வருமான வரித்துறை அரசாங்க அமைப்பு தானா? ஆட்சியாளர்களின் கட்டப் பஞ்சாயத்து அமைப்பா? சசிகலா மீதான கூடுதல் சொத்து சேர்த்த வழக்கை வாபஸ் பெற்றது ஏன்? அன்புச் செழியன் உள்ளிட்ட திரைத்துறையினர் மீதான வருமான வரித்துறை ரெய்டுகளின் பின்னுள்ள அரசியல் நோக்கங்கள் என்ன?
ஒரு அரசு அமைப்பு என்றால், பாரபட்சமற்று இருக்க வேண்டும் என்பது மாத்திரமல்ல, வெளிப்படைத் தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவிலேயே இல்லாத வகையில் சசிகலா சம்பந்தப்பட்ட சுமார் 120 க்கு மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரி சோதனை நிகழ்த்தினர். அதில் என்ன கண்டடைந்தார்கள்? எவ்வளவு பணம், சொத்து சசிகலா சேர்த்து வைத்துள்ளார்? அவரிடம் இருந்து அரசு கருவூலத்திற்கு எவ்வளவு பணம் கொண்டு வரப்பட்டது? இந்த கேள்விகளுக்கு எல்லாம் வருமான வரித்துறையிடம் ஏதாவது பதில் இருக்கிறதா?
ஆனால், தற்போது சசிகலாவிற்கு எதிராக தொடுக்கப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கை வருமான வரித்துறை வாபஸ் வாங்கிக் கொண்டுள்ளது. சசிகலாவிற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை கைவிடுவதாக வருமான வரித்துறை தெரிவித்ததை சென்னை உயர் நீதிமன்றமும், ஏற்றுக் கொண்டு அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றமாவது இதை கேள்விக்கு உட்படுத்தி இருக்கலாம். அப்படியானால், இத்தனை வருடங்களாக இவ்வளவு ரெய்டு நடத்தியது எல்லாம் ஒரு அப்பாவிக்கு எதிராகவா?
முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும், குட்கா விற்பனையில் சம்பந்தப்பட்டவருமான விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கு பிறகு ஐந்தாறு வருடங்கள் உருண்டோடிவிட்டன. இன்று வரை எந்த நடவடிக்கையுமே இல்லை. இது போல எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தப்பட்ட ரெய்டுகளுக்கும் விடை இல்லை. பன்னீர்செல்வம் வீட்டில் இது வரை மத்திய அரசின் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியதே இல்லை. ஆனால், அவர் பல்லாயிரம் கோடிகளுக்கு சொத்து சேர்த்து வைத்துள்ளதை தேனீ மாவட்ட மக்கள் மட்டுமின்றி, தமிழகமே அறியும்.
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு வருமான வரித்துறை இரண்டு முறை முறையாக வருமான வரி கட்டாதற்காக எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது. இதற்கிடையில் அவர் மோடி எழுதிய புத்தகத்திற்கு புகழ்ந்து அணித்துரை எழுதி தந்தார்! அதுவும் அம்பேத்காருடன் மோடியை ஒப்பிட்டு எழுதி இருந்தார். இதற்கு பின்பு வருமான வரித்துறை தன் வாலைச் சுருட்டிக் கொண்டது.
தமிழகத்தின் பிரதான திரைப்பட பைனான்சியர், விநியோகஸ்தர் அன்புச்செழியன் அவரது சகோதரர் அழகர்சாமி ஆகியோர் சம்பந்தப்பட்ட வீடு, அலுவலகங்களில் என சுமார் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தி உள்ளது. இவர்களுடன் கலைப்புலி தாணு, ஞானவேல்ராஜா, எஸ்.ஆர். பிரபு, சத்யஜோதி தியாகராஜன், போன்ற தயாரிப்பாளர்கள் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது.
2020ஆம் ஆண்டும் அன்புச் செழியன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது. இவர் ஒன்றும் பெரிய தயாரிப்பாளர் இல்லை. வெள்ளைக்கார துரை, தங்க மகன், மருது, ஆண்டவன் கட்டளை என நான்கே படங்களைத் தான் தயாரித்து உள்ளார். ஆனால், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும்பாலான பிரதான தமிழ் படங்களுக்கு அன்புச் செழியன் தான் நிதியளிப்பு செய்வதாக சொல்லப்படுகிறது. இவர் மீது இடையிடையே சில கடுமையான விமர்சனங்கள் எழுந்த போதும், சகல பிரிவினரும் இவரது நிதி உதவியை பெற்றுத் தான் திரைப்படம் தயாரித்து வருகின்றனர்.
தாணு ரஜினியை வைத்து தயாரித்த கபாலியாகட்டும், போனி கபூர் அஜித்தை வைத்து எடுத்த வலிமையாகட்டும், கல்பாத்தி அகோரம் விஜய்யை வைத்து தயாரித்த பிகிள் ஆகட்டும், கமல் சமீபத்தில் எடுத்த விக்ரம் 2 வாகட்டும் அனைத்துமே அன்புச் செழியனின் நிதியளிப்பை பெற்று நடந்துள்ளது எனத் தெரிய வருகிறது. அதாவது தமிழில் வெளி வருகிற சுமார் 70 சதவிகித படங்கள் அன்புச் செழியன் நிதி உதவியை பெற்று வெளி வருகின்றன. அன்புச் செழியன் உதய நிதி ஸ்டாலினுக்கும் நெருக்கமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில் மார்வாடிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய தமிழ் சினிமா துறையில் அன்புச் செழியன் எப்படி முக்கியத்துவம் பெற்றார் என விசாரிக்கும் போது, இவர் இரண்டு முதல் மூன்று சதவிகித வட்டிக்கு பணம் தருவதாகவும், அதிக நிபந்தனைகள் இன்றி உடனடியாக பணம் தந்து வருவதாகவும் சொல்கின்றனர்.
தமிழ் சினிமாவில் பைனான்சியர்களாக இருந்த மார்வாடிகளான முகன் சந்த் போத்ரா, மோகன்குமார், பாபிகா ஜெயின் போன்றவர்களிடம் தயாரிப்பாளர்கள் பட்ட அவஸ்த்தைகளை கேட்டால் வால்யூம், வால்யூம்களாகச் சொல்கிறார்கள்! தமிழ் செழியனின் வருகை மார்வாடிகளை கிட்டதட்ட அல்லது முற்றிலுமாகவே தமிழ் சினிமா பைனான்ஸில் இருந்து அப்புறப்படுத்தி விட்டதாகச் சொல்லப்படுகிறது.
சமீப காலமாக – பாஜக ஆட்சிக்கு வந்தது தொடங்கி – தமிழகத்தில் சகல தொழில்களிலும் மார்வாடிகள் கால் பரப்பி வருகின்றனர். பிரம்மாண்ட தொழிற்சாலைகள் தொடங்கி சாதாரண சிறு கடைகள் வரை சிறு நகரங்களில் கூட வியாபித்து வருகின்றனர். தமிழகத்தில் அதிகமாக நிலபுலன்களையும் வாங்கி குவிக்கின்றனர். ஆனால், தமிழ் சினிமாவில் அவர்களால் கோலோச்ச முடியவில்லை. இந்தக் காரணத்திற்காகவும் அன்புச் செழியன் அடிக்கடி டார்கெட் செய்யப்படுகிறார் என்பதை புறம் தள்ள முடியாது.
இந்திய மக்கள் தொகையில் ஐந்து சதவிகிதம் கூட இல்லாத மார்வாடிகள் தான் இந்திய பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்தியாவில் தொழில்துறையில் அவர்களின் முதலீடு சுமார் 24 சதவிகிதம் என சொல்லப்படுகிறது. லஷ்மி மிட்டல், ஜெக்மோகன் டால்மியா, பிர்லா குருப்ஸ், நிதி அகர்வால், ராகுல் பஜாஜ், கிஷோர் பியானி, அபிஷேக் ஜெயின் என நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய தொழில் சாம்ராஜ்ஜிய சக்ரவர்த்திகள் கோலோச்சும் ஒரே இனம் இந்தியாவில் மார்வாடிகள் தான்! இது குறித்து தாமஸ் டிம்பர்க் எழுதிய புத்தகத்தை வாசித்தால் இவர்கள் அரசாங்கத்தையே ஆட்டுவிப்பது தெரிய வரும். ஆனால், தமிழ் சினிமாவில் மட்டும் மார்வாடிகளால் பெரிதாக கோலோச்ச முடியவில்லை.
தமிழ் சினிமா துறை ஆண்டுக்கு சுமார் 250 படங்கள் தயாரிக்கிறது. அவ்வளவு பெரிய இந்தி சினிமா துறையில் கூட ஆண்டுக்கு முன்னூறு படங்களை எட்ட முடியவில்லை. இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸ் ரெவின்யூவில் 13 சதவிகிதத்தை தமிழ் சினிமா துறை பெற்று வருகிறது. இதன் மூலமான வருமானம் மத்திய அரசுக்கும் தான் கிடைக்கிறது. ஆனால், என்ன செய்வது மார்வாடிகளோ, வட இந்தியர்களோ தமிழ் சினிமாவில் கோலோச்ச முடியவில்லை.
கலைப்புலி தாணு திராவிட உணர்வாளர், ஞானவேல் ராஜாவும், எஸ்.ஆர்.பிரபுவும் சூர்யா மற்றும் கார்த்திக்கை அதிகமாக வைத்து படம் எடுத்தவர்கள்! சூர்யா சமரசமற்றவர், அவர் எப்போதும் எளியவர்கள் பக்கம் நிற்பவர். மத்திய ஆட்சியாளர்களின் கல்வியை எளியவர்களுக்கு எட்டாக் கனியாக்கும் புதிய கல்வி கொள்கையை எதிர்த்தவர். இதனால், சங்க பரிவாரங்களின் கொடும் விமர்சனங்களுக்கு ஆளானவர். இவர் தயாரித்து நடித்த ‘சூரரை போற்று’ என்ற திரைப்படம் இந்த ஆண்டு விருது தேர்வு குழுவால் தவிர்க்க முடியாத முக்கியத்துவத்தை பெற்றுவிட்டது. அப்போதே சங்கிகள் கடும் விஷக் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். ”தங்கள் தலைமை தவறு செய்துவிட்டது. இதற்கு பரிகாரம் செய்யுங்கள்” என கூக்குரலிட்டனர். இதோ பரிகாரம் செய்யப்பட்டுள்ளது வருமான வரித்துறை வாயிலாக!
முன்னதாக சூர்யா புதிய கல்விக் கொள்கையை விமர்சித்த போதே வருமான வரித்துறையை ஏவினார்கள். கணக்கு, வழக்குகள் சரியாக வைத்திருந்தபடியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
Also read
எதிர் அரசியல் கருத்து கொண்டவர்களை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்ளத் துணிவின்றி, வருமான வரித்துறையை ஏவி பணிய வைப்பதற்கு என்ன பெயர்? மற்றொரு புறம் ஊழலில் சம்பாதித்த பணத்தை அரசாங்க கஜானாவில் சேர்பதற்கு மாறாக பேரம் பேசி பிடுங்கிக் கொள்வது தான் ஊழலை எதிர்ப்பவர்களின் யோக்கியதையா?
மத்திய பாஜக அரசு தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. அரசியலில் மாற்றுக் கருத்து உள்ளவர்களை பணிய வைக்கவும் செல்வாக்கானவர்களை தன் வசப்படுத்தவும், குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு ஆதரவாகவும், மற்றொரு பிரிவினருக்கு எதிராகவும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது. இது மிகவும் கோழைத்தனம்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
//எதிர் அரசியல் கருத்து கொண்டவர்களை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்ளத் துணிவின்றி, வருமான வரித்துறையை ஏவி பணிய வைப்பதற்கு என்ன பெயர்? மற்றொரு புறம் ஊழலில் சம்பாதித்த பணத்தை அரசாங்க கஜானாவில் சேர்பதற்கு மாறாக பேரம் பேசி பிடுங்கிக் கொள்வது தான் ஊழலை எதிர்ப்பவர்களின் யோக்கியதையா//