சிவக்குமார் எனும் சிறந்ததோர் மனிதன்!

சாவித்திரி கண்ணன்

யார் ஒருவரையும் புகழ்ந்து பேசவோ,எழுதுவதிலோ நான் எப்போதும் ஆர்வம் காட்டியதில்லை!

’பெரியாரை வியத்தலும் வேண்டாம், சிறியாரை இகழ்தலும் வேண்டாம்’ என்பது நம் முன்னோர்கள் உணர்த்தியது.அதுவே என்  நிலைப்பாடுமாகும்!

எனினும் ஒருவரிடம் காணப்படும் அரிய பண்புகளை, சிறந்த குணநலன்களை சொல்வதன் மூலம் இந்த சமூகம் அதை முன்மாதிரியாகக் கொண்டு பலன் பெறும் எனில்,அதற்கான முழு தகுதியும் கொண்ட ஒருவரை உரிய முறையில் போற்றி, பாராட்டுவதும் ஒரு சமூக கடமையே! அந்த வகையில் நான் ஒரு பதினைந்து ஆண்டுகளாக சிவகுமார்  அவர்களிடம்  பழகிவருவதைப்  இந்த 79வது பிறந்தநாளன்று பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்!

ஏழை,எளிய வீட்டுக் குழந்தைகளுக்கான ஒரு மாலை நேரப்பள்ளி! பெரிய செலவில்லாமல், நானும்,என் மனைவியும் எங்கள் உழைப்பையும், நேரத்தையும் அர்ப்பணித்து அதை திருவான்மியூரில் நடத்தி வந்தோம்! அதில் பங்கெடுத்த ஆசிரியர்களுக்கு ஒரு சிறிய சன்மானம் தேவைப்பட்டது.அது நண்பர்கள் வட்டாரத்தில் கிடைத்தது. வேறு எந்த தேவையையும் யாரிடமும் எதிர்பார்க்கவில்லை! அந்த பாரதியார் மாலை நேரப் பள்ளியின் ஆண்டு விழாவிற்காக, சிவகுமார் சாரை அழையுங்கள் என்று தோழர் நடிகை ரோகிணி சொன்னார். அறிமுகம் தந்தார்.

அந்த அறிமுகம் என் எழுத்தால் வலுப்பட்டது! அவர் ஒரு தீவிர வாசகர் என்பதை பழக,பழக அறிந்தேன். நான் மட்டுமல்ல, அவரது நண்பர்கள் வட்டாரத்தில் அனேகமாக தமிழின் அனைத்து முன்னணி எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும்,ஓவியக் கலைஞர்களும் உள்ளனர்! இதுகூட பெரிய விஷயமல்ல, அத்தனை பேருடனும் இடையறாது அவரே  தொடர்பெடுத்து உறவாடி வருபவராகவும் உள்ளார் என்பதில் இருக்கிறது அவர் தன் வாழ்க்கையை எவ்வளவு உயிரோட்டத்துடன் வைத்துள்ளார் என்பதும், கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பதுவும்! எழுத்தாளர்கள்,பத்திரிகையாளர்கள் எல்லாம் ரெம்ப ஈகோ உள்ளவர்கள் அவர்களோடு தொடர்ந்து உறவைப் பேணுவதே ஒரு கலை! அந்தக் கலையில் கைதேர்ந்தவர் சிவகுமார்! அவர் யார் ஒருவருடன் பழகினாலும் அவர்களை தன்னிலும் உயர்வாக மதிப்பார்!

உதாரணத்திற்கு அவர் என்னிடம் பேசும் போது, ‘’நீங்க பெரிய அறிவாளி, ஆழகாக ஆய்வு செய்து,தோண்டித் துருவி எழுதுறவர்.ஆனால்,என்னுடைய அனுபவத்தில் நான் இதை எப்படி  பார்க்கிறேன்னா…என்று அவர் சொல்ல வரும் விஷயத்தைக் கேட்டால், பிரமிப்பாக இருக்கும்! இவ்வளவு விஷய ஞானமும், அனுபவ அறிவும் உள்ள ஒரு மனிதன் எந்த கர்வமும் தன்னை கவ்விவிடாமல் எப்படி எளியவராக வெளிப்படுகிறார் என்பது ஆச்சரியத்தை தரும்!

ஜெயகாந்தன்,கோவை ஞானி,சுஜாதா,பிரபஞ்சன்,கி.ராஜநாராயணன், தமிழருவி மணியன், சிலம்பொலி செல்லப்பன், வ.செ.குழந்தைசாமி,சிற்பி பாலசுப்பிமணியம்,அவ்வை நடராஜன், இந்திரா பார்த்தசாரதி,மேலாண்மை பொன்னுசாமி,இளம்பிறை மணிமாறன், கவிஞர்கள்  புவியரசு,சாலமன் பாப்பையா,அறிவுமதி,யுகபாரதி பத்திரிகையாளர்கள் ஞாநி, சுதாங்கன்,வைத்தியநாதன்,மணா, கா.சு.வேலாயுதம்,ஸ்டாலின் குணசேகரன்…என்று அவர் நாளும் பழகி வந்த, இன்னும் பழகிக் கொண்டிருக்ககூடிய அறிவார்ந்த ஆளுமைகளின் பட்டியல் வெகு நீளமானது! ஒருவித அறிவுதேடலும்.இலக்கிய வாசிப்பும் இல்லாமல் இத்தனை பெருமக்களுடனான நீண்ட நெடிய நெருக்கமான நட்பு சாத்தியப்படாது!

 

திரைப்படத்துறைக்குள் அவருக்கு நிறைய நண்பர்கள் இருப்பது பெரிய விஷயமல்ல! ஆனால், அதற்கு வெளியில் பல தளங்களிலும் தன்னுடைய ஆரம்பக்கால நண்பர்கள் முதல் இன்றைய நண்பர்கள் வரை சுமார் ஐந்நூறு பேர்களிடமாவது நெருக்கமாகப் பழகிவருகிறார் என்பது  அசாதாரணமான உண்மையாகும்! அவர் நட்பு வட்டாரம் கடல் போலப் பெரிது! அடுத்த தலைமுறையில் இப்படியொரு  மனிதனைப் பார்க்கவே முடியாது என்று சொல்லதக்க வகையில் அவர் சில தனிப்பட்ட  குணாதிசயங்கள் கொண்டவராக இருக்கிறார் என்பது தான் எனக்கு அவர் மீதுள்ள ஒருவித ஈர்ப்புக்குக் காரணமாகும்!

அவர் அறுபதாண்டுகளுக்கும் மேலான சென்னை நகரவாசியாக இருந்தாலும்,அவரது ஆன்மா எப்போதும் கோவை மாவட்ட சூலூர் அருகேயுள்ள சின்னஞ்சிறிய குக்கிராமத்து  பழனிச் சாமியாக  தான் உள்ளது! அவர் ராக்கையா, பழனியம்மாவின் மகன், பால்ய சினேகிதர்கள்  குமரேசன், கருப்பசாமி,குமாரசாமி ஆகியோரின் நெருங்கிய நண்பர்!

ஓவியத்தில் அவர் பிறவிப் பெருங்கலைஞன்! யாரும் சொல்லி தராமலே  அவருக்குக்  கைவந்த  கலையானதைப் பிற்காலத்தில் அவர் மிக அதிக முயற்சி எடுத்து,தமிழகம் மற்றும் இந்தியாவின்  அனைத்து பகுதிகளுக்கும் சுற்றி ஓவியம் வரைந்துள்ளார்! ஆக, ஒரு பிறவி முழுக்க  உழைத்துச் சாதிக்க வேண்டிய ஒவியக் கலை ஆற்றலை ஒரு பத்தாண்டுக்குள் அவர் சாதித்துள்ளார்!

அதே சமயம் அவரது திரைத்துறை வெற்றிகள் மிக காலதாமதமாகத் தான் அவருக்கு கைகூடின! சுமார் 40க்கு மேற்பட்ட படங்களில் துணை நடிகராக அல்லது இரண்டாம் கதாநாயகனாக நடித்த பிறகே அவருக்கு கதாநாயகன் அந்தஸ்து கிடைத்தது! அதுவும் ஒரு வகையில் நன்மையாகத் தான் தெரிகிறது. ஏனெனில், அவர் காலத்தில் அறிமுகமான ரவிச்சந்திரன் உச்சத்திற்கு போய் வெகு சீக்கிரம் காணாமல் போனார்! இந்த காலகட்டத்தில் அவர் எம்.ஜி.ஆரோடு இரு படங்கள், சிவாஜியோடு பதினான்கு படங்கள்,ஜெமினியோடு ஏழு படங்கள்,முத்துராமனோடு 11 படங்கள் என அனைத்து முன்னணி நடிகர்களோடும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கைகூடியது. இது மற்றவர்களுக்கு அமையாத வாய்ப்பாகும்! எம்.ஜி.ஆர்.சிவாஜி,முத்துராமன் காலத்திலும் கதாநாயகன்,அடுத்து ரஜினி,கமல் காலத்திலும் கதாநாயகன்,பிறகு மோகன்,கார்த்திக்,பிரபு,முரளி ஆகியோர் காலத்திலும் கதாநாயகன்!

என்னுடைய குழந்தை பருவத்தில் பள்ளிக் கூட காலங்களில் சிவகுமார் மிகப் பிரபல நடிகர்! அவரது வெள்ளிக்கிழமை விரதம், அன்னக்கிளி,பத்திரகாளி,கவிக்குயில்,சிட்டுக்குருவி, ஆட்டுக்கார அலமேலு, ரோஜாப்பூ ரவிக்கைகாரி, ஏணிப்படிகள்..போன்ற படங்கள் அன்று மக்களிடம் பெரு வரவேற்பை பெற்று இருந்தன. அப்போது நாங்கள் வட சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி நகரில் குடியிருந்தோம்! அங்கு குடும்ப விழாவானாலும்,கோயில் விழாவானாலும் தெருவில் எப்போதும் சினிமா பாடல்களை ஒலிக்கவிடுவார்கள்.அதில் சிவகுமார் நடித்த படப்பாடல்களே அதிகமாயிருந்தன! அது இளையராஜாவின் ஆரம்ப காலம்! சிவகுமார் கலை வாழ்வின் பொற்காலம்! அவரது கலைவாழ்வில் அவருக்கு ஏற்றம் தந்த இயக்குநர்கள் என்றால், என் புரிதலுக்கு உள்ள வகையில் ஏ.பி.நாகராஜன், கே.பாலசந்தர்,  தேவராஜ் மோகன், எம்.பாஸ்கர் ஆகியோர்களை மிக முக்கியமானவர்களாகப் பார்க்கிறேன்! அவருடைய படங்களில், நடிப்பில் அசாத்தியமான உயரத்தை தொட்டவை ரோஜாப்பு ரவிக்கைகாரி,சிந்து பைரவி, வண்டிச்சக்கரம், அக்னிசாட்சி, இனி ஒரு சுதந்திரம்…போன்றவை!

அவர் தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகமாக நண்பர்களிடம் வெளிப்படுத்துவார். தன்னை ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படுத்த ஒரு அசாதாரண தன்னம்பிக்கை வேண்டும்.அது அவரிடம் நிரம்ப உள்ளது. என்னிடம் அது கிடையாது! ஆனால், அவர் தன்னுடைய அந்தரங்க உணர்வுகளைக் கூட தயங்காமல் சில சமயங்களில் பேசும்போது வியந்திருக்கிறேன். அது எனக்கு வாழ்க்கைப் பாடமாகவும் தோன்றியதுண்டு! அறுபத்தி ஒன்பது அழகிய பெண்களுடன் நடித்தும், தன்னை கற்புக்கரசனாக வைத்துக் கொண்ட அவரது அசாத்திய ஆற்றல் துறவிகளாக வாழ நேர்ந்து கொண்டவர்களுக்கே சாத்தியமில்லாதது ஆகும்! ஆனால், அதை இளமையில் நெருப்பாற்றில் நடப்பதைப் போலவும், ஒற்றை கம்பியில் நடக்கும் கழைக்  கூத்தாடியைப்  போலவும் நடந்து தான் கடந்துள்ளார்!

அவர் சொற்பொழிவாளராக அவதாரம் எடுத்த காலத்தில் தான் நான் அவரிடம் நெருங்கி ப்ழகும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர் சொற்பொழிவுகள் ஒவ்வொன்றுமே அவர் இந்த தமிழ் சமூகத்திற்கு தந்துள்ள ஆகச் சிறந்த கொடைகள்! அவை காலம் கடந்தும் அவர் புகழ் பேசும்! அதில் எனக்கு மிகவும் பிடித்தவை மகாபாரதம்,கம்பன் என் காதலன், தவப்புதல்வர்கள்! அவருடைய நினைவாற்றல் என்பது வசனங்களை நினைவு வைத்துப் பேசுவதில் மட்டுமல்ல, வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிஷத்தையும் நினைவில் வைத்துள்ளதிலும் உள்ளது என்பது அவர் எழுதி வரும் தொடர்களில் புலப்படுகிறது.

சிவகுமாரை பற்றிச் ஒருவரியில் சொல்ல வேண்டும் என்றால், உண்மையிலேயே அவர் ஒரு தனி மனிதரல்ல! சமூக மனிதர்! மிகச் சிறந்த குடும்பத் தலைவர். தனி மனித  ஒழுக்கத்திலும், பண்பாட்டு விழுமியங்களைப் பேணுவதிலும் தன்னிகரற்றவர்!  அதனால் தான் அவர் மருத்துவமனைக்கு செல்லவேண்டிய அவசியமே இல்லாத ஒரு வாழ்வை பரிபூரண்மாக வாழ்ந்து காட்டியுள்ளார்!

ஒரு வகையில் இவர் ஒரு சமரசமற்ற உண்மை விளம்பி! அவரால்,எதையும் மறைக்க முடியாது! என்னிடம் இந்த குணங்கள் ஒரளவே உண்டு!  நெருக்கமாக  பழகுபவர்களிடம்  ஏதாவது குறைகள் தென்பட்டால் நான் மறைக்காமல் சொல்லிவிடக்கூடியவன்! அந்த வகையில் என்னை சகித்துக் கொண்டு நட்பு பாராட்டுவது மிகவும் பக்குவமானவர்களுக்கே சாத்தியம்! அந்த வகையில் அவர் பொறுமைகாத்து என்னை வென்றெடுத்துவிட்டார் என்று தான் சொல்வேன்!