களப் போராளியை பதவி அரசியல் பலி கொண்டது!

-சாவித்திரி கண்ணன்

பதவி அரசியல் கொள்கை அரசியல்வாதிகளைக் கூட கொன்று விடுகிறது! அதிகார அரசியல் ஆகச் சிறந்த லட்சியவாதிகளைக் கூட அழித்து உள் வாங்கி விடுகிறது என்பதற்கு கணேசமூர்த்தி தற்கொலையே சாட்சியாகும். பல போராட்டக் களங்களை கண்டவர். மாற்று அரசியலைக் காண விழைந்து ஏமாற்று அரசியலில் பலியானார்!

சோசலிச லட்சயத்தில் ஈர்க்கப்பட்டு திராவிட கொள்கைகளில் திளைத்து, உணர்வில் தமிழ் தேசியவாதியாக செயல்பட்ட அவரது பயணம், பதவி பித்தால் தடம் மாறி படுகுழிக்குள் தள்ளிவிட்டது!

இயற்கை வேளாண்மையில் ஈடுபாடுள்ளவர்! விவசாயப் பிரச்சினைகள் அனைத்திற்கும் குரல் கொடுத்து களம் கண்டவர்! கடந்த 50 வருட கொங்கு மண்ணின் சமூக, அரசியல் வரலாற்றோடு பிண்ணிப் பிணைந்தது அவர் வாழ்க்கை!

கொங்கு மண்ணின் வீர அடையாளமாக பார்க்கப்படும் தீரன் சின்னமலை வம்சத்தில் வந்தவரான கணேசமூர்த்தி ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த சென்னிமலை குமாரவலசு பகுதியை பூர்வீகமாக கொண்டவர்.

இவரது தந்தையின் பெயர் அவிநாசி கவுண்டர் தாயார் சாரதாம்பாள். இவரது மனைவி பாலாமணி ஏற்கனவே இறந்துவிட்டார். ஒரு மகன் கபிலன். ஒரு மகள் தமிழ்ப் ப்ரியா உள்ளனர்.

சென்னிமலை வட்டாரத்தில் அந்த காலத்தில் சோசலிஸ்ட் கட்சியின் பெருந்தலைவராகத் திகழ்ந்த உலகபுரம் பாலசுப்பிரமணியன் இவரது தாய் மாமனாகும்! மாமாவை பார்க்க வரும் இந்தியாவின் மிகப் பெரும் சோசலிஸ்ட் தலைவரான ராம் மனோகர் லோகியா, மதுலிமாயே ஆகியோர்களின் உரையாடல்களை கேட்டு வளர்ந்தவர். சென்னை தியாகராயர் கல்லூரியில் படிக்கும் போது திராவிட மாணவர் இயக்க பரிச்சியம் உண்டாகி இந்தி எதிர்ப்பு போராட்டம் போன்றவற்றில் களம் இறங்கி களம் கண்டவர்.

அண்ணா, கலைஞர், வைகோ ஆகியோர் தொடர்பால் ஈரோடு மாவட்டச் செயலாளர், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ ஆனவர்! முதல் முறை எம்.எல்.ஏ ஆன 1989 காலகட்டத்திலேயே தன் தொகுதிக்கு வேளாண் கிடங்கு, கால் நடை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம் வரக் காரணமானார் என்பது கவனிக்கத் தக்கது.

திமுகவில் இருந்து பிரிந்து மதிமுக உதயமானதிலிருந்து வைகோவுடன் இருந்தவர். மதிமுகவில் சேர்ந்த பிறகு மூன்று முறை எம்.பி பதவி பெற்றுள்ளார். கட்சியின் பொருளாராக இருந்துள்ளார்! 2019 ஆம் ஆண்டு ஈரோடு தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் நிற்பதற்காக மதிமுகவின் பொருளாளர் பதவியைத் துறந்தார். அதுமுதல் கட்சிக்கும், அவருக்கும் இருந்த இறுக்கமான பிணைப்பு மெல்ல, மெல்லத் தளர்ந்தது! அத்துடன் மதிமுகவில் வைகோ மகன் துரை வையாபுரி தலைமை பொறுப்புக்கு வந்ததில் விருப்பம் காட்டாதவராக இருந்தார்.

இந்தச் சூழலில் மதிமுகவுக்கு இரண்டு தொகுதிகள் கிடைத்து இருந்தால் இவருக்கு மீண்டும் ஈரோட்டில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும். ஆனால், கிடைத்ததோ ஒன்று தான். எனவே, அதில் வைகோ மகன் துரை வையாபுரியை நிறுத்தி விட்டனர். அந்த ஒற்றைத் தொகுதியை ஈரோட்டுக்கு பெற்று தனக்கு தராமல் போனதில் பெரும் விரக்தியில் இருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

இதனால், அவர் திமுகவிலேயே தனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்றும் முயற்சி செய்துள்ளார்! அந்த வாய்ப்பைத் தந்து வைகோவிற்கு வருத்தத்தை தர திமுக தலைமைக்கு விருப்பமில்லை. எனவே, இரு தரப்பாலும் கைவிடப்பட்டார்! அதிகார அரசியலில் இருந்து பழகப்பட்ட நிலையில் எம்.பி வாய்ப்பு பறிபோனதை இவரால் ஜீரணிக்க முடியவில்லை. அவருடைய நெருங்கிய நண்பர் திருப்பூர் சுப்பராயன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் அழுத்தம் தந்து 76 வயதில் மூன்றாவது முறை வாய்ப்பு பெற்ற நிலையில், தன்னால் பெற முடியாததில் அவர் மனம் நிம்மதி இழந்துள்ளது.

இந்த சூழலில் தான் தென்னை மரத்திற்கு வண்டு வராமல் இருக்க வைக்கப்படும் கொடிய விஷ மருந்தான சல்பாஸ் மாத்திரையை வாங்கி தண்ணிரில் கலந்து குடித்து வாந்தி எடுத்துள்ளார். இதனால் ஓயாமல் வாந்தி எடுத்த தன்னைப் பார்த்து கதறிய குடும்பத்தாரிடம் தன்னை மருத்துவமனைக் கொண்டு சென்று காப்பாற்ற வேண்டாம் என்றும் மன்றாடியுள்ளார். ஆனால், எப்படியாவது அவரை காப்பாற்ற வேண்டும் என குடும்பத்தினர் கோவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். நான்கு நாட்கள் கடும் உயிர்வாதைக்கு பிறகு அவர் உயிர் பிரிந்துள்ளது.

கணேசமூர்த்தி மறைவு குறித்து அவரது நெருங்கிய நண்பரான ஈரோடு தற்சார்பு விவசாய சங்கத் தலைவர் கி.வே.பொன்னையனிடம் பேசிய போது, ”விவசாயப் பிரச்சினைகள் அனைத்திலும் தோளோடு தோள் நின்றார். காவேரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை, அடப்பாடியில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு, விளை பொருட்களுக்கு நியாயமான விலை, நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு, விளை நிலங்களில் கெயில் குழாய் பதிக்க எதிர்ப்பு.. என எல்லாவற்றுக்கும் குரல் தந்தார். களத்தில் நின்றார்.

குறிப்பாக விளை நிலங்களில் கெயில் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலத்தின் வாயிலியே உட்கார்ந்து தர்ணா செய்தார். விவசாயிகளை உறுதியோடு போராட நம்பிக்கை அளித்தார். தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தையும் உள்ளடக்கிய 11 மாவட்டங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இருகூர் தேவனாம்பந்தி  குழாய் பதிக்கும் ஆர்டரை மாவட்ட துணை ஆட்சியரிடம் கேட்டு வாங்கி பார்த்து, அந்த இடத்திலேயே சுக்கு நூறாக கிழித்து எறிந்தார். இந்த இரண்டு திட்டங்களாலும் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க எவ்வளவுக்கு எவ்வளவு முயற்சிக்க முடியுமோ அவ்வளவும் செய்தார். தனி ரயிலை புக் செய்து ஆயிரம் விவசாயிகளை டெல்லிக்கு அழைத்துச் சென்று போராடக் களம் சமைத்தார்.

இன்றைக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தமிழகத்தில் 3 ஆயிரம் கிலோ மீட்டருக்கு எரிவாயு குழாய்கள் அமைக்க விளை நில பகுதிகளை தவிர்க்க, எங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டியே எரிவாயு குழாய்கள் பதிக்கிறார்கள் என்றால், அதற்கு கணேசமூர்த்தி முக்கிய காரணமாவார்’’ என்றார்.

ஈரோடு கணேசமூர்த்தியின் மற்றொரு முக்கிய நண்பரான கோபிசெட்டி பாளையம் வழக்கறிஞர் கந்தசாமியிடம் பேசிய போது, ”கணேச மூர்த்தியை பொறுத்த வரை நேர்மையானவர். எம்.பி. நிதி வழங்களில் கையூட்டுகள் பெறாத எம்.பியாக இருந்தார்! எப்போதும் மக்கள் சந்திக்கதக்க நிலையில் இருந்தார். அவருடைய டெல்லி இல்லம் எப்போதும் விவசாயிகள் நிறைந்த வண்ணம் இருக்கும். கொங்கு மண்டலத்தில் இருந்து எத்தனை பேர் சென்றாலும் அவர் இல்லத்தில் தங்கலாம். எல்லோரையும் உபசரிப்பார். ஈழப் போராட்டங்களில் முனைப்பு காட்டுவார். ஜெனீவா மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். வைகோவுடன் 18 மாதங்கள் பொடா சட்டத்தில் சிறைவாசம் பெற்றார். அவருடைய முடிவு மிகவும் துர்அதிர்ஷ்டவசமானது” என்றார்.

கொங்கு மண்டலத்தில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி உயர்மின் கோபுரங்கள்  அமைக்கப்பட்ட காலத்தில் கணேசமூர்த்தி விஜயமங்கலம் அருகே உள்ள மூணாம்பள்ளி என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்று நேரடியாக ஆய்வு செய்தார். உயர் மின் கோபுரத்தின் கீழ் நின்று கொண்டு கையில் டியூப் லைட் வைத்து நின்றால், மின்காந்த அலைகள் மூலம் மின்சாரம் பாய்ந்து விளக்கு எரிந்தது. உடலில் டெஸ்டர் வைத்தால் ஒளிர்ந்தது. இதையே அறிக்கையாக தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும் இது குறித்த புகைப்படங்களை நாடாளுமன்றத்தில் காட்டி பேசினார். மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சரிடமும், இந்த பிரச்சினையை கொண்டு சென்று போராடினார். அந்த அளவுக்கு மக்களுக்கான போராளியாக இருந்தார்.

சூழல்கள் கைகூடும் போது அதிகாரத்தை கைகொண்டு சிறப்பாக செயல்படவும் தெரிய வேண்டும். சூழல்கள் மாறும் போது அதிகாரத்தில் இருந்து விலகி மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பக்குவமும் வேண்டும். தொடர்ந்து அதிகார அரசியலில் உழல்பவர்கள் யாராக இருந்தாலும், நீர்த்து போய் விடுவார்கள்! இதற்கு கணேச மூர்த்தி அவர்களின் வாழ்க்கையே அத்தாட்சியாகும்.

மதிமுகவில் அதிகாரத்திற்கே வர முடியாமல் வாழ்க்கையை தொலைத்தவர்கள் ஏராளம். அப்படி இருக்க மூன்று முறை தனக்கு எம்.பியாவதற்கு வாய்ப்பளித்த போதும், 76 வயதில் நான்காவது முறையும் வாய்ப்பு கிடைக்க ஏங்கி, அது நிறைவேறாமல் போன ஆதங்கத்தில் கணேச மூர்த்தியார் இறந்துள்ளார் என்பது, அவர் பயணித்து வந்த வாழ்க்கைக்கு அவரே தேடிக் கொண்ட அவப் பெயராகிவிட்டது.

சாவித்திரி கண்ணன்