அப்பாவிகள் கைது! கதறும் பெற்றோர்கள்!

-சாவித்திரி கண்ணன்

கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு முன் திரண்டு கதறி அழுகின்றனர். வேலைக்கு சென்று திரும்பியவர்களை, கல்லூரி மாணவர்களை, கடை வீதிக்கு சென்றவர்களை பொய் வழக்கில் கைது செய்து பொய் வழக்கு போட்டது அம்பலம்!

ஆனால், இது தொடர்பாக களத்தில் இறங்கி முக்கிய ஊடகங்கள் உண்மைகளை வெளிக் கொணராமல் ஊமையாக உள்ளனர். பாலிமார் தொலைகாட்சி மட்டும் அப்பாவிகளின் பெற்றோர் குமுறலை ஒரே ஒரு முறை மேலோட்டமாக காண்பித்தது!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தை அடுத்து போலீசார் 300க்கு மேற்பட்டவர்களை கைது செய்த தகவல் வந்தது. அதன் பிறகு, இந்த கலவரத்தை செய்தது சுற்று வட்டாரத்தில் உள்ள ஆதிதிராவிட இளைஞர்கள் என்றும், இந்த கலவரத்தின் விளைவு தலித்களுக்கும், கவுண்டர்களுக்குமான கலவரமாக மாறும் வாய்ப்புள்ளது என்று உளவுத் துறை செய்திகளை பரப்பி வந்தது. உண்மைக்கு புறம்பான இந்த செய்திகளை முக்கிய ஊடகங்களே பரப்பின!

கலவரம் நடந்து 16 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது இந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களின் பெற்றோர்கள் குரல் ஒரளவு வெளியே தெரிய வந்துள்ளது. விசாரணையின்றி காவலில் வைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் காவலை நேற்றைய தினம் மீண்டும் பதினைந்து நாட்கள்  நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், சம்பந்தமில்லாமல் வழக்கில் சேர்க்கப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைக்கும் என நம்பி வந்து ஏமாற்றம் அடைந்த பெற்றோர்களும், உறவினர்களும் நீதிமன்ற வளாகத்தில் கதறி அழுதுள்ளனர்.

கனியாமுத்தூரில் காந்தி நகர் என்ற பெரிய குடியிருப்பு பகுதி உள்ளது. அந்தப் பகுதியில் அதிகமாக தலித் மக்கள் வசிக்கின்றனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் – மல்லிகா தம்பதியினர் தமிழ் ரூட்ஸ் என்ற சேனலில் பேட்டியாளர் கரிகாலனிடம் பேசி இருப்பதாவது;

எங்கள் பெரிய மகன் புவியரசு, இளையவன் வசந்த் இருவரும் படிப்பில் தீவிரமானவர்கள். பெரியவன் பி.எஸ்.சி, பி.எட், எம்.எஸ்.சி, எம்.பில் படித்துள்ளான். சிறியவன் மெக்கானிகல் இன்ஜினியரிங் படிக்கிறான். இருவரும் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவில் உள்ளவர்கள். ஆகையால் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு TAF ஐ.ஏ.எஸ் அகடாமியில் ஒவ்வொரு ஞாயிறும் படிக்க செல்வார்கள். அந்தப்படியே கலவரம் நடந்த நாளும் காலை ஒன்பதரை மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர். காலை பத்தே கால் மணிக்கு அவர்கள் அந்த அகடமிக்குள் நுழைந்ததும், பிறகு மதியம் ஒன்றேகால் மணிக்கு வெளியே வந்ததுக்குமான சி.சி.டிவி ஆதாரங்கள் உள்ளன! பிறகு, அவர்கள் அருகில் உள்ள சித்தி வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும் வழியில் கூட வழியில் இரண்டு சி.சி.டி.வி ஆதாரங்களை எடுத்துள்ளேன். வீடு நோக்கி வருகையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்த போது, எங்கள் பிள்ளைகள் ”ஐ.ஏ.எஸ் தேர்வுக்குகான முன்மாதிரி எக்ஸாம் எழுதிவிட்டு இப்போது தான் வந்து கொண்டுள்ளோம். இதோ ஹால் டிக்கெட்” என காட்டி உள்ளனர்.

அந்த ஹால் டிக்கெட்டை வாங்கி பார்த்த காவலர்கள் அதை அங்கேயே கிழித்து போட்டுவிட்டு, ”டேய் நீங்க காந்தி நகர் காலனியை சேர்ந்தவர்கள் தானே..எதுவும் பேச வேண்டாம் வண்டியிலே ஏறுங்கள்” எனச் சொல்லி பிடித்து சென்று விட்டனர். அப்படி அழைத்து சென்ற விபரம் எங்களுக்கு மாலையில் தெரிய வந்த போது நாங்கள் இருவரும் காவல் நிலையம் சென்று, ”எங்க பிள்ளைகளை பற்றி கூறி அவர்கள் நன்றாக படிப்பவர்கள் , எந்த வம்பு தும்பிற்கும் செல்லாதவர்கள்”  என கதறினோம். ஆயினும் பலனில்லை. அவர்களை மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பி விட்டனர்.

ஷர்வண்குமார் ஜடாவத்,                                  பகலவன்

ஆயினும், முயற்சி தளராமல் மாவட்ட ஆட்சித் தலைவரை (ஷர்வண் குமார் ஜடாவத்) சந்தித்து அந்த ஐ.ஏ.எஸ் அகடமியின் கடிதம் மற்றும் சி.சி.டிவி ஆதாரங்களை தந்தோம். அனைத்தையும் கேட்டும் , பார்த்தும் கலெக்டர் உடனே காவல் துறைக்கு போன் செய்து, ”இந்த வழக்கில் கைதாகியுள்ள இந்த இருவரையும் மாலை நான்கு மணிக்குள் விடுவித்துவிட்டு தகவல் சொல்லுங்கள்” என்றார். ஆயினும், அவர்கள் விடுவிக்கவில்லை’’ எனக் கூறியுள்ளார்கள்!மாவட்ட கண்காணிப்பாளர் பகலவன் இது குறித்து கண்டுகொள்ளாமல் உள்ளார். இந்த கலவம் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு தலைமை வகிக்கும் சேலம் சரக டிஐஜி பிரவீன் குமார் அபினபு குறித்த சந்தேகங்களையும், அவரது சார்பு நிலைபாட்டையும் நாம் ஏற்கனவே குறிப்பிட்டோம். இப்போதும் மாணவி தற்கொலை தான் செய்தார் என்பதை பிரேம் செய்வதற்காக பொய் செய்திகளையும், போலி சி.சி.டிவி காட்சிகளையும் தான் போலீஸ் பரப்பி வருகிறது.

மற்றொரு தம்பதியினராகிய கேசவன் – சுமதி கூறுவதாவது; என் மகன் சிவன் பி.எட் எக்ஸாம் எழுதியுள்ளான். சம்பவத்தன்று மதியத்திற்கு மேல் வீடு திரும்பி கொண்டு இருக்கையில் காவல்துறையினர் கைது செய்தனர். எதற்கு என கேட்டதற்கே அடித்து ஒரு கிலோமீட்டர் தூரம் இழுத்து சென்று உள்ளனர். நீ விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தில் உள்ளாயா? எனக் கேட்டு உள்ளனர். இல்லை. எங்களுக்கு தொடர்பு இல்லை என தெளிவுபத்திய பிறகும் விடவில்லை. இந்தப் பக்கம் போலீஸ் இருக்கிறார்கள். எதிர்தரப்பில் செல்லலாம் என்றால் மறுபக்கத்தில் கவுண்டர் இளைஞர்கள் ஆயுதங்களுடன் நின்று உள்ளனர்.

கேசவன் – சுமதி

”நாங்க படிக்காதவங்க, விவசாயக் கூலிகளாக கஷ்டப்பட்டுக் கொண்டுள்ளோம். எங்க பிள்ளைகளையாவது படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகத் தான் கடன் வாங்கி படிக்க வைக்கிறோம். இப்ப எந்த தப்புத் தண்டாவும் பண்ணாமலே அவங்க எதிர்காலம் கேள்விகுறியாயிடுச்சு.” என்றனர்.

இதே போல பல பெற்றோர்கள் அந்த காந்தி நகர் பகுதியில் உள்ளவர்கள் தினசரி காவல் நிலையம் சென்று மன்றாடி வருகின்றனர். மதியத்துடன் கலவரம் முடிந்துவிட்டது. ஆனால், மாலை நான்கு ஐந்து மணி வாக்கில் என்ன நடந்தது  என்ற அர்வத்தில் அங்கே வேடிக்கை பார்க்க சென்ற பிள்ளைகளை கைது செய்துள்ளனர் போலீசார். இதில் மேஜர் ஆகாத சிறுவர்களும் உள்ளனர். இப்படி கைது செய்த பிறகு அவர்களின் பெற்றோர்களாகிய எங்களிடம் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. கலவரத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை சி.சி.டி.வி வீடியோ ஆதாரங்களை வைத்து உறுதிபடுத்தலாம். அப்படி இல்லாதபட்சத்தில் அப்பாவிகள் என்று நன்கு தெரிந்தும் தலித்துகள் என்பதே கைது செய்வதற்கான தகுதியாகிவிடுமா? சத்தியமாக எங்களுக்கு யாரிடமும் விரோதம் இல்லை’’என்கிறார்கள் இவர்கள்!

உண்மையில் இந்த செய்திகள் தமிழக மக்களை மிகவும் கவலை கொள்ளச் செய்கிறது. யாரோ சில குறிப்பிட்ட ஆதிக்க சக்திகள் காவல்துறையை ஆட்டி வைக்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. எளிய மக்களை காரணமில்லாமல் இம்சிப்பதை உடனே தடுத்து நிறுத்தி நியாயம் நிலை நிறுத்தப்பட வேண்டும். இத்தனை நாட்களுக்கு பிறகும் இதில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்ற புரிதல் இல்லாமல், நடப்பதை அதன் போக்கில்விட்டு வாளாயிருப்பது ஆட்சியாளர்களுக்கு அழகில்லை.

ஆளும்கட்சி தவறு செய்தால் எதிர்கட்சிகளாவது தட்டிக் கேட்க வேண்டும். ஆனால், அதிமுக இது தொடர்பாக வாய்ற் திறப்பதில்லை. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி கள்ள மவுனம் சாதித்து வருவது திமுக ஆட்சிக்கு இன்னும் சவுகரியமாகிவிட்டது.

இந்த பிரச்சினை குறித்து முக்கியமான பெரிய ஊடகங்கள் அனைத்தும் மவுனம் சாதிக்கின்றன. ஜனநாயக சக்திகளும் இதில் இன்னும் போதுமான அக்கறை காட்டவில்லை. அப்பாவிகள் தண்டிக்கப்படுவது – குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் குறி வைத்து குற்றவாளிகளாக சேர்க்கப்படுவது – சமூகத்தை பல நூற்றாண்டுகள் பின்னுக்கு தள்ளுவதாக உள்ளது. அமைதி பூங்காவாகத் திகழும் தமிழகத்தை சாதி, மத கலவர பூமியாக்கி அரசியல் ஆதாயம் அடையத் துடிப்பவர்களை எப்படி தடுப்பது எனத் தெரியாத கையறு நிலையில் – முன்னெப்போதும் இல்லாத – ஒரு பாதுகாப்பற்ற நிலையில் தமிழகம் உள்ளது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time