்படுத்துவதற்கான முதற்படி எனலாம் .

மற்ற சீர்திருத்தங்கள் பின்தொடர்ந்தால் நீதி தாமதிக்கப்படாது என இறும்பூதெய்தலாம்.

நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் நம்மை பயமுறுத்தவில்லை,

நிலுவையில் உள்ள சில வழக்குகளின் முக்கியத்துவமும், உள்ளீடுகளும் இந்திய மக்கள் அனைவரையும் பெரிதும் பாதிக்கிறது.

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time