கணவன் மனைவிக்குள் ஊடாடும் ஈகோ யுத்தம்!

-பீட்டர் துரைராஜ்

கணவன், மனைவி இருவரும் வழக்கறிஞர்கள்! ஒரு பாலியல் வழக்கில் பெண்ணுக்கு கணவனும், ஆணுக்கு மனைவியும் ஆஜராகி வாதாடுகிறார்கள்! யார் வெற்றி பெறுகிறார்? இதனால், தொழில் முறையில் எதிர்ரெதிர் நிலையில் நிற்கும் இருவருக்குமான குடும்ப உறவில் ஏற்படும் விரிசல்கள் என்னானது?

நீதிமன்றத்தில் நடைபெறும் கதை என்று புரிதலுக்காகச் சொல்லலாம். இந்தப் படத்தில் எபினும், மாதவியும் திருமணமாகாத இளம் வழக்கறிஞர்கள். எபின், சுயேச்சையாக தொழில் நடத்த ஒரு அலுவலகம் போட நினைக்கையில் அவனுக்கு அரசாங்க வழக்கறிஞர் பதவி கிடைக்கிறது. டொவினோ தாமஸ், எபினாக நடித்துள்ளார்.

கணவன் குற்றவாளியாக இருக்க, மனைவி  நீதிமன்றத்தில்  கொலை வழக்கில் வாதாடுவாள். கலைஞரின் வசனத்தில், சிவக்குமார், ராதிகா, லட்சுமி நடித்த ‘பாசப்பறவைகள்’ படம் வசூலில் அப்போது (1988) சக்கை போடு போட்டது. ஏறக்குறைய இப்படி ஒரு படம்தான் கீர்த்தி சுரேஷ், டொவினோ தாமஸ் நடிப்பில், தற்போது ஓடிக்கொண்டிருக்கும்  ‘வாஷி’ (Vashi) என்ற மலையாளப்படம். வாஷி என்பதற்கு பிடிவாதம் என்று பொருள்.

வழக்கறிஞர் மாதவியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மாதவி ஒருவரிடம் ஜூனியராக இருக்கிறார். ஒரு வழக்கில் அவளுக்கும், அவளது சீனியருக்கும் வாக்குவாதம் வர, வெளியேறி தனியே அலுவகம் போட வேண்டிய கட்டாயம் அவளுக்கும் வருகிறது. எனவே  எபினும், மாதவியும் ஒரு அலுவலகத்தை பிடித்து தொழில் செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

இருவரும் மணமாகாதவர்கள். மதம் வேறாக இருந்தாலும் இவர்களின் போக்கைப் பார்த்த பெற்றோர்கள் இருவரும் காதலர்கள் என்ற முடிவுக்கு அவர்களாகவே வந்து விடுகிறார்கள். இருவரின் பாத்திரங்களும் கன கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.  தான் சொல்ல வேண்டியதை , எபின் தயங்கி, தயங்கிச் சொல்கிறான் என்றால், மாதவி,  தான் சொல்ல நினைப்பதை பளிச்சென்று சொல்கிறாள். இருவருடைய கதாப்பாத்திரங்களும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளன. ஒப்பீட்டளவில், கீர்த்தி சுரேஷ், ஓரடி முன்னே நிற்கிறாள். எந்த சடங்குப்படி திருமணம் செய்வது ! காலையில் கோவிலில் சடங்கு, மதியம் பதிவு அலுவலகத்தில் திருமணம், மாலையில் தேவாலயத்தில் சடங்கு என திருமணம் ஒரு வழியாக முடிவடைகிறது.

இருவரும் இனி  மேல்தான் தனியாக வழக்காடி, தாங்கள் யாரென்று நிரூபிக்க வேண்டும். அதைப் பொறுத்துதான் அவர்களின் அடுத்தக்கட்ட  முன்னேற்றம் இருக்கும்.

இப்படி இருக்கையில் இவர்களுக்கு ஒரு வழக்கு வருகிறது. ஒரு  இளைஞன், திருமணம் செய்யும் எண்ணத்தை ஏற்படுத்தி, தன்னோடு பணிபுரியும் பெண்ணோடு உடலுறவு கொண்டான் என்ற அடிப்படையில் கைது செய்யப்படுகிறான். இந்த இளைஞனின் நீண்ட கால குடும்ப நண்பர் என்ற வகையில், இந்த இளைஞன் சார்பாக மாதவி வாதாடுகிறாள்.

அதே வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக எபின் அரசாங்க வழக்கறிஞர் என்ற முறையில் வாதாடுகிறான். இதுதான் கதை. கிட்டத்தட்ட இந்திப்படமான செக்‌ஷன் 375 போல விவாதங்கள் வருகின்றன. நீதிமன்ற காட்சிகள் இயல்பாக வருகின்றன. வழக்கறிஞர்கள் புழங்குகின்ற வாய்தா, வாதம், குறுக்கு விசாரணை என எல்லாம் வருகின்றன. இதற்கு திரைக்கரை எழுதி, இயக்கிய விஷ்ணு ராகவிற்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

வழக்கின் போக்கில் இருவருக்கும் மனஸ்தாபம் வருகிறது. அது வீட்டிலும், படுக்கையறையிலும் பிரதிபலிக்கிறது. போதாக்குறைக்கு, எபினின் மாமா, எதைப் பேசக் கூடாதோ அதைப் பேசுகிறார். ஒருவழியாக தீர்ப்பு வருகிறது. வழக்கின் வெற்றி – தோல்வி இவர்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கும் !

கதையின் கரு பழசுதான். ஆனால் வசனங்களும், வாதங்களும் இறுதிவரை கதையை அழகாக நகர்த்திச் செல்கின்றன. இதற்கிடையில், ஒரு  பெண் குடும்பத்தில், பொதுவாழ்வில்  தனக்குரிய பங்கை கோர வேண்டும் என்பதற்கேற்பவும் கதை இருக்கிறது.

ஒரு பக்கம் வழக்கறிஞர்கள் என்ற வகையில் ஒரு கதை சொல்லப்படுகிறது என்றால், வழக்கில் சம்மந்தபட்ட ஆண்- பெண் இருவரை வைத்து இன்னொரு கதை சொல்லப்படுகிறது.

வயது வந்த ஆணும் பெண்ணும், மனம் ஒப்பி உடலுறவு கொள்வது எப்படி குற்றமாகும்… ?

சம்மததோடு உடலுறவுக்கு ஒத்துக் கொண்ட பெண், அதன் பிறகு ஏற்படும் விளைவுகளுக்கு ஏன் பொங்கி எழ வேண்டும் ?

மது உட்கொண்ட நிலையில் இருக்கும் ஒரு பெண்னை பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டு, அவள் சுய நினைவோடு தான் உடன்பட்டாள் என வாதாடினால் ஏற்க முடியுமா?

தான் அவளை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று தெரிந்தும், சம்பந்தப்பட்ட ஆண், அவளோடு உடலுறவு கொள்வது எந்தவகையான அறம் ?

இப்படி பல்வேறு சிக்கலான பிரச்சினைகள் விவாதிக்கப்படுகின்றன. அலுவலகத்தில் பணிபுரியும் இரு சக ஊழியர்கள் சாட்சி சொல்ல வருகின்றனர்.

பெண் ஆணுக்கு ஆதரவாக சாட்சி சொல்கிறார்.

ஆண் பெண்ணுக்கு ஆதரவாக சாட்சி சொல்கிறார்.

அறம், சட்டம், பெண் நிலை வாதம் என எந்த தரப்பும் பெரிதாக கேள்வி கேட்க முடியாத அளவுக்கு தீர்ப்பு வருகிறது. மற்றவற்றை நெட்பிளிக்சில் காணலாம். ‘நிச்சயமாக பார்க்கப்பட வேண்டிய ஒன்று’ என மருத்துவர் அமலோற்பநாதன் முகநூலில் எழுதி இருக்கிறார். இந்தப் படத்தை பார்க்கலாம்.

விமர்சனம்; பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time