தமிழக அரசியலும், நடத்தப்பட்ட யாகங்களும்..!

- சாவித்திரி கண்ணன்

யாகம், வேள்வி என்பவை இறை நம்பிக்கை சம்பந்தப்பட்டதா? அல்லது அச்ச உணர்வை பணமாக்கும் பிழைப்புவாதிகள் சம்பந்தப்பட்டதா? யாகங்களால் நடக்கவுள்ள எதையும் தடுக்க முடிந்திருக்கிறதா? ஜெயலலிதா, சசிகலா நடத்திய யாகங்கள்! சபரீசன் யாகம் நடத்தியதன் பின்னணி என்ன? நோக்கங்கள் என்ன?

யார் ஒருவருக்கும் உள்ள இறை நம்பிக்கையை நாம் விமர்சிப்பது தேவையற்றது என்பதை ஏற்கலாம். ஆனால், பெரும் பொருட்செலவில் நெய்யையும், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்தவற்றையும் நெருப்புக்கு அர்ப்பணிக்கக் கூடிய – பல லட்சங்கள் பார்ப்பனர்களுக்கு தட்சணையாக தரக் கூடிய – யாகம், வேள்விகள் போன்றவற்றையும் இது அவரவர்களின் தனிப்பட்ட விவகாரம் என நாம் விலகி நிற்கலாமா? என்றால், இல்லை, இது விவாதத்திற்கானதே!

நேர்மையற்ற வழிமுறைகளில் பணம்,சொத்து சேர்ப்பவர்களும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மக்களுக்கு இன்னல் விளைவித்த பெரும் பணக்காரர்களுமே இது போன்ற பெரும் பொருட் செலவிலான யாகங்களை நடத்துகிறார்கள் என்பது கவனிக்கதக்கது. இது போன்ற வேள்விகள் இப்படிப்பட்டவர்களை காப்பாற்றுகிறதா? என்பதை அனுபவபூர்வமாக அலசுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

சில மாதங்களூக்கு முன்பு இலங்கை பிரதமராக இருந்த ராஜபட்சே திருப்பதி கோவிலுக்கு வந்து ஏழுமலையானை தரிசித்து சென்றார். அவர் பல முறை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும் குடும்ப சகிதமாக வந்துள்ளார். கோவில்களுக்கு நிறையவே காணிக்கை தந்து செல்வார். ஆனால், அதனால் எல்லாம் அவர் பாவம் தொலைந்ததா? அவர் பதவியை தக்க வைக்க முடிந்ததா? இவற்றுக்கு பிறகு தான் அவர் வீட்டை மக்கள் கொளுத்தினார்கள். அவர் பதவியை துறக்க வேண்டியதாயிற்று!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் பக்தர்கள் யாகம் நடத்துவதற்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளதானது முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்காக தளர்த்தப்பட்டு, பிரம்மாண்ட யாகம் நடத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இந்த யாகத்தின் பெயர் சத்ரு சம்ஹார யாகமாம்! பெரும் பொருட் செலவிலான இந்த யாகத்தை பார்ப்பனர்கள் தான் நடத்திக் கொடுத்து உள்ளனர். இதற்காக காலை ஆறு மணி தொடங்கி பத்து மணி வரை அயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கபடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படி யாகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை பாஜகவின் ஆலய மேம்பாட்டு குழுவின் துணைத் தலைவர் மகேஷ் என்பவர் தான் செய்துள்ளார். ஸ்டாலின் பதவி ஏற்றது தொடங்கி தமிழகத்தில் சில கோவில் திருவிழாக்களில் அடுத்தடுத்து தேர் சரிந்து மக்கள் இறக்கும் சம்பவங்கள் நடப்பதற்கு பரிகாரம் செய்ய இந்த யாகம் நடத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஆக, சாலை மேடு பள்ளமாக இருந்ததோ, அதிக சக்தி கொண்ட மின் அழுத்த கம்பி மீது உரசியதோ, முறையான திட்டமிடலின்மையோ தேர் சரிந்ததற்கான காரணமில்லை போலும்.

சபரீசன் சமீப காலமாக பிரம்மாண்டமாக விஸ்வரூபம் எடுத்து வருகிறார். பெருந்தொழில்களில் முதலீடு செய்துள்ளார். ஒரு நிழல் முதல்வர் போலவும் மறைமுக அதிகார மையமாக செயல்படுகிறார். இவரை ஸ்டாலினின் மனசாட்சி என்றும் அதிகார வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இதனால், அவருக்கு பல புதிய எதிரிகள் தொழில் ரீதியாக உருவாகி இருப்பதால், இந்த சத்ரு சம்ஹார யாகத்தை நடத்தினார் எனவும் சொல்லப்படுகிறது.

ஆக, பணபலம் வலுவாக இருக்கிறது, அதிகார பலமும் முழுமையாக இருக்கிறது, பல தொழில்களை நிர்வகிப்பவர் என்ற வகையில் அறிவாற்றலும் உள்ளவர் தான். ஆனால், இவற்றை விட எல்லாம் விட யாகம் நடத்தி தான் தன் எதிரிகளை சமாளிக்க வேண்டி இருப்பதாக அவர் நம்பியது ஏன் என்று யோசிக்க வேண்டியுள்ளது.

தமிழகத்தில் யாகம், வேள்வி, பரிகார பூஜைகள் போன்றவை பிரபலமாக ஜெயலலிதா ஒரு வகையில் முக்கிய காரணமாக இருந்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விசாரிக்கப்பட்டு வரும் போது, அவர் வழக்கில் இருந்து விடுபடவும், நிரபராதி என தீர்ப்பு கிடைக்கவும் வேண்டி பல ஜோசியர்களை கலந்து ஆலோசித்த வகையில் பல யாகங்களையும், வேள்விகளையும், பரிகார பூஜைகளையும் சசிகலா சகிதமாக நடத்தினார். இதற்காக செலவான தொகை கணக்கு வழக்கில்லை. ஆனால், எதுவுமே நேர்மையான நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தீர்ப்பை மாற்றி அமைத்து விடவில்லை. ஜெயலலிதா சிறைக்கு செல்வதை தடுக்க முடியவில்லை.

ஜெயலலிதாவிற்கான யாகம், வட சென்னை. போட்டோ; ஒன் இந்தியா

ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருக்கு போராடிய போது பூரண நலமடைய வேண்டி வடசென்னை அதிமுக சார்பில் 108 யாக குண்டங்கள் அமைத்து 108 மூலிகைப் பொருட்களால் பிரம்மாண்ட வேள்வி எனப்படும் மிருத்யுஞ்ச யாகம் நடத்தப்பட்டது. 150 க்கும் மேற்பட்ட வேத ஆகமம் பயின்ற சிவாச்சாரியார்களை கொண்டு லட்ச ஆவர்த்தி பூஜை நடைபெற்றது. சிவாச்சாரியார்களுக்கு லட்சக்கணக்கில் தட்சணை வழங்கப்பட்டது. இதற்கு மொத்ததில் சில கோடிகள் செலவானதாக சொல்லப்பட்டது. 2016 அக்டோபர் 27 ந்தேதி இத்தனை செலவு செய்தும் டிசம்பர் ஐந்தாம் தேதி ஜெயலலிதா இறந்து விட்டார்.

திருப்பூர் இந்து முன்னணி யாகம்

2018 ஆம் ஆண்டு நவம்பர் 23 தொடங்கி மூன்று நாட்கள் திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் இந்து முன்னணி சார்பில் சோடஷ மகாலட்சுமி யாகம் ஒன்று மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் கஜ பூஜை, 108 அஸ்வ பூஜை, 1008 கோ பூஜை ஆகியன கொண்டு சமீப காலத் தமிழகம் கண்டிராத விமர்சையுடன் நடந்தது. உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், வியாபாரம் வளம் பெறவும் சில கோடிகள் செலவில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். ஜி.எஸ்.டி காரணமாக ஏற்கனவே முடங்கியும், நலிந்தும் போயிருந்த கொங்கு வட்டார சிறு, குறுந்தொழில்கள் எதுவும் இந்த யாகத்திற்கு பிறகு எந்த மாற்றமும் காணவில்லை என்பது மட்டுமல்ல, கொரொனா வந்து பல தொழில்களும், வியாபாரமும் நசிந்து போயின!

2017 செப்டம்பர் 12 அன்று மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் புஷ்கர யாகங்கள் பெரிய அளவில் நடந்தன. திராவிடர் கழகமும் மற்றும் சில அமைப்புகளும் இதை எதிர்த்து அங்கு களம் கண்டன! இந்த புஷ்கர யாகத்தில் டி.டி.வி.தினகரன் அணியின் அனைத்து எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர். ஆனால், இவர்களின் எம்.எல்.ஏ பதவி அடுத்த நாளே பறிபோனது.

நம் வாழ்வியல் ஆசான் திருவள்ளுவர் இந்த வேள்விகள் குறித்து சொல்வது என்ன? என்று பார்ப்போம்.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

 உயிர்செகுத் உண்ணாமை நன்று

என்று திருக்குறளில் அறிவுறுத்துகிறார். இதன் பொருள் நெய் உள்ளிட்ட விலை உயர்ந்தவற்றை யாகத் தீயில் வார்த்து ஆயிரம் வேள்விகள் நடத்துவதை விட, ஆங்கோர் உயிரைக் கொன்று உண்ணாமை நன்று என்கிறார் வள்ளுவர்.

மற்றொரு குறளில்

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை,செய்யாமை நன்று

என்கிறார்,வள்ளுவர்.

திராவிட இயக்கத்தின் தனிபெரும் தலைவரான பெரியார் யாகம் குறித்து சொல்வதையும் இங்கே கவனப்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

எத்தனையோ வருஷ காலமாய் யாகம் செய்யப்பட்டு வருவதாய் அறிகிறோம். உலகத்தில் என்ன அக்கிரமம் மாறி இருக்கிறது? என்ன கொடுமை நீங்கியிருக்கின்றது? யாகம் எக்கியம் கிரமமாய் செய்யப்பட்டு வந்த தெய்வீக அரசர்களான ராமன், அரிச்சந்திரன் ஆகியவர்கள் காலத்தில் உள்ள அக்கிரமம், அயோக்கியத்தனம், கொலை பாதகம் எல்லாம் இன்னும் இருக்கவே செய்கின்றன.  எவ்வித மாறுதலும் ஏற்பட்டு விடவில்லை. ஆகையால், நீங்கள் பயந்துவிடாதீர்கள்! ஏமாந்து விடாதீர்கள்! இவையாவும் மக்களை ஏமாற்றுவதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சிகளே அன்றி வேறில்லை.

இப்படி யாகம், சாஸ்திரம், வேதம், மோக்ஷம்,… என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப் படக்கூடாது. யாகத்துக்கு ஏதோ சக்தி இருப்பதாகவோ அது நம்மை ஏதாவது செய்து விடுமென்றோ யாரும் பயப்பட்டு விடாதீர்கள். இந்த தந்திரம் எல்லாம் உழைப்பாளிகளின் உழைப்பை சோம்பேறிகள் சாப்பிடுவதற்காகவே ஒழிய வேறில்லை”என்கிறார் பெரியார்.

ஆக,எதற்காக இந்த திராவிடர் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதோ,எதை மறுத்தும், எதிர்த்தும் பேசி இந்த இயக்கம் வளர்ந்ததோ, எந்த நம்பிக்கையில் மக்கள் திராவிட இயக்கமான திமுகவிற்கு வாக்களித்தார்களோ.. அதற்கு மாறாக பல சம்பவங்கள் நடந்து கொண்டுள்ளன.

முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா பல கோவில்களுக்கு அடிக்கடி செல்கிறார். அது விமர்சனத்திற்கு அப்பாறப்பட்ட தனிப்பட்ட நம்பிக்கை எனக் கொள்ளலாம். ஆனால், தேர்தலுக்கு முன்னால், அவர் பார்ப்பனர்களை வைத்து நடத்திய யாகங்களால் தான் தன் கணவர் முதல்வராக முடிந்தது என வலுவாக நம்புகிறார். பல சிக்கல்களுக்கு இதுவே தொடக்கமாகிறது. அதன் தொடர்ச்சியாகவே அவரது மருமகனின் இந்த வேள்வியையும் பார்க்க முடிகிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time