புதுச்சேரி; மெளன யுத்ததின் மர்ம அரசியல்..!

-சாவித்திரி கண்ணன்

சுதந்திர இந்தியாவில் எங்குமே நடந்திராத ஒரு புதிராக புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி இரண்டு மாதங்களாக இன்னும் செயல்படமுடியாமல் – அமைச்சர்களுக்கு இலாகாக்கள் வழங்கப்படாமல் – திரிசங்கு சொர்க்கத்தில் உழல்கிறது.

என்.ஆர்.காங்கிரஸுக்கும், பாஜகவிற்கும் இடையே நடக்கும் மெளன யுத்ததின் விளைவே அங்கு இந்த நிலைமை தோன்ற காரணமாகியுள்ளது.

புதுச்சேரியை பொறுத்த அளவில் அங்கு தங்கள் ஆட்சியை ஸ்தாபிப்பதன் மூலம் தமிழ்நாட்டு அரசியலுக்கு அடித்தளம் போடலாம் என்பது பாஜகவின் நீண்ட நாள் ஆசை! ஆனால் தனித்து நின்றால் டெபாசிட் கூட வாங்கமுடியாத அளவிலான வாக்கு வங்கி (2.4%) கொண்ட பாஜக, இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸூடன் கூட்டணி கண்டு ஆறு இடங்களில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற நான்கே நாட்களில் ரங்கசாமிக்கு உடல் நிலை பாதிப்பு வந்த நிலையில் அவர் பத்து நாட்கள் மருத்துவமனையில் இருக்க நேரிட்டது. அந்த நேரமாக பார்த்து, முதலமைச்சரின் ஒப்புதல் மற்றும் ஆலோசனை இல்லாமல் துணை நிலை கவர்னர் தமிழசை செளந்திரராஜன் பாஜகவிற்கு மூன்று நியமன எம்.எல்.ஏக்களை அதிரடியாக நியமித்தார். இதன் மூலம் தன் பலத்தை ஒன்பதாக உயர்த்திக் கொண்டது பாஜக.

பிறகு சுயேட்சையாக நின்று ஏனாம் தொகுதியில் ரங்கசாமியை தோற்கடித்த சுயேட்சை வேட்பாளர் கோலப்பள்ளி சீனிவாஸ் அசோக் உடனடியாக பாஜகவில் சேர்ந்தார். பிறகு மீண்டும் இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்களை விலைபேசி வாங்கிய பாஜக தற்போது என்.ஆர். காங்கிரசை விடவும் அதிக எம்.எல்.ஏக்களை கொண்ட கட்சியாகிவிட்டது. அவ்வளவு பேரும் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசி வந்துவிட்டனர். ரங்கசாமி ஓடி ஒளியும் அரசிலை நடத்தட்டும். அதுவும் நமக்கு நல்லது தான்.அதற்குள் நம் கட்சியை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். அவரை அவர் போக்கில் விட்டுப்பிடித்து தான் மெல்ல, மெல்ல அழிக்க வேண்டும் என்று பாஜக மேலிடம் காய் நகர்த்தி வருகிறது.

நமச்சிவாயத்திற்கு துணை முதல்வர் பதவி, ஒரு சபாநாயகர் பதவி மற்றும் மூன்று அமைச்சர்கள் கேட்டது பாஜக. புதுச்சேரியில் ஒரு முதலமைச்சர் மற்றும் ஐந்து அமைச்சர்கள் மட்டுமே பதவி ஏற்க முடியும்! ஆகவே, நீண்ட இழுபறிக்கு பிறகு, என்.ஆர்.காங்கிரசிற்கு மூன்று அமைச்சர்களும், பாஜகவிற்கு சபாநாயகர் பதவி மற்றும் இரண்டு அமைச்சர்கள் எனவும் முடிவு எடுக்கப்பட்டது! ஒரு வழியாக அமைச்சர்கள் பதவி ஏற்பும் நடந்துவிட்டது. அதில் தற்போது பாஜக பவர்புல்லான துறைகளை கேட்டதால், அப்செட் ஆன ரங்கசாமி துறைகளை ஒதுக்கமுடியாமல் தடுமாறுவதாகத் தெரிகிறது.

பாஜகவின் நகர்வை பார்க்கும் போது, அது மீதமுள்ள மற்ற சுயேட்சைகளிடமும் பேரம் பேசி வருவதை பார்க்கும் போது ரங்கசாமி நிலைஎன்னவாகும் என சொல்ல முடியாது. மேலும் காங்கிரஸ் மற்றும் திமுகவில் யாரையாவது தூக்கமுடியுமா என்றும் பாஜக முயற்சிக்கிறது. அப்படி நடந்தால் ரங்கசாமியை ஓரம் கட்டிவிட்டு பாஜகவே தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. அந்த இலக்கை அவசரப்படாமல்- ரங்கசாமி தரும் வாய்ப்புகளை பயன்படுத்தியே சாதிக்க நினைக்கிறது பாஜக.

தன்னை உருவாக்கி அடையாளம் தந்த காங்கிரஸை, பகை சக்தியாக கருதி, எதிர் அரசியல் நிலை எடுத்த ரங்கசாமி அதற்கான விலையை தற்போது தந்து கொண்டுள்ளார். கூடா நட்பு அவருக்கு கடுமையான மன உளைச்சலை தந்து கொண்டுள்ளது!

பாண்டிச்சேரியில் பலிக்குமா? பாஜகவின் படுபாதக ராஜ தந்திரம்

காலை சுற்றிய பாம்பு கழுத்து வரை ஏறி வருகிறது என்பது நன்கு தெரிந்தும் முதல்வர்  ரங்கசாமி செய்வதறியாது திகைக்கிறார்! இந்த நிலையில் அவர் பாஜகவை உதறி திமுக, காங்கிரசுடன் கைகோர்த்தால் மட்டுமே தன் அழிவில் இருந்து மீள முடியும் என்று அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்! ஆனால், அவர் பாஜகவை உதறினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். ஆனால், அதற்கான போராட்ட குணமும், திரானியும் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அதே சமயம், இது போன்ற அழிச்சாட்டிய அரசியலை – செயல்பாடில்லாத ஒரு நிர்வாகத்தை – அவர்  தொடர்வாரேயானால், அது மக்களிடம் பெரும் கோபத்தை தான் ஏற்படுத்தும்.

கொரானா பெருந்தொற்று மக்கள் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ள நிலையில் பதவி மற்றும் அதிகார அரசியல் சித்து விளையாட்டுக்களால் புதுச்சேரி நிர்வாகம் வரலாறு காணாத அளவில் ஸ்தம்பித்துள்ளது. தமிழகத்தில் திமுக அரசாங்கம் இந்த காலகட்டத்தில் எவ்வளவோ செயல்பாடுகளை செய்து வரும் நிலையில், புதுச்சேரி மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்ட நிலைமைகளை எண்ணி மிகுந்த வேதனையில் உள்ளனர்.

காங்கிரசின் கோட்டையாக நீண்ட நெடுங்காலமாக திகழ்ந்த புதுச்சேரி காங்கிரசின் தகுதியற்ற தலைமையாலும், உட்கட்சிப் பூசலாலும் கை நழுவிப் போனது. அதிமுகவோ, பாஜகவின் சகவாசத்தால் அடியோடு காணாமல் போய்விட்டது! அடுத்து பாஜக விழுங்க காத்திருப்பது யாரை என்பது தான் புதுச்சேரியில் நாளும் விவாத பொருளாகவுள்ளது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்