கோமாளியா? வில்லனா? கோல்மால் டிரம்ப்..!

சாவித்திரி கண்ணன்

அமெரிக்க தேர்தலில் இது வரை வந்த முடிவுகளை வைத்துப் பார்க்கையில் டிரம்ப் வெற்றிபெற வாய்ப்பில்லை என உறுதியாக சொல்லலாம்!

ஆனால், இந்த தோல்வியை – மக்கள் தந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளும் பக்குவமற்ற முரட்டுத் தனத்துடன் டிரம்ப் ஆத்திரப்படுவது அவரது குணத்தை வெளிப்படுத்துகிறது!

தேர்தல் முடிவுகளில் பின்னடைவைக் கண்டுவரும் சூழலிலும், டிரம்ப் தன் ஆதரவாளர்களிடையே, ’’நாம் தான் உண்மையில் வெற்றி பெற்றுள்ளோம்.கொண்டாட்டத்திற்கு தயாராக இருந்தோம்.ஆனால், ஏதோ சதி நடக்கிறது’’ என்றால், இதை எப்படி புரிந்து கொள்வது? அவர் தானே அதிபராக இருக்கிறார்..,ஏதாவது சதி செய்வதற்கான வாய்ப்பு ஆட்சியில் இருக்கும் அவருக்குத் தானே இருக்கிறது அல்லது தனது சதி திட்டம் எதையும் நிறைவேற்ற முடியாமல் போவிட்டது என்ற ஆத்திரத்தில் பேசுகிறாரா தெரியவில்லை.

ஆனால்,ஒன்று மட்டும் உறுதி! டிரம்ப் தலைமைப் பண்புக்கு தகுதியற்றவர் என்பதை மீண்டும், மீண்டும் நிருபித்து வருகிறார்.

தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்பே சில நாட்களாக தான் தோற்கப்போவதை உணர்ந்தவராய் ’’ஒரு வேளை நான் தோற்கடிக்கப்ட்டால், நீதிமன்றம் செல்வேன்’’ எனக் கூறியிருந்தார். அவர் எந்த லட்சணத்துல ஆட்சி செய்தார் என்பது அவரது உள்ளுணர்வுக்கு தெரியாமல் போயிருக்காது. அது தான் இந்த வெளிப்பாட்டுக்கு காரணமாயிருக்கலாம்!

’’தன் நெஞ்சறிவது பொய்யற்க, பொய்த்த பின் தன் நெஞ்சே தன்னைச் சுடும்’’ என்பது வள்ளுவர் வாக்கு!

அவரது ஆட்சி காலம் அவர் ஒரு வெள்ளையின வெறியர் என்பதற்கான பல சான்றுகளை தந்துள்ளது. அவர் எதிலும் நிதானமற்றவர் என்ற சான்றாதரங்களையும் நிறையவே தந்துள்ளது.

அவர் கொரானா பேரழிவில் இருந்து மக்களை காப்பாற்ற அருகதையற்றவர் என்பது மிக நன்றாகவே வெளிப்பட்டுவிட்டது. அத்துடன் சீன அபாயத்தை தடுத்து நிறுத்தும் ஆளுமை இல்லாதவர் என்பதும் நிருபணமாகிவிட்டது. தோற்றால் வீட்டுக்குப் போவது தான் முறை! கோர்ட்டுக்குப் போவேன் என்றால் என்ன அர்த்தம்? இது குறித்து நாம் ஏற்கனவே டிரம்ப் படு தோல்வியை சந்திக்கிறாரா? என எழுதியிருந்தோம்.

மக்கள் தீர்ப்பையே தூக்கி எறியக் கூடிய தீர்ப்பை நீதிமன்றத்தில் பெறமுடியும் என அவர் நம்புவதாகத் தெரிகிறது! நீதிமன்றத்தை விட மக்கள் மன்றம் மிக சக்தி வாய்ந்தது என்பதை உணர்வதற்கு கூட அவருக்கு அறிவில்லை என்பதே உண்மை!

அவரது பிடிவாதத்தை உலகமே பார்த்துக் கொண்டுள்ளது. அவரது நிதானமற்ற பேச்சுகள் அவரது ஆதரவாளர்களையே முகம் சுழிக்க வைத்துள்ளது. இதற்கு முன்பு கண்டிராத ஒரு விசித்திரமான வில்லனை அமெரிக்க அரசியல் களமும், சமூகமும் பார்க்கின்றன! ’’நான் தோற்கவில்லை’’ என்று சொல்லச் சொல்ல அவர் மீது பரிதாபப்படுவதா அல்லது கோபப்படுவதா என்று தெரியாத தர்மசங்கடமான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

’’ஐயா அமெரிக்க வெள்ளை மாளிகையைவிட்டு நீயே வெளியேறுகிறாயா? அல்லது கழுத்தை பிடித்து தள்ள வேண்டிய துர்அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்ளப் போகிறாயா?’’ என்பது தான்  உலகம் அவரை நோக்கி வைக்கும் கேள்வியாகும்!

தேர்தல் முடிவுகள் வெளிவருவதை சில நாட்கள் தள்ளிப் போட முடியும். நீதிமன்றத்திற்கு சென்றாலும் கூட இன்னும் சில நாட்கள் தள்ளிப் போட முடியும். ஆனால்,,மக்கள் தீர்ப்பை மாற்றிவிட ஒரு போதும் முடியாது! அதை அமெரிக்க மக்கள் – குறிப்பாக டிரம்ப்புக்கு ஓட்டு போட்டவர்களே – கூட விரும்பமாட்டார்கள்!

டிரம்ப் இவ்வளவு அடாவடிகளை அரங்கேற்றும் நிலையிலும் ஜோ பைடன் நிதானத்தோடு மக்களையும்,ஆதரவாளர்களையும் வழி நடத்துவது கவனத்திற்குரியது!

தோற்பது என்பது சகஜமானது தான்! ஆனால்,அந்த தோல்வியை ஏற்க மறுத்து சண்டித்தனம் செய்வது சிறுமையிலும் சிறுமை! சாதாரண தோல்வியை மிக அவமானகரமான தோல்வியாக்கிக் கொள்ள இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்ளும் ஒரு முட்டாள் அதிபரை தான் நாம் இது நாள் வரை பெற்று இருந்தோமா என்று அமெரிக்க மக்களை வெட்கப்பட வைத்துவிட்டாரே!