தமிழகத்தை விழுங்கி வரும் அதானி குழுமம்!

-சாவித்திரி கண்ணன்

உலக பணக்காரர் பில்கேட்சை பின்னுக்கு தள்ளி முன்னேறிக் கொண்டு வருகிறார் அதானி! இந்த வகையில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிகமாக கால்பரப்பி வருகிறது அதானி குழுமம். கடந்த பத்தாண்டுகளில் அதன் ஆக்டோபஸ் கரங்களில் தமிழகம் சிறிது சிறிதாக செல்வது குறித்த ஒரு பார்வை!

டெலிகாம் துறையில் புதிதாக நுழைந்த அதானி நிறுவனம் 26 Ghz அளவிலான 5ஜி ஸ்பெக்ட்ரத்தை வாங்கிவிட்டது. தமிழ்நாடு, குஜராத், மும்பை, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளுக்கான 5ஜி ஸ்பெக்ட்ரத்தை அதானி வாங்கியுள்ளது. ஏற்கனவே பி.எஸ்.என்.எல் அழிவின் பின்னணியில் அம்பானியின் ஜியோ வளர்த்தெடுப்பு ஒரு குறிக்கோளாக இருந்ததை நாம் அறிவோம்.இன்னும் 4ஜியையே பி.எஸ்.எல்லுக்கு பயன்படுத்தாத நிலைமையே உள்ளது.

போர்ப்ஸ் பத்திரிகையின் ரியல் டைம் பில்லியனர்ஸ் வரிசையில் அதானியின் சொத்து மதிப்பு 123.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இதன் மூலம் 121.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை  வைத்துள்ள பெர்க்சயர் ஹாதவே தலைமைச் செயல் அதிகாரி வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளார்.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற ஏகப்பட்ட தொழில்களில் ஈடுபட்டு வருபவரான அதானி குழும நிறுவனர் கௌதம் அதானி.  அண்மையில் 100 பில்லியன் டாலர் கிளப்பில்  இணைந்தார்..

திமுக அரசு சமீபத்தில் செய்த 59 ஒப்பந்தத்தில் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுவது சென்னையில் அமைய உள்ள அதானி எண்டர்பிரைசர்ஸ் ஆகும். அதானி குழுமம் புதிதாக ஒரு பிரம்மாண்ட டேட்டா சென்டரை அமைக்கிறது.

புகழ்பெற்ற காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியின் பங்குகளை வாங்கி குவிக்கிறது அதானி குழுமம்.

தமிழக மின்துறை இன்று பெரும் கடனாளி ஆகக் காரணமாயிருப்பதும் அதானி குழுமம். மின் கட்டண உயர்வுக்கு பின் இருப்பதும் இந்த நிறுவனம் தான்! அந்த அளவுக்கு அதானியிடம் இருந்து மின் கொள்முதல் மிக அதிக விலைக்கு வாங்கப்பட்டு வருகிறது.

அதானிக்கும், அம்பானிக்கும் இந்தியாவை அடகு வைக்க அரும்பாடுபட்டு வருகிறது பாஜக அரசு! உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து வரும் மோடி ஆஸ்திரேலியா, இலங்கை பல நாடுகளில் அதானி குழும நிறுவனங்கள் கால்பதிக்க உதவி வருகிறார்.

காட்டுப்பள்ளி துறைமுகம் சென்னையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது ஆழ்கடல் துறைமுகமாகும். இங்குள்ள சரக்குப் பெட்டக முனையம் 2013-ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. எல் அண்ட் டி நிறுவனத்தின் துணை நிறுவனமான எல் அண்ட் டி ஷிப் பில்டிங் லிமிடெட் நிறுவனம் காட்டுப் பள்ளியில் துறைமுகத்தை நிர்வகித்து வந்தது. இதை அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம் 2,500 கோடிக்கு 2015 ல் வாங்கி விரிவுபடுத்தி வருகிறது. தென் இந்தியாவில் மிகப்பெரியதாக காட்டுப்பள்ளி துறைமுகத்தை நவீனப்படுத்தவும்,  பல கோடி டன் சரக்குகளைக் கையாளும் அளவுக்குத் துறைமுகத்தை நவீனப்படுத்தவும், கட்டுமானத்தை எழுப்பி வருகிறது அதானி  குழுமம் !

காட்டுப்பள்ளி துறைமுகம் 53 ஆயிரம் கோடி செலவில் ஆண்டுக்கு மொத்தமாக 320 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் அளவிற்கு விரிவாக்க திட்டம் நடைபெற்று வருகிறது.   அதன்படி 336 ஏக்கரில் அமைந்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகம் சுமார் 6,110 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு 450 வாட்ஸ் கொண்ட 34 சூரிய சக்தி திட்டங்களும் நடக்கின்றன!

இந்த விரிவாக்கம் நிகழ்ந்தால் அப்பகுதியில்  10 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என  எதிர்ப்புக் குரல்கள் பரவலாக எழுந்தன. காட்டுப்பள்ளி துறைமுகம் 20 மடங்கு விரிவாக்கம் செய்யப்பட்டால், 82 மீனவ கிராமங்கள் கடலுக்குள் போய்விடும். காட்டுப்பள்ளி கடல், சேற்றுத் திட்டுகளைக் கொண்ட, நீர் ஆழம் குறைவான பகுதி ஆகும். இங்குதான் அதிகமான இறால், நண்டு, நவர மீன், கெழங்கான், கானாங்கெளுத்தி போன்ற கடல் வாழ் உயினங்கள் முற்றிலும் அழிந்துவிடும். பழவேற்காடு பகுதி கடல் அரிப்பால் கடுமையாகப் பாதிக்கப்படும். கடல் நீர் உட்புகுதல் மேலும் அதிகரிக்கும்.

இது வரை அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், மங்களூரு மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை விலைபேசி வாங்கியுள்ள அதானி குழுமம் அடுத்து சென்னை விமான நிலையத்தையும் விலைபேசலாம்.

பரந்தூரில் சென்னையின் இரண்டாவது பெரிய விமான நிலையம் அமைக்க ஏற்கெனவே 4,971 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சுமார் ரூ.60 ஆயிரம் கோடியில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 73 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பரந்தூருக்கு 2 மணி நேரத்தில் சென்றுவிடலாம். காஞ்சிபுரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் பரந்தூர் அமைந்துள்ளது. இவ்வளவு பிரம்மாண்ட விமான நிலையம் நாளை அதானிக்கு வழங்கபடமாட்டாது என்பதற்கு உத்திரவாதம் இல்லை.

இந்தியாவின் மிகப்பெரும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைத்துள்ளார் கவுதம் அதானி! இங்கே பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சோலார் பவர் யூனிட் அமைத்து செயல்படுத்தி வருகிறது. கமுதி குண்டாறு அதானிக்கு தாரைவார்க்கப்பட்டது ஒரு நாளைக்கு 2லட்சம் லிட்டர் குண்டாறு ஆறு நதிநீர் சுரண்டப்பட்டு வருகிறது. வறண்ட பூமி, கவுதம் அதானிக்கு ஐந்தாண்டுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய்களை வருமானமாக ஈட்டித்தந்திருக்கிறது. நிலத்தைப் பறிகொடுத்த கமுதி மக்கள் தவித்த வாய்க்குத் தண்ணீர் கூட இல்லாமல் காய்ந்து கிடக்கிறார்கள்.

எட்டுவழிச்சாலைத் திட்டம் இன்று பசுமை வழி சாலைதிட்டமாக பெயர் மாற்றம் பெற்று அரங்கேறுகிறது.ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இதை எதிர்த்த கட்சிகளில் திமுகவும் அடக்கம். ஆனால், தற்போது திமுக அரசு இந்த திட்டத்திற்கு இசைவளித்து மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி களத்தில் இறங்கிவிட்டது. தற்போதைய திட்டமிதிப்பு ஏறத்தாழ 14 கோடிகளுக்கு உயர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள்! 2025க்குள் இத்திட்டம் முடிக்கப்பட்டுவிடும் என்றும் சொல்கிறார்கள்!

இதற்காக தமிழகம் இழக்க உள்ளவைகளை வெறும் கரன்சிகளைக் கொண்டோ, பல அடுக்குமாடி கட்டிடங்களைக் கொண்டோ, பளபளக்கும் சாலைகளைக் கொண்டோ ஈடுகட்டவே முடியாது. இதோ தமிழகம் இழக்க உள்ளவற்றை வாசியுங்கள்;

# 8,000 ஏக்கர் விளை நிலங்கள்!

# 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாசனக் கிணறுகள்,

# 100 க்கு மேற்பட்ட ஏரி,குளங்கள்,

# 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட தென்னை மற்றும் பாக்கு மரங்கள்!

# 500 ஏக்கர் வனப்பகுதிகள்,அவற்றிலுள்ள விலங்கினங்கள்!

# 8 அபூர்வ மலைகள்,அவற்றை நம்பி வாழும் உயிரினங்கள்!

# 30 ஆயிரம் ஏழை விவசாய குடும்பத்தின் வாழ்வாதாரங்கள்! ,

# கணக்கிலடங்கா நீரோடைகள், குட்டைகள்!

# மா, தென்னை, வாழை, பாக்கு போன்ற 3 லட்சம் மரங்கள்!

# 20-க்கும் மேற்பட்ட பள்ளிக் கூடங்கள்,

# 10 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வீடுகள்!

கையகப்படுத்தப்படும் நிலங்களில் 80 சதவீதம் சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்கள்தான்! இவர்கள் காலங்காலமாக நமக்கு சோறு போட்டவர்கள்!

இந்த இயற்கை பேரழிவு திட்டத்தால் ஒட்டுமொத்த தமிழகத்தின் மழை வளம் பாதிக்கப்படும். வறட்சி உருவாகும்.

ஆக மொத்தத்தில் காட்டுபள்ளி கபளீகரம் செய்யப்பட்டுவிட்டது. கமுதி களவாடப்பட்டுவிட்டது. பசுமை வழி சாலைக்காக வட தமிழகம் அதானியின் வாய்க்குள் சென்று கொண்டுள்ளது. டேட்டா சென்டரில் சென்னையை எடுத்துக் கொண்டுள்ளது! தமிழகத்தை அதானி குழுமம் மெல்ல விழுங்கிக் கொண்டுள்ளது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time