தலித் இளைஞர்களை வேட்டையாடும் தமிழக போலீஸ்!

-சாவித்திரி கண்ணன்

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் ஒரு கொடுமை என்றால், அதற்கு பிறகு நடந்த கலவரத்தை காரணமாக்கி காவல்துறை போடும் கணக்கு வேறு மாதிரியாக உள்ளது. கலவரத்திற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத பட்டதாரி இளைஞர்கள் முதல் பாமரக் கூலிகள் வரை சுற்றி வளைத்து  தலித்துகள் கைது! இதன் பின்னணி என்ன?

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக ஆங்கில இந்து பத்திரிகையில் அந்த பள்ளிக் கூடத்தை அதிகம் தாக்கியது ஆதி திராவிடர்கள் எனவும், ஆகவே, இது கவுண்டர் – தலித் சாதி மோதலாக வடிவம் கொள்ளும் என்றும் உளவுத் துறை சொன்னதாக செய்தி வெளியிட்டு இருந்தனர்.

ஆக, தாங்கள் கூறியதை நிருபிக்க, தற்போது காவல்துறை களம் இறங்கி கடும் பிரயத்தனம் செய்கிறது போலும்!

ஜீலை 17 ஆம் தேதி காலை ஒன்பதரை மணியளவில் கலவரம் வெடித்தது. அது 12.30 மணியளவில் ஏறத்தாழ முடிவுக்கு வந்தது. ஆனால், மாலை மூன்று மணி வரை காவல்துறை யாரையுமே கைது செய்யவில்லை. கலவரம் நடந்ததைக் கேள்விப்பட்டும், கொழுந்து விட்டு எரிந்த தீ ஜீவாலையை வேடிக்கை பார்க்கவும், மாலை நான்கு, ஐந்து மணி வாக்கில் வந்த சிறுவர்களையும், இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர் எனத் தெரிய வருகிறது.

ரூட்ஸ் தமிழ் சேனல் சார்பில் களத்திற்கு சென்ற  பத்திரிகையாளர் கரிகாலன் இது தொடர்பாக இன்று அடுத்தடுத்து சில காணொலி பதிவுகளை வெளியிட்டு உள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது;

கைது செய்யப்பட்டவர்கள் சார்பான வழக்கறிஞர் ஜெயச்சந்திரன்; இந்த பிரச்சினையில் கைது செய்யப்பட்டு உள்ளவர்கள் 15 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம். இதில் செமஸ்டர் பரிட்சைக்கு தயாராகிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கைதாகியுள்ளார். மேலும், பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் கைதாகியுள்ளான். அவனது வயதை போலீசார் 19 எனக் குறிப்பிட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் கலவரத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள். யார் யாரெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதை அடையாளம் கண்டு கொங்கு வேளாள இளைஞர்கள் பிடித்து அடித்து காவல்துறையில் ஒப்படைத்த வகையில் சிலர் கைதாகியுள்ளனர்.

உடல் நிலை சரியில்லாத அப்பாவிற்கு மருந்து வாங்க சென்ற இளைஞர் ஒருவரும் கைதாகியுள்ளார். கர்பிணி மனைவியை ஆஸ்பிட்டலில் விட்டுவிட்டு மருந்து வாங்க வந்த இளைஞர் கைதாகியுள்ளார்…! ஏன், இப்படி சம்பந்தமில்லாதவர்களை கைது செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் குறித்து அவரவர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் தரவில்லை. நீதிமன்றத்திலும் ஆவணங்களை சரியாக காட்டவில்லை. ‘கைது செய்தவர்களை 24 மணி நேரத்தில் கோர்டில் ஆஜர்படுத்த வேண்டும்’ என்பது தான் சட்டம். ஆனால், சட்டவிரோதமாக இவர்களை இரண்டு நாள் காவலில் ரகசியமாக வைத்து பிறகு நீதிமன்றத்தில் பொத்தாம்பொதுவாக ஆஜர்படுத்தி சிறையில் தள்ளிவிட்டனர். கடலூர் சிறையில் சிலர், திருச்சி சிறையில் சிலர் என அடைக்கப்பட்டு உள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று கலவரம் செய்தவர்கள் பள்ளிக் கூடத்தின் பின்புறம் இருந்த மாட்டுக் கொட்டகையில் நுழைந்து பால்தரும் மாட்டின் காம்பை தீ வைத்து கொழுத்த முற்படுவது போலவும் அதை ஒருவர் தடுப்பது போலவும் பேசுவது போல ஒரு காணொலி வந்தது. அது முற்றிலும் செட் அப்! அதாவ்து டிராமா! கிராமங்களில் எப்பேற்பட்ட அயோக்கியனும் இப்படி ஒரு நிகழ்வை நினைத்துக் கூட பார்க்கமாட்டான். இப்படி ஒரு நடக்காத ஒரு நிகழ்வை நடக்க இருந்தது போல காட்டுவதன் மூலம் அநீதிக்கு எதிராக அறச் சீற்றத்துடன் போராடிய மக்களை மிகவும் கொடூரமானவர்கள் என்பதாக பொது தளத்தில் சித்தரிக்க செய்யப்பட்டு உள்ளனர். இது போல சிந்திப்பது எல்லாம் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் மட்டுமே. அவர்கள் தான் இந்த கலவரத்தில் மிகவும் சம்பந்தப்பட்டு உள்ளனர்’’ என்றார்.

மாரியம்மாள் என்பவர் கூறியதாவது; என் மகன் பேரு வினோத். அவன் திருப்பூர் மில்லில் வேலை பார்த்து வந்தான். அந்த வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு வேலை செல்ல திட்டமிட்டு இருந்தான். கலவரம் நடந்த விஷயம் எதுவுமே அவனுக்கு தெரியாது. வீட்டில் தான் இருந்தான். சாயங்காலம் வாக்கில் செல்போனை ரிப்பேர் செய்து வருகிறேன் என்று சொல்லிச் சென்றான். கூடவே என் தம்பியும் சென்றான். செல்போன் ரிப்பேர் செய்துவிட்டு வரும் போது பெட்ரோல் பேங்கில் பெட்ரோல் போட தம்பி போனான். அது வரை சற்று வெளியே வந்து செல்போனில் பேசிக் கொண்டு இருந்தவனை அப்படியே அள்ளிக் கொண்டு சென்றுவிட்டது போலீஸ். அவன் எனக்கு ஒரே மகன். எந்த வம்பு, தும்பிற்கும் செல்லாதவன். நான் வாழ்வதே அவனுக்கு தான். எனக்கு வேரு யாருமில்லை. என் பிள்ளையை எங்கிட்ட கொடுக்கணும்..”என பேசும் போதே மாரியம்மாள் கதறிக் கதறி அழுதார்.

காசியின் கைதும், கஸ்தூரியின் கதறலும்!

கஸ்தூரி என்பவர் கூறியதாவது; என் கணவர் பெயர் காசி. அவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை செய்கிறார். அவருக்கு இரவு டுயூட்டி என்பதால் பகலில் நன்கு தூங்கிவிடுவார். கலவரம் நடந்த அன்று காலை தொடங்கி மாலை மூன்று மணி வரை அவர் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அன்று இரவு டியூட்டி இருப்பதால் அதற்குள்  கடைக்கு போய்விட்டு வரலாம் என வெளியே சென்றவரைத் தான் நடுரோட்டில் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர், போலீசார். எதற்காக கைது செய்யப் படுகிறோம் என்பதே அவருக்கு தெரியவில்லை. இதை ஜூனியர் விகடன் சில மணித்துளிகளில் செய்தியாக காண்பித்தது. அதைக் கண்டு தான் நான் போய் போலீஸ் ஸ்டேசன் போய்க் கேட்டேன். அவர் செல்போனை சோதனை இடுங்கள் அவர் எனக்கும், அவரது அம்மாவுக்கும் மட்டுமே பேசுபவர். வாட்ஸ் அப் பழக்கம் கூட அவருக்கு கிடையாது. அப்படி இருக்க ஏன் இப்படி கைது செய்தீர்கள் என்றேன்.. அவரது தாய் படுத்த படுக்கையாக நோய்வாய்ப்பட்டு உள்ளார். மகன் கைதால் அவர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்” என்றார்.

ரம்யா என்பவர் கூறியதாவது; என் கணவர் பெயர் ராஜா. சம்பவத்தன்று சாயங்காலமாக தன் பாட்டி இறந்த செய்தியைக் கேட்டு சாவுக்கு புறப்பட்டு சென்றார். கனியாமூரை கடந்து தான் போக வேண்டும். அப்போது அந்தப் பகுதி அமைதியாகத் தான் இருந்தது. போலீஸ் இவரை தடுத்து நிறுத்தி எங்கே போகிறாய் 144 தடை உத்தரவு உள்ளது என்றனர். அவர் எனக்கு இந்த தகவல் தெரியாது பாட்டி செத்துட்டாங்க. அதுக்கு போய்க்கிட்டு இருக்கேன்னு சொல்லி இருக்கார். ஆனாலும், அவரை கைது செய்து திருச்சி சிறையில் போட்டுவிட்டனர்” என்றார். இங்கே சொல்லப்பட்டவை சில சாம்பிள்களே! இன்னும் நூற்றுக்கணக்கான தாய்மார்களின் கதறல்கள் உள்ளன. பெரிய ஊடகங்கள் அவற்றை எழுத வேண்டும்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜீ அவர்களை கேட்ட போது, ”எங்கள் அமைப்பை சேர்ந்த தோழர்கள் அன்று பேனர் எடுத்துச் சென்று  நீதி கேட்டு கோஷம் போட்டுவிட்டு திரும்பிவிட்டோம். இதில் தோழர் ராமலிங்கம் நடைபாதையில் சென்று கொண்டிருந்த போது அந்த பக்கம் வழியாக வந்த போலீஸ் வேனில் இருந்த இன்ஸ்பெக்டர் ”அய்யா எந்த பக்கம் போறீங்கன்னு கேட்டு,..வாங்க ஏறிக்கிடுங்க நாங்களும் அந்தப் பக்கம் தான் போகிறோம்னு” சொல்லி வேனில் ஏற்ச் சொல்லி இருக்காங்க. அவர் சற்று உடல் நலன் இல்லாதவர். ஆகையால், அவர்கள் அன்பொழுக கூப்பிடுவதை நம்பி வேனில் ஏறினார். ஆனால், அவர்கள் நேராக ஸ்டேசனுக்கு எடுத்துச் சென்று வழக்கு போட்டு சிறையில் தள்ளி விட்டனர். அவருடன் நான்கு அப்பாவி இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். இப்படி கைது செய்து விட்டு அவர்களே தயாராக எழுதி வைத்திருந்த ஒரு பேப்பரில் கையெழுத்து கேட்டனர். அதை படித்து பார்க்க அனுமதிக்காமல் மிரட்டி வற்புறுத்தி கையெழுத்து வாங்கி உள்ளனர். இதை நீதிமன்றத்திலும் அவர் தெரிவித்து உள்ளார். ஆயினும் விடுவிக்கவில்லை” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக போராட்டங்களையும், பொதுக் கூட்டத்தையும் நடத்தி வருகிறது. சி.பி.எம்மின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களை தொடர்பு கொண்ட போது, ”சற்று நேரத்திற்கு முன்பு தான் எங்கள் கட்சி சார்பாக முதலமைச்சரை சந்தித்து, மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் தொடர்பில்லாத அப்பாவி இளைஞர்களை விடுவிக்க வேண்டும். என சொல்லி வந்தோம். அவரும் ‘பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக’ குறிப்பிட்டார். என்ன நடக்கிறது என பொறுத்து இருந்து பார்ப்போம்” என்றார்.

”கொங்கு மண்டலத்தில் செல்வாக்கான கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் செல்வாக்குள்ள கோடீஸ்வர பெரும்புள்ளிகள் காவல்துறைக்கு தரும் நெருக்குதல் காரணமாகத்தான் இப்படி அப்பாவியான தாழ்த்தப்பட்டவர்கள் கைது நடக்கிறது” என்பதாக அச் சமூகத்தில் உள்ள நடு நிலையான நல்லோர்கள் சிலரே நம்மிடம் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டனர்.

நடக்கும் சம்பவங்கள் நாம், ’தமிழ் நாட்டில் தான் உள்ளோமா? அல்லது உத்திரபிரதேசத்தில் உள்ளோமா…?’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த வேண்டிய காவல் துறையே சட்டவிரோத கைதுகளை அரங்கேற்றி வருகிறது. காவல் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளதா? அல்லது மத்திய அரசு அதிகாரத்தை எடுத்துக் கொண்டதா?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time