தலைவலிகள் பலவிதம்…! இதில் ஒற்றைத் தலைவலி ஒரு விதம். ஆம்…! ஒற்றைத் தலைவலி வந்தவர்களைக் கேட்டாலே அதன் தீவிரம் புரியும். சாதாரணமாக கிடைக்கும் மூலிகைகளால் ஒற்றைத் தலை வலிக்கு நிவாரணம் தேடலாம். நம்பிக்கையுடன் இதைச் செய்தால் பலன் கிடைக்கும்.
ஒற்றைத் தலைவலியானது மண்டை பிளந்தது போன்ற வலியை ஏற்படுத்தி வாழ்க்கையில் எந்தவித பிடிப்பும் இல்லாமல் நொந்து போகச் செய்யும். அத்தனை கொடிய ஒற்றைத் தலைவலியைக் கூட நமது மண்ணின் மருத்துவமான பாரம்பரிய மருத்துவத்தில் சரி செய்யலாம்.
வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் பாதிக்கும் ஒற்றைத் தலை வலி வருவதற்கான மூல காரணத்தை முதலில் தேட வேண்டியது அவசியம். மன அழுத்தம், மனச்சோர்வு, தூக்கமின்மை, குறைந்த சர்க்கரை, மாதவிடாயின்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் உள்ளிட்டவை ஒற்றைத் தலைவலி வருவதற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இவை தவிர, மேலும் சில காரணங்களாலும் ஒற்றைத் தலைவலி வரலாம். எது எப்படியோ… ஒற்றைத் தலைவலி யாருக்கு, எப்படி வந்தாலும், அதை சரி செய்ய ஏராளமான வழிகள் உள்ளன. குறிப்பாக இயற்கை மருத்துவத்தில் தீர்வுகள் உள்ளன. நம்பிக்கையுடன் சிகிச்சை எடுத்துக் கொண்டால் கைமேல் பலன் கிடைக்கும்.
மிகச் சாதாரணமாக வெற்றிலைச் சாற்றுடன் சூடத்தை (கற்பூரம்) சேர்த்துக் குழைத்து நெற்றியில் பூசி வந்தால் ஒற்றைத் தலைவலி சரியாகும். சாதாரண தலைவலிக்கு சுக்கு பற்று போடுவது நம் வழக்கம். ஒற்றைத் தலைவலி வந்தவர்களும் கூட சுக்கு பற்று போட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும். ஓமம் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து இளம்வறுப்பாக வறுத்து அதனுடன் சிறிது கற்பூரம் சேர்த்து பருத்தித் துணியில் பொதிந்து மூக்கில் வைத்து உறிஞ்சினால் ஒற்றைத் தலைவலி பிரச்சினையிலிருந்து விடுபடலாம். திருநீற்றுப் பச்சிலையை மோந்து பார்த்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக ஒற்றைத் தலைவலியிருந்து நம்மை விடுவிக்க முடியும். ஏதேதோ சிகிச்சைகள் எடுத்தும் குணமாகாத ஒற்றைத் தலைவலி இந்த சாதாரண சிகிச்சைகளின்மூலம் சரியாகுமா? என்ற அவநம்பிக்கையை விட்டொழித்து முயற்சி செய்து பார்க்க வேண்டும். இதற்கான செலவுகளும் மிக மிகக் குறைவு. அதுமட்டுமல்ல, பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது என்பதால் தாராளமாகச் செய்யலாம்.
வெள்ளை எள்ளினை எருமைப்பால் விட்டு அரைத்து நெற்றியில் திருநீறு பூசுவது போல பூசி அதிகாலையில் உதித்தும் இளஞ்சூரியனை கண் கொட்டாமல் பார்க்க வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் சிறிது சிறிதாக ஒற்றைத் தலைவலியிருந்து விடுபடலாம். அடிக்கடி திராட்சை பழச்சாறு குடித்து வந்தாலும் பலன் கிடைக்கும். எலுமிச்சை பழத்தின் தோலை நன்றாக காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தாலும் ஒற்றைத் தலைவலியிலிருந்து விடுபடலாம். குளிர்ந்த நீரில் ஒரு பருத்தித் துணியை நனைத்து தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பற்று போடுவதுபோல போட்டு வந்தாலும் பலன் கிடைக்கும். அதே போல் வெதுவெதுப்பான நீரில் கை, காலை சுமார் அரை மணி நேரம் வைத்து எடுத்தாலும் ஒற்றைத் தலைவலி விட்டு விலகும். தூங்கச் செல்லும் முன் மிதமான சூடு உள்ள நீரில் துணியை நனைத்து நெற்றி, தலைப்பகுதியில் ஒத்தடம் கொடுப்பதும் தீர்வு தரும். வெந்நீரில் குளிப்பதும்கூட பலன் தரும்.
நல்லவேளைக் கீரை, வெற்றிலை, அறுகம்புல் அனைத்தையும் சம அளவு எடுத்து சாறு எடுத்து ஒரு பஞ்சு அல்லது பருத்தித் துணியில் நனைத்து எந்தப் பக்கம் தலைவலிக்கிறதோ அதற்கு எதிர்புற காதில் வைக்க வேண்டும். இதே போல் தொடர்ந்து மூன்று நாள் காலை வேளையில் வைத்து வந்தால், ஒற்றைத் தலைவலி பிரச்சினையிலிருந்து விடுபடலாம். நல்லவேளைக் கீரை கிடைக்காத பட்சத்தில் நாய் வேளையை எடுத்து பயன்படுத்தலாம். இதேபோல் ஆரஞ்சுப்பழத்தின் தோலும்கூட அற்புதமான பலன் தரும். அதாவது, ஆரஞ்சுப்பழத்தின் தோலை பிழிந்தால் மிகக்குறைவாக வரும் சாற்றினை சிறுவயதில் கண்ணில் பீய்ச்சியடித்து விளையாடியிருப்போம். கண்ணில் எரிச்சலை உண்டாக்கக்கூடிய அந்த சாற்றினை ஒரு பாத்திரத்தில் பீய்ச்சியடித்து அதை பட்ஸ் அல்லது காட்டன் துணியில் நனைத்து காது மடலின் நுழைவாயிலில் லேசாக தடவ வேண்டும். கோழி இறகு அல்லது மயிலிறகையும் இதே மாதிரி பயன்படுத்தலாம். ஆனால், இதுபோன்ற சிகிச்சைகள் செய்யும் போது கொஞ்சம் கவனமாக செய்யவேண்டும்.
Also read
இது அல்லாமல் எளிமையான ஒரு ஜூஸ் செய்து சாப்பிடுவதாலும் ஒற்றைத் தலைவலியிலிருந்து விடுபடலாம். கேரட் சாறு ஒரு டம்ளர் எடுத்து அதனுடன் தலா கால் டம்ளர் பசலைக்கீரை சாறு மற்றும் பீட்ரூட் சாறு சேர்த்துக் குடிக்கலாம். கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய் சம அளவு எடுத்து சாறு எடுத்துக் குடித்தாலும் பலன் கிடைக்கும்.
வெள்ளைப்பூண்டுடன் மிளகு சேர்த்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி சூடு ஆறியதும் தலையில் தேய்த்துக் குளித்து வந்தாலும், நாளடைவில் ஒற்றைத் தலைவலியிலிருந்து விடுபடலாம். இதுபோன்று இன்னும் பல எளிய வழிகள் உள்ளன. நொச்சி இலை, மருதாணி, வேப்பிலை உள்ளிட்ட மூலிகைகளைக் கொண்டு செய்யப்படும் தலையணையை பயன்படுத்துவதாலும் ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
கட்டுரையாளர்; எம். மரியபெல்சின்
மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளர்.
வீடுகளைச் சுற்றி வளரக்கூடிய மிகச் சாதாரண மூலிகைகள் மற்றும் அஞ்சரை பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் போன்றவற்றைக் கொண்டு தலைவலி முதல் கொரோனா காய்ச்சல் வரை சரி செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்பவர்.
Leave a Reply