இரக்கமற்ற இஸ்ரேல்! பலியாகும் பாலஸ்தீனியர்கள்!

-இரா.முருகவேள்
Smoke and flames rise from a tower building as it is destroyed by Israeli air strikes amid a flare-up of Israeli-Palestinian violence, in Gaza City May 12, 2021. REUTERS/Ibraheem Abu Mustafa - UP1EH5C1BZWKC

கொடூர வான்வெளித் தாக்குதல்களை பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்தி வருகிறது! நொறுங்கி விழும் கட்டிடங்கள், பற்றி எரியும் குடியிருப்புகள், பலியாகும் மனித உயிர்கள், படுகாயமுற்றவர்கள்..என்ற அவலம் தொடர்ந்து கொண்டுள்ளது…! இது வரை 72,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் வாழ்விடத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்..! என்ன நடக்கிறது..?

உலகத்தின் மிகப் பெரிய செல்வந்தர்களும், அதிகாரமிக்கவர்களுமான யூதர்கள் பாலஸ்தீன மண்ணில் வலிந்து குடியேறினர். அப்படி குடியேறிய அந்த பகுதிக்கு இஸ்ரேல் என்று பெயர் வைத்துக் கொண்டனர் யூதர்கள்!

பாலஸ்தீனியர்களின் பூமியான கிழக்கு ஜெருசலத்தை 1967 போரில் இஸ்ரேல் கைப்பற்றியதில் இருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றி அந்த இடங்களில் யூதர்களைக் குடியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போதைய ரமலான் மாத தொழுகைக்கு பல கட்டுப்பாடுகளை இஸ்ரேல் நிர்பந்தித்தது! இதையடுத்து எதிர்ப்பு எழுந்தது. இதில் பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டதும், இஸ்ரேலிய அரசு  பழைய நகர வாயில்கள் அருகே மக்கள் கூடுவதைத் தடை செய்தது.  மே 10 அன்று இஸ்லாமியர்களுக்கு மிகவும் புனிதமான அல் அக்ஸா மசூதியை போலீஸ் ரெய்டு செய்தது. அடுத்து நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களும், பல போலீசாரும் காயமடைந்தனர்.

போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக காசாவிலிருந்து ஹமாஸ் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியது.  இதில் 12 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்! அதற்கு எதிர்வினையாக இஸ்ரேல் காசா மீது விமானத் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் இது வரை 460க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கியுள்ளன. இதில் மருத்துவமனைகள், பள்ளிகள், ஊடக நிறுவன அலுவலகங்கள், மக்களின் குடியிருப்புகளும் அடக்கம்! அதிகார பூர்வ தகவல்களின்படி 65 குழந்தைகள் உட்பட 232 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1,900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆயினும் இஸ்ரேலுக்கு இன்னும் ஆத்திரம் அடங்கவில்லை!

பாலஸ்தீன மக்களின் போராட்டத்தைப் புரிந்து கொள்ள காசா பகுதி, மேற்குக் கரைப் பகுதி, இஸ்ரேலிய அரபுகள் ஆகிய சொற்களின் பொருளைத் தெரிந்து கொள்ள வேண்டும்

ஐரோப்பாவில் உரிமைகள் இல்லாமல் வதைபட்ட யூதர்கள் தங்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்று விரும்பினர். முதலில் உகாண்டாவில் ஒரு காலனி அமைக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

பின்பு அப்போது துருக்கிப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த பாலஸ்தீனப் பகுதியில் குடியேற துருக்கி கவர்னரின் அனுமதி கேட்டபோது, அவர் மறுத்து விட்டார். அங்கே, ஏற்கெனவே மக்கள் குடியிருக்கின்றனர். அங்கே புதிதாக பெரிய அளவில் வேறு இனத்தவர்கள் குடியேறுவது சரியாக இருக்காது என்றார் அவர்.

முதல் உலகப் போரில் துருக்கிப் பேரரசு தோற்கடிக்கப்பட்டு, அது பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. பிரிட்டன் பிரான்சின் ஆளுகையில் வந்த அந்தப் பகுதியில் யூதர்கள் குடியேற அனுமதிக்கப்பட்டது. பல்லாயிரம் யுதர்கள் ஆங்கே வந்து குடியேறினர். பாலஸ்தீன மக்களின் நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக யூதர்களால் வாங்கப்பட்டன.

இந்த யூதர்கள் பெரும்பாலும் போலந்து, ரஷ்யா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஏகாதிபத்தியங்கள் இஸ்லாமியப் பகுதிகளுக்கு நடுவே தங்களுக்கு ஏற்ற ஒரு ஐரோப்பிய இனம் இருப்பது நல்லது என்று கருதியதால் இந்தக் குடியேற்றத்தை ஆதரித்தன. தாங்கள் கைப்பற்றும் பகுதிகளில் ஐரோப்பியர்களைக் குடியேற்றுவது பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் வழக்கம்.

தென்னாப்பிரிக்கா ஜிம்பாவே, போன்ற நாடுகளில் போர்ச்சுகல் நாட்டிலிருந்து வந்த வெள்ளையர்களைக் குடியேற்றியது பிரிட்டன். அமெரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களில் குடியேற்றம் நடந்தது நாம் அறிந்தது அல்லவா?

அந்தக் கொள்கையின் தொடர்ச்சியே யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறியது. இந்தக் குடியேறிகள் ஆயுதம் தாங்கியவர்களாக இருந்தனர். அமைப்பாக கட்டமைக்கப்பட்டும் இருந்தனர்.

இரண்டாம் உலகப் போரின் போதும், அதன் பிறகும் எண்ணற்ற யூதர்கள் பாலஸ்தீனத்துக்கு வந்து குடியேறினர். விரைவில் பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கையை விடவும் யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

ஆபத்தை உணர்ந்த அரபு நாடுகள், புதிய இஸ்ரேல் மீது போர் தொடுத்தன. ஆனால் சிறந்த ஆயுதங்களும், பயிற்சியும் கொண்டிருந்த யூதர்கள் ஏகாதிபத்தியத்தால் பலவீனப்பட்டிருந்த அரபு படைகளை எளிதில் தோற்கடித்தனர்.

லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் அகதிகளாக ஜோர்டான், சிரியா, லெபனான் போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். வெளியேறாத மக்கள் இஸ்ரேலிய அரபுகள் என்றழைக்கப் படுகின்றனர்.

1967ல் இஸ்ரேலுக்கும், அரபு நாடுகளுக்கு இடையே நடந்த ஆறுநாள் போரில் இஸ்ரேல், பாலஸ்தீனியர்களின் காசா பகுதியையும், மேற்கு கரையையும் கைப்பற்றியது. அன்று தொடங்கி அந்த பாலஸ்தீனிய மக்கள் தனி நாடாகவும் இல்லாமல் இஸ்ரேலிய முழு குடியுரிமை பெற்றவர்களாகவும் இல்லாமல் வதைபடுகின்றனர்.

கொதித்து எழுந்த பாலஸ்தீனியர்களின் தொடர்ச்சியான தாக்குதல்களால் இஸ்ரேல் காசா பகுதியிலிருந்து வெளியேறியுள்ளது. ஆனால், காசாவைச் சுற்றி பெரும் சுவர் எழுப்பி அந்தப் பகுதியை உலகின் மாபெரும் சிறைச்சாலையாக மாற்றியுள்ளது. இப்போது காசா ஹமாஸ் அமைப்பின் ஆட்சியில் உள்ளது.

மேற்குக்கரைப் பகுதி அராஃபத்துடைய அமைப்பான ஃபதாவின் ஆட்சியில் உள்ளது. மிகவும் சீரழிந்ததாகவும், இஸ்ரேலுடன் ஒத்துழைப்பதாகவும் உள்ள இந்த அமைப்பு மக்களிடையே செல்வாக்கிழந்து வருகிறது. தேர்தல் நடந்தால் ஹமாஸ் மேற்குக் கரையிலும் வெல்லக் கூடும் என்று பயந்து ஃபதா தேர்தல் நடத்தாமல் தள்ளிப் போட்டு வருகிறது.

மேற்குக் கரை முழுக்க யூதக் குடியேறிகளின் செட்டில் மெண்ட்டுகள் உள்ளன. இவர்கள் முழுக்க முழுக்க ஆயுதம் தாங்கியவர்கள், யூதமத வெறியர்கள். இவர்களுடன் மேற்குகரை மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இஸ்ரேல் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பாலஸ்தீன நிலங்களை ஆக்கிரமித்து மேலும் மேலும் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்தி வருகிறது.

தற்போது நடந்து வரும் இந்தப் போர் தற்செயலாகத் தொடங்கியது என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அல் மானிட்டர் இதழ், இஸ்ரேல் நீண்ட காலமாகவே காசா மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வந்தது என்று கூறுகிறது.

பதினோரு கிலோமீட்டர் அகலமும், ஐம்பது கிலோமீட்டர் நீளமும் கொண்ட காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் இருந்து தப்ப ஹமாஸ் தரையடி சுரங்கப் பாதைகளைத் தோண்டியுள்ளது. இவற்றில் கான்கிரீட் பங்கர்களையும் கட்டியுள்ளது.

இஸ்ரேலிய உளவுப் படை இந்த சுரங்கங்கள் குறித்து துல்லியமாக உளவறிந்து வைத்திருந்தது.

ஹாமாஸ் ஜெருசலத்தில் தங்கள் வீடுகளைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இரண்டு ஏவுகணைகளை வீசியது. இது சிம்பாலிக்கான நடவடிக்கை மட்டுமே.

ஆனால் இஸ்ரேல் தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து என்று பெரும் தாக்குதலைத் தொடங்கியது. உளவுத்துறை இஸ்ரேலிய தரைப்படை காசாவுக்குள் நுழையப் போகிறது என்று வதந்தி பரப்பியது.

இதைக் கேட்ட ஹமாஸ் தலைவர்கள் சுரங்கங்களுக்குள்ளும் தரையடி பதுங்கு குழிகளுக்குள்ளும் ஒளிந்து கொள்வார்கள். இவற்றின் மீது விமானத் தாக்குதல் நடத்தி எல்லோரையும் கொன்றுவிடுவது என்பதே இஸ்ரெலின் திட்டம்.

ஆனால் இஸ்ரேல் தரைவழியாகத் தாக்குதல் நடத்தும் என்று ஹமாஸ் போராளிகள் நம்பவில்லை. எனவே அவர்கள் பஙக்ர்களுக்குச் செல்லவில்லை. இஸ்ரேல் நடத்திய பெரும் தாக்குதல் பெரும் தோல்வியடைந்தது. ஆனால் ஏராளமான அப்பாவி மக்கள் பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

ஹமாஸும், இஸ்லாமிக் ஜிகாத்தும் 3500க்கும் அதிகமான நீண்டதூர ஏவுகணைகளை இஸ்ரேலின் டெல் அவீவ் போன்ற பெரிய நகரங்கள் நோக்கிச் செலுத்தினர். இஸ்ரேல் பாராளுமன்றமே ஒத்தி வைக்கப்பட வேண்டிவந்தது.

இஸ்ரேலுக்கான சேதம் குறைவு என்றாலும் இஸ்ரேலின் எல்லாபகுதிகளூம் ஏவுகணை வீச்சின் எல்லைக்குள் வந்தது அந்த நாட்டுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது.

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான செய்தி வேறு ஒன்று உள்ளது.

இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனர்களும், மேற்குக் கரை பாலஸ்தீனர்களும், காசா பாலஸ்தீனர்களும் ஒன்று சேர்ந்து ஒரு பெரும் வேலை நிறுத்தம் செய்து உள்ளனர். இஸ்ரேலுக்குள் இதுவரை அமைதியாக இருந்த பல அரபு நகரங்களும் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தொடர் தாக்குதல் காரணமாக கொந்தளிக்கத் தொடங்கியுள்ளன. இஸ்ரேல் உள்நாட்டுப் போரைச் சந்திக்கக் கூடும் என்று டைம்ஸ் அஃப் இஸ்ரேல் போன்ற ஏடுகள் எழுதத் தொடங்கியுள்ளன. அதே போல உள்நாட்டுப் போர் நடந்து வரும் சிரியாவிலிருந்தும் இஸ்ரேல் மீது ஒரு தாக்குதல் முயற்சி நடந்துள்ளது.

அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்கள் ஒருபோதும் இஸ்ரேலை விட்டுக் கொடுக்கப் போவதில்லை. என்றாலும், தற்போதைய அமெர்க்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேலின் தொடர் தாக்குதலை நிறுத்தும்படி கூறியுள்ளார்.

இப்போது இஸ்ரேலின் கொடூர தாக்குதல்கள் உலக முழுமையும் உள்ள இஸ்லாமியர்களை மட்டுமல்ல, மனித நேயத்தை விரும்பும் அனைவரையும் பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது!

கட்டுரையாளர்; இரா.முருகவேள் ( புனைபாவை, முகிலினி உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்)