எதற்குமே நம்மிடம் ஆய்வுகள் இல்லை! – ஜெயரஞ்சன்

- இளஞ்செழியன்

கோவிட் மனிதகுலத்திற்கு – முக்கியமாக பொருளாதாரத்திற்கு – ஏற்படுத்திய பாதிப்புகளை குறித்த சிறப்பான ஆய்வுகள் அவசியமானவை. ஆய்வுகள், தரவுகள் விஷயத்தில் தமிழகத்தின் நிலை என்ன? தமிழக அரசு நிர்வாக கட்டமைப்பு குறித்து பி.டி.ஆரும், ஜெயரஞ்சனும் வெளிப்படுத்திய ஆதங்கங்கள் நியாயமானவையே!

உலக அளவில் ஏற்படும் சிறிய பிரச்சனை  கூட பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ரஷ்யா-உக்ரைன் சண்டை, வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட  போர் போன்ற பல காரணங்கள் வளர்ந்த நாடுகளில் மட்டும் இல்லாமல் இந்தியாவிலும்  பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது.  சமீபத்தில்  உச்சபட்சமாக பாதிப்பு  ஏற்படுத்திய காரணமாக கோவிட் 19 குறிப்பிடலாம்.

கோவிட்19 ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பு, மனிதர்களுக்கு ஏற்பட்ட துயரங்கள், சிறு-குறு நிறுவனங்கள் பாதிப்பைக் குறித்துப் பல கட்டுரைகள் ஆய்வு செய்து வெளிவந்தன.

அந்த கட்டுரைகளை பெருந்தொற்றும் பொருளாதாரக் கொள்கையும்” என்ற தலைப்பில்   புத்தகமாக தொகுத்துள்ளார், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ப.கு.பாபு. சமீபத்தில் ( ஆகஸ்ட்- 2)  இந்த புத்தகத்தின்  வெளியிட்டு விழா  சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS)  நடந்தது. இந்த நிகழ்வில் தமிழகத்தின் முக்கிய பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் நிதி அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், MIDS தலைவர் கோபால்சாமி கலந்து கொண்டு நூலை வெளியிட்டனர். நூலின் முக்கியத்துவம், சிறப்பு ஆகியன குறித்து இந்த நிகழ்வில் பேசப்பட்டது.

புத்தகத்தில் உள்ள 16 கட்டுரைகள் தமிழ் நாட்டில் ஏற்பட்ட பல பிரச்சனைகளைப்  பேசுகிறது. கோவிட்-19 மனிதர்களின் உடலை மட்டும் பாதிக்கவில்லை மனிதர்களின் சிறு  தொழில்கள் பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாகப் புத்தக பதிப்பு தொழில் எந்த அளவு பாதிப்பு உள்ளாகின என்ற கட்டுரையை ஆ.ரா.வேங்கடாசலபதி நுணுக்கமாகப்  புத்தக அச்சு வரலாற்றில் தொடங்கி  கோவிட்  பாதிப்பு வரை நீண்ட ஆய்வுக் கட்டுரையை எழுதி உள்ளார் கட்டுரை முடிவில் அரசு பதிப்பு தொழிலைக் காப்பாற்ற என்ன உதவிகள் செய்யலாம் என்று பல ஆலோசனைகளை முன்வைக்கிறார்.

கோவிட் பாதிப்புகள் தமிழ்நாடு, இந்தியா என்றுமட்டுமல்லாது உலக அளவில் எப்படி பாதிப்புகளை ஏற்படுத்தின என பல ஒப்பீட்டு நிலைகளை விளக்கும் ஆய்வுகளும், கொடுந் தொற்றால் எப்படி பல்வேறு துறை யினரும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில்  நிலையில், மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் எளிதாக விளக்கப்பட்டுள்ளது!

வர்த்தகமும், தொழிலும், விவசாயக் கொள்கை சீர்திருத்தங்கள் என்ற இரண்டு தலைப்பிலும் ஆழமான ஆய்வுகளுடன், சிறந்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன!’

‘வேளாண்துறையில் கோவிட்-19க்குப் பிறகு பிந்தைய சீர்திருத்தங்கள்’ கட்டுரையில்,  கோவிட்-19, விவசாயம் அதன் உபதொழில்களைக் எப்படி கடுமையாகப் பாதித்துள்ளது என விவரிக்கப்பட்டு உள்ளது.  போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்துதலில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு இடையூறுகளால்  விவசாயிகள் தங்களுடைய பொருட்களை அறுவடை செய்யாமல் வயலிலேயே அழியவிட்டனர். சில முறை அறுவடை செய்த பொருட்களைச் சாலை மாறும் திறந்த வெளியில் கொட்டி அழிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்எனக் கூறப்பட்டு உள்ளது. முறையான மற்றும் துரிதமான கொள்முதலை மேற்கொள்ளுதல், நேரடி கொள்முதல் செய்வது, சந்தை பரவலை மேற்கொள்வது, உற்பத்தியாளர், நுகர்வோர் குழுக்களை அமைத்தல் விவசாய உள்ளீட்டுப் பொருட்களை எளிதில் கிடைக்கச் செய்வது போன்ற பல யோசனைகளை அரசுக்கு முன்வைத்து உள்ளது. விவசாயிகளின் நிலையைக் காப்பாற்ற சில ஆலோசனைகளை முன்வைத்து உள்ளது இந்த கட்டுரை !

விவசாயம் போல் நீர்ப்பாசனமும் கோவிட் –19ல் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தன. நீர்ப்பாசனம் மேம்பட அரசுக்குப் பல திட்டங்களை முன்வைத்து “தமிழ்நாட்டில் நீர்ப்பாசனம் கோவிட்-19 காலத்துக்கு முன்பும்-பின்பும்’ என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏரி பாசனம் மிக இன்றியமையாதது தமிழ்நாட்டில் உள்ளது. ஏரிகளில் படியும் வண்டல் மண்ணை தேவையானபோது கட்டணம் இன்றி அகற்றி எடுப்பதற்கு விவசாயிகள் அனுமதிக்கப்பட வேண்டும். ஏரிகள், கால்வாய்கள் அனைத்திற்கும் தண்ணீரைப் பயன்படுத்துவோர் சங்கங்கள் உருவாக்கப்பட்டு அவற்றை முறையாக செயல்பட வைக்க வேண்டும். இதுபோல் இன்னும் சில திட்டங்களை முன்வைத்து உள்ளது இந்த கட்டுரை.
“ஊதியம் பெறும் வீட்டுப் பணியாளர்கள்” பற்றிய கட்டுரை எளிய மனிதர்களின் வாழ்வாதாரம் கோவிட் -19ஆல் அதிகம் பாதித்துள்ளதை விவரித்துள்ளது.
வீட்டு வேலை செய்யும் பெண்கள்தான் அதிகம் இந்த பெரும் தொற்று காலத்தில் பாதிப்பு அடைந்தனர். இவர்கள் எதிர் கொண்ட பெரிய பிரச்சனை திடீரென்று வேலையில்லாமல் போனது தான். ”பெரும்பாலானோர் பெரு முடக்கத்தால் வீட்டு வேலை அவர்களே செய்து கொள்ளப் பழகிவிட்டார்கள் என்றும் மீண்டும் எங்களை கூப்பிட மாட்டார்கள் என்று ஒரு பெண்மணி குறிப்பிட்டுள்ளார். அதே போல் பல வீடுகளில் கூப்பிடவில்லை.”
இவர்கள் நிலையை சீர்படுத்த அரசுக்கு சில ஆலோசனைகளைச் சொல்லியுள்ளது இந்த கட்டுரை.  மாநகராட்சி வார்டுகள் வழியாக வீட்டுப் பணியாளர்கள் தேவைக்கான பதிவு மூலம் வீட்டுப்பணியாளர் வேலைகளை முறைப்படுத்தக் கோருகிறது.

ஏழு முக்கிய பிரிவுகளில் இந்த 18 கட்டுரைகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

1) பேரியல் பொருளாதாரக் காட்சிப் புலம்

2) விவசாயக் கொள்கைச் சீர்திருத்தங்கள்

3) சுற்றுச்சூழல் கொள்கை மற்றும் சந்தைகள்

4) வர்த்தகம் மற்றும் தொழில்

5) தொழிலாளர்

6) உள் கட்டமைப்பு மேம்பாடு

7) உள்ளூர் நிர்வாகம் மற்றும் சமூக மேம்பாடு

கோவிட்-19ம் புலம்பெயர்தலும்” கட்டுரை கோவிட் காலத்தில் மாநிலம் விட்டு மாநிலம் சென்ற புலம் பெயர்ந்த மனிதர்களின் கண்ணீர் கதையை பல தரவுகளுடன் கே.ஜாபர், ஏ.கலையரசன் எழுதி உள்ளனர்.  தமிழ்நாடு அரசு இங்கிருந்து சென்ற வெளிமாநில மக்களைப் பாதுகாப்பாக இரயில்  அனுப்பி வைத்தது முதல் கால் நடையாக தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்ற அனைத்துவித மனிதர்களின் துயரங்களை விவரித்து இவர்களின் பிரச்சனையை தீர்க்க அரசு உடனடியாக செய்ய வேண்டிய குறுகிய கால நடவடிக்கைகள், 2-5 ஆண்டுகள் செய்ய வேண்டிய நடுத்தர கால நடவடிக்கைகள் என்று இரண்டுவிதமான ஆலோசனைகளை கொடுத்து உள்ளனர்.

புத்தகம் முழுவதும் மிக ஆழ்மன தரவுகள், ஆராய்ச்சிகள் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகளை நிதி அமைச்சர், திட்டக் குழு துணைத் தலைவர் அவற்றைக் குறிப்பிட்டுப் பேசினார்கள்.

PTR பழனிவேல் தியாகராஜன் பேசும்போது தரவுகள் ஒரு அரசுக்கு மிக முக்கியம். பல சமயம் அவை சரியாகக் கிடைப்பதில்லை அப்பொழுது இது போல சுயாதீனமான தரவுகள் (independent data) மூலம் தீர்க்க முடிந்தால்  அரசாங்கத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். அதன் மூலம் கொள்கைகளை வகுக்க முடியும். அந்த வகையில் இந்த நூல் எங்களுக்கு உதவும்.

ஆச்சரியம் என்னவென்றால், அரசு பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில் பல ஆயிரம் ஊழியர்கள் பணி புரிகிறார்கள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை’’  என்று குறிப்பிட்டார்.

திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் இதையே இன்னும் அழுத்திக் குறிப்பிட்டார். அரசுக்குச் சரியான தரவுகள் கிடைப்பதில்லை. மாநில அரசுத் துறைகள் தரவுகளை சேகரிக்க வேண்டும். அந்த தரவுகளை விரைவாகக் கிடைக்கச் செய்து  கிடைக்கப் பெற்ற தரவுகளை பகுப்பாய்வு செய்து சுருக்கத்தை வழங்கும் திறன் கொண்ட எம்ஐடிஎஸ்(MIDS) போன்ற நிறுவனங்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் பல ஆண்டுகளாக எத்தனையோ மக்கள் நலத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அவை சமூகத்தில் என்ன தாக்கங்களை , மாற்றங்களை உருவாக்கி உள்ளன என்பதற்கு எந்த ஆய்வுகளும், தரவுகளும் கிடையாது ‘’ என்று பேசினார்.

MIDS தலைவர் கோபால்சாமி பேசுகையில்  Indian Council of Social Science Research அமைப்பு நிதி உதவி முறையை மாற்றியதால் MIDS கடந்த 2 ஆண்டுகளில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதனால் தமிழக அரசிடம் நிதியுதவி கோரி MIDS நிறுவனம் முன்மொழிவை (Proposal) சமர்ப்பிக்கும் என்று குறிப்பிட்டார்.

புத்தகத்தைத் தொகுத்த ஆசிரியர் ப.கு.பாபு தன் உரையில் வந்திருந்த அனைவரையும் வரவேற்று அவைகளைக் குறித்துச் சிறு அறிமுகத்தைக் கொடுத்தார். கோவிட்-19 பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழ்நாடும் ஒன்று அந்த பாதிப்புகள் என்ன என்று  இந்த புத்தகம் துல்லியமாக விவரித்து உள்ளது.

உணவுப் பாதுகாப்பு, மலிவு விலை வீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை தொற்று நோய்க்கு பின் மற்றும் சமூக வளர்ச்சிக்கு உதவுவதில் அரசு மற்றும் ஊராட்சி  மன்றங்களின்  பங்கு ஆகியவை இந்த நூலில் ஆராயப்பட்டுள்ளது’’ என்று பேசி முடித்தார்.

மிக ஆழமான தரவுகளைக் கொண்ட இந்த புத்தகம் பொது மக்களும் வாசிக்க ஏற்ப தமிழில் கொண்டு வந்து உள்ளனர். நிச்சயம் இந்த கட்டுரைகள் படிக்கும்பொழுது தமிழ் நாட்டின் கோவிட் கால பிரச்சனையை எப்படி சரி செய்யலாம் என்று ஆலோசனைகளுடன் இருப்பது சிறப்பு.

கட்டுரையாக்கம், நூல் விமசனம்; இளஞ்செழியன்

நூல் கிடைக்கும் இடம்

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்

79, இரண்டாம் பிரதான சாலை, காந்தி நகர்,

அடையார், சென்னை- 600020

044-24412589

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time