ராம்ராஜ் காட்டனில் தமிழர்களுக்கு வேலை இல்லையா..?

-சாவித்திரி கண்ணன்

பிரபல ராம்ராஜ் காட்டன் நிறுவனம் திடீரென்று தமிழ் பற்றாளர்களின் கடும் கோபத்திற்கு இலக்கானது!

ராம்ராஜ் காட்டனை புறக்கணிப்போம் என்ற ‘ஹேஸ்டேக்’ தேசிய அளவில் பிரபலமானது!

தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேட்டியை பிரபலப்படுத்திய நிறுவனமாயிற்றே என்ன தப்பு செய்தனர் என்று பார்த்தால், அவர்கள் வேலைக்கு ஆள் எடுக்க கொடுத்திருந்த ஒரு விளம்பரத்தில் தெலுங்கு தெரிந்திருந்தால் முன்னுரிமை என விளம்பரப்படுத்தி உள்ளனர்.

ஆகா, இதென்ன கூத்து! ஒரு தமிழ்நாட்டு நிறுவனம் தெலுங்கு ஆளுங்களுக்கு முன்னுரிமை என்றால், தமிழ் பற்றாளர்களுக்கு கோபம் வருவது இயற்கை தானே! நியாயம் தானே!

ஆகவே, காட்டுத் தீயை போல இந்த செய்தி பரவி ஹேஷ்டேக் வலுத்துள்ளது.

இது பற்றி நாம் ராம்ராஜ் காட்டனின் நிர்வாக வட்டாரத்தில் தொடர்பு கொண்டு, ”என்ன சார் நீங்களுமா..? பாஜக ஆட்சியில ஏற்கனவே தமிழகத்தின் மத்திய அரசு பணியிடங்களை பெருமளவு மற்ற மாநிலத்தவருக்கு தந்து தமிழக மக்களை கோபப்படுத்தி வருகின்றனர். நீங்க என்னடான்னா தெலுங்கு தெரிஞ்சா முன்னுரிமை என்கிறீர்களே..!’’ என்றேன்.

”சார் வேலைக்கு ஆள் எடுக்கும் இடம் ஹைதராபாத்! அங்கவுள்ள நம்ம நிறுவனத்தில் வேலை பார்க்க தெலுங்கு தெரிஞ்சால் தானே சரியாக இருக்கும். தமிழகத்திலேயே தெலுங்கு தெரிந்தவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். நாங்க தெலுங்கர்களுக்கு மட்டுமே வேலை கொடுப்போம் என்று சொல்லவில்லை. ஹைதராபாத்தில் வேலை , ஆனால், திருப்பூரில் நேர்காணல் என்பதால் தெலுங்கு தெரிந்திருந்தால் செளகரியமாக வேலை பார்க்க முடியும் என்பதால் தான் தந்துள்ளோம். என்ன தவறு செய்தோம் என்றால், இட நெருக்கடி காரணமாக ஹைதராபாத்தில் வேலை என குறிப்பிட தவறிவிட்டோம். இதில் தமிழ் உணர்வாளர்கள் பதட்டமடைந்துவிட்டனர். இனி இவ்வாறு கவனக் குறைவாகக் கூட நடக்காது’’ என்றனர்.

”சரி, இந்த கொரானா நெருக்கடியிலும் உங்களுக்கு பிசினஸ் நடக்குதா சார்’’ என்றேன்.

கொரானாவில் எல்லோரையும் போல எங்களுக்கும் வியாபாரம் ஸ்தம்பித்தது சில காலம்.ஆனால், நாங்கள் யாரையும் வேலையில் இருந்து நீக்கவில்லை. எங்க ஆட்கள் எல்லாம் எங்களோட தான் தொடர்ந்து இருக்காங்க..சம்பளமும் கொடுத்து வருகிறோம். எங்கள் நிறுவனம் கோவை,ஈரோடு,சேலம்,திருப்பூர், நாமக்கல்,தர்மபுரி உள்ளிட்ட தமிழகத்தின் சிறு நெசவாளர்களிடம் நூல்களைத் தந்து துணி நெய்து வாங்குகிறோம். இதன் மூலம் 50,000 க்கு மேற்பட்ட எளிய நெசவாளர்கள் கெளரவமாக வாழ்வதற்கு ராம்ராஜ்காட்டன் உத்திரவாதம் தந்துள்ளது.

இந்த கொரானா காலகட்டத்தில் கூட அவர்களிடம் வேலை இல்லை என்று சொல்லாமல் அவர்கள் நெய்து தருவதை வாங்கி சேமிப்பு கிடங்கில் வைத்தோம். ஏனெனில், எங்களுக்கு தமிழகம் மட்டுமல்ல, அனைத்து தென் மாநிலங்களிலும் மகாராஷ்டிராவிலும் டெல்லியிலும் கூட விற்பனை இருக்கிறது. தமிழகம் தவிர இலங்கை, பர்மா, மேற்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் ராம்ராஜ் நிறுவன வேட்டிகள் மற்றும் உள்ளாடைகளுக்கு வரவேற்பு உள்ளது. ஆகையால், எங்களோடு தொடர்ந்து இருக்கும் யாரையும் நாங்கள் இழக்கமாட்டோம்’’ என்றனர்.

வட நாட்டவர்கள் லட்சக்கணக்கில் வந்து குவியும் கொங்கு மண்டலத்தில் ஏழை,எளிய ஆயிரக்கணகான தமிழக நெசவாளர்களுக்கு அவரவர் வாழ்விடத்தில் இருந்தபடியே துணி நெய்து தந்து  வேலை வாய்ப்பளிப்பது நல்ல விஷயமே!

தமிழர்களால் நெய்து தரப்படும் வேட்டிகளை ராம்ராஜ் காட்டன் திராவிட நாடெங்கும் மட்டுமின்றி, வெளி நாடுகளுக்கும் கொண்டு செல்வது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கும் தகவல் தான்!. தமிழ் உணர்ச்சியைப் போலவே தமிழனின் வாழ்வாதாரமும் முக்கியமானது. கேட்டிலும் நன்மை உண்டு என்பது போல, அவர்கள் தப்பு செய்கிறார்களோ..என்று கோபப்பட்டதன் விளைவாகத் தான் இந்த செய்தியை அறிய முடிந்தது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்