அரசியல் தாக்கங்களின்றி காக்கப்படுமா கிராம சபை கண்ணியம்?

- இராதாகிருஷ்ணன்.மா

கிராம சபை எப்போ நடக்கும், அங்கு நம் பிரச்சனைகளை விவாதித்து தீர்வு காணலாம்… என காத்திருந்த மக்களுக்கு, ஒருவழியாக மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு   அக்டோபர்-2  ந்தேதி கிராம சபை நடக்கும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியாகவே இருந்தது! ஆனால், கிராம சபை என்பது அரசியல் கட்சிகளின் தாக்கங்களுக்கு அப்பாற்ப்பட்டு இருக்க வேண்டும் என்ற மரபு மீறப்பட்டு வருவது கவலையளிக்கிறது!

ஜனநாயகத்தில் மக்கள் பங்கேற்பு என்பதே பிரதானம், அந்த வகையில் கிராம சபையில் மக்கள் பங்கேற்று அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை தெரியப்படுத்துவது, ஊராட்சியில் நடக்கும் வரவு செலவுகளை அறிவது, திட்டங்கள் பயனாளர்களை தேர்ந்தெடுப்பது போன்ற செயல்களில் மக்கள் பங்கேற்பு மிக மிக அவசியம்.

அந்த வகையில் அக் 02, 2021 கிராமசபை எப்படி நடந்தது என்ற கள ஆய்வு மேற்கொண்ட போது…

# திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் உட்பட்ட புது மல்லவாடி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் 50க்கும் குறைவான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வழக்கம் போல எங்கள் ஊராட்சியின் ஊராட்சி செயலாளர் அரசு விவாதம் செய்த கொடுத்த அஜெண்டாவை பார்த்து பாட்டு பாடுவது போல் படித்து காண்பித்தார்.

அங்கு ஆடு, மாடு இல்லாதவர்களுக்கு ஆட்டுக்கொட்டகை மற்றும் மாட்டுக்கொட்டகை எதனால் வழங்கப்படுகிறது என்று கேட்ட போது அதற்கு ஊராட்சி செயலாளர் பதில் மழுப்பாளாக இருந்தது.

மேலும் ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், ஆரம்ப சுகாதார பள்ளியில் கட்டிடம் ஒன்று இடிந்து உள்ளது மற்றொன்று கட்டிடம் பாழடைந்த எனவே அதை இடித்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்ற தீர்மானங்களை எழுந்துங்கள் என்று சொன்ன போதும் ஊராட்சி செயலர் பதிலேதும் கூறவில்லை.

எந்த தீர்மானமும் எழுதாமலேயே கையொப்பம் மட்டும் பெறப்பட்டது, நகல் கேட்டும் தரவில்லை!

#  அதே போல நாமக்கல், ரங்கப்ப நாயக்கன்பாளையத்தில் நடந்த கிராம சபையில் மக்களின் குறைகளை கேட்டு தீர்மானம் எழுதவில்லை, எது தேவை என கேட்டாலும் பஞ்சாயத்தில் பணம் இல்லை என்பதே பதிலாக இருந்தது, இன்னும் சொல்ல போனால் பஞ்சாயத்து தலைவியின் கணவரின் எதற்கெடுத்தாலும் பதில் சொல்லி ஆதிக்கம் செலுத்தினார்

குடிநீர் இணைப்பு, மின்விளக்கு வசதி சம்மந்தமான பிரச்சனைகளுக்கு கேள்வி கேட்ட போதும் பணம் இல்லை என்பதே பதிலாக இருந்தது ஆனால் E Grama Swaraj  செயலியில் அந்த பஞ்சாயத்தில் 2020-21 வரை வரவு 7,31,570ரூ, செலவு 5,54,483ரூ அப்படி பார்த்தல் சுமார் 2 லட்சம் மீதி இருக்கும் பொது

குறிப்பாக அங்குள்ள அருந்ததியர் பிரிவு பலருக்கும் குடிநீர் இணைப்பு வழங்கவில்லை

இப்படி ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பஞ்சாயத்தாகத்தான் இருந்தது கிராமசபை, ஆனால் கிராமசபை எப்படி பலவகை சிக்கலை சிக்கலை சந்தித்து, இனி எப்படி நடக்கவேண்டும், அரசு கவனிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன?

கடந்து வந்த பாதை!

அக்டோபர் 02 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கிராம சபை ஏறக்குறைய 20 மாதங்களுக்கு பிறகு நடைபெற்றது ஊரக உள்ளாட்சித்தேர்தல் கடந்த 2016 முதல் 2019 வரையிலுமான சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலான காலகட்டத்தில் பெருமழை, புயல், பொது தேர்தல், புதிய மாவட்ட அறிவிப்பு, அதனால் பிரிக்கப்படாத தொகுதி வாக்காளர் விபரங்கள் என பல செயற்கையான காரணங்களால் உள்ளாட்சித்தேர்தல் நாட்கள்,மாதங்கள், வருடங்கள் கடத்தப்பட்டு, உயர்நீதிமன்ற அழுத்தத்தின் காரணமாக  2019 டிசம்பரில் 27 மாவட்டங்களுக்கு நடந்தது.

இடையேயான கால கட்டத்தில் செயலாளர்கள் கொண்டு அரசால் நடத்தப்பட்டது என கூறினாலும் எவ்வளவு இடங்களில் மக்களின் பிரச்சனை பேசப்பட்டு தீர்வு காணப்பட்டது என்பது அவர்களுக்கே வெளிச்சம்! இன்னும் பல கிராமங்களில் அந்த சமயம் நடைபெற்றதா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறிதான். மக்களால் தேர்த்தடுக்கப்பட்ட உறுப்பினரோ அல்லது பஞ்சாயத்து தலைவரோ இல்லாமல் கடந்த 2016ல் வர்தா புயல்,   2017ல் ஒக்கி புயல்,   2018ல் கஜா புயல்,   2019ல் பானி புயல்,  2020ல் நிவர் புயல் மற்றும் கொரோன கொடுந்தொற்று, என ஒவ்வொரு ஆண்டிலும் இயற்கை பேரிடரை எதிர்கொள்ள முடியாமல் பிரச்சனைகளை பேசி தீர்வு காணமுடியாமல் அந்த இழப்புகளில் இருந்து மீளமுடியாமல்  பெருந்தவிப்பு இன்றுவரை தொடர்கிறது.

பருவமழை எதிர்கொள்ளல்   தேவையான முன்னெடுப்புகள் செய்தல் – குளம்   குட்டை   ஏரி மற்றும் வாய்க்கால் தூர்வாருதல்   மக்களுக்கு தேவையான குடிநீர் ஏற்பாடு,   கழிவுநீர் வெளியேற்றும் ஏற்பாடு,   திடக்கழிவு மேலாண்மை   தெருவிளக்கு   பள்ளிக்கூடம்   மருத்துவம் – சுகாதார பணி என தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு   கிராம வளர்ச்சி பணிகள் திட்டம்   ஊரக வேலைவாய்ப்பு திட்டம்   மகளிர் சுய உதவி குழு என திட்டங்கள் விரிவுபடுத்த   மாநில மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான பயனாளர்களை அடையாளம் காண என மக்களின் சபையாக நடைபெற வேண்டிய கிராமசபை,   அந்த பகுதிகளின் பிரச்சனைகளை குறித்து பேச வேண்டிய கிராமசபை ஆளும் கட்சியின் புகழ் பாடும் இடமாக மாறிப்போகிறது!

கொரோன கொடுந்தொற்றின் காரணாமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு அக்டோபர் 02   2021 கிராமசபை நடைபெற்றது! 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடக்கும் முதல் கிராமசபை கூட்டம் என்பதால் இன்னும் கூடுதல் கவனமானது. அதனால், ஏதோ ஒரு எம்.எல்.ஏ, எம்.பி  என அரசியல் மற்றும் அதிகார மையத்தில் இருந்து ஒருவர் கலந்து கொள்கிறார் என்றாலே, அவரை வரவேற்க   எதிர்கொள்ள   அங்கு அவரை புகழ்ந்து பேச சிறப்பு மேடை அமைப்பது என பல ஏற்பாடுகள் கூடுதலாக செய்யப்படுகிறது!  இதுவும் மக்களின் வரிப்பணத்திலேயே நடக்கிறது.

அமைக்கப்படும் மேடையில் எம்.பி,எம்.எல்.ஏ உடன் கட்சியின் உயர் மட்ட மற்றும் அந்த பகுதி பொறுப்பளர்கள் அமர்கின்றனர். மேலும் மேடையில் குறிப்பிட்ட சில பேர் மேடையில் அமர்தல்   கட்சி தொண்டர்கள் வாழ்க கோஷம் ,  பொன்னாடை போர்த்தும் சம்பிரதாயம்,ஆளும் கட்சியின் புகழ் பாடுவது என கிராமசபைக்குள்ள அடிப்படை நடைமுறைவிதிகள் மீறப்படுகிறது! இயல்பு நிலை சீர்குலைகிறது.

எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் இது போன்ற எம்.பி,எம்.எல்.ஏ க்கள் கலந்து கொள்கிறார்கள் என்றாலே அங்கு மற்ற கட்சியை சார்ந்த குடிமக்கள் கலந்து கொள்வதை தவிர்க்கின்றனர். மேலும் ஏதாவது கேள்வி கேட்கும் சமயம்  பிரச்சனையாகும் என்ற எண்ணத்தில் பொது மக்களின் இயல்பான பங்களிப்பு தடைப்படுகிறது.

அக் 02 கிராம சபையில் என்னென்ன குறைகள்;

* முறையாக ஏழு நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பு தெரிவிக்கவில்லை.(அரசுக்கு முதலில் விருப்பமில்லாமல் இருந்தது)

*  கூட்ட பலத்திற்காக 100 நாள் வேலை செய்பவர்கள் கட்டாயப்படுத்தி வரவைத்து கலந்து கொள்ள வைக்கப்படுகின்றனர்.

* ஓரிருவரை தவிர மற்ற, உரிய அரசு அலுவலர்கள் கலந்து கொள்வதில்லை.

* கூட்ட பொருள் (Agenda) பேசுவதில்லை.   குறிப்பாக கணக்கு வழக்குகள் பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதோ, மேடையில் அறிவிப்பதோ இல்லை.

* பொது மக்கள் சொன்ன குறைகள் மற்றும் புகார்கள் தீர்மான குறிப்புகளில் குறிப்பெடுப்பதும் நடப்பதில்லை. மக்கள் பிரச்சனைகளை கூறும் போது அவர்களை குறை கூறுவதும், அந்த பகுதியை சார்ந்த மக்களின் செயல்பாடுகளை குறை கூறுவதுமாக இருந்தது. குறிப்பிட்ட வார்டு பிரச்சனைகளை பேசும்போது அந்த பகுதி வார்டு உறுப்பினர் பேசாமல் பஞ்சாயத்து தலைவர் முன்னின்று பேசுவது, வேலைகள் இந்த பஞ்சாயத்து வருமானத்தால் இந்த, இந்த வேலைகள் நடைபெற்றது என கூறாமல், எந்த வேலை நடந்தது என்றாலும் அது தன்னால் நடந்தது போன்ற ஒரு மாய தோற்றத்தை உண்டாக்கி அதன் வழியே பஞ்சாயத்து உறுப்பினர்கள்,   தலைவர்கள் தனிப்பட்ட பலன் அடைய முயற்சிக்கின்றனர்! இதை தவிர்க்க வேண்டும்.

 மக்கள் பங்கேற்பு இல்லாத சபை எப்படி ஜனநாயகத்தை நிறுவும், எனவே குடிமக்களின் அதிகபட்ச பங்களிப்பை உறுதிசெய்ய வேண்டியது அரசின் பொறுப்பு, எனவே கீழ் காணும் ஆலோசனைகள் அரசுக்கு அரசின் கவனத்திற்கு;

# பெருவாரியான மக்களுக்கு தெரிந்த சன 26, மே 1, ஆக 15 மற்றும் அக் 2 ஆகிய நாட்களில், MLA, MP என எந்த பதவியில் இருந்தாலும் அவர்கள் வாக்காளர்களாக இருந்தால் மட்டுமே அந்த கிராமசபையில் பங்கெடுக்க வேண்டும்.

# அப்படி ஏதாவது MP, MLA இது போல் யாரேனும் கலந்து கொள்ள வேண்டுமானால் மக்களுக்கு அறிவிக்கபட்டு பகுதி வாரியாக மக்கள் குறைகேட்பு நாளாக நடத்தலாம்.

# எந்த அரசாங்க பதவியில் இருப்பவர்கள் கலந்து கொண்டாலும் அவர்களுக்கு தனி மேடை அமைப்பது, தலைமை ஏற்க செய்வது, தனி நாற்காலி போடுவது தவிர்க்கப்படவேண்டும்.

#மக்கள் சொல்லும் குறைகள் மனுக்கள் அனைத்தும் குறிப்பெடுக்கப்படவேண்டும்.

# வரவு செலவு கணக்குகள் கிராமசபை துவங்கும் போதே பொதுமக்கள் பார்வைக்கு தனியே வைக்க வேண்டும்.

# இயற்றப்படும் தீர்மானங்கள் உடனே நகல் போது மக்களுக்கு வழக்கப்படவேண்டும்.

#  அரசியல் அதிகாரத்தில் இருக்கும் உயர்மட்ட ஆட்கள் கலந்து கொள்ளும் போது அது கட்சி மேடையாக மாறி, மக்களின் அடிப்படை பிரச்சனைகளை பேசுவதை தவிர்த்து கட்சி சார்ந்து குறை கூறும் இடமாக, வாக்கு வாதத்தில் ஈடுபடும் இடமாக மாறிவிடுகிறது!

இனி வரும் ஒவ்வொரு கிராமசபையும் இதை உறுதிசெய்ய அரசு கவனம் செலுத்த வேண்டும், ஆக்க பூர்வமான பங்கேற்ப பும், உரையாடலும் நிகழ்ந்தால் மட்டுமே ஒட்டு மொத்த ஒருங்கிணைந்த வளர்ச்சியை நாம் எட்டமுடியும்.

வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும்

குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயர்வான்!

கட்டுரையாளர்; இராதாகிருஷ்ணன்.மா

                                அறப்போர் இயக்கம்