வாசிப்பால் வளர்கிறோம் என்பதற்கு என் வாழ்க்கையே ஒரு சிறிய எடுத்துக்காட்டாகும்! ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். நாளும் ஒரு கட்டுரை எழுதி வருகிறேன். எதிர்காலம் என்னவென்றே அறியாத தற்குறியாக இருந்த என்னை வாசிப்பு தான் வளர்த்தது. தன்நம்பிக்கை தந்தது! பல பெரிய ஆளுமைகளின் நட்பை பெற்றுத் தந்தது! அனைவரும் அறிந்திருக்கக் கூடிய பத்திரிகையாளனாக மாற்றி இருக்கிறது. அன்னைக்கு அடுத்தபடியாக என்னை வளர்த்தவை புத்தகங்களே…! எட்டு வயதில் எனக்கு வாசிப்பு பழக்கம் தோன்றியது. என் வகுப்பு தமிழ் பாட நூல்களை நான் உண்மையிலேயே விரும்பி படித்தேன். ...