தடுப்பூசியின் பக்க விளைவுகளை ஏன் பதிவு செய்வதில்லை AEFI ?

Dr. கோ. பிரேமா MD(Hom)

பெரும்பான்மையோருக்கு பிரச்சினையில்லை. ஆனால்,சிலருக்கு கொரோனா தடுப்பூசியினால் சோர்வு, முக வீக்கம், கண் சிவத்தல், தோல் அரிப்பு, நெடிய தூக்கம்,பலவீனம்.. போன்ற பல பக்க விளைவுகள்..! இத்துடன் தடுப்பூசி போட்ட நான்கு நாட்களுக்குள் கணிசமான மரணங்கள்…! இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டிய AEFI என்ற, தடுப்பூசி பாதகங்கள் கண்காணிப்பு கமிட்டி என்ன தான் செய்கிறது…?

கொரோனா தடுப்பூசி போட்ட பின் பல்வேறு பக்கவிளைவுகளும்,மரணங்களும், ஏன் கொரோனாவும் கூட வருவதை நாம் அன்றாடம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் இவற்றையெல்லாம் முறையாக பதிவு செய்ய வேண்டிய AEFIல் அதை சரியாக செய்வதில்லை! தவிர்த்துவிடுகிறார்களா என்றும் தெரியவில்லை. ரிப்போர்ட்டிங் செய்வது,பரிசோதனை முடிவுகளை இணைப்பது போன்ற பணிகளை மருத்துவர்கள் சொய்யத்தவறுவது  வேலைப்பளுவினால் ஏற்படும் கவனக்குறைவா அல்லது அரசியல் அழுத்தமா..? என தெரியவில்லை.

தடுப்பூசி போட்ட பின் ஒருவருக்கு ஏற்படும் உடல் மாற்றங்களை நோய்குறிகளை , புகார்களாக முதலில் ரிப்போர்ட் செய்யவேண்டியது மக்களோடு புழங்கும் மருத்துவர்கள் தான். அறியாமை, அலட்சியம், அகங்காரம் இவை ஒரு மருத்துவர் தடுப்பூசி சார்ந்த பாதகங்களை தொடர்ந்து மறுக்க காரணமாகிறது! பிரபல நடிகர் விவேக் போன்றவர்களின் மரணத்தையே பரிசீலனைக்கு உட்படுத்தவில்லை எனும் போது இது போல எத்தனை பேர்களின் மரணம் முறையாக பதிவாகி இருக்க முடியும்?

தொற்றை தடுப்பதற்கான ஒரே தீர்வாக தடுப்பூசி  என்பதே அறிவியல் பிழையாகும்!  இந்த தடுப்பூசிக்கு மெனக்கெடும் பிரச்சாரத்தில்  வெளிப்படைத்தன்மையோடு பேசிவிட்டுப்போகலாமே?

மாறாக இதுபோன்ற பாதகங்களை பரிசீலிக்கும் மனநிலையே பல மருத்துவர்களிடம் இல்லை என்பது கவலையளிக்கிறது.

தடுப்பூசி போட்டபிறகு ஏற்படும் பாதகங்கள், தீவிர பாதகங்கள் மரணங்கள் உட்பட, இவற்றை கண்காணிக்க உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் பேரில் ஒவ்வொரு நாட்டிலும் AEFI- Adverse Events Following Immunisation என்ற கமிட்டி உள்ளது!

இந்தியாவிலும் கடந்த 34 ஆண்டுகளாக இக்கண்காணிப்பு கமிட்டி உள்ளது.

தடுப்பூசி பாதகங்களை சரியான ஆவணங்களுடன், மரணம் என்றால் உரிய பரிசோதனைகள் செய்ய வேண்டும். அதாவது பிரேத பரிசோதனை முதல் இரத்த பரிசோதனை, தசை மாதிரி பிரசோதனை… என பல்வேறு ஆய்வு முடிவுகளுடன் சமர்பிக்க வேண்டும். அதன் பிறகு, மாவட்ட, மாநில, மத்திய அளவிலான கமிட்டிகள் இவற்றை அடுத்தடுத்து முறையாக பரிசீலித்து  வகைப்படுத்துவர்.

இது குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு  மட்டுமல்ல, கொரோனா தடுப்பூசிக்கும் பொருத்தும். 2020 டிசம்பரில் உலக சுகாதார நிறுவனம்  இதுபற்றி விவரமான வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளது.

சரி, AEFI என்றால் என்ன?

ஒருவருக்கு தடுப்பூசி போட்டபின்னர் உடலில் ஏற்படும் மாற்றங்கள், குறிகள், உபாதைகள் மரணங்கள்  உட்பட எல்லாவற்றையும் பொதுவாக AEFI- தடுப்பூசி பாதகங்கள் எனலாம்.

இவை, பாதகங்களின் தீவிரத்தை பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது. மிதமான பாதகம்- லேசான காய்ச்சல், ஊசி போட்ட இடத்தில் வலி. பெரும்பான்மையினரிடம் காணலாம்.

தீவிர பாதகம் – அதிக காய்ச்சல், ஊசி போட்ட இடத்தை தாண்டிய பரவலான வீக்கம். சிலரிடம் காணலாம்.

அதிதீவிர பாதகம் – மருத்துவமனை சிகிச்சை பெறும் நிலை, நிரந்திர உடல் உறுப்பு முடக்கம், சிலநேரங்களில் மரணம் வரை இட்டுச்செல்லும் பாதகங்கள். வெகு சிலரிடம் இவற்றை காணலாம்.

என்னதான் சில தொற்றுகளுக்கான தீர்வாக தடுப்பூசிகள், அதன் சாதகங்கள்  அடிப்படையில் பல ஆண்டுகளாக மக்களிடம் பரப்புரை செய்யப்பட்டு வந்தாலும், எதிலும் ஒருசில பாதகங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பரிசோதனை கட்டங்களில் சில பாதகங்கள் தெரிந்தாலும், அனைத்து பொதுமக்களுக்கு எனும்போது பரிசோதனையில் வராத மேலும் பல பாதகங்களும் தெரியவரும் வாய்ப்புகளும் உண்டு.

இப்போது குறிப்பாக கொரோனா தடுப்பூசிகள் அவசர, அவசரமாக கட்டமைக்கப்பட்டதும், பரிசோதனைகள் மிக குறுகிய காலமே நடந்திருப்பதாலும், இதன் AEFI கண்காணிப்பு என்பது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

அதனாலேயே இந்த கண்காணிப்புகள் மூலம் கிடைக்கப் பெறும் தகவல் அடிப்படையில் தடுப்பூசி போட்ட காலத்தோடு ஒத்தபடி ஒரு பாதகம் பலருக்கும் அதிகம் தெரிந்தால் அதை தடுப்பூசி யின் பாதகமாக நாம் அங்கீகரிக்க முடிகிறது.

ஏன் பரிசோதனைகளில் தெரியவராதது கூட பல பெருமளவில்  நடைமுறையில் தடுப்பூசி போடும்போது வர வாய்ப்புள்ளது.

இதற்கு போலியோ, தட்டம்மை என எந்த தடுப்பூசியும் விதிவிலக்கல்ல. உதாரணமாக  2016-2018ல் பிலிப்பைன்ஸ் பள்ளிக்குழந்தைகளில் அதிக மரணங்களை ஏற்படுத்திய டெங்கு தடுப்பூசியை கூட சொல்லாம்‌. 20 ஆண்டுகள் பரிசோதனை கடந்து, பல ஆயிரம் குழந்தைகளில் மிகுந்த பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்டும் பெருவாரியான குழந்தைகளிடம் போடும்போது மரணங்களின் எண்ணிக்கை அதிரவைத்தது‌.

ஆரோக்கியமான ஒருவருக்கு அரசு திட்டங்களால் போடப்படும் தடுப்பூசி என்பது நோயுற்ற ஒருவருக்கு அவரது விருப்பத்தின் பேரில் அளிக்கப்படும் சிகிச்சையோடு என்றும்  ஒப்பிட முடியாது.

இக்காரணங்களால் இந்த பாதகங்களை கண்காணிப்பது என்பது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

இதையே மருத்துவ அறமும் வலியுறுத்துகிறது.

பின்னர் இப்புகாரைத்தொடந்து மாவட்ட அளவில் உள்ள கமிட்டியில் இருந்து தொடர் விசாரணை, பரிசோதனைகள் நடக்கும். பாதிக்கப்பட்டவரின் தடுப்பூசிக்கு முன் இருந்த உடல் நிலை, வேறு நோய்கள், தடுப்பூசிக்கு பின் வந்துள்ள நோய்குறிகளின் பரிசோதனை முடிவுகள், மரணம் ஏற்பட்டிருப்பின் பிரேத பரிசோதனை, இரத்த/தசை மாதிரி பரிசோதனை என  சரியான பரிசோதனை ஆதாரங்கள் சமர்பிக்கப்பிட்ட பின்னர் மாநில, மத்திய கமிட்டிகள் இவற்றை மேலும் பரிசீலித்து வகைப்படுத்தும்‌.

அது என்ன வகைப்படுத்துதல்?

பாதகங்களை ஐந்தாக வகைப்படுத்துகின்றது AEFI guidelines.

  1. தடுப்பூசி கட்டமைப்பிலிருந்தே ஏற்படும் பிரச்சினை, உட்பொருட்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்.
  2. தடுப்பூசி தயாரிப்பின் போது தரத்தில் ஏற்படும் மாற்றங்களினால் ஏற்படக்கூடிய பாதகங்கள்.
  3. தடுப்பூசி போடும் இடத்தில் அதை கையாளும் போது ஏற்படும் தவறுகளினால் வரும் பாதகங்கள்.
  4. தடுப்பூசி பற்றிய அச்சம் மற்றும் பதட்டம்.
  5. மேற்சொன்ன எவற்றிலும் சம்பந்தப்படாத பிற புகார்கள் அனைத்தும் தற்செயல் என்ற வகையில் அடங்கும்.

உண்மையில் அவை தற்செயல் இல்லை, தடுப்பூசிக்கு அந்நபரின் உடல்  எதிர்வினையாற்றியது தான் என்பதற்கு மருத்துவ விளக்கங்கள், பரிசோதனை முடிவுகள் இருந்தாலும், உ‌லக சுகாதார நிறுவன வழிகாட்டுதலில் இவை தற்செயல் என்ற வார்த்தைக்குள் அடங்குகிறது.

இதனை சரியாக புரிந்து கொள்ள முடியாத பலர் தடுப்பூசி தயாரிப்பு , கையாளுதல் தவிர்த்து ஏற்படக்கூடும் அனைத்து பாதங்களையும் தடுப்பூசியால் அல்ல என்ற முடிவுக்கு வந்துவிடுவது அறிவியலின் துயரமே.

இந்த பாதகங்களுக்கு குறைந்தபட்ச இழப்பீடு திட்டம் வகுக்கவேண்டியது அரசின் கடமை. இந்தியாவில் AEFI மிக மந்தமாகவே செயல்படுவதையும், இழப்பீடு திட்டம் இல்லாததையும் சுட்டிக்காட்டி, இதை சீர் செய்யவேண்டிய அவசியத்தை தொடர்ந்து பல மூத்த மருத்துவர்கள் அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் ஜனவரி 16 முதல் தொடங்கிய கொரோனா தடுப்பூசி திட்டத்தில் மார்ச் 31 வரை வரப்பெற்ற தரவுகளை இக்கமிட்டி பரிசீலித்து வகைப்படுத்தியுள்ளதை இந்து நாளிதழில் மூத்த பத்திரிகையாளர் பிரசாத் எழுதிய கட்டுரை தெரிவிக்கிறது.

அந்த கட்டுரை தரும் சில தகவல்களை பார்ப்போம்.

# கிடைக்கப்பெற்ற 617 அதிதீவிர பாதகங்களில்(மரணம் உட்பட), 38% மட்டுமே முழுமையான பரிசோதனை முடிவுகளுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

#  பரிசீலனைக்குப்பின் முழு தகவல்களுடன் கிடைத்த 124 மரணங்களில் பாதி மாரடைப்பாலும், 12%  மூளைக்கு செல்லும் இரத்தம் உறைதலினாலும், மற்ற மரணங்கள் சுவாசத்தொற்றினாலும், கொரோனாவிலும், திடீரெனவும் மேலும் பல காரணங்களால் நடந்தது தெரியவந்துள்ளது‌.

# இவற்றில் முக்கியமாக கவனிக்க வேண்டியது பெரும்பான்மையான மரணங்கள் தடுப்பூசி போட்ட மூன்று நாட்களுக்குள் நடந்திருக்கிறது. அடுத்த எண்ணிக்கைகள் ஒரு வாரத்திற்குள்ளும் அடுத்தடுத்த வாரங்களில் குறைவான மரணங்களும் பதிவாகியுள்ளன.

தடுப்பூசிக்கும், மரணங்களுக்கும் தொடர்பில்லை எனில், தடுப்பூசி போட்டு அடுத்தடுத்த வாரங்களில் ஒரே சீரான எண்ணிக்கைகளில் தான் மரணங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், இங்கே முதல் வாரத்தில் அதிகமாகவும் பின்னர் குறைவாகவும் இருப்பதால், இம்மரணங்கள் தடுப்பூசியோடு தொடர்புள்ளவையா..? என்பதை மேலும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும், என்கிறார் இந்தியாவின் மூத்த வைராலஜிஸ்ட் Dr. ஜான் ஜேக்கப்.

# மரணங்களை போலவே மருத்துவமனை சிகிச்சை தேவைப்பட்டவர்களும் தடுப்பூசி போட்ட முதல் மூன்று நாட்களில் மிக அதிகமாகவும் பின்னர் குறைவாகவும் இருப்பது சந்தேகத்தை அதிகரிக்கிறது.

# மருத்துவமனை சிகிச்சை தேவைப்பட்ட அதிதீவிர பாதகத்தில் , பதட்டத்தை அடுத்து காய்ச்சல், ஒவ்வாமை, மாரடைப்பு , மூளையில் இரத்தக்கசிவு, வலிப்பு, ஒருபக்க வாதங்கள் , நுரையீரல் தொற்று, கொரோனா எனப் பலர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்தியாவில் தற்சமயம் போடப்படும் இரண்டு தடுப்பூசிகள் ஆஸ்டிராஜென்கா- கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவேக்ஸின்.

இதில் ஆஸ்டிராஜென்கா தடுப்பூசி போட்டபின்னர் நோய் எதிர்ப்பு மண்டல தூண்டலின்போது (immune response) ஏமவினை(autoimmune) தன்மையால் சிலருக்கு இரத்தம் உறைதல் மற்றும் கசிவு ஏற்படுகிறது என்பதை The New England Journal of Medicine ல் சமீபத்தில் வெளிவந்துள்ள ஆய்வுக்கட்டுரைகள் சொல்கிறது.

ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்ஸி இந்த தடுப்பூசியில் இரத்தம் உறையும் தன்மை இருப்பதை பல நாட்டு மாதிரிகளில் இருந்து உறுதி செய்துள்ளது.

மற்றொரு தடுப்பூசியான கோவேக்ஸின் தடுப்பூசியில் கிருமிகள் சரியாக செயலிழக்கப் படவில்லை என்பதில் தொடங்கி contamination என தரம் குறைவாக உள்ளதாக பிரேசில் திருப்பி அனுப்பியதோடு, எப்படி இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டில் இந்த தடுப்பூசி அனுமதிக்கப்பட்டது ..? என கேள்வியும் எழுப்பியுள்ளது. இதுவரை இதற்கு பதில் கிடைக்கவில்லை.

ஒரு தொற்றின் போது அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மக்களை பீதியில் வைத்து, பசி பட்டினியில் நடக்க வைத்து, சமூக இயக்கங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து நிற்கவைத்து, தொடர்ச்சியான பல இடர்களில் தள்ளும்போது, அரசின் அறிவியல் தன்மையற்ற போக்கை கண்டிக்காமல், மருத்துவப் பிரச்சனைக்கான தீர்வை மருத்துவர்கள் முன்னெடுக்க தவறும் சூழலில்  மக்களுக்கு இவர்கள் இரு தரப்பின் மீதும்  நம்பிக்கை குறையும்‌.

எடுத்தற்கெல்லாம் தடுப்பூசி ஒன்றே ஒரே தீர்வாக பரிந்துரைப்பதே தவறு.

அப்படி பரிந்துரைக்கப்படும் தடுப்பூசி குறைந்தபட்சம் மூன்று எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவேண்டும்.

அதன் தேவை, அதன் பலன், அதன் பாதுகாப்பு. ஆனால் இந்த தடுப்பூசிகள் தொற்றை தடுக்காமல், பாதுகாப்பை உறுதி செய்யாமல் அவசர அவசரமாக மக்களுக்கு திணிக்க அரசுகளும், மருத்துவர்களும் முயற்சிக்கிறார்கள். இதனால், பல தவறுகளும்,மோசடிகளும் நிகழும்! தடுப்பூசி போட்டிருந்தால் தான் ரயில்,விமானங்களில் பயணம் செய்ய முடியும் என நிர்பந்தித்தால் மக்கள் என்ன செய்வார்கள்…?

6 மாதங்களிலிருந்து ஓராண்டுக்குள் மட்டுமே பலன் எதிர்பார்க்கப்படும் தடுப்பூசியை ஆண்டுதோறும் இரண்டு முறை போடவேண்டி வரலாம் என்கின்றன தடுப்பூசி நிறுவனங்கள். எனில் இந்தியா போன்ற நாட்டில் எத்தனை கோடி மக்களுக்கு இதை ஆண்டுதோறும் இரண்டு முறை போடும் நிதி, நிர்வாக, மனித உழைப்பு உள்ளது என சிந்திக்க வேண்டும்.

தடுப்பூசி போட்டபின்னர் தொடர் கண்காணிப்பு தேவைப்படுகிறது.

அதிதீவிர பாதகங்களினால் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர், பணிக்கு செல்லமுடியாமல் பொருளாதார இழப்பை சந்திப்போர், மீளா இழப்பான மரணம் ,இவற்றுக்கு அரசிடம் என்ன பதில் உள்ளது?

கொரோனா தடுப்பூசி முற்றிலும் விருப்பத்தேர்வு மட்டுமே ! ஆதலால் பாதகங்களுக்கு எந்த பொறுப்பும் அரசு ஏற்காது என்ற நிலையில் இழப்பீடு காப்பீடு எதுவும் தர இயலாது என ஒருபக்கம் கைவிரித்துவிட்டு, மறுபக்கம் மறைமுகமாக அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியர்களின் அதிகாரத்துவத்தை பயன்படுத்தி மக்களை தடுப்பூசி போட நிர்பந்திக்கும்‌ செயல்களை தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம். போக்குவரத்து தொழிலாளர்களுக்கான சுற்றறிக்கையைப் பார்க்க;

தடுப்பூசி போட்ட பின் கொரோனா தொற்று வந்தவர்கள் நமக்கு தெரிந்து அரசியல் தலைவர்களில் மட்டுமே தோழர் நல்லகண்ணு , கனிமொழி, துரைமுருகன், மன்மோகன்சிங், ராகுல்காந்தி, எடியூரப்பா… என பட்டியல் ஏகமாக நீள்கிறது. ஆனால் இங்கே AEFIல்  பதிவாகியிருப்பதோ மிக குறைவே.

ஒரு மருத்துவப் பிரச்சனைக்கு அரசின் தெளிவற்ற ‌மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டிக்காமல் மக்கள் பக்கம் நிற்காமல் மருத்துவர்களும் கள்ளமௌனம் காப்பதை என்னென்பது…?

தடுப்பூசியின் அறிவியலை வெளிப்படைத்தன்மையோடு பேசுவதும்,  ஒருவரது விருப்பத்தேர்வின் உரிமையை காப்பதும் அறமாகும்.

தடுப்பூசி பற்றிய எந்த அறிவியல் உண்மையையும் சொல்லாமல் , விருப்பு வெறுப்பு மறுப்புக்கான அவகாசம் கொடுக்காமல், எந்த ஆபத்திற்கும்‌‌ குறைந்தபட்ச பொறுப்பும் ஏற்றுக்கொள்ளாமல், நான் போட்டுக்கொண்டேன் ஆதலால் நீயும் போட்டுக்கொள் என திணிப்பது தான் அறிவியலா ? இது தான் அறமா?

கட்டுரையாளர்;

பிரேமா கோபாலன்

ஹோமியோபதி மருத்துவர்,

மக்கள் நலன் சார்ந்த மருத்துவத்தில் உறுதிப்பாடுள்ளவர்.

mail id drpremahomoeo@gmail.com