எங்களை சோதனை எலிகளாக்குவதா…? -அரசு மருத்துவர்கள் ஆவேசம்!

-சாவித்திரி கண்ணன்

மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு முன்பே அவசரமாக தடுப்பூசியை அரசாங்கம் அமல்படுத்துவதால் அரசியல்வாதிகளும், மருத்துவர்களிடையேயும் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பெரும் தயக்கம் நிலவுவதை நாம் அறம் இதழில் சுட்டிக் காண்பித்தோம்! அதைத் தொடந்து அரசு மருத்துவர்களுக்கான சட்டபோராட்டக் குழு இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது குறிப்பிடதக்கது! தமிழகத்தில் கொரானாவுக்கான தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழுவின் தலைவர் டாக்டர்.பெருமாள் இவ்வாறு ஒரு அறிக்கை வெளியிட்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது! அவரிடம் தொடர்பு கொண்டு பேசிய போது,

”இந்த அரசு கொரானா சிகிச்சைப்பணியின் போது இறந்த மருத்துவர்கள்,செவிலியர்கள்,முன்களப் பணியாளர்களுக்கு 50 லட்சம் வழங்குவோம் என அறிவித்தது. ஆனால், டாக்டர்கள் கல்யாணராமன், சுகுமார் மற்றும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி தலைமை செவிலியர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரானாவுக்கு மற்றவர்களுக்கு சிகிச்சையளித்ததால் நோய் தொற்று ஏற்பட்டு உயிர் நீத்தனர்! ஆனால், ஒருவருக்கு பாதிப்பணமும், தலைமை செவிலியருக்கு ஐந்து லட்சமும் தரப்பட்டது. மற்றவர்கள் யாருக்கும் எதுவுமே தரவில்லை! தமிழக அரசானது உயிர்காக்க போராடி உயிர் நீத்த மருத்துவர்கள் விஷயத்திலேயே நம்பகத்தன்மை இல்லாத அரசாக உள்ளது’’ என்றார்! மேலும், அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:

தமிழகத்தில் இதுவரை ஊதிய உயர்வு உள்பட அனைத்திலும், அரசால்  புறக்கணிக்கப்படும் அரசு மருத்துவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடுவதில் மட்டும் முன்னுரிமை தரப்படுவது குறித்து மருத்துவர்களின் கருத்தும், ஆதங்கமும்:

1) நாடு முழுவதும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக ஐனவரி 16 ம் தேதி முதல் போடப்படுகிறது. தமிழகத்திலும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மதுரையில் மாண்புமிகு முதல்வர் கொரோனா தடுப்பூசி போடப்படும் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.

இதற்கு அரசு மருத்துவர்கள்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

2) மத்திய அரசு நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போடுவதால், தமிழகத்திலும் வேறுவழியின்றி  மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கியுள்ளார்கள்.

3) அதாவது, டாக்டர்கள் உயிரோடு இருந்தால் தானே, தொடர்ந்து அவர்களின் உழைப்பை அரசால் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதனால் தான் தடுப்பூசியில் மருத்துவர்களுக்கு முன்னுரிமை தருகிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.

4) மருத்துவர்கள் நலமாக இருந்தால் தானே தொடர்ந்து தேசிய விருதுகள் வாங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்க்க முடியும். அதனால் தான் தற்போது முதன்முதலாக இந்த விசயத்தில் மட்டும் அரசு மருத்துவர்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.

5) கொரோனா, டெங்கு மற்றும் இயற்கை பேரிடர் என எத்தகைய சவாலையும் சமாளிக்க தமிழகத்தின் பலமே 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் தான் என்ற  நிலையில் இருப்பதால், அரசு மருத்துவர்களின் உழைப்பை பயன்படுத்திக் கொள்ளவே, தற்போது தடுப்பூசியில் முக்கியத்துவம் தருகிறார்கள்.

6) தமிழகத்தில் மற்ற துறையினருக்கு எல்லாம் அவ்வப்போது அரசு தாமாகவே உரிய ஊதிய உயர்வை அளித்து வருகிறது. ஆனால் தங்களை வருத்திக் கொண்டு இத்தனை வருடங்கள் போராடிய பிறகும் மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை அரசு வழங்க மறுத்து வருகிறது என்பது தான் வருத்தமான உண்மை.

7) அறிவியல் பூர்வமாக தடுப்பூசி போடுவது நல்ல திட்டமே. இருப்பினும்  தமிழகத்தில் இதுவரை மற்ற எல்லா விசயங்களிலும் தொடர்ந்து  புறக்கணிக்கப்பட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு, தடுப்பூசி விசயத்தில் மட்டும் முதலிடம் தருவதால், தங்களை சோதனை எலிகளாக அரசு பயன்படுத்திக் கொள்வதாக,  மருத்துவர்கள் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது நியாயமானதே.

8) மருத்துவர்கள் நன்றாக இருந்தால் தானே இன்னும் மக்கள் சேவையை நன்றாக செய்ய முடியும் என உண்மையிலேயே அரசு நினைத்திருந்தால், உலகில் உள்ள மற்ற நாடுகளை போல், மற்ற மாநிலங்களை போல், தமிழகத்திலும், உயிர் காக்கும் அரசு மருத்துவர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும், தகுதிக்கேற்ற  ஊதியத்தையும் எப்போதோ அளித்திருப்பார்கள்.

9) அதுவும் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம், தொற்று ஏற்பட்ட மருத்துவர்களுக்கு 2 லட்சம் ரூபாய், கொரோனா தடுப்பு பணிகளுக்காக சிறப்பு ஊதியமாக ஒரு மாத ஊதியம் என அரசு அறிவிப்புகள் எதுவுமே செயல்படுத்தப்படவில்லை. அதேநேரத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதில் மட்டும் அவசரத்தையும், அக்கறையையும் காட்டுவது ஏன்?

10) அரசு மருத்துவமனைகளை வருடம் முழுக்க இயங்க வைக்க, கொரோனா விடுமுறை, கோடை விடுமுறை, பண்டிகை விடுமுறை போன்றவற்றை  எதிர்பார்க்காமல் மருத்துவர்கள் அர்ப்பணிப்போடு பணி செய்கிறோம்.  அதே நேரத்தில் மற்ற துறையினரை விட ஊதியம் மிக குறைவாக இருப்பது தான் மிகுந்த  வருத்தமளிக்கிறது.

11) அத்தியாவசிய துறையினர் என்ற வகையில் 24 மணி நேரமும் மருத்துவர்களின் பங்களிப்பையும், தியாகத்தையும் மருத்துவர்கள் முழு மனதுடன் தருகிறோம். ஆனால் மருத்துவர்களும் வாழ வேண்டும், அவர்கள் குடும்பத்தினரும் வாழ வேண்டும் என்பதை அரசு புரிந்து கொள்ள மறுப்பது தான் வருத்தமளிக்கிறது.

12) அதுவும் கொரோனா எனப்படும் கண்ணுக்கே தெரியாத கிருமிக்கு எதிராக மருந்தே கண்டுபிடிக்காத நிலையில், ஆயுதமே இல்லாமல் போரிடும் படை வீரனை போல், துணிச்சலோடு களத்தில் நின்று மக்களை காப்பாற்றும் மருத்துவர்களை, இந்த சமயத்தில் கூட அரசு நினைத்து பார்க்காதது ஒவ்வொரு மருத்துவருக்கும் வேதனையாக உள்ளது.

13) எனவே, உண்மையில் இந்த அரசாங்கத்துக்கு மனச்சாட்சி என்ற ஒன்று இருந்தால், அரசு மருத்துவர்கள் மீது உண்மையில் அக்கறை இருந்தால்  இப்போதாவது 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை வழங்க முன்வர வேண்டும். இல்லையெனில் மீண்டும் போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என்பதை அரசுக்கு வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை,

தலைவர்,

அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு