தும்பைப் பூவுக்கு இத்தனை மகிமைகளா..?

-அண்ணாமலை சுகுமாரன்

தும்பை எனும் தொல்சிறப்பு  மூலிகை ! – 2

தெம்பைத் தருவதாம் தும்பை! அதனால் தான் போருக்குச் செல்லும் மன்னர்கள் தும்பைப் பூ மாலைகளை அணிந்தனர். வெண்மைக்கும், மென்மைக்கும் உதாரணமாகத் திகழ்வது தும்பை பூ! கண்ணுக்கும் மருந்து, காதுக்கும் மருந்து, புண்ணுக்கும் மருந்து! கோடை தாகத்திற்கு விருந்து! மனிதனின் பல நோய்களுக்கு தீர்வு தருகிறது!

சென்ற பகுதியில் தமிழர்களின் மரபில் ஊறிய சித்த மருத்துவத்தின் அசைக்க முடியாத தத்துவங்களைப் பார்த்தோம். இனி தொடர்ந்து வாரம் ஒரு மூலிகை என  நம்மைச் சுற்றி விளைந்து கிடக்கும்  மூலிகை செல்வங்களின் பயன்களைப் பார்க்கலாம்;

முதலில் நாம் காணப் போவது தும்பை பூவைப் பற்றி தான்.
தும்பை விட்டு, வாலைப் பிடிப்பது போல்  என்று ஒரு பழமொழி உண்டு. அது குதிரையை ப் பற்றி சொல்லப்பட்டது ஆனாலும், இத்தகைய மூலிகைத் தேடலுக்கும்  இது பொருந்தும். எப்படி என்று உள்ளே போய்ப் பார்க்கலாம்

தும்பை  நாடெங்கும் வயல் வெளிகளில் தானே விளைந்து கிடக்கும் ஓர் மூலிகைத் தாவரமாகும்; இது ஒரு அடி முதல் மூன்று அடி உயரம் வரை வளரும். இச் செடியில் நுண் மயிர்கள் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகளை உடையது.

வெள்ளை நிறப் பூக்களுடன் சிறிய செடிகளாகக் கேட்பாரின்றி விளைந்து கிடக்கும். “தும்பைப்பூ போல வெண்மையாக இருக்கும்” என்றும் , தும்பைப்பூ போன்ற வெளுத்த வேட்டி என்று வெண்மையைப் பற்றிச் சொல்வது நமது வழக்கம்.


பெருவாரியாக தும்பை  விளைந்து கிடந்த இடங்களில் இப்போது பார்த்தீனியம்  எனும் நஞ்சு இடம் பிடித்து விட்டது.

தும்பை தமிழர் வாழ்வில் இணைந்தது என்பதற்கு சங்க இலக்கிய சான்றுகள் கூட உண்டு. அதாவது சுமார்  2000  ஆண்டுகள் தொடர்புடையது இந்த தும்பை .

“கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
தும்பை மாலை இளமுலை நுண்பூண் ஆகம் விலங்கு வோளே.”

என்கிறது எட்டுத்தொகை  ஐங்குறு நூறுஎனும் இலக்கியம் .

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்
திரண்டு நீடு தடக்கை என்னை இளையோற்கு
இரண்டு எழுந் தனவால் பகையே ஒன்றே!

— என்கிறது புறநானூறு. எழுதியவர் ஔவையார்!

‘தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி’ எனக் குறிஞ்சிப் பாட்டில் கபிலர் குறிப்பிடுகிறார்.

பெயர்க் காரணம்: சங்க இலக்கியங் களில் இது, ‘தும்பை’ என்றே சுட்டப்படுகிறது. ‘தும்பை’ என்பது சூடும் மலரால் பெற்ற பெயர் என்று நச்சினார்க்கினியர் பொருள் கற்பிக்கிறார்.

தொல்காப்பியத்தில் தும்பை ஒரு திணையாகக் கொள்ளப்பட்டு தும்பைப் போருக்கு என்று தனி இலக்கணம் கூறுவர். இதனடிப்படையில், இராவணன் போருக்குப் புறப்பட்ட போது தும்பை மாலை அணிந்ததாகக் கம்பர் காட்டுகிறார்.

மற்றும் வான்படை வானவர் மார்பிடை இற்று இலாதன எண்ணும் இலாதன பற்றினான்; கவசம் படர் மார்பிடைச் சுற்றினான்; நெடுந் தும்பையும் சூடினான்.

தும்பையில் மன்னனுக்கும் மாலை! மகேஷ்வரனுக்கும் மாலை!

இவனுக்கு எதிராகப் போர்க் கோலம் பூண்ட இராமன் துளசி மாலை அணிந்து, அதனுடன் தும்பைப்பூ மாலையும் சூட்டிக் கொண்டான் என்கிறார் கம்பர்.

அளவு அரு செஞ்சுடர்ப் பட்டம் ஆர்த்தனன்;
இளவரிக் கவட்டு இலை ஆரொடு ஏர் பெறத் துளவொடு தும்பையும் சுழியச் சூடினான்.

இவ்வாறு சங்க இலக்கியங்களிலும் தும்பைப் பூச் சூடிப் போருக்குச் சென்ற மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

இதை எல்லாம் சொல்லக் காரணம் இத்தகைய இயற்கை செடிகள் தமிழர்கள் வாழ்வுடன் , இணைத்தே இருந்திருக்கிறது.  சிவனுக்கு மாலையாக்கி போடும் வழக்கம் இன்றைக்கும் உள்ளது. இப்போது  தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல், மீண்டும் தும்பையைத் தேடுகிறோம் என்பதை நினைவுருத்தவே ஆகும்.

தமிழில் அற்றைக்கிருந்த செந்தமிழ் வார்த்தைகள் இன்னும் வழக்கொழியாமல் இருப்பது போல்,  இத்தகு தாவரங்களும் இன்னும் அதே பெயரில்  இருப்பதும் பெரு வியப்பே !

இவை இந்த  சொற்களும்,  தாவரங்களும் தொடர்ந்து இடையறாமல் இன்று வரை ,பயன்பாட்டில் இருப்பதையே காட்டுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு சொல் வழக்கொழிந்து போகாமல், அதே பொருளில் வழங்கி வருவது தமிழின் சிறப்பு .

இந்த தும்பையை பற்றி சொல்லும் போது ,

அரையாப்புக் கட்டி யனிலமுதிரம்
பிரியாச் சீதக் கடுப்பும் பேருந் – தரையிற்
பழுதைக் கொள்ளாச் செய்ய பங்கயப் பெண்ணே கேள்!
கழுதைத் தும்பைச் செடியைக் கண்டு’

கழுதைத் தும்பை எனும்   கவிழ் தும்பை மூலிகையால் அரையாப்புக் கட்டி, வாத நோய், ரத்தமும் சீதமும் கலந்த வயிற்றுப் போக்கு  அத்தனையும் நீங்கும் என்கிறார் ஒரு சித்தர்அவரது பாடலில் .

இரண்டடி வரை வளரும் சிறு செடி வகை இது. தூய்மைக்கு எடுத்துக் காட்டாகத் திகழும் வெண்ணிற மலர்கள் தும்பைக்கு உரிய அடையாளம். இதில், பெருந் தும்பை, சிறு தும்பை,கருந் தும்பை,மலைத் தும்பை, கவிழ் தும்பை, காசித் தும்பை.. என்று பல வகைகளுண்டு.

‘லாமியேசியே’ (Lamiaceae) எனும் வாசனை மிக்கக் குடும்பத்தைச் சார்ந்த தும்பையின் தாவரவியல் பெயர் ‘லுகாஸ் அஸ்பெரா’ (Leucas aspera). டிரைடெர்பினாய்ட்கள் (Triterpenoids), ஓலியோனோலிக் அமிலம் (Oleanolic acid), சைடோஸ்டிரால் (Sitosterol), லியுகாஸ்பெரோன்கள் (Leucasperones) போன்ற வேதிப் பொருட்கள் தும்பையில் குடியிருக்கின்றன.

தும்பைப் பூவையும், பெருங்காயத்தையும் அரைத்து சுத்தமான எண்ணெயில் கலந்து காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு, சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு வரக் காதில் சீழ் வடிதல் குணமாகும்.

தும்பை இலையை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூசினால்  பூரான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும்.
தும்பை இலைச் சாற்றைத் தேன் கலந்து உள்ளுக்குத் தர நீர்க் கோவை குணமாகும்.

தும்பைச் சாற்றுடன் சிறிது சோற்றுப்புக் கலந்து கரைத்து மேலுக்குப் பூசி உலரவிட்டுக் குளித்துவர சிரங்கு, சொறி , நமச்சல்,போகும்.


தும்பை இலைச் சாறை 3 சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் நீரோ, கபால நீரோ, மண்டைக் குத்தலோ, மண்டையிடியோ குணமாகும்.

பாம்புக் கடிகளுக்கும் தும்பையும், மிளகும் சேர்த்து முதலுதவியாக அளிக்கலாம்.

தும்பையிலைச் சாறு 25 மில்லியளவு, பாம்பு தீண்டியவருக்குக் கொடுக்க , இரண்டு  மூன்று முறை பேதியாகும்.  கபத்துடன் வாந்தியாகும். குளிர்ந்த உடல் சூடு அடையும்.
புதுப் பானையில் பச்சரிசி, பாசிப்பயறு பொங்கி உப்பில்லாமல் சாப்பிட வேண்டும்.
ஒருநாள் முழுவதும் பாம்பு தீண்டியவரைத் தூங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மூன்று நாட்கள் உப்பில்லாமல் பொங்கல் செய்து கொடுக்க, நஞ்சு இறங்கும். இந்த வைத்தியம் அப்போதெல்லாம் கிராமங்களில் பெருவாரியாக வழக்கில் இருந்தது .

மயங்கிய நிலையில் இருந்தால் சாற்றினை நசியமிடலாம். நசியத்தில் தெளியவில்லை என்றால், இறப்பது உறுதி. நச்சு முறிவில் தும்பை தனித்த ஒரு இடம் பெறுகிறது.


தும்பை இலை, கீழா நெல்லி இலை இரண்டையும்  சம அளவாக எடுத்து அரைத்துச் சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர, மாதவிலக்கு ஒழுங்காக வராமல் இருப்பவர்களுக்கு முறையான மாதவிலக்கு ஏற்படும்.

தும்பைச் சாறும், வெங்காயச்சாறும் கலந்து ஐந்து நாள் தர, ஆசனப் புண் குணமாகும்.

தும்பைச் செடியை அரைத்துத் தேமல் உள்ள இடத்தில்  பூசி வரத் தேமல் குணமாகும்.

தும்பைப் பூ, நந்தியாவட்டப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறும்; கண் பார்வை தெளிவடையும்.

கோடையில் நாவறட்சி ஏற்பட்டு, அதிக தாகம் இருக்கும் போது, தும்பையின் பூக்களை, தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது தேன் சேர்த்துப் பானமாகப் பருக, வறட்சி குறைந்து நாக்கு  வாழ்த்தும். தும்பை சாறை மோரில் கலந்து குடிப்போரும் உள்ளனர்!


தும்பை பூச்சாறு ஐந்து துளியை உலர்ந்த பேரீச்சம் பழத்துடன் கலந்து சுவைக்க, உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைப்பதுடன், நுரையீரல் பாதையில் சிறைப்பட்டிருக்கும் கோழையும் வெளியேறும்.  தும்பைச் செடியை உலர்த்திச் சூரணமாக்கி, நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துப் பாலில் கலந்து சாப்பிட்டு வர, ரத்தச் சோகை குணமாகும்.

இன்னும் எத்தனையோ பலன்கள் தும்பைக்கு இருக்கிறது. இதன் பயன்பாடு பாரம்பரியாமாக நம் நாட்டு மக்களிடையே இன்றும் இருந்து வருகிறது.

பசுமையான தும்பை இலைகளை அவ்வப் போது சமையலில் சேர்த்து வர, சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் துன்பப்படுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறையும்.
இதன் இலைகள் மற்றும் பூக்களை உலர்த்தி வைத்துக் கொண்டு, தேனில் குழைத்துச் சாப்பிட, நாட்பட்ட இரைப்பு நோயின் தீவிரம் விரைவில் குறையும்.

பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழர் வாழ்வுடன் இணைந்திருந்த நமது பாட்டிகள், பல குடும்பங்களில் பாட்டி வைத்தியம் என்று சொல்லி வந்த  மூலிகைகள் பற்றிய அரிய பாரம்பரியச் செய்திகளை, காட்டு மிராண்டித்தனம் என அயல் நாட்டில் இருந்து வந்தவர்கள்  சொன்னதை நம்பி, நாம் தொலைத்து விட்டோம்;

இனியாவது இவற்றை  கை விடாது வாழ்வோம்.

கட்டுரையாளர்; அண்ணாமலை சுகுமாரன்


‘நம்ம ஊரு மூலிகைகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.