பொதுத் தொண்டுக்கே இலக்கணமானவர் சோ.அழகர்சாமி!

-பீட்டர் துரைராஜ்

ஐந்து முறை எம்.எல்.ஏவாக இருந்தும் எளிமை மாறாதவர்! எத்தனையோ நன்மைகளை கரிசல் மண்ணுக்கும், மக்களுக்கும் பெற்றுத் தந்தவர்! சோ.அழகர்சாமியின் வாழ்க்கையோடு, கோவில்பட்டியின் வரலாற்றையும் சொல்கிறார் காசி விஸ்வநாதன்.

கோவில்பட்டி என்றதும் நினைவுக்கு வருவது, அங்கு நடைபெறும்  பாரதி விழாதான் . அங்கு பல ஆண்டுகளாக  பாரதி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு அடித்தளமிட்டவர் சோ.அழகர்சாமி. ஐந்து முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்துள்ள இவர், எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கூட்டுறவு அமைப்புகளை செயலூக்கத்துடன் உருவாக்கியவர். விவசாயிகள் சங்கத் தலைவராகவும் இருந்தவர்.  சோ.அழகர்சாமியைப் பற்றிய வாழ்க்கை வரலாறு தான் இந்த நூல். தொழிற்சங்க தலைவரான எஸ்.காசி விஸ்வநாதன் இந்த நூலை எழுதியுள்ளார். மக்களை ஒற்றுமைப்படுத்தி, வழி காட்டுவதன் மூலமாக சமூக மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை இந்த நூல் சொல்கிறது.

கோவில்பட்டி இன்று தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது முக்கியமான நகரம். கரிசல் பூமியான இங்கிருந்துதான் கி.ராஜநாராயணன் போன்ற இலக்கியவாதிகள் உருவானார்கள். அவரது சம காலத்தவரான சோ. அழகர்சாமி, தனது இளமைக் காலத்தில் சோசலிஸ்ட் கட்சியைச் சார்ந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனையும், அவரது மனைவி பிரபாவதி தேவியையும் எட்டையபுரத்திற்கு அழைத்து வரவேற்புக் கொடுத்தவர். பின்னாளில்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, விவசாயிகளின் , அந்தப் பகுதி மக்களின் முன்னேற்றத்திற்கு தனது இறுதிக்காலம் வரை உழைத்துள்ளார்.மனிதாபிமானமும்,போர்க்குணமும் மிக்கவர்!

நூலாசிரியரான காசி விஸ்வநாதன்,  சட்டமன்ற உறுப்பினராக இருந்த சோ.அழகர்சாமியை தனது சிறு வயது முதல் பார்த்து வந்தவர். மக்களால்  நேசிக்கப்பட்ட  சோ.அழகர்சாமி,  நூலாசிரியரை வசீகரித்திருக்கிறார். எனவே, அவரது வரலாற்றை பதிவு செய்துள்ளார். இந்த நூல் முழுவதும்  உணர்ச்சிப்பூர்வமாக உள்ளது. தனிப்பட்ட முறையில் வசீகரிக்கப்பட்ட ஒருவரால்தான் இது போன்ற பதிவை சித்தரிக்க முடியும்.

இந்த நூல் சோ.அழகர்சாமி வரலாறாக மட்டும் இல்லை. கோவில்பட்டியின் வரலாறாகவும் உள்ளது. எட்டையபுரத்தின் பெயர் காரணம், பாளையம் என்பதன்  இயல்புகள் என்பது போன்ற செய்திகளை,  ஆசிரியர் சுவாரசியமாகவும்,  காரண, காரியங்களோடும் விவரித்துள்ளார். இந்தியாவிலேயே அதிக அளவில் பருத்தி உற்பத்தியானது இந்தப் பகுதியில் இருந்து தான் எனத் தெரிவிக்கிறார். இதனை எடுத்துச் செல்வதற்காகத்தான் கோவில்பட்டியில்   இரயில் நிலையம் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டதாம்!

இங்கு பருத்தி உற்பத்தி ஆனதால், ஆங்கிலேயர்கள் ஆலைகளை உருவாக்கினார்கள். ஆலைகளில் உழைத்த கூலிகளை, உணர்வுள்ள தொழிலாளர்களாக மாற்றியது  தூத்துக்குடியில் உருவான தொழிற்சங்க இயக்கம்.

வ உ சி யும், சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, 1908 ஆம் ஆண்டு மார்ச் 14 -லிலிருந்து 18 வரை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதில் அவர்களது பொருளாதார கோரிக்கை ஏதுமில்லை. இது தான் இந்தியாவிலேயே முதன் முதலில் நடைபெற்ற அரசியல் வேலைநிறுத்தம். இப்படி  அந்தப் பகுதி வரலாற்றையும் நூலின் போக்கிலேயே விவரிக்கிறார், ஆசிரியர். நெல்லையைச் சார்ந்தவர்களுக்கு இந்த நூல் கூடுதல் ஆர்வத்தைத் தரலாம்.

சோ.அழகர்சாமி யதேச்சையாக, திடீரென்று  சட்டமன்ற உறுப்பினராக உருவானவர் அல்ல. சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்! மக்களோடு, மக்களாக பழகி அவர்களது தேவைகளை உணர்ந்து, கோரிக்கைகளுக்கு உருவம் கொடுத்து, போராடியவர். பால் வழங்கும் சங்கத்தை உருவாக்கி அதற்கு 15 ஆண்டுகள் தலைவராக இருந்திருக்கிறார். கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தை உருவாக்கி, அதற்கு 10 ஆண்டுகள் தலைவராக இருந்திருக்கிறார். பகுதி முழுவதும் பல்வேறு கிராமங்களில் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கியுள்ளார். அதன் தொடர்ச்சியாகத் தான்  சட்டமன்ற உறுப்பினராக முதலில் 1967 ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மதுரை நாயக்கர்களின் தேவைகளுக்கு படைகளை அனுப்புவதற்காகவே பாளையங்கள் உருவாக்கப் பட்டன. பாளையக்காரர்கள் வசூலிக்கும் வரியில் மூன்றில் ஒரு பகுதி மதுரை மன்னருக்கும், இரண்டாம் பகுதி படைகளை பராமரிப்பதற்கும், மூன்றாவது பகுதி அவர்களது சொந்த செலவுக்கும் வைத்துக்கொள்ள  வேண்டும். இப்படிப்பட்ட எட்டையபுரம் ஜமீனுக்கு உட்பட்ட பகுதிதான் கோவில்பட்டி.

இங்குள்ள அரண்மனையில் உணவு தயாரித்து பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதை நேரடியாகப் பார்த்த கல்வி அதிகாரியான நெ.து.சுந்தரவடிவேலு,  காமராசரிடம் இதைப்பற்றி சொன்னதால், மதிய உணவு திட்டம் உருவானது  என்கிறார்.

கோவில்பட்டி பகுதி வானம் பார்த்த பூமி. எனவே விளைச்சல் இல்லையென்றால், வரி கொடுக்க முடியாது என்பது யதார்த்த நிலை. அரசோ, வரி கொடுக்க முடியாத விவசாயிகளின் காளை மாடு, உடைமைகளை ஜப்தி செய்தது. இதனை எதிர்த்த போராட்டங்களில்  முன்னின்று,  அரசின்  நிலைபாட்டை  மாற்றி இருக்கிறார். தமிழ்நாடு விளை பொருளுக்கு கட்டுபடியான விலை, குறைந்த வட்டியில் கடன், உபரி நிலம் மீட்பு, மீட்ட நிலங்களை உரியவர்களுக்கு பிரித்தளிப்பது என விவசாயத் தலைவராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இவருக்குப் பிறகு, விவசாயிகள் சங்கத்தின் செயலாளராக ஆர்.நல்லக்கண்ணு பொறுப்பிற்கு வந்தார் என்கிறது நூல்.

அண்ணா,கருணாநிதி, எம்.ஜி.ஆர் முதலமைச்சர்களாக இருந்த போது சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார், அழகர்சாமி! இவரது  உரைகளை , ‘சட்ட மன்றத்தில் சோ.அழகர்சாமி’ என்ற பெயரில் ஜீவபாரதி நூலாக தொகுத்துள்ளார். இந்த நூல் அழகர்சாமியின் பன்முக ஆளுமையை சொல்கிறது. எட்டையபுரம் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கத்தில் இருந்த சோ.அழகர்சாமி, ஜீவா சொன்னபடி 1962 ல் ஆண்டு தொடங்கி பாரதி விழாவை,நடத்தியுள்ளார். அது முதல் அறுபது ஆண்டுகளாக, அங்கு பாரதி விழா நடைபெற்று வருகிறது. பாரதி விழாவை மக்கள் விழாவாக மாற்றியதில் அழகர்சாமிக்கு பங்கு உள்ளது.

அழகர்சாமி சட்டமன்ற உறுப்பினராக முன்னெடுத்த திட்டங்களே  சீவலப்பேரி குடிநீர்த்திட்டம்,   விவசாய ஆராய்ச்சிப் பண்ணை, அரசு தலைமை மருத்துவமனை போன்றவை என நூல் தெரிவிக்கிறது. அழகர்சாமியோடு பழகியவர்கள், உறவினர்கள், நண்பர்களின் பதிவுகள் உள்ளன. களப்பணியின் விளைவாகத்தான் அவர் சட்டமன்ற உறுப்பினராக மாறியிருக்கிறார்.  தான் நடத்திய களப் போராட்டங்களைத் தான் சட்டமன்றத்தில் எதிரொலித்து சாத்தியப்படுத்தி இருக்கிறார்.

கி..ராஜநாராயணன் எழுதிய ‘தோழர். ரங்கசாமி’ என்ற சிறுகதை சோ.அழகர்சாமியை மையப்படுத்தி எழுதப்பட்டது எனக் கூறியுள்ளார் காசி.விஸ்வநாதன்.

நூல், 345 பக்கங்களில் உள்ளது. பக்கங்களை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.  வரலாற்று ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் முன்னுரை எழுதியுள்ளார். ஆர்.நல்லகண்ணு வாழ்த்துரை வழங்கியுள்ளார். பொது வாழ்வில்  உள்ளவர்கள் படிக்க வேண்டிய நூல்.

நியூ செஞ்சுரி புத்தக நிலையம்

பக்கங்கள் ; 345

விலை; ரூ.335.

நூல் விமர்சனம்; பீட்டர் துரைராஜ்.