ஒரு ஆராய்ச்சி நிறுவனம் அதிமுகவின் கிளையாக்கப்பட்ட வரலாறு!

-சாவித்திரி கண்ணன்

தமிழ் மொழிக்கான ஆராய்ச்சி நிறுவனமாக பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் – பல தமிழ் அறிஞர்கள் பொறுப்பு வகித்த நிறுவனம் – கடந்தகால ஆட்சியில் அதிமுகவின் என்ற கட்சியின் கிளை நிறுவனமாக அதன் இயக்குனர் பொறுப்பு வகித்த கோ.விஜயராகவனால் மாற்றப்பட்டு, வசூல் வேட்டைக் களமானது! இந்த ஆட்சியில் அது மீண்டும் கல்வி மற்றும் ஆராய்ச்சி பின்புலத்தில் இயக்கப்படுமா..?

எங்கோ இருந்து வந்த பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் மொழிக்கென்று ஒரு ஆழமான அடித்தளத்தை தமிழகத்தில் நிறுவிச் சென்றனர். பிரெஞ்சு மொழிக்கென்று உயர் ஆராய்ச்சி  நிறுவனம் இருந்ததை முன் மாதிரியாகக் கொண்டு தமிழ் மொழிக்கென்று உயர் ஆராய்ச்சி நிறுவன தேவையை உணர்ந்து 1968-ம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது பேரறிஞர்.அண்ணாவால் முன்னெடுப்பு செய்யப்பட்டு, பிறகு கலைஞர் ஆட்சியில் 1970-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்!

அண்ணாவின் ஆசை இன்னும் கூட நிறைவேறவில்லை! இன்று வரை இந்த ஆராய்ச்சி நிறுவனம் பெயருக்கேற்ப உலகத்தரத்திற்கான ஆராய்ச்சிகளையும் செய்யவில்லை. வளர்ச்சியும் பெறவில்லை. இன்னும் கூட இதற்கு யு.ஜி.சி எனப்படும் பல்கலைக் கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெறப்படவில்லை. அதனால் தமிழ் மொழி ஆராய்ச்சிக்கான தேசிய முக்கியத்துவத்தை கூட எட்டமுடியவில்லை. அப்படி இருக்க சர்வதேச முக்கியத்துவத்தை எங்கனம் பெறுவது…?

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய நோக்கம் தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழரின் கலைகள், பண்டைய அயல்நாட்டு வாணிகத் தொடர்புகள், வாழ்க்கை நிலை, இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் பண்டைய தமிழர்களின் சாதனைகளை,மறைக்கப்பட்ட வரலாற்றினை ஆராய்ச்சி செய்து வெளியே தோண்டி எடுத்து வருவதாகும். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் தமிழ் ஆய்வாளர்களுக்கு உதவுவதாகும்!

இன்று இந்த நோக்கங்களோடு அது செயல்பட்டு வருகிறதா..? என்பதே கேள்வியாகும்.

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மற்ற கல்லூரிகளில் கற்பிக்கப்படுவது போல பல்வேறு படிப்பினை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.  பிளஸ்2 முடித்த மாணவர்களுக்கு நேரடியாக எம்.ஏ எனும் முதுகலை படிப்பினை  அறிமுகப்படுத்தியுள்ளது.  இதன் மூலம் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இப்பிரிவில் நேரடியாக சேர்த்துக் கொள்ளப்பட்டு  தமிழ் இலக்கியம் எம்.ஏ  எனும் பட்டம் வழங்கப்படுகிறது. இது தவிர  2014-ம் ஆண்டில் இருந்தே உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பிரெஞ்சு மற்றும் இந்தி கற்பிக்கப்பட்டு வந்தது.சில ஆண்டுகள் கழித்தே அது திமுகவினருக்கு தெரிய வந்து கடும் எதிர்ப்பு உருவாகி இந்தி விலக்கிக் கொள்ளப்பட்டு அதற்கு பதில் தெலுங்கு கற்பிக்கப்படும் என சொல்லப்பட்டது.

”இந்தியோ, பிரெஞ்சோ, தெலுங்கோ எதுவும் கற்பது தவறில்லை. அதை கற்பிக்கும் வேலை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கானதல்ல, இது தமிழ் ஆராய்ச்சிக்கு மட்டுமானதே..’’ என்ற புரிதல் கூட இல்லையே ஆட்சியாளர்களுக்கு!

இது தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி நிறுவனம் என்று சொல்லப்படுகிறது. இங்கு கல்வெட்டு, தொல்லியல், அகழாய்வு எனும் பிரிவுகள் கூட வெறும் பெயரளவுக்கு தான் உருவாக்கப்பட்டுள்ளன!

ஒரு கல்வி நிறுவனம் அதற்குரிய கல்வி, பண்பாட்டு தளத்தில் சிறந்து இயங்குவதே சிறப்பானதாக இருக்கும்! அதற்குரிய மரியாதையை பெஉத் தரும்! ஆனால், அது ஒரு கட்சியின் கிளை நிறுவனம் போல இயங்குவது மாபெரும் வீழ்ச்சியாகும்! உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (பொறுப்பு) விசயராகவன் செயல்பட்ட காலங்களில் அந்த கல்விப் புலமே ஒரு அதிமுக கிளைக் கழகம்போல மாற்றப்பட்டு இருந்தது.

இதற்கு முன்பு இப்படியாக மிகப் பகிரங்கமாக ஒரு அரசு அதிகாரி கட்சி அடையாளத்தோடு செயல்பட்டதில்லை. ஆனால்,விஜயராகவன் தன் அறையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, ஒ.பன்னீர் செல்வம் ஆகிய அனைவர் படத்தையும் மாட்டி வைத்துக் கொண்டதோடு, தன் சட்டைப்பையில் ஜெயலலிதாவின் போட்டோவும் பளிச்சென தெரியும் வகையில்  மெல்லிய வெள்ளை சட்டை போட்டு வலம் வந்து கொண்டிருந்தார்..! அதிமுக கரை வேட்டி கட்டாதது ஒன்று தான் பாக்கி! ஆனால், வேட்டியோடு ஒரு அரசியல்வாதிக்கான அனைத்து தோரணைகளையும் வெளிப்படுத்திக் கொள்வார்.

ஒரு ஆராய்ச்சிக் களத்தை எந்த நேரமும் ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்தும் களமாகவும் மாற்றினார், விஜயராகவன்! ஜெயலலிதா பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முழுவதும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து, நொடிக்கொரு முறை புரட்சித் தலைவி என்ற பெயரை உச்சரித்து, கொண்டாடித் தீர்ப்பார். ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள், அமைச்சர்கள் ஆகியோரோடு நெருக்கமாகிக் கொள்வதும், அதன் மூலம் தன் அதிகாரத்தை கேள்விக்கு அப்பாற்பட்டு நிலை நாட்டிக் கொள்வதுமே அவர் நோக்கமாக இருந்தது.

எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்வு இருக்கை தொடங்குவதற்கு, சென்ற அரசை தூண்டி ஒரு கோடி ரூபாய் பெற்றார் விசயராகவன்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிலையத்திற்குள் இயங்கும் நூலகமே கூட ஒரே நீண்ட அறைக்குள் திணிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வரும் புத்தகங்களை அடுக்குவதற்கு கூட அங்கு வாய்ப்பற்ற நிலைமையே பல்லாண்டுகளாகத் தொடர்கிற நிலையில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நூலகக் கட்டிடம் என்ற பெயரில் ஒன்று உருவாக்கப்பட்டது!

தன் ஆளுங்கட்சி அடையாளத்தால் அந்த ஆராய்ச்சி நிறுவனத்தை வரலாறு காணாத வகையில் வசூல் வேட்டைக்கான களமாகவும் மாற்றிக் கொண்டார்,விஜயராகவன். பேராசிரியர்,உதவி பேராசிரியர், விரிவுரையாளர் தொடங்கி அனைத்து பொறுப்புகளுக்கும் லட்சக்கணக்கில் பணம் பெற்ற ஒரே இயக்குனர் இவர் தான்! இவை தவிர, அங்கு கூட்டம் நடத்த வருபவர்களிடம் விதவிதமான பெயர்களில் வசூல் வேட்டை நடத்துவதற்கு ஒரு குழுவையே வைத்திருந்தார். நூல் பதிப்பித்தல், விருது வழங்கல். என எடுத்தற்கெல்லாம் பணம், காசு, துட்டு, மணி தான்! இதன் மூலம் அமைச்சராக இல்லாமலே, அரசு அதிகாரி என்ற பாதுகாப்புடன் மிக அதிகமாக பணம் ஈட்டியவராக விஜயராகவன் கருதப்படுகிறார்.

புதிய ஆட்சியாளர்கள் வந்ததும், தன் அறையில் இருந்த அதிமுக தலைவர்கள் போட்டோக்களையெல்லாம் தூக்கிவீசிவிட்டு, ஸ்டாலின் படத்தை மாட்டிக் கொண்டதோடு, சட்டைப் பையில் இருந்த ஜெயலலிதா போட்டோவையும் எடுத்துவிட்டு, புதிய ஆட்சியாளர்களை சந்திக்க தூதுவிட்டுக் கொண்டிருந்தார், விஜயராகவன்! தற்போது பதவி பறிக்கப்பட்டுள்ளார்.

பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம், திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடம், தமிழைக் கற்க நவீன  மொழிப் பயிற்சிக் கூடம், ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையம், உலகத் தமிழர் பண்பாடு, தகவல் மையம், தொல்காப்பியர் ஆய்விருக்கை, ஆய்வு மாணவர் விடுதிக் கட்டிடம்.. போன்றவை அதிமுக ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்டன என்றாலும், உலக தமிழ் ஆராய்ச்சி நிலையம் தன் கல்விப் பின்புலத்தில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது மிகவும் வருத்தமளிக்கிறது!

தமிழ் அறிஞர் ச.வே.சுப்பிரமணியன், தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார், பேராசிரியர் சா.கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் அன்னி தாமஸ்..போன்ற தகுதியான அறிஞர்களெல்லாம் பொறுப்பு வகித்த இந்த நிறுவனத்தை இந்த ஆட்சியிலாவது, கட்சி சார்பில்லாத – உலகத் தரத்திலான ஆய்வு நிறுவனமாக – மாற்றுவார்களா..?  என்பதே தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும். புதிய இயக்குனராக தமிழில் ஐ.ஏ.எஸ் எழுதி வெற்றி பெற்றவரான செ.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றாலும், ஆராய்ச்சி பின்புலத்தில் உள்ள பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவரோ, தமிழ் அறிஞரோ பொறுப்பு ஏற்பதே சாலச் சிறந்ததாகும்! அப்படிப்பட்டவர்களைத்  தான் இப்படிப்பட்ட நிறுவனத்திற்கு பொறுப்பேற்க செய்ய வேண்டும். உலகதமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தன் இழந்த பெருமைகளை மீட்டெடுக்கட்டும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்