மகத்தான செயற்பாட்டாளர் மகபூப் பாட்சா!

-சாவித்திரி கண்ணன்

மனித உரிமை செயற்பாட்டாளர், ஓய்வறியாத போராளி, மக்கள் இயக்கங்களோடு இணைந்து களம் கண்டவர்! காத்திரமான களப் பணிகள் மட்டுமின்றி, மனித உரிமைக்கான கருத்தாக்கங்கள் சமூகத்தில் வலுப்பட இடையறாது இயங்கியவர் என்ற வகையில் மகபூப் பாட்சா பற்றிய பல்வேறு ஆளுமைகளின் பார்வை;

மதுரையில் இயங்கினாலும், இந்திய அளவில் மனித உரிமைத் தளங்களில் மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் மதுரை சோக்கோ அறக் கட்டளையின் நிறுவனர் மகபூப் பாட்சா. இவர் கல்லீரல் பழுது காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சூழலில் 14.02.2024 ஆம் நாள் மாலை ஐந்து மணியளவில் காலமானார். மனித உரிமைப் போராளியான அவரது பொது நலப் பணிகள் இங்கே நினைவு கூறப்படுகின்றன;

தமிழ்நாடு ஏஐடியூசி பொதுச் செயலாளர் . இராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், இடது சாரி இயக்கங்களின் வளர்ச்சிக்கு இடையறாது உறுதுணையாக நின்றார். கொத்தடிமை தொழிலாளர்களை  மீட்கும் பணியில் இடையறாது போராடி எண்ணற்றோர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கச் செய்தவர். உலகமயமாக்கல் கொள்கைகளின் விளைவாக பஞ்சாலைகளில்  நவீன கொத்தடிமை முறையான சுமங்கலி திட்டத்தில் இளம் பெண் தொழிலாளர்கள் இன்னல்கள் தீர போராடியவர். இது குறித்து ஆய்வு குழு அமையவும், அதன் மூலம் உண்மை நிலைமைகளை வெளிக்கொணரவும் பாடுபட்டவர்.

மகபூப் பாட்ஷா அவர்கள் எந்த உரிமையும் இல்லாமல் லட்சக்கணக்கான பீடி தொழிலாளர்கள் உள்ளனர் என்று அஞ்சலட்டையில் உச்ச நீதிமன்றத்திற்கு எழுதிய புகார் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் மகபூப் பாட்ஷாவையே தலைவராக நியமித்து விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். மகபூப் பாட்ஷாவின் நேர்மையான விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தந்த தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள பீடி தொழிலாளர்களுக்கு பல்வேறு உரிமைகள் கிடைக்க வழி செய்தது.

நீண்ட நெடிய காலமாக வீரப்பன் தேடுதல் வேட்டை நடத்துவதாக தமிழ்நாடு, கர்னாடக காவல் துறையினர் பழங்குடி மக்கள் மீது நடத்திய கொடூரமான தாக்குதல், பெண்கள் மீதான வன்புணர்வு கொடுமைகளுக்கு தக்க நடவடிக்கை கோரி நீதிபதி சதாசிவா ஆணையம் உருவாக அளப்பரிய பங்களிப்பு செய்தவர்.

தொழிலாளர், விவசாயிகள், ஒடுக்கப்பட்ட மக்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் உள்பட பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு அரணாக நின்று செயல்பட்டவர். என புகழாரம் சூட்டியுள்ளார்.

சுவாமி அகினிவேஷ் அவர்களுடன் மகபூப் பாட்சா.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மகபூப் பாட்சா மறைவு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையாவது;

கொத்தடிமை தொழிலாளர் மீட்பு, குழந்தை தொழிலாளர் மீட்பு என்று தொடங்கி சமூக மாற்றத்திற்கான போராட்டக் களத்தில் முன்னணி படை வீரராக செயல்பட்டவர். தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் என்றும் மக்கள் ஊழியனாகத் திகழ்ந்தவர், சாலையைக் கடக்கும் போது வழியில் முள்ளைக் கண்டால், அதை அடுத்து வருபவர் மிதித்துக் காயப்படுத்திக் கொள்ளாமல் இருக்க, அந்த முள்ளை அப்புறப்படுத்திவிட்டுச் செல்வது இறைவனை தொழுதற்கு சமம் என்ற நபிகளின் மொழியே தோழர் மகபூப் பாட்சா அவர்களின் வாழ்க்கைத் தத்துவம். ஒர்  சகாப்தம் முடிவுக்கு வந்தது.

மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன் கோவிந்தராசு தன் பதிவில், தமிழகத்தின் மூத்த மனித உரிமைப் போராளி, வழக்கறிஞர் மகபூப் பாட்சா நம்மை விட்டுப் பிரிந்தார். சோக்கோ அறக்கட்டளை, நீதிநாயகம் பி.என்.பகவதி பவுண்டேசன், நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர் பவுண்டேசன் என வாழ்நாள் முழுவதும் மனித உரிமைகள் காக்கப் போராடியவர். கொத்தடிமைகள் ஒழிப்பு, மரண தண்டனை ஒழிப்பு, தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பு, வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டது, பயிற்சி வகுப்புகள் நடத்தி மனித உரிமை ஆர்வலர்களை உருவாக்கியது என அவரின் பணி அளப்பரியது.

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய செயலாளர் ச.பாலமுருகன் தன் முக நூல் பதிவில், தமிழகத்தில் கொத்தடிமை ஒழிப்பு இயக்கத்தில் தொடங்கி, மரணதண்டனை ஒழிப்பு,வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் பெற்று தந்த நிகழ்வு மற்றும் மனித உரிமை செயல்பாடுகளை நீதிபதிகளுக்கு கவனப்படுத்தல் என தன் வாழ்நாள் முழுதும் மனித உரிமைகளை உயர்த்திய மாமனிதர் தோழர்.மகபூப் பாட்சா.

அவரின் மதுரை சோக்கோ அறக்கட்டளை பல சனநாயக செயல்பாடுகளுக்கு களம் அமைத்துக் கொடுத்தது. அவரின் மறைவு சனநாயக செயல்பாடுகள் களத்தில் பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது.தோழருக்கு அஞ்சலி!

வழக்கறிஞர் லஜபதி ராய் தன் முகநூல் பதிவில் மதுரை மற்றும் இந்தியா முழுவதிலும் மனித உரிமைத் தளங்களில் நன்கு அறிமுகமானவர் மதுரை சோக்கோ பாட்சா என்ற மகபூப் பாட்சா! அவர் எல்லோருக்கும் நெருக்கமானவராக இருந்தார். எல்லோருக்கும் இயன்ற வரை தன் உதவிக் கரங்களை நீட்டினார். மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும், சூழலியலாளர்களுக்கும் அவர் நெருக்கமாக இருந்தார். நண்பரான எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் கூறியதைப் போல மதுரையின் சமகால மனித அடையாளங்களில் ஒன்றாக இருந்தார். களப் பணிகளுக்கு குறைவில்லாதவர். ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு பகுதிகளில் பழங்குடியின பளியர் சமூக மக்கள் கொத்தடிமைகளாக குத்தகைதாரர்களிடம் தவித்த போது, அவர்களை விடுவித்து அவர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் திட்டங்களை செயல்படுத்தினார்.

சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர் ஓசை காளிதாஸுன் பதிவுசமூக நலனுக்காக குரல் கொடுக்கும், போராடும் நூற்றுக்கணக்கான அமைப்புகள், இயக்கங்கள் செயல்பட்டு வந்தாலும் ஒவ்வொரு ஊரிலும் எல்லோரையும் அரவணைத்து ஒரு குடை அமைப்புபோல் தொடர்ந்து இயங்கி வருபவை சில மட்டுமே. தமிழகத்தில் அத்தகைய அமைப்புகளில் முன்னோடியாக இருப்பது மதுரையில் உள்ள சோக்கோ அறக்கட்டளை. மனித உரிமைகளுக்காக, இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக ஏறக்குறைய அரை நூற்றாண்டாக குரல் கொடுத்து வந்த போராளி அவர். சமூக நலனுக்காக முன்னெடுக்கப்படும் எல்லா முயற்சிகளுக்கும் ஆதரவாக இருந்தவர்.

அவரது மரணம் நம் எல்லோருக்குமான பேரிழப்பு.

வி.ஆர்.கிருஷ்ண அய்யருடன் சென்று கலைஞர் கருணாநிதியை சந்தித்த மகபூப் பாட்சா!

மதுரை சோக்கோ அறக்கட்டளை நிறுவனர் மகபூப் பாட்சாவின் குறிப்பிடத்தக்க சில செயல்பாடுகளை நினைவு கூறும் பட்சத்தில் சில நிகழ்வுகள் தவிர்க்க முடியாதவை;

1999-ல் மாஞ்சோலைத் தொழிலாளர்கள் நெல்லையில் நடத்திய போராட்டத்தில் காவல்துறை நடத்திய வெறித்தனத் தாக்குதலில் 17 மனித உயிர்கள் கொல்லப்பட்ட தாமிரபரணி படுகொலை சம்பவத்தின் உண்மைத் தன்மை வெளிக்கொணரப் பாடுபட்டவர் மகபூப் பாட்சா!

இதற்காக வழக்கறிஞர்கள் ஹென்றி டிஃபேன், பிரிட்டோ உள்ளிட்ட சில மனித உரிமைக் காப்பாளர்களை ஒருங்கிணைத்து, தாமிரபரணி படுகொலைகள் குறித்து “பொது விசாரணை’’ ஒன்றினை, மதுரை மக்கள் கண்காணிப்பகம், சோக்கோ அறக்கட்டளை உள்ளிட்ட ஆறு மனித உரிமை அமைப்புகள், 1999 ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நெல்லையில் நடத்தியதும், அதில் மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.சுரேஷ் தலைமையிலான  விசாரணைக் குழு 42 பக்க அறிக்கையினை வெளியிட்டதும் ஒரு முக்கிய மைல் கல்லாகும்.

கல்வி, ஜனநாயகம் சுதந்திரம் ஆகிய தளங்களில் அவர் காத்திரமாக தொடர்ந்து செயல்பட்டார். இதற்காகவே மதுரை சோக்கோ அறக்கட்டளை சார்பாக பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். இதற்காக சென்ற ஆண்டு 2023 ஜூன் 10 ஆம் தேதி மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பான கருத்தரங்கை அவர் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை, நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் பவுண்டேசன் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து மதுரையில் நடத்தினார்.

நீதிபதி பிரதாப் சிங் தலமையில் நடைபெற்ற வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருது வழங்கும் நிகழ்வு

அந்தக் கருத்தரங்கில் ”பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வி யை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும். பள்ளிக் கல்வி யை வலுப்படுத்துவதும், பள்ளி இறுதித் தேர்வின் அடிப்படையில் உயர் படிப்பில் சேருவதும் மட்டுமே சரியானதாக இருக்கும். நுழைவுத் தேர்வுகளான நீட் (NEET) மற்றும்  கியூட் ( CUET) ஆகியவை மாநிலங்களின் கூட்டாட்சி உரிமைகளை மறுப்பதாகும்” போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் குறித்த தன்வரலாற்று நூலை வெளிக் கொணர்ந்தவர் மகபூப் பாட்சா! மனித உரிமைகளைக் காப்பத்தில் ஒரு மாபெரும் அடையாளமாகத் திகழ்ந்து சில மகத்தான தீர்ப்புகளை வழங்கியவர் கிருஷ்ணய்யர். அவர் குறித்து  “மனித நேயத்துக்கு வயது நூறு” என்ற தலைப்பிலான என்ற புத்தகம் மூத்த பத்திரிகையாளர் ப.திருமலை அவர்களால் எழுதப்பட்டு, சோக்கோ அறக்கட்டளையால் வெளிக் கொணரப்பட்டது.

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் நூற்றாண்டு பிறந்ததின விழாவை சென்னையில் ஒரு மிகப் பெரும் விழாவாக 2016 ஆம் ஆண்டு நடத்தினார் மகபூப் பாட்சா!  வெவ்வேறு துறைகளில் மனித நேயத்துடனும், சமூக அக்கறை சார்ந்தும் இயங்கும் திறமையாளர்களை அடையாளம் கண்டு பாராட்டி கொண்டாடுவதிலும் தன் நிகற்று திகழ்ந்தார் மகபூப் பாட்சா! உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி,  டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்ட அந்த நிகழ்வில், முன்னாள் நீதிபதிகள் எஸ்.ரத்தினவேல் பாண்டியன்,  கே.பி.சிவசுப்பிரமணியம், மனித உரிமை செயற்பாட்டாளர்  வசந்திதேவி, கவிஞர் இன்குலாப், கல்வியாளர்  பிரின்ஸ் கஜேந்திரபாபு, திரைப்பட இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், எஸ்.பி. ஜனநாதன் உட்பட பல்வேறு துறையினருக்கு விருது வழங்கப்பட்டது.

மக்கள் சக்தியை ஒருங்கிணைத்து பொதுக் காரியங்களை நிறைவேற்ற வேண்டும் என அவர் அடிக்கடி பேசியும், எழுதியும் வந்தார். அந்த வகையில் மதுரை தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வாக அவர் ஒரு செயல் திட்டத்தை வெளிப்படுத்தினார்.

’’மதுரையில் ஆங்காங்கே பெண்கள் காலி குடங்களுடன் மறியல் செய்வதையும், அவர்களை அப்புறப்படுத்த காக்கி உடை காவலர்கள்  தடிகளோடு மல்லுக்கு நிற்பதையும் கண்டு நெஞ்சம் பதைக்கிறது. நீர் நிலைகளைக் காப்பாற்ற, மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற நாம் உலக வங்கியிடமும், வளர்ந்த நாடுகளிடமும் கையேந்தி நிற்க வேண்டியதில்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் எல்லோரும் கூடி மதுரையில் உள்ள ஏரிகளில் ஆளுக்கு ஒரு தட்டு மண் அள்ளினாலே எல்லா ஏரி – குளங்களையும் ஆழப்படுத்தி, தூர் வாரிவிடலாம். இதற்கு, ஒப்பந்தக்கார‌ர் தேவை இல்லை, மதிப்பீடு (எஸ்டிமேட்) தேவை இல்லை, நாம் அனைவரின் ஒரு நாள் உழைப்பு தானம் மாத்திரமே போதும்’’ என்றார்.

மகபூப் பாட்சா மறைந்தாலும் அவரது களப் பணிகளும், அவர் முன்னெடுத்த செயல்பாடுகளும் என்றென்றும் நினைவு கூறப்படும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்