அகமது பட்டேல் – விசுவாசத்தின் இலக்கணம்!

சாவித்திரி கண்ணன்

இன்று அதிகாலை கொரானாவின் பின் விளைவுகளால் வீழ்த்தப்பட்டு அகமது பட்டேல் மறைந்த செய்தி வேறு எவரையும் விட சோனியா, ராகுல்,பிரியங்கா முவரையும் மிக அதிகமாகவே பாதித்துவிட்டது. அந்த அளவுக்கு அந்த குடும்பத்தில் ஒருவராக தன்னை சுமார் 35 ஆண்டு காலம் பிணைத்துக் கொண்டு வளைய வந்தவர் அகமது பட்டேல்!

ராஜீவ்காந்தி எதிர்பராவிதமாக அரசியலுக்குள் நுழைந்த போது அவர் தனக்கு ஆப்த நண்பனாக அடையாளம் கண்டது அகமது பட்டேலைத் தான்! அகமது பட்டேலைத் தான் ராஜீவ் காந்தி தனது ஆட்சியில் பாராளுமன்ற செயலாளராக வைத்துக் கொண்டார்.

ராஜிவ் மரணத்திற்குப் பிறகு யாரைத் தான் நம்புவதோ என்று தடுமாறிய சோனியாவின் நம்பிக்கையை தனது விசுவாசத்தின் வழியே வென்றெடுத்தார் அகமது பட்டேல்!

காங்கிரஸ் தலைமையின் ஆபத்பாந்தனாக அவர்செயல்பட்ட தருணங்கள் கணக்கிட முடியாதவையாகும்! காங்கிசுக்கு நெருக்கடியான அனைத்து தருணங்களிலும் அவரே கிட்டதட்ட ஒரு ’ஒன்மென் ஆர்மி’யாக செயல்பட்டார்.

அகமது பட்டேலின் சொந்த மாநிலம் குஜராத். குஜராத்தின் பரூச் தொகுதியில் இருந்து மூன்று முறை மக்களவைக்கு தேர்வான அகமது, நான்காவது முறை தோல்வி அடைந்தார். ஆனால்,அவரது சேவையை பயன்படுத்திக் கொள்ள நினைத்த காங்கிரஸ் தலைமை தொடர்ந்து அவரை ஐந்துமுறை குஜராத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்து பயன்படுத்திக் கொண்டது. நரேந்திர மோடி குஜராத்தில் மேலெழுந்து வந்தது 2002 ஆம் ஆண்டு தான்! ஆனால்,அகமது பட்டேல் அதற்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே தேசிய அரசியலில் கவனிக்கதக்கவராக மாறி இருந்தார் அகமது பட்டேல்.ஆனால்,சதா சர்வ காலமும் டெல்லியிலேயே மேல்மட்ட அரசியல் செய்ததால் குஜராத் தொடர்புகள் அவருக்கு சற்று குறைந்தன!

அதுவும் சோனியா குடும்பத்தின் ராஜவிசுவாசியாக அவர் மாறிவிட்டபிறகு, முழுக்க,முழுக்க டெல்லி அரசியலுக்கே தன்னை ஒப்புவித்துக் கொண்டார். கூர்ந்த மதியாளரான அகமது, எந்த ஒரு பிரச்சினையை அணுகி தீர்த்துவைப்பதிலும் வல்லவர். அனைவரோடும் இனிமையாகவும், உற்சாகமாகவும் பழகுமவரது குணம் எதிர்கட்சி உள்ளிட்ட அனைத்து மட்டத்திலும் அவருக்கு நண்பர்களை பெற்றுத் தந்தது. சோனியா குடும்பத்தின் தீவிர விசுவாசியாக அடையாளம் பெற்ற அகமது நினைத்திருந்தால் மன்மோகன் அமைச்சரவையில் தான் விரும்பிய துறையில் கேபினெட் அந்தஸ்துள்ள பொறுப்பை சுலபமாக அடைந்திருக்க முடியும். ஆனால்,அவர் விரும்பவில்லை. அதே சமயம் கட்சி தலைவர் சோனியாவிற்கும் மற்ற அமைச்சர்களுக்குமான பாலமாக – சோனியாவின் அரசியல் செயலாளராக – அகமது திகழ்ந்தார்.

இப்படி தன்னை அமைச்சரவைக்கு வெளியே நிறுத்திக் கொண்டதால்,கட்சிக்கோ,ஆட்சிக்கோ நெருக்கடி நேரும் தருணங்களில் எல்லாம் களத்தில் இறங்கி அதை சரிபடுத்தி இயல்பு நிலையை மீட்டெடுப்பதில் இணையற்றவராக விளங்கினார். இவரை போல செயல்பட்ட இன்னொருவர் பிரணாப் முகர்ஜி என்பது அனைவருக்கும் தெரியும்.ஆனால், தன்னை வெளிக்காட்டாமல் இயங்கியதில் தான் அகமதுவின் அசாத்திய தன்நம்பிக்கை இருக்கிறது.

மேலும் கட்சிக்கு நிதி நெருக்கடி ஏற்படும் தருணங்களில் எல்லாம் தொழில் அதிபர்களை அணுகி பெரும் நிதியை திரட்டித் தரும் அட்சயபாத்திரமாகவும் அவர் திகழ்ந்தார். இந்த வகையில் அவரது இழப்பு யாராலும் ஈடு செய்யமுடியாத இழப்பாகும்!

அகமது பட்டேல் கட்சிக்கார்கள் மத்தியில் எப்படி உணரப்பட்டார் என்றால், சோனியாவிற்கும் ,ராகுலுக்கும் அடுத்த நிலையில் இருந்த சக்தி வாய்ந்த ஒரு நபராக அவர் பார்க்கப்பட்டார்.எந்த மாநிலத்தில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி,யார்,யாருக்கெல்லாம் சீட் தர வேண்டும் என்பதை அனேகமாக அவர் தான் தீர்மானிப்பவராக இருந்தார். சீட் தர முடியாதவர்களை எப்படி சமாளித்து திருப்திபடுத்துவது என்பதையும் அறிந்து வைத்திருந்தார். மகாராஷ்டிராவில் பாஜக வளர்ச்சியை தடுக்க சிவசேனாவுடன் உடன்பாட்டை எட்டமுடியும் என்பதை நிருபித்து காட்டினார்.ராஜஸ்தானில் அசோக்கெலாட்டுக்கும்,சச்சின் பைலட்டுக்கும் தகராறு முற்றிய போது சமாதானம் செய்து வைத்ததில் முக்கிய பங்காற்றினார். ஆகவே தான், தனது இரங்களில், சோனியாகாந்தி, ’’அகமது பட்டேல் யாராலும் இட்டு நிரப்பமுடியாத தோழராக, கட்சியின் உண்மையான சகாவாக,குடும்ப நண்பராக திகழ்ந்தவர்’’ என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்..

ராகுல் காந்தி :

“இது ஒரு சோகமான நாள். அகமது படேல், காங்கிரஸ் கட்சியின் தூணாக விளங்கினார். சோதனையான காலங்களில் கட்சியுடன் இணைந்து செயலாற்றியவர். காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய சொத்தாக விளங்கிய அகமது படேல் அவர்களின் குடும்பத்தினருக்கு குறிபாக பாசிலுக்கும்,மும்தாஜிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி :

“அகமது படேல் அவர்கள் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர் மட்டுமல்ல, எனக்கு அப்போது நல்ல ஆலோசனைகள் வழங்கக் கூடிய நண்பராகவும் விளங்கினார். அவரது மறைவு ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அகமது பட்டேல் மறைவு மிகவும் சோதனைகளை காங்கிரஸ் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு தருணத்தில் நிகழ்ந்திருக்கிறது. இது உண்மையிலேயே ஈடு செய்யமுடியாத பேரிழப்பாக உணரப்படுகிறது. எனினும்,ஒரு தேசிய கட்சியில் அந்த இடத்திற்கான தகுந்த நபர் விரைவில் கண்டடையப்படுவார்.