கேட்க காதுகள் கூசுகின்றன! மனம் அதிர்கிறது. அவ்வளவு மரியாதை குறைவான வார்த்தைகள்! இத்தனைக்கும் இவரே ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தவர் தான்! தன் இளைய சகாக்களைக் குறித்து இவ்வளவு தரக்குறைவாக பேசும் இவரை தடுக்க யாருமே இல்லையா..? வசீகரமான தமிழ் மொழியை வெறும் வசவு மொழியாக்கி வரம்பு மீறி பேசிக் கொண்டிருக்கும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்திற்கு தீர்வே இல்லையா..? சமீபத்தில் ஐபிஎல் போட்டிகள் வளைகுடா நாட்டின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் அதனை நேரலையில் நாம் பார்த்தோம். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வாகை சூடியது. இந்த கொரோனா 19 தொற்றுப் பரவல் காலத்தில் எந்தவிதமான பெரிய தொந்தரவும் இல்லாமல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகம் நடத்தி முடித்தது. அதற்கு முதலில் ஒரு பாராட்டு தெரிவிக்க வேண்டும். இப்போது நான் தலைப்புக்குள் வருகிறேன். ஒவ்வொரு நாளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் நேரலையில் ஐபிஎல் போட்டிகளை நாம் பார்த்தோம். சடகோபன், பத்ரிநாத், ஆர், ஜெ. பாலாஜி ஆகியோர் சிறப்பாக வருணனை செய்தார்கள். தேவையான நேரத்தில் தகுந்த புள்ளி விவரங்களைத் தந்து ஆட்டத்தின் கோணங்களை நன்றாகவே விளக்கினார்கள். ஆர்.கே, பாவனா, அபினவ் முகுந்த், எஸ்.ரமேஷ், நானியும் சிறப்பாகவே தங்கள் பணியை சிறப்பாக செய்தார்கள். ...