‘குரங்கு பெடல்’ என்கிற குதூகலக் கோடை மழை!

-தங்கம்

இது ஒரு ‘தேசிய இனத் திரைப்படம்’ ஆகும். தமிழ் வாழ்க்கையை அச்சு அசலாகப் பிரதிபலிக்கிறது. கொங்கு மண்ணின் நிலக் காட்சிகள் அருமையாகத் திரைக்கு வந்திருக்கின்றன. பேன் இந்தியா ஃபாசிசமும், கதாநாயக ஆராதனையும், இயக்குனர்களைப் பிடித்தாட்டுகிற காலச் சூழலில், அதற்கு மாற்றாக இதயம் மகிழும் இனிய அனுபவம்!

வறுத்தெடுக்கும் இந்த வெய்ய்ய்ய்யில் காலத்தில் ஒரு மழை  – அது தூறல் அல்ல ; பெரு மழை  – பொழிந்தால் நீங்கள் என்ன ஆவீர்கள்? குரங்குப் பெடல் பார்த்தவர் போல் ஆவீர்கள்!

எளிமை, அழகு, நுட்பம், நகைச்சுவை, அன்பு இன்னும் இன்னுமான மனித மனதின் நற்குணங்களையெல்லாம் ஒரு தமிழ்ப் படத்தில் பார்க்க முடிகிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? நம்புங்கள்! நெகட்டிவான கேரக்டர்களை மட்டும்தான் ஹீரோவாக மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று பொய்யாக கருத்துச் சொல்லிக் கொண்டிருக்கிற புகழ்பெற்ற இயக்குநர்கள் நடுவே, ‘அதுவொரு பொய்’ என்று நிறுவுகிறது இந்தப் படம். கதை மாந்தர்கள் அவரவருக்கான இயல்பிலே அவரவராக இருக்கின்றனர்.  இந்தப் படத்தில் தந்தை, மகன் உறவுதான் எவ்வளவு நுட்பமாக, அழகாக, நேர்த்தியாக, நேர்மையாக, மேன்மையாக சொல்லப்பட்டிருக்கிறது..!

குரங்குப் பெடல் படம் பார்ப்பதற்குக் குடும்பத்தோடு மூட்டை கட்டிப் போங்கள். நேற்று திரையரங்கில் அப்படித் தான் குடும்பத்துடன் வந்திருந்தது கூட்டம். படத்தின் இடைவேளையின் போதும் படம் முடிந்த பின்னரும் குழந்தைகளிடம் கருத்து கேட்டோம். அவர்களுக்கு இந்தப் படம் ரொம்பவும் பிடித்து இருக்கிறது. இப்படியொரு படத்தைப் பார்ப்பதற்காகத் தங்கள் குழந்தைகளைக்  கூட்டி வந்த பெருமிதத்தை ஒவ்வொரு பெற்றோர்களின் முகத்திலும் காண முடிந்தது. பிள்ளைகளை ஒரு சினிமாவுக்குக் கூட்டி வந்ததற்காகப் பெற்றோர் பெருமைப்பட முடிகிறது. ஆம்! ஏனெனில், அந்த லட்சணத்தில் இருக்கிறது இன்றைய ரெகுலர் தமிழ் சினிமா. வன்முறை! வன்முறை!! வன்முறை!!!

பல தமிழ்ப் படங்களைப் பார்க்கும் பொழுது, கறிக்கடைக்குள் குத்த வைத்து உட்கார்ந்திருப்பது போலவும், நமது மண்டையில் கத்தி வெட்டு விழுவது போலவும் அச்சமாக இருக்கிறது. இப்படியான காலகட்டத்தில்தான் குரங்குப் பெடல் குளிர் மழையைப் பொழிவித்திருக்கிறது.

கத்திக்குப் பிறந்த இயக்குநர்களும், அரிவாளுக்குப் பிறந்த கதாநாயகர்களும், வாள்களுக்குப் பிறந்த அடியாட்களும், சுத்தியலுக்குப் பிறந்த வில்லன்களும், துப்பாக்கிகளுக்குப் பிறந்த காவலர்களும், வெடிகுண்டுகளுக்குப் பிறந்த பயங்கரவாதிகளும் திரையில் உலா வரும்போது, டம்மு, டும்மு, டும்மு, டும் என்று தாளக் கருவிகள் களைப்பின்றி முழங்கிக் கொண்டிருக்க, நெஞ்சை அதிர வைக்கும்  ஒலிமைப்புகள் குருதியோட்டத்தைத் துரிதப்படுத்த, விர்ர்ரென்று சுற்றுகிற ராட்டினத்தின் தலைகீழ் இருக்கையில் தொங்கிக் கொண்டு கத்துவது போல ஒரு பீதியை வன்முறைப் படங்கள் தருகின்றன.

சைக்கிளை வாடகைக்கு விடும் கடைக்காரன் மிலிட்டரி. குடிப்பதற்காக அந்தக் கடையில் சைக்கிளை அடமானம் வைக்கும் ஒரு குடிகாரன். அந்த சைக்கிளை ஒரு சிறுவன் மீது அன்பு கொண்டு வாடகைக்கு விட்டு விடுகிறான் மிலிட்டரி. குடிகாரன் அடமானத் தொகையோடு வந்து சைக்கிளை மீட்டுப் போவதற்காக நிற்கிறான் போதையில். சைக்கிளை வாடகைக்கு எடுத்த சிறுவன் சைக்கிளைக் கொண்டு வந்து இன்னும் தரவில்லை.

கடைக்காரராக நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? அந்தக் குடிகாரராக நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? வாடகைக்கு எடுத்த அந்தச் சிறுவனாக இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்ட சிறுவனானவன் பக்கத்து ஊரில் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கும் தனது அக்காள் வீட்டிற்குச் சென்று ஐந்து ரூபாய் பணம் கேட்கும் பொழுது அந்த அக்காவாக நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? சைக்கிள் வேண்டும் என்று சொல்லி, பையனின் வீட்டிற்குக் குடிகாரனும், சைக்கிள் கடைக்காரரும், சிறுவனின் நண்பர்களும் திரண்டு வரும் பொழுது அதை எதிர்கொள்கிற அப்பாவாக இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அந்த அப்பாவுக்கு மனைவியாக நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? படத்தை போய்ப் பாருங்கள்!

அந்த சைக்கிள் கடைக்காரரும், அந்தக் குடிகாரரும், அந்தச் சிறுவனும், அவனது  அக்காவும், சிறுவனின் நண்பர்களும், சிறுவனின் அப்பாவும், சிறுவனின் அம்மாவும் யாவருமாக நீங்களே ஆகிப் போகிறீர்களே இந்த மாயத்தை அந்த படம் நிகழ்த்துகிறது. உலகத் தரத்தில் ஒரு தமிழ்ப் படத்தை அல்ல, தமிழ்த் தரத்தில் ஒரு உலகப் படத்தைக் காணுங்கள்.

இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒவ்வொரு தியேட்டரிலும் ஓரொரு காட்சிதான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், விரைவில் வழக்கமான காட்சி நேரங்களுக்கு முன்னேறப் போகிறது. மக்கள் இந்தப் படத்தை கொண்டாடப் போகிறார்கள். வெற்றிப் படமாகவும், தமிழின் ‘மிடில் சினிமா’வில் நிலைத்து நிற்கக் கூடிய படமாகவும் குரங்குப்  பெடல் வந்திருக்கிறது.

கதாசிரியர் ராசியழகப்பனுக்கு செல் பேசியில் அழைத்தோம். கதை அவருடையது என்பதால், முதலில் அவரைக் குளிர்வித்தோம். கோடை மழையால் குளிர்ந்தவர்கள், குளிரை, மழை கொடுத்தவருக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டாமா? பின்னர் இயக்குநர் கமலக்கண்ணனை அழைத்துக் குளிர் பொழிந்தோம்.

இயக்குனர் கமலக் கண்ணன், கதாசிரியர் ராசி அழகப்பன்.

பத்தாண்டுகளுக்கு முன்னர் கமலக்கண்ணன் கோவையில் அறிமுகம். அப்பொழுது ‘மதுபானக் கடை’ படம் வெளியாகியிருந்தது. அந்த முதல் சந்திப்பிலேயே கமலக்கண்ணனின் திரைப்பட அறிவும், திரைப்பட  அக்கறையும்,  தனிப்பட்ட முறையில் கமலக்கண்ணன் என்கிற மனிதரின் பண்பும்  வெளிப்பட்டன. தமிழ்த் திரைப்படத் துறையில், நம்பிக்கை வைக்கக் கூடிய இளைஞராக அவர் பதிந்து போயிருந்தார் மனதுக்குள். அந்த நம்பிக்கையைப் பல மடங்கு காப்பாற்றியிருக்கிறார் ‘குரங்குப் பெடல்’ படத்தின் மூலமாக.

நம்மை விட, உடன் வந்திருந்த ஸ்ரீனிவாசன் பெருமாள்சாமி, அகிலேஷ் காத்தமுத்து ஆகிய இருவரும்தான் கதாசிரியரோடும் இயக்குநரோடும் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். சீனுவும், ராசி அழகப்பனும் கமலஹாசனின் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் என்பதால் அவர்களுக்குள் பேசிக்கொள்ள நிறைய இருந்தது. படம் பார்த்ததை விட மகிழ்ச்சி, அந்தப் படைப்பாளர்களை நன்றியுடன் பாராட்டிய போது கிடைத்தது.

கொங்கு மண்ணின் அச்சு அசலான மொழி, கேட்கத் தெவிட்டாத இன்பமாக இருக்கிறது. உரையாடல் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது கதை மாந்தர்களின் ஆழ் மனதை, வெளிப்படுத்துகிறது. நுட்பமான உரையாடல். உரையாடல் வழியாக திரைக்கதை பின்னப்படுகிறது. இறுக்கமடைகிறது. கொங்கு மண்ணின் சொல் வழக்குகள் அருமையாக வெளிப்பட்டிருக்கின்றன. இது குறித்தெல்லாம் பாராட்டி இயக்குனரிடம் பேசும் பொழுது அவர் தனது வசனகர்த்தா பிரபாகரின் திறமையை மெச்சினார். குழுவின் அத்தனை பேரும் கொடுத்த நல் ஒத்துழைப்பு தான் படத்தின் வெற்றிக்கு காரணம் என்கிறார் கமலக்கண்ணன்.

எல்லாம் நானே என்பதாக ‘ஃபர்ஸ்ட்ஸ்டிசம்’  நிரம்பி இருக்கிற தமிழ்  சினிமாவில் பிறரையும் பாராட்டுகிற தன்னம்பிக்கை குணம் பாராட்டத்தக்கது தானே! இசையமைப்பாளர் ஜிப்ரனின் பகட்டில்லாத பின்னணி இசை, படத்தின் அந்தந்த நேர உணர்ச்சிகளுக்கும், கருத்தியல்களுக்கும் ஒப்ப, தக்க வடிவத்தில் வெளிப்படுகிறது. இசை என்கிற பெயரில் இரைச்சலை நமது காதுகளுக்குள் கொட்டிக் கொண்டிருக்கிற ட்ரெண்ட் நிலவுகிற காலத்தில், காதுகளுக்கு வலித்திடாமல் நமக்குள்  உறைந்து கிடக்கும் உணர்ச்சிகளை மெல்ல மீட்டிக் கொடுக்கிறது இசை.

கலை இயக்குனர், கலைக்கு இயக்குனரின் வேலைகள் இதுவெல்லாம் என்று பார்வையாளர் கண்டுபிடித்து விடவே முடியாதபடி கதை வெளியோடு இயைந்து பணியாற்றி இருக்கிறார். இயக்குநரோடும், கலை இயக்குனரோடும் இயைந்து பணியாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். இந்தத் தொழில்நுட்பக் கலைஞர்களோடு இயைந்து பணியாற்றி இருக்கின்றனர் நடிக நடிகையர்.

காளி வெங்கட் எவ்வளவு மெச்சினாலும் அவருக்கு பத்தாது என்கிற அளவில் அப்பாவாக வாழ்ந்திருக்கிறார். காளி வெங்கட் , இயல்பிலேயே அகந்தை வெளிப்படாத ஒரு முகமும், தோற்றமும், உடல் மொழியும், உணர்ச்சி வெளிப்பாடுகளும் அமையப் பெற்றவர். அவரது அந்த இயல்பு, அப்பா வேடத்திற்கு அருமையாக உயிரூட்டியிருக்கிறது. தான் ஏற்றிருக்கிற கதாபாத்திரத்தை காதலித்தால் மட்டுமே, ஒரு நடிகர் இப்படி நடித்திருக்க முடியும். காளி வெங்கட் மட்டுமல்ல அத்துணை பேருமே சிறப்பான நடிப்பை நல்கி இருக்கின்றனர்.

சிறுவனின் அம்மா, சிறுவனின் அக்கா, சைக்கிள் கடைக்காரராகிய மிலிட்டரி குடிகாரன், பொம்மலாட்ட கலைஞர் யாரை விடுவது..? மிலிட்டரியின் சிறப்பான நடிப்பு அனைவரையுமே கவரக் கூடியது ஆனால் அப்படி ஒரு திறனை அவர் வெளிப்படுத்துவதற்கு தோதாக அமைந்தது குடிகாரனின் துணையாகும். இருவரும் சேர்ந்து களத்தில் நின்றாடும் பொழுது, கிரிக்கெட் மைதானத்தில் இரண்டு முனைகளிலும் மட்டையைப் பிடித்து நிற்கிற வீரர்களைப் போல அவர்கள் இசைந்து இயங்குகிறார்கள்.

சிறுவனின் நண்பர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகன் மாரியப்பனாக நடித்திருக்கிற சந்தோஷ் வேல் முருகனின் நடிப்பை பாராட்ட வேண்டும் என்றால், கொங்கு நாட்டு வழக்கில், ‘பின்னிப் பெடல் எடுத்து விட்டான்’. இப்படி நாம் பாட்டுக்குப் பேசிக் கொண்டே போகலாம். ஆனாலும், மன்னியுங்கள் … உங்கள் நேரத்தைக் கெடுக்கிறோம்.  புறப்படுங்கள் படத்துக்கு.

திரை விமர்சனம்; தங்கம் ( தங்க வேலவன்)

கதாசிரியர், இயக்குனர்.