மியூச்சுவல் பண்டில் எப்படி முதலீடு செய்வது?

-செழியன் ஜானகிராமன்

வங்கி வைப்பு தொகைக்கு அதிகபட்சம் 5.5 % வட்டி வழங்கப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்கள் 12% வருமானம் தருகிறது. சில திட்டங்கள் 12% க்கும் அதிகமாக வருமானம் வழங்குகிறது. மியூச்சுவல் பண்டில் என்னென்ன திட்டங்கள் உள்ளன! இது பாதுகாப்பானதா?

நீண்ட கால திட்டத்தில் நாம் இருந்தால் 12% வருமானம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. அதனால் வங்கி வைப்பு நிதியில் கொஞ்சம் பணமும், மியூச்சுவல் ஃபண்டில் கொஞ்சம் பணமும் முதலீடு செய்யுங்கள்.

மியூச்சுவல் ஃபண்டில் Large Cap Fund, Mid Cap Fund, Small Cap Fund எனத் தனித்தனி திட்டங்கள் உள்ளன!. ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் இந்த மூன்று திட்டங்களையும் கலந்து பல திட்டங்களை உருவாக்கி உள்ளார்கள்.

Large & Mid Cap Fund  

இது, பெரிய-நடுத்தர நிறுவனங்களில் நம் பணத்தை முதலீடு செய்யும் திட்டமாகும். பெரிய நிறுவனம்  இதில் இருப்பதால் பாதுகாப்பும்,  நடுத்தர நிறுவனம் மூலம்  கொஞ்சம் அதிக வருமானமும் கிடைக்க வழி உண்டு. மற்றபடி, ரிஸ்க் என்பது எப்பொழுதும் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் உள்ளதேயாகும்.

மியூச்சுவல் ஃபண்டில் புதியவர்கள் Large Cap Fundல் முதலீடு செய்து, அதன் செயல்பாடுகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் கொஞ்சம் தெரிந்து கொண்ட பிறகு Large & Mid Cap Fund-ல் முதலீடு செய்யலாம்.

சந்தையில் நிறைய Large & Mid Cap திட்டங்கள் உள்ளன! ஆனால், ஒவ்வொரு திட்டமும் அதை நிர்வகிக்கும் Fund Manger செயல்பாடுகளைக் கொண்டே அதன் வளர்ச்சி இருக்கும்.  அதனால் குறைந்தது பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் உள்ள Large & Mid Cap திட்டங்களைக் கவனித்து முதலீடு செய்ய வேண்டும்.

★ Mirae Asset Emerging Bluechip, Quant Large & Mid Cap, Canara Robeco Emerging Equities  இந்த 3 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் வருமானம், செயல்பாடுகள் குறித்து இணையத்தில் தேடிப் பாருங்கள். கடந்த 5 வருட வளர்ச்சியைக் கவனியுங்கள்.  .

Multi Cap Fund 

இந்த திட்டத்தில் சேரும் தொகையை Small – Mid – Large நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். குறிப்பாக 100 ரூபாய் பணத்தில் குறைந்தபட்சம் 25 சதவிகிதம் சிறிய நிறுவனத்தில், 25% நடுத்தர நிறுவனத்தில், 25% பெரிய நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பது SEBI விதியாகும்.

இப்படிச் செய்வதன் மூலம் நம் முதலீடு பரவலாக அனைத்து சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது. அதனால் ரிஸ்க் பரவலாக்கப்படுகிறது.  மியூச்சுவல் ஃபண்டில் பெரிய நிறுவன திட்டங்களில் முதலீடு செய்த பிறகு அடுத்து இது போல் உள்ள Multi Cap Fundல் முதலீடு செய்யலாம். வருமானம் உயர்ந்து வர இந்த திட்டம் உதவும்.

குறைந்தபட்சம் 25% Small-Mid-Large நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதால் பங்குச்சந்தை குறைந்தாலும் இந்த திட்டத்தின் 25% அளவைக் குறைக்கக் கூடாது. அதாவது 75% பங்குச்சந்தை நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும். மீதி மணி மார்க்கெட்டில் முதலீடு செய்து கொள்ளலாம்.

பொதுவாக பங்குச்சந்தை வீழ்ச்சி அடையத் தொடங்கினால் Fund Manager Small நிறுவனங்களிலிருந்து பணத்தை எடுத்து பெரிய நிறுவனத்தில் முதலீடு செய்வார்கள். ஆனால் இந்த திட்டத்தில் அப்படி அளவை குறைக்க முடியாது என்பது ஒரு குறையாக உள்ளன. இருந்தும் பால Multi Cap fund நன்றாக செயல்படுகிறது.

Baroda BNP Paribas Multi Cap,  ICICI Pru Multicap போன்ற திட்டங்களின் 5 வருட செயல்பாடுகளைக் கவனித்துப் பாருங்கள்.

மணி மார்க்கெட் முதலீடு குறித்து அடுத்து வரும் கட்டுரைகளில் பார்ப்போம்.

Flexi Cap Fund 

இந்த திட்டம் Multi Cap Fund போன்று செயல்படும்.ஆனால் நிறுவனங்களில்  முதலீடு செய்யும் சதவிகிதம் என்பது இல்லை.. Small-Medium-Large நிறுவனங்களில் இவ்வளவு சதவிகிதம் முதலீடு செய்ய வேண்டும் என்று விதி இல்லை. எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதை மியூச்சுவல் ஃபண்ட் திட்ட மேலாளர் (Fund Manager) முடிவு செய்து கொள்ளலாம்.

Fund Manager கள் பொதுவாகப் பெரிய நிறுவனங்களில் பாதுகாப்பு காரணமாக. அதிகம் முதலீடு செய்வார்கள். குறைந்த அளவு நடுத்தர-சிறிய நிறுவனங்களில் போடுவார்கள். பங்குச்சந்தை குறையும் என்று கணித்தால் சிறிய நிறுவனங்களில் உள்ள பணத்தை வெளியே எடுத்து பெரிய நிறுவனங்கள் அல்லது மணி மார்க்கெட் போன்றவற்றில் முதலீடு செய்து பணத்தைப் பாதுகாப்பார்கள்.

Flexi Cap திட்டத்தில் Fund Manager தன் விருப்பப்படி கலந்து முதலீடு செய்து கொள்ளலாம். Small-Medium -Large நிறுவனங்களில் முதலீடு செய்ய இவ்வளவு சதவிகிதம் இல்லை  என்றாலும் 65% பணத்தை பங்குச்சந்தை நிறுவனங்களில் தான் முதலீடு செய்ய வேண்டும்.  மீதி மணி மார்க்கெட் போன்றவற்றில் முதலீடு செய்து கொள்ளலாம். ஆனால் Multi Cap திட்டத்தில் 75% முதலீடு செய்ய வேண்டும் என்பதைப் பார்த்தோம்.

Parag Parikh Flexi Cap,  PGIM India Flexi Cap போன்ற Flexi Cap திட்டங்களின் கடந்த 5 வருட வளர்ச்சியை இணையத்தில் பாருங்கள்.

Mutual Fund ல் அதிகம் நபர்கள் முதலீடு செய்யும் திடமாக Flexi Cap  Fund  உண்டு.

Sector Fund 

இந்த திட்டத்தில் சேரும் பணம் குறிப்பிட்ட துறையில் மட்டுமே முதலீடு செய்யப்படும். உதாரணத்திற்கு Pharma Fund என்று திட்டம் உண்டு. இதில் சேரும் பணத்தை மருத்துவ நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்வார்கள்.

IT Sector Mutual Fund என்ற திட்டத்தில் சேரும் தொகையைத் தொழில்நுட்ப  நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டிருக்கும்.  இப்படி Banking Fund,  Communications Fund, Natural Resources Fund (Energy) இப்படித் துறை சார்ந்த பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யும் Mutual Fund திட்டத்திற்கு sector fund என்று பெயர்.

யார் இதில் முதலீடு செய்யலாம் என்றால் ரிஸ்க் எடுக்கக் கூடிய நபர்கள் துறை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். காரணம் அந்த  துறை பங்குச்சந்தையில் உயர்ந்தால் இந்த திட்டத்தில் உள்ள பணமும் உயரும். குறைந்தால் இதுவும் குறையும். ஆனால்  அதிக லாபம் வரக் கூடிய திட்டமாக இருந்தாலும் அந்த துறைக்குப் பாதிப்பு என்றால் அந்த துறை நிறுவனங்கள் பங்குச்சந்தையில்  சரியும் அப்பொழுது இந்த திட்டமும் பாதிக்கப்படும்.

Fund Manager இந்த திட்டத்தில் உள்ள பணத்திற்குப் பாதிப்பு என்றால் அதை எடுத்து வேறு  துறைக்கு, மற்ற நிறுவனங்களுக்கு மாற்ற முடியாது. ஏறினாலும்-இறங்கினாலும் இந்த துறையிலேயே அதாவது நீங்கள் எந்த துறை Mutual Fund Sector திட்டத்தில் தேர்ந்து எடுத்து இருந்தீர்களோ அதிலேயே தான் இருக்க வேண்டும்.

இந்த குறை இருந்தாலும் உங்களுக்கு எதிர்காலத்தில் குறிப்பிட்ட துறை நன்றாக செயல்படும் என்று தெரிந்தால் மட்டுமே அந்த  துறை Mutual Fund திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். . நீண்ட கால நோக்கில் இந்த துறை திட்டத்திலிருந்தால் லாபம் வர வாய்ப்பு உண்டு. காரணம் எந்த துறையும் சிறிது காலம்தான் சரிவைச் சந்திக்கும். ஆனால் மற்ற Mutual Fund திட்டங்களில் ஒப்பிடும்பொழுது ரிஸ்க் அதிகம் Sector Fund ஆகும்.

SBI Banking & Fin Serv Fund, – Aditya Birla SL Digital India,  Nippon Ind Pharma போன்ற துறை ரீதியான திட்டங்களின் 5 வருட வளர்ச்சியை ஆய்வு செய்யுங்கள்.  sector fund குறித்துப் புரிதல் வரும்.

மேலே குறிப்பிட்டுள்ள பல Mutual Fund திட்டங்களை ஒவ்வொருவரும் நன்கு அதன் செயல்பாடுகள், 5 வருட வளர்ச்சி, அந்த திட்டத்தின் Fund manager யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  ஒருவர் அனைத்து திட்டங்களிலும் முதலீடு செய்ய வேண்டும் என்று முயலக்கூடாது.

எந்த திட்டங்களை நன்கு புரிந்து கொண்டீர்களோ அதில் முதலீடு செய்யுங்கள். பிறகு அடுத்து என்று நகருங்கள். புதியவர்கள் என்றால் Large Cap Fund அல்லது Flexi Cap Fund போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். அது கொடுக்கும் வளர்ச்சி உங்களுக்கு Mutual Fund குறித்துப் புரிதலைக் கொடுக்கும்.

இன்று ஒவ்வொரு மதமும் பல லட்சம் புதியவர்கள் Mutual Fundல் இணைந்து வருகிறார்கள். 2021-2022 ஆண்டில் 3.17 கோடிக் கணக்கு புதியதாகத் தொடங்கி உள்ளனர். அதே 2020-2021 ஆம் ஆண்டு 87 லட்சமாக தான் இருந்தது. வேகமாக Mutual Fund  வளர்ந்து வருகிறது. நீங்களும் குறைந்த தொகையைக் கொண்டு கணக்கைத் தொடங்குங்கள்.

பங்குச்சந்தை சார்ந்த இன்னும் சில திட்டங்கள் குறித்து அடுத்துப் பார்ப்போம்.  பிறகு மணி மார்க்கெட் திட்டங்களைப் பார்க்கத் தொடங்கலாம்.

கட்டுரையாளர்; செழியன் ஜானகிராமன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time