தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் நீர்பிடிப்பு பகுதிகளான ஏரி,குளங்கள் ஆக்கிரமிக்கப்படுவதும் அதற்கு அரசே பட்டா தந்து ஆதரிப்பதும் தொடர்கதையாகிவிட்டன!தமிழகத்திலுள்ள முதலைப்பட்டி என்ற சிற்றூரில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரியை மீட்கப் போராடிய காரணத்தினால் ஒரே குடும்பத்தில் தந்தையும், மகனுமாக இருவரை ஆக்கிரமிப்பாளர்கள் வெட்டிக் கொன்றனர்! ஆயினும்,அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்த படு கொலைகளுக்கெல்லாம் அஞ்சாமல் இப்போதும் தொடர்ந்து போராடி வருகிறார். சமூக நலனுக்கான போராளிகளை வெட்டிச் சாய்ப்பதால் பின் வாங்கச் செய்யமுடியாது என்பதற்கு இந்தப் சம்பவம் ஒரு எடுத்துக் காட்டாகிறது. கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் முதலைப்பட்டியிலுள்ள நீர்பிடிப்பு  ஏரி 198.42 ஏக்கர் கொள்ளவு கொண்டதாகும். இதுபடிப்படியாகஆக்கிரமிக்கப்பட்டு, 1985ஆம் ஆண்டின் யூடிஆர் சர்வேயில் 39.01 ஏக்கர் மட்டுமே ஏரியாகவும்,   90.27 ஏக்கர் தரிசாகவும்,  59.87 ஏக்கர் அரசு விதைப்பண்ணையாகவும்  சுமார் 10 ஏக்கர்  பாதையாகவும் மறுபதிவாகியுள்ளது. ...